Sunday, March 31, 2024

#*அண்ணாவுக்கு நெருக்கமான; அறியப்படாத மனிதரோடு இன்று ஒரு நல்ல சந்திப்பு*….

#*அண்ணாவுக்கு
நெருக்கமான; அறியப்படாத மனிதரோடு இன்று ஒரு நல்ல சந்திப்பு*….
————————————
“Some rise by sin and some by virtue fall.”
-Shakespeare 
•••
இன்று (31-3-2024)காலை 7.30 மணியளவில் ஒரு வயோதிக அன்பர் என் இல்லம் தேடி வந்தார்.

அவரை வரவேற்று அவரது பெயரை கேட்டேன் அவர் தனது பெயர் வேதகிரி என்றும் திருவண்ணாமலை மாவட்டத்தில் இருந்து  என்னைப் பார்க்க வந்திருப்பதாகவும் சொன்னார்.

தனது சொந்த ஊர் திருக்கோவிலூர் அருகே உள்ள சி. மெய்யூர் என்று சொன்னார். ஆனால் அவரது பெற்றோர்களின் பூர்வீகம் பெண்ணாத்தூர் அருகே உள்ள சோமாஸ் வாடி என்றவர் அங்கு தான் அவருக்கு சொத்துக்களும் நிலங்களும் இருக்கிறது என்றும் சொன்னார்.

1960களில் அண்ணாவிற்கு மிக நெருக்கமாக இருந்தவர் தனது மூத்த மகளுக்கு பூங்கொடி என்று அண்ணா தான் பெயர் வைத்தார் என்று கூறினார். அப்போது அண்ணா முதலமைச்சர் கிடையாது.

பெரியவர் வேதகிரி சொன்னார் 1950 -60களில் திமுக நடத்திய போராட்டங்களில் எல்லாம் அக்காலத்தில் கலந்து கொண்டவன்‌ குறிப்பாக 1965 இல் தமிழகத்தில் நிகழ்ந்த இந்தி எதிர்ப்பு போராட்டத்தில் கலந்து கொண்டு வேலூர் சிறைக்குச் சென்று திரும்பிய மொழிப்போர்த் தியாகி நான் என்றும் சொன்னார்.

நான் ப உ சண்முகம் அவர்களுடன் அரசியல்ப் பூர்வமாக உடனிருந்தவன். சேலத்தைச் சேர்ந்த முன்னாள்  சட்டமன்ற அமைச்சர்,சபாநாயகராக என இருந்த க. ராசாசாரம் அவர்கள் மற்றும் கே ஏ மதியழகன்
முதல் நாடாளுமன்றத்தில் திரு சம்பத் அவர்களுடன் உடன் சென்ற அன்பில் தர்மலிங்கம் அதை ஒட்டி பின்னாளில் நாடாளுமன்ற உறுப்பினர் ஆன முருகையனுக்கு வேதகிரி நெருங்கியவர் கூட!

ஒரு வகையில் பார்த்தால் கா பொன்முடிக்கும் கூட அவர் தூரத்து சொந்தம்.

அவர் மேலும் சொன்னார் அண்ணாமலையார் ட்ரான்ஸ்போர்ட் என்ற பெயரில்சென்னை கொருக்குப் பேட்டையில் ஒரு ஒரு நிறுவனம் நடத்தி வந்ததாகவும்சொன்னார் அவர் மேலும் சொன்னது தான் வேடிக்கையானது.

இன்றைக்கு அமைச்சராக இருக்கக்கூடிய எ. வ .வேலு திருவண்ணாமலை டு  மலையனூர் டி பி எல் பேருந்தில் கண்டக்டராகப் பணிபுரிந்தவர் அந்தப் பேருந்து பாஷ்யம் ரெட்டியாருக்குச்  சொந்தமானது.  வேதகிரி மேலும் சொன்னார் எ வ வேலு என்னைப் பார்க்கும் போதெல்லாம் நீங்கள் திராவிடமுன்னேற்றக் கழகத்தின் மூத்த  வரிசை சார்ந்த   முன்னத்தி ஏர்  என்று சந்திக்கும் இடங்களில் எல்லாம் என்னைப் பார்த்து சொல்வார் என்றார்….. 

என்று சொல்லி நிறுத்தியவர் என்னிடம் உங்களை நீண்ட நாளாக பார்க்க வேண்டும் என்பது எனது ஆசை. உங்களது வாகன ஓட்டுநரிடம் அடிக்கடி  உங்களை விசாரிப்பேன்.
இப்போது வயது ஏறக்குறைய 90 ஆகிறது. அதற்குள் உங்களைப் பார்த்துவிட வேண்டும் என்று தான் உங்கள் இல்லத்திற்கு வந்தேன் ‌ என்றார்.  உங்களை ஏன் சட்டசபைக்கு, டில்லி பார்லிமெண்டுக்கு
திமுக அனுப்பல  என நினைப்பேன் என வேதகிரி சொன்ன உடன் நாம் நல்லவர்களால்அங்கீகரிக்கப்பட்
டுள்ளோம் என மகிழ்ச்சியம் ஆறுதலும் வழங்கின,

எவ்வளவு பெரிய மகத்தான திராவிட இயக்கத்தின் உண்மையான தியாகபூர்வமான ஒருவரை சந்தித்ததில் அன்று நான் மிகவும் மகிழ்ந்தேன். இப்படியான மனிதர்களால் தான் தொடக்க கால திராவிட இயக்கங்கள் வலிமை பெற்றன.

இப்படியான தியாகிகளால் வளர்க்கப்பட்ட இயக்கம் இன்று யார் யார் கையிலோ கேவலமாக இருக்கிறது.

அண்ணாவை மறந்து விட்டார்கள்.

அன்றைக்கு இருந்த மூத்த தலைவர்களின் பெயரைச் செல்லக்கூட இன்று யாரும் இல்லை!

இப்படியான நிலையை பார்ப்பது தனக்கு வருத்தமாக இருக்கிறது சொன்ன வேதகிரித் தொண்டர் தன் வாழ்நாள் முழுக்க திராவிட இயக்கத்தின் அடிப்படை உறுப்பினர் இருந்தவன் என்கிற முறையில் மேலும் சொல்கிறார் எனக்கும் 90 வயதாக போகிறது உங்களையெல்லாம் பார்க்க வேண்டும் என்கிற ஆசை  இருந்தது அதனால்தான் கிளம்பி வந்தேன் என்றும் சொன்னார்.

வேதகிரி மூலம் எனது மனதில் பட்டது; இப்படியாக அவர் அன்று வந்து போனதும் என்னை சந்தித்ததும் அவருக்குத் திருப்தியானதாகவும் எனக்கும் ஒரு மனநிறைவையும் தந்தது.

இப்படிப்பட்ட மனிதர்களின் வேள்விப் போராட்டங்களால்  வளர்ந்தது தான் திராவிட முன்னேற்ற கழகம். ஆனால் இன்றைய திமுக யாரிடம் இருக்கிறது.

 திராவிட முன்னேற்றக்கழகம் பதவிக்கு வராத காலத்திற்கு முன்பு அதாவது 1960 களில் அண்ணாவிற்கும்  கலைஞருக்கும் நெடுஞ்செழியனுக்கும் அவர்களது போராட்டத்திற்கு இடையே பசிக்குமே என தனது வீட்டில் சமைத்த உணவை கொண்டு வந்து கொண்டு வந்து கொடுத்தவர்தான் இந்த வேதகிரி என்னும் மாமனிதர்.

என்றைக்காவது இந்த திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்த பிறகு இவரைப் போன்ற ஒருவருக்கு ஏதேனும் ஒரு பதவியோ ஏதேனும் அவரின் முக்கியத்துவம் கருதி கழகத்திற்கான அவரது  அடிப்படையான உழைப்பைக் கருதிக் கூட எந்த ஒரு பதவியையோ ஏன் ஒரு வாரியப் பதவிகளைக் கூட   ஏன் வழங்கவில்லை?.

அவருடைய உழைப்பும் நம்பிக்கையும் இத்தனை வயதிலும் கழகச் செயல்பாட்டில் அதன் கடந்த கால மகிழ்ச்சியில் நான் ஈடுபட்டு வந்தேன் என அவர்ப் பெருமிதப் படும்போது எனக்குள் யோசித்தேன்.
இவர்களை மிதித்துக் கொண்டுதான் திராவிட முன்னேற்ற கழகம் இன்று அரசியல் சார்ந்து தனிச் சொத்தாக வளர்ந்து இருக்கிறது என்பதை நான் சட்டென புரிந்து கொண்டேன்.

மனதில் ஏதோ துக்கமாக பட. அவரை வீட்டில் உணவு அருந்திச் செல்லுமாறு சொன்னேன். எனக்கு உணவு வேண்டியதில்லை அதிகம் நீர் ஆகாரங்கள் தான் உணவு என்று சொல்லிவிட்டு  நான் கிளம்புகிறேன் என்று  சொல்லிப் போய்க் கொண்டிருந்தார். அவர் போகும் போது அவர் செல்லும் திசையை பார்த்துக் கொண்டு நிற்கிறேன். இப்படித்தானே நாமும் இருந்து வந்தோம்  என்கிற எதார்த்தம் மனதில் உறைத்தது.நல்ல சந்திப்பு இன்றைய பொழுது……
இதில் பல உணர்வுகள், சங்கதிகள், செய்திகள் உள்ளன.

அவமானங்களை ஒருபோதும் மறந்து விடாதீர்கள். சேர்த்து வையுங்கள். நேரமும், தகுதியும் வருகையில் பாடம் கற்பிப்போம்..

#திமுகஅன்று
#dmkyesteryears

#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
31-3-2024.

(படம் - அண்ணா, திமுக பொதுச்செயலாளர்  1950களில் கையொப்பம்யிட்ட இவரின் உறுப்பினர் அட்டை)


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...