Sunday, March 31, 2024

#*முதல்வர ஸ்டாலின் அவர்களே,* •••

#*முதல்வர ஸ்டாலின்
அவர்களே,*
•••
இந்த நாடாளுமன்ற தேர்தலில் திமுகவிற்கு பெரும் தலைவலியாக இருக்கப் போகும்  பிரச்சனை எதுவாக இருக்கும் எனில் மாதம் தோறும் மகளிர்க்கான உரிமை தொகை  1000 ரூபாய் கொடுப்பதில் உண்டாகி இருக்கக்கூடிய குழப்பங்கள் தான்.

அனைத்துப் பெண்களுக்கும் 1000 ரூபாய் உரிமைத்தொகை தகுதிவாய்ந்த என மாறும்போது இப்படித்தான் கேள்வி எழும். உதயநிதி தேர்தலுக்குப்பின் மேலும் 55 லட்சம் பேருக்கு உரிமைத்தொகைன்னு வாக்கு கொடுத்திருக்காரு என்ன ஆகப்போகுதோ...

ஒரு வீட்டாருக்கு ஆயிரம் ரூபாய் என்றால் பக்கத்து வீட்டாருக்கு இல்லை ஒரு தெருவில் 10 பேருக்கு கொடுக்கப்படுகிறது என்றால் மற்றொரு தெருவில் 10 பேருக்கு இல்லை.

தோல்வியில் முடிந்த மகளிர் உரிமை திட்டம்..
முதல்வரிடம் இன்று 31-3-2024இல் ஈரோட்டில் சரமாரி கேள்விக்கேட்ட பெண்..

  பெண்களின் பகை சாதாரணமானது அல்ல குழாயடியில் நின்று புரணி பேசும் பெண்களின்  பேச்சு தான் தமிழ்நாடு முழுக்கப் பிரச்சாரமாக மாறும்.
அந்த ஆயிரம் ரூபாய் உரிமை தொகை கிடைக்காத  பலரின் அங்கலாய்ப்புகள்  திமுகவிற்கு இந்த தேர்தலில் கேடாய் முடியும் என்று தோன்றுகிறது.

பொதுவாக முதல்வர் ஸ்டாலினின் போக்குகளும் அரசியல் சரி தன்மையைப் பொறுத்து திருப்திகரமாக இல்லை. மாற்றுக் கட்சிகளான அண்ணா திமுக மற்றும் நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகி வருபவர்களுக்கு முன்னுரிமை தந்து  கட்சியில்  இணைத்துக் கொண்டு இன்று தேர்தல் களத்தில் பயணிக்கிறார்.

கலைஞர் எமர்ஜென்சி காலத்தில் ஆகட்டும் ராஜீவ் படுகொலை காலத்தில் ஆகட்டும் கட்சியில் இருந்து பாடுபட்டு அதற்காக உழைத்தவர்களைக் குறிப்பாக திமுகவின் நாற்றாங்காலில் விளைந்தவர்களை கொண்டு தான் அன்று கட்சிக்கு வந்த  அனைத்து நெருக்கடி நிலைமைகளையும் சமாளித்தார். அன்று மாற்றுக் கட்சியில் இருந்து எவரும் வரவில்லை அப்படியே வந்தாலும் அவர்களை கலைஞர் கண்டு கொள்வதுமில்லை. இப்படித்தான் அவர் அனைத்திலும் வெற்றி பெற்றார்.

ஆனால் ஸ்டாலினை பொறுத்தவரையில் அதிமுக போன்ற மாற்றுக் கட்சியில் இருந்து வந்தால் முதல் மரியாதை. அதுவும் மதிமுகவிலிருந்து வந்தால் எதுவும் இல்லை.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் இவர்களுக்கு எதிர்க்கட்சி  இல்லாத நிலையில் தான் சுலபமாக இவர்கள் வெற்றி பெற்றார்கள் என்பதை மறந்து விடுகிறார்கள். உண்மையில் எடப்பாடி பன்னீர்செல்வம்  தினகரன் எல்லோரும் ஊர் அணியாக அதிமுகவில் வலிமையாக நின்று இருந்தால் திமுக வெற்றி அடைந்திருக்க முடியாது. 

 அது ஒரு புறம் இருக்க இந்த நாடாளுமன்றத் தேர்தல் அவ்வளவு முக்கியமானது ஒன்றும் அல்ல. ஆனால் வருகின்ற 2026 சட்டமன்றத் தேர்தல் திமுகவிற்கு மிகுந்த சோதனை காலமாக இருக்கும்.
அந்தத் தேர்தல் தான் பாரதப்போரில் நடந்த குருச்சேத்திரத்திற்கு ஒப்பான பல விளைவுகளை  பாடங்களை திமுகவிற்குத் தரும்.

இன்றைய நாடாளுமன்றத் தேர்தலுக்கென இணைந்திருக்கும் திமுகவின் கூட்டணிக் கட்சிகளில் உள்ள தோழமைகள் யாரும் திருப்தியாக இல்லை.

எடப்பாடி பழனிச்சாமி மிக தைரியமாக தன் வேட்பாளர்களை முடிவு செய்து அறிவித்துவிட்டு தேர்தல் களத்தில் நிற்கிறார்.

திமுகவில் வேட்பாளர்கள் எப்படி இருக்கிறார்கள் என்றால் கோயம்புத்தூரின் பழைய அதிமுக மேயர் அவர் எதோ ஜெயலலிதா அம்மையார்  பற்றி phd ஆய்வு செய்து பட்டம் பெற்று இருக்கிறாராம் கணபதி ராஜ்குமார் என்பவர்.அவர் இப்போது திமுகவுக்கு வந்துள்ளாராம் அவரை வேட்பாளராக அறிவித்துள்ளார்கள்.
எப்படி இருக்கிறது என்று பாருங்கள் இவர்களுடைய தேர்வு .

திமுகவில் எத்தனையோ திறமை மிக்க வேட்பாளர்கள் இருக்கிறார்கள் அவர்கள் எல்லாம் விட்டுவிட்டு மாற்று கட்சியிலிருந்து வந்தவர்களுக்கு முதல்ல் உரிமை என்றால் என்ன அர்த்தம்.

செந்தில் பாலாஜி சேகர் பாபு
 எ வ வேலு கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன் இப்படி மாற்றுக் கட்சியில் இருந்து வந்தவர்களுக்கு தான் திமுகவில் பதவியும் தொகுதியும் கிடைக்கின்றன.

அதிமுகவிலிருந்த போதும் அமைச்சர் பதவி திமுகவுக்கு வந்தாலும் அமைச்சர் பதவி. இதன் உள்ளர்த்தங்கள் என்ன. இதை ஆட்கள் கலைஞரைப் பற்றி என்ன எல்லாம் மோசமாக பேசினார்கள் என்பது கூட மறந்து விடுகிறதா?

இவர்களை வைத்துக்கொண்டு தான் ஸ்டாலின் கட்சியை வழிநடத்துகிறார்.

வருகிற 2026 தேர்தல் இப்படி இருக்காது முதல்வர் ஸ்டாலின் அவர்களே!

அந்த 2026 தேர்தல் இன்றைய கூட்டணி கட்சிகளின் நிலைமை  இப்படியே இருக்கப்போவதில்லை.  ஒருபுறம் பாரதிய ஜனதா வளர்ந்து காலூன்றி விட்டது. அதிமுகவும் தங்களது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கிறார்கள். மற்றொருபுறம் நடிகர் விஜய் 50 லட்சம் உறுப்பினர்களைக் கொண்டு அந்த தேர்தலை எதிர் கொள்ளவிருக்கிறார். புதிய தலைமுறை ஓட்டுகள் தொடர்ந்து விஜயின் கட்சியில் 20 முதல் 40 வயது வரை உள்ளவர்கள் ஒரு தேர்தலை தீர்மானிக்கும் அளவிற்கு பெருகி இருக்கிறார்கள்.

முதல்வர் ஸ்டாலின் அவர்களே நாங்களெல்லாம் உங்களுடன் பயணித்தவர்கள். கட்சியின் ஆதாரப்பூர்வமான காலங்களில் இருந்து இன்று வரை அதன் அரசியல் மாற்றங்களில் வேலை செய்தவர்கள். நான் சொல்வதை நீங்கள் கேட்டாலும் சரி கேட்க விட்டாலும் சரி.ஏன் எனில்
நீங்கள் எல்லாம் கலைஞரின் ஆட்சிக் கட்டிலில் இருந்து வசதியாக வந்தவர்கள். கலைஞரின் மகன் மகள் பேரன் என நீங்களும் கனிமொழி போன்றோர்கள் எல்லாம் லிப்டில் ஏறி சென்று திமுக என்ற மூன்றாம் தளத்தை எட்டி விட்டீர்கள். என்னை போல எங்களைப் போல உழைத்தவர்கள் எல்லாம் இன்னும் படிகளிலும் ஏணிகளிலும் ஏறித்தான் அதை ஒட்டி மூன்றாம் தளத்துக்கு வர வேண்டி இருக்கிறது. கலைஞர் அறியவர்களுக்கு உங்கள் குடும்ப பரிவார விருப்படி மந்திரிகள், எம்பிகள் என கட்சியில் சீனியார்டியை அங்கிகாரம் செய்யாமால் , யார் யாருக்கோ தகுதியற்றவர்க்கு அள்ளி தங்கள் சொத்தை  போல அள்ளி தந்து; திமுகவுக்கு உழைத்தவர்களை புறக்கணித்தேர்கள். அந்த பாவம் சாதாரணமாக விடாது உங்களை….

வெற்றிகள் வரலாம் சில காலம்  தமிழக ஆட்சியில் இருந்தோம் என்கிற பெயர் கூட கிடைக்கலாம்.
அதுவா முக்கியம். அண்ணா போல கலைஞர் போல காமராஜர் போல வரலாற்றில் நீடித்த நிலைத்த பேர் எடுக்க வேண்டும். அதற்கு உதவுபவர்கள் அதற்கு அச்சாரம் இடுபவர்கள் அதற்கு அறிவுரை சொல்பவர்களை அருகில் வைத்துக் கொண்டிருந்தால் நலன் பயக்கும்.

அதை விட்டுவிட்டு உங்கள் குடும்பம் சந்தர்ப்பம் என்று போய்க்கொண்டிருந்தால் வரலாறு உங்கள் பெயரை எழுதாது.

அரசியல் அவ்வளவு எளிதானது அல்ல அதேபோல் வருகிற 2026 தேர்தலும் உங்களுக்கு  உங்களின் கீழ் உள்ள திமுகவிற்கு அவ்வளவு எளிதாக இருக்காது என்பதை நான் உங்களுக்குச் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
#வாரிசுகள்திமுக
#தமிழகஅரசியல்
#சட்டமன்றதேர்தல்2026
#dyanaspolticsdmk

#கேஎஸ்ஆர்போஸ்ட்
#ksrpost
31-3-2024.


No comments:

Post a Comment

*If you're not making mistakes. Then you're not making decisions*

*If you're not making mistakes. Then you're not making decisions*. You know success seems to be connected with action. Successful pe...