*புலிகளின் மூத்த நிர்வாகி பேபிசுப்பிரமணியம்* *இளங்குமரன்*
(தமிழீழ கல்விக் கழகப் பொறுப்பாளர்)
அவர்களின் #அகவை நாள் நேற்று . 3.3.2024… *அவரை பற்றி 1989 வரை சில நினைவுகள்*….
——————————
விடுதலைப் புலிகள் இயக்க தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரனை நேர்முக அறிமுகம் இருக்கின்றதோ இல்லையோ தமிழகத்தில் அந்த இயக்கத்தைச் சார்ந்த பேபி சுப்பிரமணியம் அனைவருக்கும் தெரிந்தவர்.
பேபி சுப்பிரமணியம், ஈழம் காங்கேசன் பகுதியில் பிறந்தவர். 1980ல் இருந்து என்னோடு தங்கியவர். அந்த காலகட்டத்தில் ஜீன்ஸ் பேண்டும் ஸ்லாக் சட்டையும் அணிந்துக் கொண்டு ஜோல்னா பையில் புலிகள் இயக்கத்தின் ஆவணங்களையும் அது குறித்தான தகவல் அறிக்கைகளையும் எடுத்துக்கொண்டு ஊர் முழுவதும் சுற்றி அனைவரையும் சந்தித்து ஆதரவு திரட்டுவார். பிரபாகரன் கைது ஆன பாண்டி பஜார் துப்பாக்கிச் சூட்டிற்கு பின் 1989 வரை சென்னையில் நாலு முழம் வேஷ்டியும் காலில் செருப்பு கூட இல்லாமல் இருப்பார் . காலில் செருப்பணியாமல் இருந்தவரை, ஒருமுறை செருப்பணிந்தால் தான் உடன் வருவேன் என்று சொன்னதற்கு புதிய செருப்பு ஒன்றை அணிந்து வந்தார். ஆனால் இரண்டொரு நாளில் அந்த செருப்பு காணாமல் போனபோது எங்கே என்று கேட்டால் சொல்லவில்லை.
என்னுடைய நினைவு,கடைசியாக என்னிடம் நாட்டுக்கு செல்கிறேன் என்று சொல்லிவிட்டு செல்லும்பொழுது அடையாறு ஐஐடி அருகில் உள்ள வால்ட்ரோப் சீன உணவகத்தில் இரவு உணவு அருந்திவிட்டு மறுநாள் கிளம்பிச் சென்றார். அவருக்கு காரம் அதிகமுள்ள உணவுகள் பிடிக்கும். ஊறுகாய் வகைகளை அப்படியே சோற்றில் துவையல் போல பிசைந்து சாப்பிடுவார். இட்லியில் இட்லிப் பொடியை கலந்து சாப்பிடும் போது, “என்ன பேபி, இப்படி சாப்பிட்டா அல்சர் வரும்” என்று சொன்னால் கூட விட மாட்டார். ரசித்து சாப்பிடுவார்.
இரவும் பகலும் இயக்கப் பணிகளுக்கு இயங்கிக் கொண்டிருப்பார். தூக்கமில்லாமல் இரவெல்லாம் எழுதுவது, ஆவணங்கள் தயாரிப்பது என மும்முரமாக இருப்பார். அப்போதெல்லாம் ஜெராக்ஸ் (xerox) கிடையாது., அதை ஸ்டென்சில் (stencil) தாளில் தட்டச்சு செய்து சைக்ளோஸ்டைல் (cyclostyle) செய்ய வேண்டும். மறுநாள் காலையில் அதை பத்திரிக்கை அலுவலகங்களுக்கு என்னுடைய நீதிமன்ற பணிகளுக்கு இடையில் நானும் அவரும் எடுத்துச் சென்று தருவது வாடிக்கை. ஆங்கில இந்து, ஆங்கில இந்தியன் எக்ஸ்பிரஸ், தினமணி, தினத்தந்தி, தினமலர், மாலை முரசு, மாலை மலர், முரசொலி, விடுதலை, PTI, UNI நிறுவனங்கள் தான் அப்போது இருந்தன. நேரடியாக அந்தப் பத்திரிக்கைக்கான செய்திகளை கொண்டு சேர்ப்போம்.
சென்னை ஆங்கில இந்திய எக்ஸ்பிரசுக்கு ஆசிரியர் பொறுப்பில் இருந்த இராமகிருஷ்ணன் ராஜ்ய சபா உறுப்பினராக இருந்தவர். அப்போதெல்லாம் செய்தித் தொடர்பாளரை Spokesperson என்று சொல்லும் வாடிக்கை கிடையாது. இராமகிருஷ்ணன் எங்கள் இருவரையும் பார்த்து LTTE Spokespersons என்று அன்போடு அழைத்துப் பேசுவார். எங்கள் இருவரைப் பற்றி அன்றைக்கு வந்த புதிய கலாச்சார இதழில் மாணிக்கவாசகம் என்பவர் கூட இதைக் குறித்து எழுதியிருந்தார். கோவில்பட்டி சட்டமன்ற தொகுதில் 1989 இல் திமுக வேட்பாளாராக போட்டியிட்ட போது ஒரு நாள் என்னோடு பிரச்சார களத்தில் நள்ளிரவு வரை இருந்து விட்டு எட்டையபுரத்தில் இரவு சாப்பிட்டு விட்டு மதுரை சென்றார்
நேர்மையான களப்பணியாளர், எளிமையானவர். பிரபாகரனை விட பேபி சுப்பிரமணியத்துடன் என்னுடைய நட்பு நெருக்கம் அதிகம்.
#ksrpost
4-3-2024.
No comments:
Post a Comment