ஊழ் விதிவழி வாழ்க்கையை
விளையாட்டாய்ச் சொல்லித் தரும்
விளையாட்டே பரமபதம்.
ஏறுவதும் இறங்குவதும் எங்கும் உண்டு
எளிதாக எடுத்துக் கொண்டு
வாழப் பழகு.
தாயம் ஒன்று போடும் வரை
துவங்காத ஆட்டத்தில்
காய்களும் தான் காத்திருக்கும்
நகராமல் கட்டத்தில்.
வாய்ப்புகள் வரும் வரையில்
காத்திருக்க வேண்டும்
பாயும் புலி என்றாலும்
பதுங்கி இருக்கத் தான் வேண்டும்
ஏணியிலே ஏறிவிட்டோம்
என்ற மமதை கூடாதே!
எப்போது இறங்கிடுவோம்
யாருக்கும் தெரியாதே!
நச்சரவம் எங்கெங்கும்
நடுவழியில் நிறைந்திருக்கும்
பார்த்து நாம் போனாலும்
பாதையைத் தான் மறைத்திருக்கும்
எட்டி நின்று தாவி விட்டால்
இருக்காது தொல்லை ஆனால்
எப்போதும் கிடைக்காது
வெற்றியின் எல்லை
தவறாக இறங்கி விட்டால்
தடுமாறிப் பதைக்காதே!
அடுத்து வரும் வாய்ப்பினிலே
அழகாய் ஏற மறக்காதே!
எதிர்பாராமல் சரிந்தாலும்
இழக்காதே நம்பிக்கையை!
அடுத்து வரும் வாய்ப்பினிலே
அடைந்திடலாம் இலக்கை…..
(எங்கோ படித்தது)
(படம்-1999)
No comments:
Post a Comment