Tuesday, November 12, 2024

தெலுங்கு நாட்டில் வழிபாட்டு முறைகள்

தெலுங்கு நாட்டில் வழிபாட்டு முறைகள் :

தென்னிந்தியாவின் ஒரு கிராமத்தில் காலராவோ, பெரியம்மையோ தாக்கி விட்டது என்று வைத்துக்கொள்வோம். இப்போது தெலுங்கு நாட்டின் ஒரு பின் தங்கிய மாவட்டத்தில், புகைவண்டியோ அல்லது பிராமணர்களின் ஆதிக்கமோ இல்லாத ஒரு கிராமம் என்று வைத்துக் கொள்வோம். அங்கே என்ன நடக்கும் என்று பார்ப்போம்.

ஒரு தெலுங்குக் கிராமம். இந்தக் கிராமத்தின் காவல் தெய்வம் பெத்தம்மா (பெரிய அம்மா) ஆகும். இந்த நோய் பரவுவது இந்த அம்மா கோபமாக இருக்கிறாள் என்று அர்த்தமாகும். எனவே அவளை அமைதிப்படுத்த வேண்டும். அதற்கு ஆகும் செலவிற்காக ஊர் முழுவதும் பணம் சேர்க்கப்படுகிறது, சில நேரங்களில், அந்த ஊரின் பணக்காரர் மொத்தச் செலவையும் ஏற்றுக் கொள்வார். இந்தத் திருவிழாவிற்கு ஒரு நல்ல நாள் குறிக்கப்படுகிறது. இந்தக் கிராமத்தில் அது வியாழக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை தவிர்த்த ஒரு நாளாகும். ஊரில் உள்ள குயவர், பெத்தம்மா போன்று ஒரு களிமண் சிற்பம் செய்யப் பணிக்கப்படுகிறார். தச்சர் ஒரு மர வண்டி செய்ய, பலிக்கு ஒரு நல்ல எருமை தேர்ந்தெடுக்கப்படுகிறது.

அந்த நல்ல நாள் வந்தவுடன், எருமை மேல் மஞ்சள் தெளிக்கப்பட்டு, அதன் கழுத்திலும், கொம்புகளிலும் வேப்பிலை கட்டி அலங்கரிக்கப் படுகிறது. மதியம் இரண்டு மணிபோல் எருமை ஊரைச் சுற்றி ஊர்வலமாக அழைத்து வரப்படுகிறது. அப்போது மேளங்களும் மற்ற இசை வாத்தியங்களும் முழங்குகின்றன. இந்தப் பலி நிகழ்ச்சியில் தீண்டத்தகாத சாதியைச் சேர்ந்த மாலா மற்றும் மடிகர்கள் முன்னிலையில் இருந்து, அந்த எருமையை வீடு வீடாகக்கூட்டிச் செல்கிறார்கள். ஒரு மடிகர் முன்னே மேளம் அடித்துக்கொண்டு 'அம்மாவுக்குப் பலி கொடுக்கப்படும் எருமை வருகிறது' என்று சத்தமாகக் கூவிக் கொண்டே போகிறார். அப்போது வீட்டில் உள்ளவர்கள் வெளியே வந்து, அந்த எருமையின் முன் குனிந்து வணங்கி, அதன் கால்களைத் தண்ணீரால் கழுவி, கூடே வரும் மாலா மற்றும் மடிகர்களுக்கு உணவும் வழங்குகின்றனர்.




இந்த ஊர்வலம் இரவு எட்டு மணிபோல் நிறைவு பெறுகிறது. அப்போது அந்த எருமை ஒரு மூங்கில் பந்தலுக்கு அருகில் கட்டிப் போடப்படுகிறது. இந்த மூங்கில் பந்தல் அம்மனை வரவேற்பதற்காகப் போடப்பட்டது. அங்குக் கிராமத்தினர் அனைவரும் ஒன்றாகச் சேர்ந்து, இரவு பத்து மணிபோல, குயவரின் வீட்டிற்கு ஊர்வலமாகப் புறப்படுகின்றனர். குயவரின் வீட்டில் ஓர் இரண்டரை படியளவு அரிசியைக் கொட்டி அதன் மேல் அந்தக் களிமண் சிலையை வைக்கின்றனர். எல்லோரும் வணங்கியபின், அங்கு ஒரு கிடா பலி கொடுக்கப்படுகிறது. அந்தக் கிடாவின் தலையை வெட்டி வழியும் ரத்தத்தை அந்தச் சிலையின் மேல் தெளிக்கின்றனர். இது அந்தச் சிலையை ஒருவிதமாகப் புனிதமாக்குகிறது.

அடுத்து, குயவர் இப்போது இந்தச் சிலையை எடுத்துக்கொண்டு, அவரது வீட்டில் இருந்து சிறிது தூரம் சென்று,வண்ணாரிடம் கொடுக்கிறார். வண்ணார் அதை எடுத்துக்கொண்டு மூங்கில் பந்தலுக்குத் திரும்புகிறார். இந்த ஊர்வலத்தின்போது, ஊர் மக்கள் கத்தி, கம்புகளுடன் தீயசக்திகளை விரட்டிக்கொண்டு வருகின்றனர். அப்படியே எலுமிச்சைகளை வெட்டி மேலே தூக்கி வீசுகின்றனர். இந்தத் தீய சக்திகள் இந்த எலுமிச்சைகளை எடுத்துக்கொண்டு போய் விடும், சிலையைக் கொண்டு வருபவரை எந்தத் தடையும் செய்யாது என்பது நம்பிக்கை.

இவ்வாறாக அந்தச் சிலை மூங்கில் பந்தலில் கொண்டு வந்து வைக்கப்படும். அங்கிருந்து பனைமரத்தில் ஏறிக் கள் இறக்குபவரின் வீட்டிற்கு ஊர்வலம் தொடர்கிறது. அங்கே கொஞ்சம் அரிசி சமைக்கப்பட்டு, அதனுடன் ஒரு பானைக் கள்ளும்,ஒரு பாட்டில் நாட்டுச் சாராயமும் காய்ச்சப்படுகிறது. இந்தப் பானையும், பாட்டிலும் மஞ்சள், குங்குமத்தால் பூசப்படுகிறது. சமைக்கப்பட்ட அரிசியின் முன் இந்தக் கள்ளும், நாட்டுச்சாராயமும் வைக்கப்பட்டு, கள் இறக்குபவர் இவற்றை வணங்குகிறார். இங்கும் ஒரு கிடா பலியிடப்படுகிறது. இப்போது கிராமத்தினர் அவருக்கு அரிசி, சோளம் மற்றும் நான்கு அணாக்களைக் கூலியாகக் கொடுக்கிறார்கள்.
இப்போது இந்தப் பானையும், பாட்டிலும் ஊர்வலமாகக் கொண்டு வரப்பட்டு பெத்தம்மாவின் சிலைக்கு அருகே அந்தப் பந்தலில் வைக்கப்படுகிறது.

இன்னொரு ஊர்வலம் இங்கிருந்து கிளம்பி, ஊர் பெரிய மனிதர் ரெட்டி - வீட்டிற்குச் செல்கிறது. இங்கிருந்து பெரிய மண் பானையில் சோறும், இனிப்புகளும், ஒரு செம்மறியாடும் கொண்டு வரப்படுகிறது. பெத்தம்மாவின் சிலைக்கு முன் வேப்பிலைகள் பரப்பப்பட்டு ரெட்டியின் வீட்டில் இருந்து கொண்டுவந்த சோறு ஒரு குவியலாகக் கொட்டப்படுகிறது. அதுபோலவே அருகில் மற்றவர்களின் வீடுகளில் இருந்து வந்த சோறும் - நூறு முதல் முந்நூறு படி அளவில் -கொட்டப்படுகிறது.

இவை எல்லாமும் நடக்கப்போகும் பெரும் பலியின் ஆரம்பத் தயாரிப்புகளே. முதலில் அந்த இளம் செம்மறியாடு வணங்கப்பட்டு, பின் கழுத்து அறுக்கப்பட்டு, தலை வெட்டப்பட்டு பலி கொடுக்கப்படுகிறது. பின் ஒரு கிடா கொண்டு வரப்பட்டு குவித்து வைக்கப்பட்டுள்ள சோற்றின் மேல் நிற்க வைக்கப்படுகிறது. வண்ணார் ஒரு பெரிய கத்தியைக்கொண்டு பின்புறமாக இந்தக் கிடாவை இரண்டாக வெட்டுகிறார். பீறிட்டு வரும் ரத்தம் சோற்றை நனைக்கிறது. ஒரு பாதிக் கிடா அங்கிருந்து அருகில் சடங்குகளை ஆரம்பிக்க நிற்கும் ஆசாடிகளிடம் கொண்டு தரப்படுகிறது. இன்னொரு பாதி, சோற்றின் மேல் அப்படியே கிடக்கிறது.

ஆசாடிகள் பெத்தம்மாவை குறித்த பாடல் ஒன்றைப் பாட ஆரம்பிக்கின்றனர். அப்போதே முக்கிய பலி நிகழ்த்தப்படுகிறது. எருமை முன்னே கொண்டு வரப்பட்டு, மடிகர்கள் அதன் கழுத்தை அறுத்துப் பலி கொடுக்கின்றனர். சில கிராமங்களில் தலையை வெட்டிப் பலி கொடுக்கப் படுகிறது. சிந்திய ரத்தத்தின் மேல் தண்ணீர் ஊற்றப்பட்டு, அதன் மேல் மண் கொட்டப்படுகிறது. வேறு கிராமத்து ஆட்கள் இந்த ரத்தத்தை எடுத்துச் சென்றுவிடக் கூடாது என்பதற்காகவே இது செய்யப்படுகிறது. இந்த ரத்தத்தின் சிறு பாகத்தை வேறு கிராமத்தவர்கள் எடுத்துச் சென்றுவிட்டால் இந்தப் பலியின் பயன் முழுதும் அந்தக் கிராமத்தைச் சேர்ந்து விடும்.

இந்த எருமையின் தலை வெட்டப்பட்டு, அதன் கொழுப்புகளால் கண்களும் மூக்கும் மூடப்பட்டு, பெத்தம்மாவின் சிலையின் முன் வைக்கப்படுகிறது. எருமையின் வலது முன் கால் வெட்டப்பட்டு அதன் வாயில் குறுக்காக வைக்கப்படுகிறது. அதன் நெற்றியில் சோறும், சோறின் மீது ஓர் அகல் விளக்கும் ஏற்றப்படுகிறது. எதற்காகஇந்த வலது முன் கால் வெட்டி வைக்கப்படுகிறது என்று என்னால் கண்டறிய முடியவில்லை. 'இது எங்கள் வழக்கம்' என்பதே இந்தக் கிராமத்தவரின் பதிலாகும்.

ஆனால் இந்தப் பழக்கம் தமிழ், கன்னட மற்றும் தெலுங்கு நாட்டவரிடம் இருப்பதை நான் கண்டிருக்கிறேன். மேலும் தெற்கு மராட்டியர்களிடமும் இந்தப் பழக்கம் இருப்பதாகக் கேள்விப் படுகிறேன். இது தென்னிந்தியாவின் மிகப் பழமையான சடங்குகளில் ஒன்றாக இருக்கவேண்டும். இத்துடன் இந்தப் பலி நிறைவுறுகிறது. படைக்கப்பட்ட உணவுகளாலும், சிந்தப்பட்ட ரத்தத்தாலும், அம்மா குளிர்கிறாள் என்பது இவர்களின் நம்பிக்கையாகும். ஆனால் பெரும்பாலான உணவு கிராமத்தவர்களால் வீட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டு உண்ணப்படுகிறது. அம்மன் சாரத்தை எடுத்துக் கொண்டு, உணவை மக்களுக்குக் கொடுக்கிறாள். இது அதிகாலை மூன்று மணி வரை நடக்கிறது. இதற்குப்பின் இன்னொரு முக்கியச் சடங்கு ஆரம்பிக்கிறது.

அந்தச் சோற்றுக் குவியலில் இருந்து கொஞ்சம் ரத்தம் தோய்ந்த சோறும்,எருமையின் குடலின் ஒரு பாகமும் கலக்கப்பட்டு ஒரு கூடையில் வைக்கப்படுகிறது. மாலா சாதியைச் சேர்ந்த ஒருவர் இந்தக் கூடையைத் தூக்கிக்கொள்ள, இன்னொருவர் முதலில் கொல்லப்பட்ட செம்மறி ஆட்டின் குடலை மாலையாக அணிந்து கொண்டு, அதன் ஈரலை வாயில் கவ்விக்கொண்டு ஊர்வலமாகப் புறப்படுகின்றனர். இப்போது ஈரலை வைத்திருப்பவரிடம் அம்மன் இறங்குவதாகச் சொல்லப்படுகிறது. அவரும் சில சமயம் கயிறுகளால் கட்டப்படும் அளவிற்கு ஆட ஆரம்பிக்கிறார். அவரைச் சுற்றிச் சிறு விவசாயிகளும், மற்ற மாலா சாதியினரும் கையில் கம்புகளும், வாட்களும் வைத்துக்கொண்டு, எலுமிச்சைகளை வெட்டி வானில் எறிந்து கொண்டு வருகின்றனர்.

கிராமத்திற்குள் போகும் இந்த ஊர்வலத்தின்போது மக்கள் 'பொலி! பொலி! (உணவு! உணவு!)' என்று கத்துகின்றனர். கூடையில் சோறு வைத்திருப்பவர், அந்தச் சோற்றைக் கொஞ்சமாக எடுத்து கிராமத்து வீடுகளின் மேல் ஏறிகிறார். இது தீய சக்திகளிடம் இருந்து அந்த வீட்டையும், வீட்டில் இருப்பவர்களையும் காப்பாற்றும். இந்த ஊர்வலத்தின்போது, இவர் கத்திக்கொண்டும் ஆடிக்கொண்டும் வரும்போது, தீய சக்திகளைப் பார்த்து மயங்கி விழுகிறார்.அப்படி மயங்கி விழும் இடங்களில் செம்மறி ஆடுகள் பலி கொடுக்கப்பட்டு, எலுமிச்சைகள் மேலே எறியப்பட்டு, தேங்காய்கள் உடைக்கப்பட்ட பிறகு சுய நினைவுக்கு வருகிறார். அப்படியே ஊர்வலம் ஊருக்குள்தொடர்கிறது. விடியும் நேரத்தில் இந்த ஊர்வலம் திரும்பவும், அமைதி அடைந்து இருக்கும் பெத்தம்மாவின் மூங்கில் பந்தலுக்கு வந்து சேர்கிறது.

மறுநாள் காலை பத்து மணிக்குத் திரும்பவும் சடங்குகள் தொடங்கு கின்றன. பலி கொடுக்கப்பட்ட எருமையின் உடலின் ஒரு பாகம் வெட்டப்பட்டு, சோளத்துடன் சேர்த்துச் சமைக்கப்படுகிறது. 'சித்தாலு' என்று அழைக்கப்படும் ஐந்து மாலா சாதி சிறுவர்கள், இந்த உணவை ஒரு பெரிய வெள்ளைத் துணியினால் மறைக்கப்பட்ட இடத்தில் உண்கின்றனர். எந்தத் தீய சக்தியோ, யாரின் கண்ணேறும் பட்டு விடக்கூடாது என்பதற்காக இது இருக்கலாம். இரவில் இருந்து பெத்தம்மாவை நோக்கிப் பாடிக்கொண்டிருக்கும் ஆசாடிகளுக்கு அடுத்து உணவு தரப்படுகிறது. இதற்கு அப்புறம் கிராம மக்கள் தங்கள் காணிக்கைகளைக்கொண்டு வருகிறார்கள். பிராமணர்கள் அரிசியும், தேங்காயும், ஏனைய சாதியினர் செம்மறி, வெள்ளாடு, பறவைகள் மற்றும் எருமைகளைக் கொண்டு வருகிறார்கள்.

எருமைகள் மடிகர்களாலும், ஏனைய மிருகங்கள் வண்ணாராலும் கழுத்து அறுக்கப்பட்டு பலி கொடுக்கப்படுகின்றன. இந்தப் பலிகளின் தலைகள் வெட்டப்பட்டு அவை அம்மனுக்குப் படைக்கப் படுகின்றன. இது மதியம் மூன்று மணிவரை நடக்கிறது. மூன்று மணிக்கு மேல் கிராம மக்கள் ஊர்வலமாக மரவண்டியைப் பெற, தச்சர் வீட்டிற்குச் செல்கின்றனர். அங்கு அந்த வண்டிக்கு ஓர் ஆடு பலியிடப்பட்டு, சோறு படைக்கப்படுகிறது. தச்சருக்கு ஒரு புதுத்துணியும், எட்டு அணாக்களும் சம்பளமாக வழங்கப்படுகிறது. வண்ணார்களால் இந்த மர வண்டி, மேளங்களும், கொம்புகளும் முழங்க, பலி கொடுக்கப்பட்ட இடத்திற்குக் கொண்டு வரப் படுகிறது. இங்கு முதலில் பலி கொடுக்கப்பட்ட எருமையைத் தவிர மீதி பலிகளின் தலைகள் எல்லாம் அங்கிருக்கும் மாலா மற்றும் மடிகர்களால் எடுத்துச் செல்லப்படுகிறது.

மாலை ஏழு மணிபோல் அடுத்த சடங்குகள் தொடங்குகின்றன. முதலில் ஒரு செம்மறி, அம்மனுக்கு முன் பலியிடப்படுகிறது. அதன் ரத்தம் சோற்றுடன் கலக்கப்படுகிறது. அதே நேரம், ஊர் எல்லையில் ஒரு பன்றி அதன் தலை மட்டும் வெளியே தெரியும்படி புதைக்கப் படுகிறது. கிராமத்து மக்கள் அவர்களின் கால்நடைகளுடன் ஊர்வலமாக அந்த இடத்திற்கு வருகிறார்கள். ரத்தம் கலந்த சோற்றையும் ஒரு மடிகர் எடுத்து வருகிறார். அழைத்து வரப்பட்ட கால்நடைகள் அந்தப் பன்றியின் தலைமேல் ஓடவிடப்படுகின்றன.அவ்வாறு ஓடும்போது அந்த ரத்தம் கலந்த சோறு மிருகங்களின்மீது தெளிக்கப்படுகிறது. இது முடிவதற்கு முன்னே, அந்த பன்றி இறந்துவிடும். இதன் பின்னர் இறுதிச் சடங்குகள் தொடங்குகின்றன.

பந்தலில் இருந்த அம்மனின் சிலையை இப்போது வண்ணார் எடுத்துக்கொள்ள, முன்காலை வாயில் வைத்துக்கொண்டு, நெற்றியில் அகல் விளக்கெரியும் எருமையின் தலையை ஒரு மடிகர் எடுத்துக் கொள்கிறார். இப்போது எல்லோரும் ஊர் எல்லைக்கு ஊர்வலமாகச் செல்கின்றனர். முதலில் எருமைத் தலையைக் கொண்டு செல்பவர்கள், அடுத்து அம்மன் சிலையுடன் வண்ணார், அவருக்குப் பின் அந்த மர வண்டியை இழுத்துக்கொண்டு இந்த ஊர்வலம் செல்கிறது. எல்லையைத் தாண்டி ஒரு பர்லாங் அளவிற்குப் பக்கத்துக் கிராமத்திற்குள் சென்று நிற்கிறார்கள். இங்கு ஆசாடிகள் அம்மனைக் குறித்த பாடல்களைப் பாடுகிறார்கள். மக்களுக்கு மஞ்சள் கொடுக்கப்படுகிறது. அம்மன் சிலையை அலங்கரித்திருந்த நகைகள், மாலைகள் எல்லாம் அகற்றப்பட்டு, சிலை அந்த இடத்தில் வைக்கப்படுகிறது. எருமையின் தலையில் இருந்த விளக்கு அணைக்கப்படுகிறது. இந்தத் தலையை அந்த மடிகர் தன் வீட்டிற்கு எடுத்துச் சென்று விருந்தாக்கிக் கொள்வார். அம்மன் சிலையைப் பக்கத்துக் கிராம நிலத்தில் விட்டு வருவது, அந்த அம்மனின் கோபத்தைப் பக்கத்துக் கிராமத்திற்கு அனுப்புவதாகச் சொல்லப்படுகிறது. இது அம்மனின் கோபத்தின்மீதான பெரும் நம்பிக்கையையோ, பக்கத்துக் கிராம மக்களின் நலனில் ஏதும் அக்கறையோ இருப்பதாகக் காட்டவில்லை.

தெலுங்கு நாட்டின் கடற்கரைக் கிராமங்களில் இந்தச் சடங்குகள் மாறுபட்டு உள்ளன. மசூலிப்பட்டினத்தில் இருந்து இருபது மைல் தூரத்தில் உள்ளது குடிவாடா கிராமம். ஒரு செழிப்பான மாவட்டத்தில் உள்ள நல்ல வசதி படைத்த கிராமத்துக்கு உதாரணமாகக் குடிவாடாவைக் குறிப்பிடலாம். இங்கு உள்ள அம்மனுக்குச் செய்யப்படும் சடங்குகள் இந்தப் பகுதியின் மக்கள் வழிபாட்டு முறையை விளக்கும்.

குடிவாடா கிராமத்தின் கிராம தெய்வம் பல்லாலம்மா ஆகும். சிறிய கல் சுவரால் சூழப்பட்ட ஒரு திறந்தவெளி மண்டபத்தில், மூன்றடி உயரத்தில் உள்ளது இந்த அம்மனின் சிலை. நான்கு கரங்களுடன், வலது காலின் அடியில் ஒரு சிறுத்தையின் தலையுடன் அம்மன் சிலை இருக்கிறது. இந்தக் கோயிலின் பூசாரியான ஒரு சூத்திரர் எனக்கு இங்கு நடத்தப்படும் பூஜைகளையும், சடங்குகளையும் பற்றிக் கூறினார்.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் அம்மன் சிலையைத் தண்ணீரும். சீயக்காயும் போட்டுக் கழுவி, மஞ்சளும், குங்குமமும் பூசி, தூபம் போட்டு, தேங்காய் உடைத்து, சோறு சமைத்துப் படைக்கிறார். இந்தப் படையல் சோற்றைப் பின்னர் பூசாரி சாப்பிடுகிறார். இதற்கான அரிசியைக் கிராம மக்கள் கொடுக்கிறார்கள். அவ்வப்போது ஆடுகளும், கோழிகளும் கிராம மக்களால் நேர்ச்சையாக ஞாயிற்றுக் கிழமைகளில் பலி கொடுக்கப்படுகிறது. பலி கொடுப்பதற்கு முன் ஆடு நன்றாகக் குளிப்பாட்டப்படுகிறது. அம்மனின் சிலைக்கு முன் ஒரு மடிகர், அரிவாளால் ஆட்டின் தலையைத் துண்டிக்கிறார். தரையில் வழியும் ரத்தத்தை எதுவும் செய்வதில்லை. ஆட்டின் தலை பூசாரிக்கும், அதன் உடல் நேர்ந்து கொண்டவருக்கும் கொடுக்கப் படுகிறது.

தெலுங்கு மற்றும் தமிழ் நாட்டில், பலி கொடுப்பதற்கு முன், ஆட்டின் பின்புறத்தில் தண்ணீர் ஊற்றப்படுகிறது. ஆடு நடுங்கினால், அம்மன் பலியை ஏற்றுக்கொண்டதாக அர்த்தமாகும். இன்னொரு ஆட்டைப் பலி கொடுக்கும் வசதி இல்லாதவர்கள், ஆடு நடுங்கும் வரை தண்ணீரை ஊற்றிக் கொண்டே இருக்கிறார்கள். ஆனால் பொதுவாக, ஆடு நடுங்காவிடில், அம்மன் பலியை ஏற்றுக்கொள்ளவில்லை என்று வேறு ஓர் ஆடு பலிக்குத் தரப்படுகிறது.

கிராமத்தில் கொள்ளை நோய்கள் வரும்போது, பொதுவாக ஒரு திருவிழா கொண்டாடப்படுகிறது. ஊர்த் தலையாரி, ஒரு புது மண்பானையில் மஞ்சள், குங்குமம் பூசி, அதன் உள்ளே மண் வளையல்கள், சங்கிலிகள், கம்மல்கள், மூன்று கட்டி தூபம், காய்ந்த தேங்காய் ஒன்று, ஒரு பெண்ணின் துணி, இரண்டு அணாக்கள் நாணயங்கள் முதலியவற்றைப் போட்டு கோயிலின் அருகில் உள்ள மரம் ஒன்றில் கட்டித் தொங்கவிடுகிறார். கொள்ளை நோய் போய் விடும்போது திருவிழா கொண்டாடுவோம் என்று ஓர் உறுதிமொழி அளிக்கும்விதமாக இது செய்யப்படுகிறது.

அப்படி இந்தக் கொள்ளை நோய் விலகும்போது. ஒரு பனை ஓலையில் வேய்ந்த பந்தல் இடப்பட்டு, அம்மனின் உருவம் களிமண்ணில் செய்யப்பட்டு, மஞ்சள் குங்குமத்தால் அலங்கரிக்கப் பட்டு வைக்கப்படுகிறது. இந்த சிலைக்குக் கீழே ஒரு பெரிய மண் பானையில் மோரும், இன்னொரு பானையில் சோறும் வைக்கப்படுகிறது. இந்தப் பானைகளும் மஞ்சள், குங்குமம் பூசப்பட்டு, வேப்பிலைகளால் அலங்கரிக்கப்படுகிறது. இந்தப் பானைகள், ஒரு மண் தட்டினால் மூடப்பட்டு, ஒவ்வொரு நாளும் மேள தாளங்களுடன் ஊருக்குள் ஊர்வலமாகக் குயவரால் எடுத்துச்செல்லப்படுகிறது. இந்தச் சோறும், மோரும் குயவருக்கே நிதமும் அவரின் சன்மானமாகக் கொடுக்கப்பட்டுவிடுகிறது. திருவிழா நாட்கள் முழுவதும் ஒவ்வொரு நாளும் இந்தப் பானைகள் ஊர் செலவில் சோறும், மோரும் கொண்டு நிரப்பப்படுகின்றன. திருவிழா நாட்களில் ஊரில் சேர்ந்த பணத்தைப் பொறுத்து திருவிழா நாட்களை நிர்ணயிக்கிறார்கள். அது ஓர் ஒற்றைப் படை நாளாக இருக்கிறது. ஆனால் இது 7 என்ற எண் உள்ளபடியான நாளாக இருப்பதில்லை (7 17,27 போன்று ). இரவில் முடி திருத்துபவர்கள் (நாவிதர்கள்) அம்மனைப் பற்றிப் பாடியும், மடிகர்கள் மேளம் அடித்தபடியும் இருக்கிறார்கள்.

மிருக பலிகளுக்கு நிச்சயப்பட்ட நாளின் முந்தைய இரவில், 'தேவர பொட்டு' (கடவுளுக்கு அர்ப்பணிக்கப்பட்ட என்று அர்த்தம்) என்றழைக்கப்படும் ஆண் எருமை ஒன்று ஊரின் சார்பாகப் பலியிடப்படுகிறது. இந்த எருமை முதலில் குளிப்பாட்டப்பட்டு, மஞ்சள்,குங்குமம் பூசப்பட்டு, பூக்கள் மற்றும் வேப்பிலை மாலைகள் அணிவித்து அலங்கரிக்கப்படுகிறது. இப்போது அம்மனின் முன் கொண்டு வரப்படும் இந்த எருமை, ஒரு மடிகரால் ஒரே வெட்டில், குவித்து வைக்கப்பட்ட சோற்றின் மேல், தலை துண்டிக்கப் படுகிறது. படையல் சோறு எருமையின் ரத்தத்தால் நனைகிறது. வெட்டுப்பட்ட எருமையின் வாயில், தென்னிந்தியப் பழக்கத்தின் படி, எருமையின் வலது முன்னங்கால் குறுக்கு வசமாக வைக்கப் படுகிறது. எருமையின் குடல்களில் கொழுப்பு எடுக்கப்பட்டு, அதன் கண்ணிலும், மூக்கிலும் பூசப்படுகிறது. ஓர் அகல் விளக்கு ஏற்றப்பட்டு, குவித்த சோற்றின் மீது வைக்கப்படுகிறது. இந்தச் சோறு இப்போது ஒரு கூடையில் இடப்பட்டு, ஊர் துப்புரவு செய்யும் 'வெட்டி 'என்னும் மடிகரால் ஊரைச்சுற்றித் தூவப்பட்டுக் கொண்டே எடுத்துச் செல்லப்படுகிறது.

கிராமம் முழுவதும் அவருடன் சென்றாலும், இப்போது மேள தாளங்கள் அடிக்கப்படுவதில்லை. ஊர் மக்கள் 'பொலி! பொலி!' (உணவு என்று அர்த்தம்) என்று கை தட்டிக்கொண்டும், தீய சக்திகளை விரட்டக் கம்புகளை ஆட்டிக்கொண்டும் கூச்சல் இடுகின்றனர். ரத்தத்தில் நனைக்கப்படாத சோறே அம்மனுக்குப் படைக்கப்பட்டு மக்களுக்குப் பிரசாதமாகத் தரப்படுகிறது. ரத்தத்தால் நனைக்கப்பட்ட சோறு யாருக்குப் படைக்கப்படுகிறது என்பது தெளிவாக இல்லை. ரத்தத்தைத் தெளிப்பதால் தீய சக்திகள் கிராமத்தின் அருகில் வராது என்று நம்பப்படுகிறது. ரத்தம் தோய்ந்த சோற்றால் அவை திருப்தி அடைந்து கிராமத்தில் வேறு கெடுதல்கள் நடக்காது என்கின்றனர்.இந்த சடங்கின் ஆதி காரணம் வேறாக இருந்திருக்கலாம்; இப்போதையக் காரணம் இதுவே.

மறுநாள் அதிகாலையில் களிமண் சிலையும், பானைகளும் கழுவப்பட்டு, மஞ்சள், குங்குமம் பூசப்படுகின்றன. பிற நாட்கள் போலவே தூபமும், சோறும் படைக்கப்பட்டு, பானை ஊருக்குள் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்படுகிறது. மதியம் ஆகும்போது ஊரின் ஒவ்வொரு சம்சாரியும் சோறு, இனிப்புகள், பூக்கள், பழங்கள் எனப் பலவற்றையும் எடுத்து வருகிறார். கிராமப் பொதுவில் இருந்து இருநூறு அல்லது அதிகமான சேர்கள் (சேர் என்பது பழங்காலத்து அளவு முறை. 1 சேருக்கு கிட்டத்தட்ட 85 கிராம்) அரிசியும் தரப்பட்டு, அது வேகவைக்கப் படுகிறது. இவை எல்லாம் அம்மனின் சிலை முன் குவித்து வைக்கப்படுகிறது. இதன் பின் ஒரு செம்மறியோ, எருமையோ ஊரின் சார்பாகப் பலிகொடுக்கப்படுகிறது. எருமை குளிப்பாட்டப்பட்டு, மஞ்சள், குங்குமம் பூசப்பட்டு, வேப்பிலைகளால் அலங்கரிக்கப்பட்டு மடிகர் ஒருவரால், தலை வெட்டப்படுகிறது. இந்த ரத்தம் தரையில் வழியவிடப்பட்டு அதன் மேல் மண் போட்டு மூடப்படுகிறது. ஊர் தலையாரி இந்த வெட்டப்பட்டத் தலையை அம்மனுக்குப் படைக்கிறார். இதன் பிறகு, ஊர் மக்கள், பிராமணர்கள், பனியாக்கள் உட்பட, பலிக்கு மிருகங்களைக் கொண்டு வருகிறார்கள். இவை எல்லாம் முன் போலவே கொல்லப்பட்டு, அவற்றின் தலைகள் அம்மனுக்கு முன் ஒரு குவியலாக வைக்கப்படுகிறது.

சில சமயம் பல நூறு மிருகங்கள் இதுபோல் கொல்லப்படுகின்றன. ஓரிடத்தில் ஆயிரம் ஆடுகள் பலி கொடுக்கப்பட்டன. குடிவாடா போன்ற கிராமத்தில் மிகக் குறைவாகவே பலி நடைபெறுகிறது. இதில் யாருக்கு முதல் மரியாதை என்பதில் கிராம மக்களிடையே பிரச்னைகள் வருகின்றது. நான் குடிவாடா சென்றிருந்தபோது, இதுபோல் ஒரு வழக்கு அங்கே தாசில்தார் முன் வந்தது. ஒரு ஜமீன்தார், நில உரிமையாளர்கள், கிராம முன்சீப் ஆகியோர் இந்தப் பிரச்னையில் ஈடுபட்டிருந்தனர். இந்தத் தலைகள் எல்லாம் பூசாரிகள், குயவர்,வண்ணார், நாவிதர்,மாலா மற்றும் மடிக சாதியினரால் எடுத்துச் செல்லப்படுகிறது. கிராமப் பொதுப் பலியான எருமையானது தலையாரிக்கும், மற்ற அரிசி, பழங்கள், விழா நடத்திய அனைவருக்கும் பங்கிடப்படுகிறது. இந்த விழா காலை பத்து மணியில் இருந்து மாலை ஐந்து வரை நடக்கிறது.

மாலையில் ஒரு வண்டி, ஒன்பது கூரிய கழுமரங்களுடன் கொண்டு

வரப்படுகிறது.வண்டியின் நான்கு மூலையிலும் இரண்டிரண்டுகழுமரங்கள், வண்டியின் நடுவே ஒன்றுமாக இருக்கிறது. இந்தக் கழுமரம் ஒவ்வொன்றிலும் ஒரு மிருகம் - பன்றி, கோழி,ஆடு உயிருடன் கழுவேற்றப்படுகிறது. 'பம்பலா' அல்லது மாலா சாதியின் பரம்பரைப் பூசாரிகளில் ஒருவர் பெண் வேடமிட்டு இந்த வண்டியில் அம்மனின் களிமண் சிலையுடன் அமர்ந்து கொள்கிறார். இந்த வண்டி ஒரு கயிற்றால் கட்டி இழுக்கப்பட்டு ஊர் எல்லையில் விடப்படுகிறது. வண்டியில் இதற்குள் இறந்துவிட்ட மிருகங்களைப் பம்பலாக்கள் தங்கள் பங்காக எடுத்துச் சென்றுவிடுகின்றனர்.

தென்னிந்தியக் கிராம தெய்வங்கள் – ஹென்றி ஒயிட்ஹெட் (ஆசிரியர்), வானதி (தமிழில்)
விலை: 190/-
Buy this book online: https://www.heritager.in/product/thenindia-grama-deivangal/
To order on WhatsApp: wa.me/919786068908
Call: 097860 68908
Buy online: www.heritager.in

Social Media Handles:
Join our WhatsApp Group: https://chat.whatsapp.com/Jq4WbvrezuyCvlLgb8igza
Facebook: https://www.facebook.com/heritagerstore/
Instagram: https://www.instagram.com/heritager.in/
Youtube: https://www.youtube.com/@HeritagerIndia

தற்போது Heritager.in The Cultural Store ல் விற்னைக்கு

#books #tamilbookstore #Heritager wwww.heritager.in

Buy History and Heritage Related book online:

Buy Tamil Inscription Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/inscriptions/ 
Buy Tamil Literature Books: https://www.heritager.in/product-category/books/tamil/literature/
Buy Tamil Archaeological Books: https://www.heritager.in/product-category/books/tamil/archaeology/
Buy Tamil Temple Architecture and Art Books: https://www.heritager.in/product-category/books/tamil/art/
Tamil History Books: https://www.heritager.in/product-category/books/tamil/history/

No comments:

Post a Comment

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது இன்று

———————————————————-  இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் முடிந்து. இதில்   தமிழர்கள்    அதிகம்   வாழும்பகுதி யாழ்ப்பாணம்   இங்கு   6. எம்பிக்கள்,...