Friday, March 8, 2024

#*மகளிர் தினம்* சில சேதிகள்……

#*மகளிர் தினம்*
சில சேதிகள்……
 ————————————
பெண்கள் அறிவை வளர்த்தால் - வையம் பேதமை யற்றிடும் காணீர் -#பாரதி 

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 8 ஆம் தேதி அன்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. பெண்களின் சமூக, பொருளாதார, கலாச்சார மற்றும் அரசியல் சார்ந்த பங்களிப்புகளுக்கு அங்கீகாரம் மற்றும் மரியாதை வழங்கும் விதமாக உலகம் முழுவதும் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.

உலகின் சரிபாதியாக விளங்கும் பெண்களின் வாழ்க்கையில்  அவர்களது உரிமைகள் அனைத்தும்அவர்களுக்கே  கிடைக்கவும் அதை அரசும் சட்டமும் உறுதிப்படுத்தவும் வேண்டிய மாற்றங்களை வரவேற்று இந்த நன்னாளில் அவர்களை வாழ்த்துவதில் மகிழ்வோம்.

தமிழ்நாட்டைப் பொறுத்தவரை மிகச் சிறந்த பெண்கள் தங்களது வாழ்நாளில் மேற்கொண்ட சீரிய கருத்துகளுக்காக அல்லது பெண்ணுரிமைப்  போராட்டங்களுக்காக தங்கள் வாழ்நாள் முழுக்கக்கற்ற கல்வி கேள்விகளில் சிறந்து அதன் வழியே சமூகத்திற்கு தங்களது ஆற்றலைப் பங்களித்து வந்திருக்கிறார்கள். அதன் பேரில் வரலாற்றில் அழியாப் பெயர் பெற்றும் உள்ளார்கள்.

எனக்கு தெரிய பெரியாரின் காலத்திலேயே சிறந்து விளங்கிய தமிழக அறியா திராவிட பெண் சிந்தனையாளர்  #அலமேலுமங்கத்தாயார்அம்மாள் போன்றவர்களை நினைவு கூறுகிறேன்.

 பிரிட்டிஷார் காலத்திலேயே சென்னை ராஜதானியில் நடந்த தேர்தலுக்கான முதல் பெண் வேட்பாளர் #கமலாதேவிசட்டோபாத்யாயா ஒருவர் என்றால்
விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட தியாகி கடலூர் #அஞ்சலைஅம்மாள் அவர்களையும் மனதில் கொள்கிறேன்.

 பிறகு சென்னை மாகண அமைச்சரவையில் முதன்முதலாக பங்கு பெற்ற #லூர்தம்மாள்சைமன் #ஜோதிவெங்கடாசலம் போன்றோர் தமிழ் பெண்ணிய அரசியல் வாழ்வின் தொடக்கப் புள்ளிகள் என்றால் அவர்களை இந்நாளில் நினைத்துக் கொள்வது
வரலாற்றைத் திரும்பி பார்ப்பதாக இருக்கும்.

அதுபோக குழந்தைத் தொழிலாளர்களுக்கென தீவிரமாக குரல் கொடுத்து வரும் #நந்தனாரெட்டி போன்றவர்களும்,   சுதந்திர காலத்தில் பொதுவுடைமைக் கட்சியில் இடம் பெற்று பெண்ணுரிமைகளை தொடர்ந்து பேசி வந்த மறைந்த #பார்வதிகிருஷ்ணன் என ஒரு நீண்ட பட்டியலே இருக்கிறது. 

இப்படியான தொடக்க காலப் போராளிகள் எல்லாம் விட்டுவிட்டு  இன்றைய பெண்கள் தினங்களில் ஊடக பிம்ப அரசியல் இடம்பெறும் அதாவது எந்தத் தியாகமுமற்ற வரலாற்றின் உரிமைப் போராட்டங்களில் எள் முனை அளவும் இடம்பெறாத அல்லது எந்த அக்கறையுமற்ற பலரும் தங்களது பல்வேறு பின்னணிகளை சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு பெண்கள் தினத்தன்று போற்றப்படுகிறார்கள்.

இடதுசாரி குடும்பத்தைச் சேர்ந்த கவிஞர் #லீனாமணிமேகலை @LeenaManimekali அவர்களின் தாயார் தான் பிறந்த ஊரில் குறிப்பாக வத்ராயிருப்பு கிருஷ்ணன் கோவில் பகுதிகளில் அதன் மேற்கு தொடர்ச்சி மலையின் அடிவாரத்தில் கடுமையாகப் பாடுபட்டு பல்வேறு வகையான பழத் தோட்டங்களை உருவாக்கி இருக்கிறார். அதுபோல சேலம் பகுதியில் ஆர்கானிக் சுயசார்புவிவசாயம் மற்றும் உடல் நலத்திற்கு தேவையான உணவுப் பொருட்களை இயற்கை விவசாய முறையில் உற்பத்தி செய்து அடக்க விலையில் விற்று வரும் #ஆரண்யஅல்லி போன்றவர்கள் இன்றைய நவீன பெண்ணியச் சூழலில் நினைவு கூறப்பட வேண்டியவர்கள்.
இருந்திருக்கிறார்கள்.
இவர்களெல்லாம் பொதுவெளியில் அறியப்பட்டும் அறியப்படாமலும் தங்கள் வாழ்நாளைச் சமூக மாற்றங்களுக்கென சிந்தித்து உழைத்து வந்திருப்பதை நான் பார்த்திருக்கிறேன்.

இவர்களை எல்லாம் விட்டுவிட்டு ஊடக பிம்ப அரசியலில் தங்களை முன்னிலைப்படுத்தி அரசு அதிகார நலன்களில் இடம்பெறும்  பலரையும் பெண்ணியவாதிகள் என்று சொல்லி

உண்மையான பெண் வாழ்வின் போராட்டங்களைக் கொச்சைப்படுத்த வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறேன். வாழ்க பெண்கள்! வளரட்டும் அவர்கள் உரிமைகள்!!!.

•••••

அவளுக்குத்தெரியும்
அவளென்பது 
அவர்கள் பார்வையில் 
வெறும் சதைப்பிண்டம் தானென்பது
அவளுக்குத்தெரியும்
அச்சதைப்பிண்டம் சுயமாக சிந்திப்பதை அவர்கள் விரும்புவதில்லையென்பது
அவளுக்குத்தெரியும்
அவள் கனவுகள் காண்பதும் 
அதன் வழியே செல்வதும் 
அவர்களை ஆத்திரமூட்டுகின்றனவென்பது

இன்னும்
ஓநாய்களின் கூட்டத்தில் 
அவளொரு சிறிய ஆட்டுகுட்டிதானென்பதும்
நிறங்கள்தான் வேறு
குணத்தில் எல்லா (ஓ)நாய்களும் 
ஒன்றுபோல்தானென்பதும் 
அவளுக்குத்தெரியும்

பின்னும் கூட
எதிர்த்து வரும் தடைகளை 
உடைத்து அவள் முன் செல்வதும்
அடக்கியாழத் துணியும் 
ஆணவத்தின் முன் அவள் 
தலை நிமிர்ந்து நிற்பதும் 
அவளுக்காக 
அவர்கள் இருக்கிறார்கள் என்ற நம்பிக்கையினால் அல்ல
அவளுக்காக 
அவள் மட்டும்தான் இருக்கிறாளெனும்
தன்னம்பிக்கையினால்

ஆக
மலடி
ஓடுகாலி
வாழாவெட்டி
மாயக்காரி
அடங்காப்பிடாரியென
அவளுக்கான 
எத்தனையோ பெயர்களுக்குப்பின்னே
அவர்கள் தரும் உத்தமி 
பட்டமென்பது 
ஒன்றுக்கும் உதவாத 
வெறும் மயிர்தானென்பது
அவளுக்குத் தெரியாதா
என்ன?
-ரிஸ்கா முக்தார் 

——-

யோனியின் புனிதங்களெல்லாம் வரலாற்றுக்
கல்லறைகளில் புதைந்து கிடக்கும்
சிலுவைகள்..! அவை
இன்னும் மக்கிப் போகாமல் காலத்துக்குக் காலம்
கொண்டாடப்படும் கல்லறை விழாக்களில்
 பொன்னெழுத்துக்களால் வரைவிலக்கணம்
எழுதப்பட்டுப் மீண்டும் மீண்டும் புதுப்பிக்கப்படுகின்றன.
- எங்கோ படித்த  ஒரு பெண கவிஞரின் வரிகள்.

#ksrpost
8-3-2024.


No comments:

Post a Comment

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao #ManmohanSingh #officialfuneralrites

#FormerPrimeMinisters #PV. NarasimhaRao  #ManmohanSingh #officialfuneralrites ———————————————————- #முன்னாள்பிரதமர்கள் #பிவி.  நரசிம்மராவ் #...