Friday, July 15, 2022

*அக்கப்போர் ஆகும் தொலைக்காட்சி விவாதங்கள்!*

#*அக்கப்போர் ஆகும் தொலைக்காட்சி விவாதங்கள்!*
————————————

" ஏன் நீங்கள் இப்போது அதிகமாக தொலைக்காட்சி விவாதங்களில் பங்கேற்பதில்லை?"-பொது இடங்களுக்குச் செல்லும்போது  பயணங்களில்  தெரிந்தவர்கள், அறிமுக அற்ற பலர் என்னிடம் அக்கறையோடு கேட்கும் கேள்வி. ஆம்
ஆறு-ஏழு ஆண்டுகளாக விவாதங்களில் பங்கேற்பது இல்லை.

இப்போது இங்குள்ள தொலைக்காட்சி விவாதங்களின் தரம் எப்படி இருக்கிறது?    

நாடு-மக்கள் நலன் சார்ந்தல்ல,பிரச்சனைகளை விட வெறும் பரபரப்புக்காகவே ஒவ்வொரரு நாளும் பேசக்கூடிய தலைப்புகளைத் தேர்ந்தெடுக்கிறார்கள். அது குறித்துப் பேச அன்றைய சப்ஜெக்ட் குறித்து நன்றாகத் தெரிந்தவர்களை அழைப்பது குறைவு தான். விஷயம் தெரியாமல் ஏதோ கத்தக் கூடியவர்களுக்கே முன்னுரிமை கொடுத்து அழைக்கிறார்கள். ஆக-விவாதத்தில் என்ன நடக்கிறது? முழுமையாக விஷயம் தெரிந்த ஒருவர் விஷயமே தெரியாமல் கூச்சல் போடுகிற ஒருவருடன் ' விவாதம்'என்ற பெயரில் போட்டி போட வேண்டியிருக்கிறது. யார் அதிகமாகக் கூச்சல் போடுகிறாரோ அவர் மீது நெறியாளர் மற்றும் பார்வையாளர்களின் கவனம் விழுகிறது. அவர்களுக்கே கூடுதல் நேரம் கிடைக்கிறது. அந்தச் சலுகையில் அவர்கள் தங்கள் வாய்க்கு வந்ததைப் பேசுகிறார்கள். கொஞ்சம் கூடக் கூச்சமோ, நாகரீகமோ இல்லாமல் கொச்சையாக " அவன் மோடு முட்டி, நாதாரி"என்கிறார்கள். " ம...ரு"என்கிறார்கள். அறுவாளை வைத்து "அறுத்துப் புடுவேன்"என பொதுவெளியில் பெண்களே எச்சரிக்கிறார்கள். நேற்றைய நிகழ்வுகள், வரலாறு,நாட்டு நடப்புக்கள், சில நேரத்தில் புள்ளி விபரங்கள் விவாதங்களில் அவசியம்.இதைபற்றிய புரிதல் சிறிதும் இல்லாமல் இன்றைக்குள்ள பிரச்சினை குறித்து கத்தி விவாதிக்கிறார்கள். டி.ஆர்.பி.ரேட்டிங்கிற்காக அவற்றை தொலைக்காட்சியில் அதுவும் நேரலையாக ஒளிபரப்புகின்றன. இவற்றை வீடுகளில் பார்க்கிறவர்கள் அன்று பேசப்படும் விஷயம் குறித்து என்னவொரு மெய்யாக
தெளிவான முடிவுக்கு வர முடியும்? குழப்பமான முடிவகளுக்கே வந்து  சேர முடியும். இது விவாதங்கள் பொழுது போக்கு Tel Serials அல்ல.

இங்கு,காலையில் செய்தித்தாள் வாசிப்பது இப்போது வெறும் சடங்காகிவிட்டது. நெட்ஃபிளிக்ஸில் மூழ்கிவிடுகிறார்கள், ஐபிஎல் கிரிக்கெட்டில் பொழுதைப் போக்குகிறார்கள். நாட்டில் என்ன நடக்கிறது என்கிற அக்கறை இல்லாமல் அனைத்து வர்க்கத்தினர் தாங்களாகவே ஒதுங்கிவிட்டதைப் போலத் தோன்றுகிறது. இப்படி பொது வெளியில் நிலை….

இதற்குத் தானா தொலைக்காட்சி விவாதங்கள் நடக்கின்றன?
இதை எல்லாம் பரிசீலிக்கும் பட்சத்தில் என்னைப் போன்றவர்கள் ஏன் தொலைக்காட்சி விவாதங்களைத் தவிர்க்கிறோம் என்பதை உணர்ந்து கொள்ள முடியும்.
————————————
மீண்டும் முகம் பார்த்து பேசவேண்டி
யிருக்குமே என்ற ஒரு காரணத்திற்காகவே  பொறுமையாக நம்முடைய கோபங்கள் மௌனமாக மாறுகிறது….
என்பது நினைவில் வருகிறது.

#ksrpost
12-7-2022.

Unparliamentary Words

*Ganesh Vasudev Mavalankar, first Speaker Lok Sabha from Ahamadabad,Gujarat*. 
*Practice of Expunging  Unparliamentary Words Was Started During His Tenure 1952.*
#ksrpost 
15-7-2022.




*திருவாவடுதுறை ஆதீனம்*



*சைவமும் தமிழும் நாட்டின் நலமும்* 
————————————



*இந்திய சீனா போரின் போது*
17.12.1962 ல் அன்றைய சென்னை மாநில முதல்வர் காமராஜரிடம் தேசிய பாதுகாப்பு நிதி ரூ 65000யும் 3315 கிராம் தங்கமும் வழங்கியருளியவர்கள் அன்றைய தஞ்சை மாவட்ட திருவாவடுதுறை ஆதீன 21 வது சந்நிதானம்,ஸ்ரீ சுப்ரமணிய தேசிக பரமாசாரியர்.உடன் அன்றைய அமைச்சர்ஆர். வெங்கட்டராமன், துளசியா வாண்டையார் . 

#ksrpost
15-7-2022.
(அரிய படங்கள்)

Thursday, July 14, 2022

ராஜீவ்காந்தி படுகொலை.....அரிய முடியாத சில புதிர்கள்..!முடிச்சுகள்..!!



ராஜீவ்காந்தி படுகொலை.....அரிய முடியாத சில புதிர்கள்..!முடிச்சுகள்..!!
                        - வழக்கறிஞர் கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

சிறையில் 31 ஆண்டுகள் கழித்து, உச்சநீதிமன்றத் தீர்ப்பின் படி பேரறிவாளன் விடுதலை. இதில் எந்த பிழையற்ற சட்டப்படி நடந்துள்ளது.மற்ற ஆறுவரும் விடுதலை ஆக வேண்டும்.மே  21 (2022) ராஜீவ் படுகொலை நினைவு நாளுக்கு மூன்று தினங்களுக்கு முன்பு  மே 18 (2022) விடுதலை என தீர்ப்பு வந்தது.இதற்கு நெடிய போராட்ட வரலாறும் உண்டு.
இந்த வழக்கே சரியாக புலனய்வு செய்யவில்லை என்பது பொது கருத்தும் உண்டு. ராஜீவ் படுகொலையை யாரும் ஏற்றுக்கொள்ள முடியாது.இதன் உண்மையான குற்றவாளிகள் கடுமையாக தன்டிக்க வேண்டும்.இதில் மாற்றுக்கருத்து இல்லை. இளம் பிரதமரை கொன்றது கொடுமையானது,மறுக்கவில்லை. ஆனால் இதற்கு விடுதலைப்புலிகள் தான் காரணம் என்று எந்த அடிப்படை விசாரணையில் முடிவுக்கு வந்தனர் என்பது குழப்பமாகவும்,கேள்வியாகவும் உள்ளது.
இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதி மன்ற முன்னாள் நீதிபதி தாமஸ், இந்த வழக்கை புலனய்வு அதிகாரியும் சரியான கோணத்தில் விசாரணையும்,புலனாய்வும் எடுத்து செல்லவில்லை என கூறினர். 2013 ஓய்வு பெற்ற சிபிஐ அதிகாரி தியாகராஜன், பேரறிவாளனின் வாக்குமூலங்கள் முறையாக பதிவு செய்யப்படவில்லை எனவும். அவர் நிரபராதி என கூறியது மறுக்க முடியாது. ஓய்வுபெற்ற நீதிபதி கிருஷ்ணய்யர் தொடர்ந்து பேரறிவாளன் நியாயங்களையும் பேசியும் எழுதியும் வந்தார். எனவே இதில் பிழைகள் உள்ளது.
காங்கிரஸ் ஆட்சியில்1987 இல் இலங்கைக்கு அனுப்பப்பட்ட இந்திய அமைதிப்படை ஈழத்தில் சென்று நடத்திய  வெறியாட்டத்தில் ஆயிரக்கணக்கில் இறந்தவர்களுக்கு, உடமையிழந்தவர்களுக்கு, மானபங்கப்படுத்தப் பட்டவர்களுக்கு, விதவையானவர்களுக்கு, பெற்றோர் அற்ற பிள்ளைகளுக்கு இது வரை நீதி கிடைக்கவில்லை.அமைதிப்படையா? அமளி படையா? என  கலைஞர் குறிப்பிட்டார்.1990 இல் படைகள் திரும்பும் போது சென்னையில் முதல்வர் கலைஞர் வரவேற்க்க செல்ல மறுத்தார்.
;இந்த வழக்கில் மாநில அரசின் உரிமைகளை  நிலைநாட்டப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம். ராஜீவ் காந்தி கொலையில் உச்சநீதிமன்றம் அரசியல் அமைப்பு சட்டத்தின் பிரிவு  142-ன் படி பேரறிவாளனை விடுதலை செய்யும் நிலையில் தீர்ப்பு வழங்கியது. அரசியல் சாசனம் பிரிவு, 161 படி ஆளுநர் செயல்பட வேண்டும் என்று உச்சநீதிமன்றம் கூறியுள்ளது. உச்ச நீதிமன்றத்தின் நீதிபதிகள் எஸ். நாகேஸ்வர ராவ் ,பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா ஆகியோர் அடங்கிய  நீதிபதிகள் அமர்வு, உச்சநீதிமன்றத்தின் அரசியல் சாசன அமர்வு முன்பு உறுதிப்படுத்திய குடியரசுத் தலைவர்( பிரிவு 72), ஆளுநர் (பிரிவு 161) இருவரின் அதிகார வரம்பை நிராகரித்திருக்கிறது. பேரறிவாளனை விடுவித்து இருக்கிறது. காங்கிரஸ் தவிர தமிழ்நாட்டில் பெரும்பாலும் கட்சிகள் இத்தீர்பை வரவேற்று இருக்கின்றன.
.இந்த வழக்கு தடா நீதிமன்றம் ,சென்னை உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றம் மற்றும் தமிழக சட்டமன்றம் ,சென்னை ஆளுநர் மாளிகை, குடியரசு மாளிகை ,டெல்லி உள்துறை அமைச்சகம் என்று அதிகார வரம்பின் தளங்களுக்கும் சென்ற வழக்கு.19 வயதில் கைது செய்யப்பட்ட பேரறிவாளன் 50 வயதில் விடுதலை ஆனார்.மற்ற ஆறு பேரும் விடுதலை செய்யப்பட வேண்டும்.
ராஜீவ் காந்தி படுகொலையில் யார் குற்றவாளி என்பதை கண்டறிய பல்வேறு விசாரணை ஆணையங்கள் அமைக்கப்பட்டும், உண்மைகளும் புலப்படாமல் ராஜீவ் கொலையினுடைய முடிச்சுகள் பலவும் அவிழ்க்கப்படாமலும் ,உறுதியான ,தெளிவான உண்மைகளை மக்கள் மன்றத்தில் வைக்க முடியவில்லை.எனவே ராஜீவ் காந்தி கொலை குறித்து பல வினாக்கள் நம் முன் உள்ளன.
ராஜீவ் படுகொலை நடந்தபோது;கிட்டு,  எங்களுக்கு இதற்க்கும் தொடர்பு இல்லை என அதிகார பூர்வமாக விடுதலை புலிகள் சார்பாக அப்போது அறிக்கையும் வெளியிட்டார் என்பதை கவனித்தில் கொள்ள வேண்டும்.
சில மனதில் பட்ட  கேள்விகளை எழுப்பி ,அதை ஆரோக்கியமான விவாதத்திற்கு வைக்க விரும்புகிறேன்.
ராஜீவ் கொலை வழக்கில் விடை தெரியாத கேள்விகள்.இதை 1991இல் ஜீலை மாதமே தினமணிக்கு அனுப்பிய கட்டுரைதான். அன்று இந்த வினாக்கள் எழுப்பி நான எழுதிய பத்தி column   : 
1. 1991 ம் வருடம் மே மாதம் 21 ம் தேதி டெல்லியிலிருந்து தேர்தல் பிரச்சாரத்திற்குக் கிளம்பினார் ராஜீவ் காந்தி. அவர் ஒரிசா, ஆந்திரா வழியாக சென்னை வந்தார். காங்கிரஸ் அகில இந்திய பொது செயலாளர் ஜி.கே.மூப்பனார் ,தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்த வாழப்பாடி ராமமூர்த்தி ஆகிய இருவரும் ஶ்ரீ பெரும்புதூரில் கூட்டம் நடத்த வேண்டாம் அது பாதுகாப்பான இடமல்ல என சொல்லியும்; டெல்லி மேலிடத்தில் இருந்த மார்கிரெட் ஆல்வா அங்குதான் நடத்தியாகவேண்டும்  கூறியது ஏன்,எப்படி என்று விசாரிக்கப்பட்டதா? ஸ்ரீ பெரும்புதூருக்கு ராஜீவை எப்படியாவது வரவழைத்துவிட வேண்டும் என்று எங்காவது திட்டம் தீட்டப்பட்டதா?யாரால்..?தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அந்த இடத்தில் கூட்டம் வேண்டாம் என்று மறுத்தபோதும்  இதில் மரகதம் சந்திரசேகர் நிலை என்ன..?
2. விசாகப்பட்டினத்தில் ராஜீவ் கிளம்புகிற விமானத்தில் கோளாறு ஏற்பட்டது என விமான நிலையத்திலிருந்து தான் தங்கும் விடுதிக்கு திரும்பினார் ராஜீவ். உடனே கோளாறு சரிசெய்யப்பட்டுவிட்டது என்கிற தகவல் முன்னாள் மத்திய அமைச்சர் விஜயபாஸ்கர ரெட்டி மூலமாக தகவல் கிடைத்தவுடன் விமான நிலையம் திரும்பினார் ராஜீவ். பாதுகாப்பு அதிகாரி சாகரை தங்கள் காரில் ஏற்றிக் கொண்டு தாமதமாக விமான நிலையத்துக்கு வந்தார்கள். இதனால் ராஜீவுடன் விமானத்தில் செண்னை வரை பயணம் செய்ய சாகரால் முடியவில்லை. என தகவல். இது உண்மையா..? ராஜீவ் வந்த விமான பைலட் மாற்றப்பட்டரா..?
3. பல்கேரிய நாட்டைச் சேர்ந்த தொலைக்காட்சிப் பத்திரிகையாளர்கள் ராஜீவ்காந்தியின் சுற்றுப் பயணத்தில் உடன் வந்தார்கள்.ராஜீவ் பிரச்சாரத்தை வீடியோவில் பதிவு செய்வது. ஒரிஸாவிலும், ஆந்திராவிலும் ராஜீவ் செய்த முதல்கட்ட சுற்றுப் பயணத்தில் கலந்துகொண்ட அவர்கள், ராஜீவ் பயணம் செய்த விசேஷ விமானத்தின் பைலட்டுடன் விசாகப்பட்டினத்தில்  ஆடம்பர ஹோட்டலில் தங்கியிருந்தார்கள். பின் என்ன ஆனார்கள்..? சென்னைக்கு உடன் வந்தார்களா..? 
4.ராஜீவின் பாதுகாப்பு அதிகாரியாக செல்லவேண்டிய பி.சி.குப்தா, சென்னை விமான நிலையத்தில் ராஜீவுக்காக காத்திருந்தார். அதே விமானத்தில் வந்திருக்க வேண்டிய சாகரிடமிருந்து கைத்துப்பாக்கியை அவர் பெற்றுக் கொள்ள வேண்டும். ஆனால் சாகர் வராததால் கைத்துப்பாக்கி இல்லாமலேயே குப்தா, ராஜீவுடன் செல்ல நேர்ந்தது என தகவல்.இது உண்மையா..?
5. . ராஜீவ் மீனம்பாக்கத்திலிருந்து ஶ்ரீ பெரும்புதூர் கிளம்பியவுடன் ராமாவரம் அருகே பத்திரிகையாளர்கள் என்ற பெயரில் இரண்டு பெண்கள் அவரின் கான்வாயில் ஏறினார்கள் என தகவல். அவர்களுடைய அடையாளங்கள் சோதனைக்குள்ளானதா? இன்றுவரை அவர்களை ஏன் விசேஷப் புலனாய்வுத்துறை விசாரிக்கவில்லை?
6.பத்திரிகையாளர்களும் ராஜீவை பேட்டி கண்டார்கள். ஆனால் உடன் இருந்த தா.பாண்டியனும், மரகதம் சந்திரசேகரும் அவர்கள் என்ன பேசினார்கள் என்பது தெரியாது என்றார்கள்.இதில் உண்மை என்ன விசாரிக்கப்பட்டது ..?
7. மூன்றாவது உலக நாடுகளின் தலைவர்களை அப்புறப்படுத்துவதில் அமெரிக்க உளவு நிறுவனமான சி.ஐ.ஏ. வுக்கு அதிக அக்கறை உண்டு. அந்த எண்ணம் ராஜீவ் விஷயத்தில் இருந்ததா?
8. தான் கொலை செய்யப்படுவதற்கு முன்பு, பாகிஸ்தான் ஜனாதிபதி ஜியா-உல்-ஹக்கை கொன்றது சி.ஐ.ஏ.தான் என்றார் ராஜீவ். அவர் ஏன் அப்படிச் சொல்ல வேண்டும்? அவரை சொல்லத் தூண்டிய காரணம் என்ன? தனக்கெதிராகவும் இப்படி ஒரு திட்டம் இருக்கலாம் என்பது அவருக்கு முன்கூட்டியே தெரியுமா?
9. வளைகுடா போரின்போது அமெரிக்க விமானங்களுக்கு இந்தியா எரிபொருள் கொடுத்து உதவியது. இந்த உதவியைச் செய்த சந்திரசேகர் அரசைக் கடுமையாகக் கண்டித்தார் ராஜீவ் காந்தி. அமெரிக்காவிற்கு இதனால் ராஜீவ் மீது ஏற்பட்ட கோபத்தையும், இந்தக் கொலையின் பின்னணியில் சி.ஐ.ஏ.வுக்கு பங்கு உண்டா என்பதையும் ஏன் புலனாய்வுத்துறை விசாரிக்கவில்லை?
10. . பாலஸ்தீன விடுதலை இயக்கத் தலைவர் அராபத், ராஜீவ் உயிருக்கு ஆபத்து இருக்கிறது என்று தெரிவித்தார். அவருக்கு இந்தத் தகவல் எங்கிருந்து கிடைத்தது? யார் மூலமாக ராஜீவுக்கு மிரட்டல்? என்பதை ஏன் புலனாய்வுத் துறை விசாரிக்கவில்லை?மேற்கு நாடுகள், மத்திய கிழக்கு நாடுகளில் கொலைக்கான திட்டம் தீட்டப்பட்டிருந்தால் மட்டுமே அரபாத்திற்கு இந்தப் பின்னணி தெரிய வாய்ப்புண்டு!
11. மரகதம் சந்திரசேகர் ,ராஜீவ் காந்தியுடன் கூட்டம் நடந்த இடத்திற்கு வந்தார். அவருடைய மகள் மறைந்த லதா பிரியகுமார் அரக்கோணத்திலிருந்து வந்தார். வினோதினி எங்கிருந்து ஏன் வந்தார். வினோதினி இலங்கையைச் சேர்ந்த ஜெயவர்த்தனாவின் உறவினர் என்பது தெரிந்தும் அவரை ஏன் விசாரிக்கவில்லை? சம்பவ இடத்தில் அந்தக் குடும்பத்தினர் இருந்தும்  ஏன் விசாரிக்கவில்லை?
12 லதா கண்ணன், ராஜீவ் காந்தியை நிறுத்தி கவிதை படித்தார். அதுவே பக்கத்திலிருந்த தனு என்கிற மனிதகுண்டு வெடிக்கக் காரணமாக இருந்தது. ஏன் அவர் பெயர் குற்றவாளிப் பட்டியலில் இல்லை? லதா கண்ணனை பயன்படுத்தித்தான் தனு உள்ளே வந்தார். இறந்து போன ஹரிபாபு குற்றவாளி என்றால் லதா கண்ணனை ஏன் சேர்க்கவில்லை? இது சம்பந்தப்பட்டவர்கள் மீது புலனாய்வுத்துறைக்கு ஏன் இத்தனை பரிவு?
13. தனு, சுபா, சிவராசன் மூவரையும் ஸ்ரீ பெரும்புதூருக்கு அழைத்து வந்தவர் மறைந்த லதா பிரியகுமார் என்று கருதப்படுகிறது என்பது உண்மையா?. குறிப்பாக பெண்கள் பகுதிக்கு அழைத்து வந்து லதா கண்ணனிடம் அவர்களுக்கு உதவும்படி சொன்னார். அவர் மீது ஏன் குற்றம் சுமத்தப்படவில்லை?
14. சிவராசனும்,தாணுவும் இராஜீவ் வளையத்தில் செல்ல யார் உதவினார்கள் ? என்பது பற்றியும் இதுவரை தெரியவில்லை. அதுவும்  மிக மிக முக்கிய பிரமுகர்கள்  இருக்கும் இடத்தில் அனுமதி எப்படி எளிதில் கிடைத்தது...?
15. சிவராசனின் தாயாரும், வினோதினியின் தந்தையும் சிங்களவர்கள் தான். சம்பவ இடத்தில் அவர்கள் இருந்தார்கள். அவர்கள் இலங்கை ஜனாதிபதி பிரேமதாஸாவின் தூதுவர்களாக இருக்க வாய்ப்புண்டு. இந்திய அமைதிப்படை விவகாரத்தில் பிரேமதாஸாவுக்கு ராஜீவ் மீது கோபம் உண்டு. அந்தக் கோணத்தில் ஏன் விசாரணை செய்யப்படவில்லை?
16 காமினி திசநாயகா, அத்துலத்முதலி, விக்கிரமசிங்கே இவர்கள் எல்லாம் இலங்கையின் முக்கிய அரசியல்வாதிகள். இவர்கள் கொலை செய்யப்பட்ட போது அந்தப் பழி இலங்கை அதிபர் பிரேமதாஸாவின் மீது சுமத்தப்பட்டது. ராஜீவ் கொலை விஷயத்தில் ஏன் அந்தக் கோணத்தில் விசாரணை இல்லை?
17. புலிகளையும், அதன் தலைவர் பிரபாகரனையும் சம்பந்தப்படுத்த எந்த ஒரு சரியான ஆதாரம் புலனாய்வுத் துறையிடம் இருக்கவில்லை என தகவல். இது உண்மையா..?
18. பொட்டுவும், சிவராசனும் ரேடியோ மூலம் பேசியதை விசேஷப் புலனாய்வுத்துறை கேட்டதாகச் சொல்லப்படுவதற்கு  சரியான, தெளிவான ஆதாரம் இல்லை. அது ஏன் ஒரு கற்பனையான ஆதாரமாக இருக்கக்கூடாது?
19. பல்வேறு நாட்டு ஆயுத வியாபாரிகள், பிரதமர் என்கிற முறையில் ராஜீவுடன் தொடர்பு வைத்திருந்தார்கள். கூலிப்படைகள் மூலமாக அவர்கள் ஏன் இந்தக் படுகொலையை செய்திருக்கக்கூடாது? என விசாரிக்கப்படவில்லை.
20. சிறப்பு விசாரணைக் குழு அமைத்து சந்திரா சுவாமி, சுப்பிரமணிய சுவாமி ஆயுத விற்பனையாளர் கசோகி ஆகிய மூவரையும் ராஜீவ் கொலை வழக்கில் விசாரிக்க வேண்டும் என ஜெயின் கமிஷன் கூறியுள்ளதே? விசாரணை நடைபெற்றதா? அதன் முடிவு என்ன?
21. திருச்சி வேலுசாமி கூற்றுபடி சுப்ரமணிய சாமி இராஜீவ் படுகொலைக்கு ஒரு சில நிமிடங்களுக்கு முன்பே ராஜீவ் கொலைசெய்யப்பட்டார் என்று கூறியதை பற்றி ஏன் இதுவரை விசாரிக்கவில்லை…?
22.சந்திராசாமியும் சுப்பிரமணியசாமியும் லண்டனில் சிலரை சந்தித்தார்கள் என்ற செய்தி அப்போது எழுந்தது . அது குறித்து விசாரணை நடத்தினார்களா..?
23. 1991 ஜுலை மாதம் அன்றைய மத்திய உள்துறை அமைச்சர் எஸ்.பி. சவான், எல்.டி.டி.ஈ.யைத் தவிர வேறு சில சர்வதேச நிறுவனங்களும், பலம் வாய்ந்த வெளிநாட்டு சக்திகளும் ராஜீவ் கொலையின் பின்னணியில் இருக்கிறார்கள் என்றார். உள்துறை அமைச்சர் அப்படி சொல்லக்காரணம் என்ன என்பதை விசேஷ புலனாய்வுத்துறை ஏன் விசாரிக்கவில்லை?
24. மத்திய அரசாங்கமே ஏதும் ஒரு முடிவுக்கு வராத போது சுப்பிரமணிய சுவாமி மட்டும் விடுதலைப் புலிகள் தான் ராஜீவை கொன்றார்கள் என கூறியதன் மர்மம் என்ன? பல கோணங்களில் விசாரிக்கப்பட வேண்டிய ஒரு கொலைப் பின்னணியை விடுதலைப் புலிகள் கொன்றார்கள் என்ற ஒற்றை கோணத்தில் மட்டும் நடத்த வற்புறுத்திய கார்த்திகேயனின் நோக்கம் என்ன?
25. சிறப்பு விசாரணை அதிகாரி ரகோத்தமன் இந்திய புலனாய்வு துறையின் இயக்குனராக இருந்த பின் நாட்களில் முள்ளிவாய்க்கால் போரில் சம்பந்தப்பட்ட எம்.கே. நாராயணன் ராஜீவ் கொல்லப்பட்ட அந்த இடத்தில் பிடிக்கப்பட்ட வீடியோ டேப்பை தராமல் மறைக்கிறார் என்ற பகிரங்கக் குற்றச்சாட்டுக்கு பதில் இல்லை. ஏன்? எம்.கே. நாராயணனிடம் இருந்த ராஜீவ் கொலையில் பின்நாட்களில் கிடைத்த அந்த ஒரே காணொளிப் பதிவு எப்படி தொலைந்து போனது என்றார்.எது சரி…?இது உண்மையா..?
 26. ராஜீவ் கொலை வழக்கில் ஜெயின் மற்றும் வர்மா கமிஷன் அரசாங்கத்துக்கு கொடுத்த முக்கிய கோப்புகள் அடங்கிய (File No. 1/12014/5/91-IAS/DIII) எங்கே? சந்திராசாமி குறிப்பு முக்கியக் கோப்புகளை அழித்ததின் மர்மம் என்ன? எந்த முக்கிய நாடுகளையும், நபரையும் காப்பதற்காக அந்த கோப்புகள் அழிக்கப்பட்டது?
27. மறுபடியும் அமைதிப்படை தங்கள் நாட்டில் நுழையலாம் என்கிற எண்ணத்தில் இந்தியாவுக்கு வலுவான தலைவர் இருக்கக்கூடாது என்று இலங்கை  சிங்கள அரசு ஏன் நினைத்திருக்கக்கூடாது
  28. விமான நிலையத்தில் ராஜீவை சந்தித்தார் கவிஞர் காசி ஆனந்தன். அவர் பிரபாகரனிடமிருந்து ராஜீவுக்கு கொண்டு வந்த தகவல் என்ன? ஈழ விடுதலைக்கு ராஜீவின் உதவி தேவை” என்று நல்ல உறவில் பிரபாகரன் காசி ஆனந்தன் மூலமாக வேண்டுகோள் விடுத்திருந்தால் ஏன் ராஜீவை வேலுபிள்ளை பிரபாகரன் கொலை செய்ய திட்டமிட வேண்டும்?
  29. இந்தியா மற்றும் தமிழகத்தில்தான் தனக்கு ஆதரவும் ,முக்கியம், அவசியமும் என்பது பிரபாகரனுக்கு தெரியும். அப்படியிருக்கும்போது இந்திய மக்களின் வெறுப்பை சம்பாதிக்கிற வகையில் இந்த தவறைச் செய்து, நாட்டைவிட்டே துரத்தப்பட்டு தடை செய்யப்படுகிற அளவுக்கான இந்த முட்டாள் தனத்தையா பிரபாகரன் செய்வார?
  30 . ராஜீவின் பயணத் திட்டத்தை தீட்டிய காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் வேண்டுகோளுக்கிணங்கத்தான் சிவராசனுக்கு பெங்களூரில் வீட்டை வாடகைக்குக் கொடுத்ததாக ரெங்கநாதன் வாக்குமூலம் அளித்தாரா. இதில் உண்மை உண்டா என்பதை விசாரித்தார்களா?
  31. வெளிநாட்டு உளவு நிறுவனத்தை சேர்ந்தவர்கள் சங்கேத மொழியில் சந்திராசாமி மற்றும் சுப்ரமணிய சாமியிடம் ராஜீவ் கொலை பற்றி நடத்திய உரையாடல் என்று பதிவு செய்து வைத்திருந்த முக்கிய ஆதாரம் ஒன்று அன்றைய பிரதமர் அலுவலக உயர் அதிகாரி தொலைத்துவிட்டதாக கூறுவது எப்படி?
 32. பெல்ட் பாம்(வெடிகுண்டு) தயாரிக்கப்பட்டது எங்கே, யார் தயாரித்தது, என்று இதுவரையில் விசாரிக்கவேயில்லை என சிறப்பு விசாரணை அதிகாரி ரகோத்தமன் தெரிவித்திருக்க வெடிகுண்டுக்கு பயன்படுத்தப்பட்ட பேட்டரி வாங்கிக்கொடுத்தது குறித்து விசாரிக்கப்படவில்லை.எதனால்?
33.பேரறிவாளன் பேட்டரி செல் வாங்கி கொடுத்தார் என்ற குற்றச்சாட்டு. அவர் அந்த வயதில் சாதாரண பேட்டரி வாங்கி கொடுத்து இருந்தால் பரவாயில்லை. அந்த பேட்டரியில் உள்ள மூலப்பொருட்கள் ஜப்பான், அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் மட்டுமே கிடைக்க கூடிய பேட்டரி என சொல்லப்படுகிறது. அப்படி என்றால் அவ்வளவு சக்தி வாய்ந்த பேட்டரி வாங்க யார் பேரறிவாளனுக்கு அன்றைக்கு உதவியது..? பின்னணியில் இருந்தவர்கள் பற்றி விசாரித்தார்களா..?
ராஜீவ் கொலை வழக்கில் 31 ஆண்டுகளாகியும் இந்த கேள்விகளுக்கு இதுவரை உண்மை தெரியவில்லை . இவ்வாறு குழப்பமான நிலையில் தி.மு.க ஆட்சியை இழந்தது. இந்த சம்பவம் நடந்த போது 1991- இல் நாடாளுமன்ற, சட்ட மன்றம தேர்தல்கள் தமிழகத்தில் நடந்தது.தி.மு.க நிர்வாகிகளும், ஈழ ஆதரவாளர்களும், தாக்கப்பட்டனர், கடுமையான பாதிப்புகள் ஏற்பட்டன.இவர்களின் வீடுகளும், வணிக நிறுவனங்களும் சூறையாடப்பட்டன .
சரியான புலனாய்வும், தெளிவும் இந்த வழக்கில் இல்லாததால், விருப்பத்திற்கு ஏற்றவாறு பலருடைய வாழ்க்கையும்,அமைதியும் பறிபோயின. இன்னும் சிறையில் சிலர் குற்றவாளிகளாக வாடுகின்றனர்.ஏதோ ஒரு முடிவு எடுத்துக்கொண்டு தி.மு.க, ஈழ ஆதரவாளர்கள் தான் காரணம் என்று பிணையப்பட்ட, உண்மைக்கு மாறாக எடுத்த முடிவினால் ஏற்பட்ட விளைவுகளை துலாக்கோல் நிலையில் இருந்து எண்ணி பார்க்க வேண்டும். நியாயங்கள் மறுக்கப்படக்கூடாது.நீதி மயக்கத்தில் இருக்கக்கூடாது என்பது தான் நமக்கு நாமே வகுத்துக் கொண்ட வழிமுறைகளும்,நெறிமுறைகளும் ஆகும். 
                                                                                                                                 - அரசியலாளர்

‘தென் மாவட்டங்களில் சாதிய வன்முறைகள் வெடித்த காலக்கட்டத்தில், தென் மாவட்டங்களின் சமூக, பொருளாதார வளர்ச்சிகுறித்து ஆராய்ந்து விரிவான அறிக்கையை தர அமைக்கப்பட்ட குழுவுக்கும் நீதிபதி இரத்தினவேல் பாண்டியன் கமிஷன்மே 16, 1998 ம் தேதியில் இந்த ஆணையத்தின் அறிக்கை வெளியானது. ‘நிமிர வைக்கும் நெல்லை’

நான்காவது பதிப்பு காணும் எனது ‘நிமிர வைக்கும் நெல்லை’ என்ற நூல் இரண்டு தொகுதிகளாக வர இருக்கிறது.  இந்த நூலுக்கு 1995 முதல் தரவுகளைத் தேடி ஒருங்கிணைத்து வந்தேன். அப்போது நீதிபதி ரத்னவேல் பாண்டியான் அவர்கள் இந்தப் பணிகளை அவசியம் செய்ய வேண்டுமெ எனக்  கூறினார். 

தலைவர் கலைஞர் அவர்களின் ஆட்சிக் காலத்தில் தென்மாவாட்டங்களில், குறிப்பாக ஒன்றுபட்ட திருநெல்வேலி மாவட்டத்தில் ஜாதிக் கலவரங்கள் நடப்பதால், அதைத் தீர்க்க, ஆய்வு செய்து அறிக்கை தர உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ரத்னவேல் பாண்டியன் அவர்கள் நியமிக்கப்பட்டார்கள்.

தென் மாவட்டங்களில் சாதிய வன்முறைகள் வெடித்த காலக்கட்டத்தில், தென் மாவட்டங்களின் சமூக, பொருளாதார வளர்ச்சிகுறித்து ஆராய்ந்து விரிவான அறிக்கையை தர அமைக்கப்பட்ட குழுவுக்கும் நீதிபதி இரத்தினவேல் பாண்டியன்  கமிஷன்மே 16, 1998 ம் தேதியில் இந்த ஆணையத்தின் அறிக்கை வெளியானது.

அப்போது, அந்தப் பணிக்கு ‘நிமிர வைக்கும் நெல்லை’நூலுக்காக நான் தேடிய தரவுகளைப் பெற்றுக் கொண்டார். தெற்குச் சீமையில் சமூக, பொருளாதார விவரங்கள் குறித்தும் என்னிடம் கேட்டுத் தெரிந்து கொண்டார். அந்த அறிக்கையில் நான் கொடுத்ததுதான் கங்கை கொண்டான், நாங்குநேரி தொழில்  பூங்கா திட்டம். சேது கால்வாய், மணப்பாடு போன்ற மீன் பிடி துறைமுக திட்டங்கள், கழுகுமலை, ஆதிதச்சநல்லூர்,கிருஷ்னபுரம் போன்ற பல இடங்களில் சுற்றுலா வளர்ச்சி, தீப்பெட்டி- பட்டாசு தொழில் என பல பிரச்சனைகள்   அச்சன் கோவில்-பம்பை- வைப்பாறு இணைப்பு, அழகர் அணை என நீர்பாசன திட்டங்கள், பருத்தி, மிளகு வற்றலுக்கு கட்டுபடியான விலை வானம் பார்த்த பூமியான கோவில்பட்டி, விளாத்திக்குளம், சங்கரன் கோவில், ஒட்டப்பிடாரம் பகுதிகளில் உள்ள தேவைகளை கோரிக்கைகளாக எழுதிக் கொடுத்தேன். 




அப்போது அதில் , பல பரிந்துரைகளை ரத்னவேல் பாண்டியன் குழு கலைஞர் ஆட்சியிக்கு வழங்கியது.

. நான்குநேரியில் தொழில்நுட்ப பூங்கா , கங்கை கொண்டான் ,மதுரையில் தகவல் தொழில்நுட்ப பூங்காக்ளை நிறுவியது கலைஞரின்திமுக அரசு. காழ்ப்புணர்ச்சியில் இந்த திட்டத்தை முடக்கியது ஜெயலலிதாவின்அதிமுக அரசு

Tuesday, July 5, 2022

தகுதியே தடை

மனசு பாரமாக இருந்தால் கூட சமாளித்து வாழலாம், ஆனால் உங்களை விட்டு தூரமாகி விட்டார்கள் என்றால் நீங்கள் அவர்களை விட்டு ஒதுங்குவது தான் சிறந்தது.

ஏமாந்து போன எல்லோரும் நம்பியது 
ஆரம்பத்தில் அவர்கள் உங்களோடு செயல்பட்ட விதத்தைத்தான்…

உங்களை காயப்படுத்தியவர்களுக்கே நன்றி சொல்லுங்கள், ஏனென்றால் அவர்களை விட நல்லவர்களை கண்டு பிடிப்பதற்கு உங்களுக்கு வாய்ப்பு கொடுத்தது அவர்கள் தான்.



உங்களின உதவிகள் , பணிகளை அங்கிகரத்துநேசிக்காத ஒருவரை நீங்கள் நேசித்துக் கொண்டிருப்பதும், அல்லது நேசித்துக் கொண்டிருந்த ஒருவர் உங்களை வேண்டாம் என்று விட்டு போவதும் கஷ்டமான ஒன்று தான்.

அதற்காக கடந்த காலத்தை நினைத்து வருத்தப்படாதீர்கள், நீங்கள் தவறான நபரை நம்பி உங்கள் நேரத்தை வீணடித்தது தான் உண்மை.

உண்மையாக நேசிப்பவர்கள் தான் அதிகமாக யோசித்து யோசித்தே தூங்க கூட முடியாமல் போய் விடுகிறார்கள்.

உங்கள் மதிப்பை உணராதவர்களையும் 
உங்கள் உணர்வுகளை மதிக்காதவர்களையும் பற்றி கவலைப்படாதீர்கள்.

வலி எப்பொழுதும் கண்ணீரில் இருப்பதில்லை சில சமயம் அது புன்னகையாக இருக்கும், ஆனால் உங்கள் விசுவாசத்திற்கு கண்ணீர் தான் எப்போதும் கடைசி பரிசு.

எந்த நியாயமான காரணமும் இல்லாமல் உங்களை திடீரென விட்டுச் செல்வார்கள், அதற்காக நீங்கள் ஒருவரை மறப்பதற்காக ஒருபோதும் இன்னொருவரை பயன்படுத்தாதீர்கள்.

நீங்கள் ஒருவருக்கு முக்கியமானவராக இருக்கலாம்,இருந்திருக்கலாம் ,இருந்து கொண்டு இருக்கலாம், இனியும் இருக்கலாம்…

ஆனால் அது எல்லா நேரத்திலும் அல்ல அவர்களுக்கு தனி தேவையை இன்னொரு நபர் வரும் வரைக்கும் தான் அந்த இடத்திற்கு நீங்கள்,

நீங்கள் உங்களை எவ்வளவு அதிகமாக நேசிக்கிறீர்களோ, அவ்வளவு வேகமாக உங்களுக்கு பிடிக்காத விஷயங்களில் இருந்து விலகி விடுவீர்கள்.

உங்கள் குறைபாடுகளை நீங்கள் ஏற்றுக்கொண்டால், யாரும் அதை உங்களுக்கு எதிராக பயன்படுத்த முடியாது.

இப்போது நீங்கள் நன்றாக வாழ்வதை யாரால் சகிக்க முடியவில்லையோ, அவர்கள் தான் உங்கள் கடந்தகால வலியின் பங்குதாரர்கள்.

உங்களால் உங்களை நிரூபிக்க முடியா விட்டால் உங்கள் திறன் மங்கிப் போவதைப் பற்றி யாரும் கவலைப்பட போவதில்லை…

எவ்வளவு வீதம் மற்றவர்களில் நீங்கள் தங்கி வாழாமல் இருக்கிறீர்களோ, அவ்வளவுக்கு அவ்வளவு நீங்கள் மகிழ்ச்சியாக இருப்பீர்கள்.

நீங்கள் தோல்வி அடைவதை பார்ப்பதற்காக சிலர் காத்திருக்கிறார்கள், உங்கள் முயற்சி மூலமாக அவர்களை ஏமாற்றுங்கள்.

பணத்தால் வாங்க முடியாத ஏதோ ஒன்று இருக்கும் வரை, எல்லாம் என்னிடம் இருக்கு என்று எந்த பணக்காரனாலும் கூட சொல்ல முடியாது.

உங்களை விட கீழ் நிலையில் இருக்கும் ஒருவரால் தான் நீங்கள் விமர்சிக்க படுவீர்கள், உங்களை விட சிறந்த ஒருவருக்கு உங்களை கவனிக்க நேரம் இருக்காது.

உங்கள் மதிப்பை நீங்கள் பார்க்க ஆரம்பித்தவுடன், உங்களுக்கு தேவையில்லாதவகைகளை நீங்கள் தவிர்க்கத் தொடங்குவீர்கள்.

தனியாக இருப்பவர்களின் கதைகள் பெரும்பாலும் சோகமாகத்தான் இருக்கும், ஆனால் சிலர் அவர்களை தங்கள் கதைகளில் 
வில்லனாக சித்தரிப்பார்கள்.

சுற்றி இருப்பவர்களால் உங்களை எல்லா விதத்திலும் திருப்தி படுத்த முடியாது, தனிமை ஒருபோதும் உங்களைக் கொன்று புதைக்காது.

உங்கள் மறுபிரவேசம் வலுவாக இருக்குமானால்,  நீங்கள் கடந்து வந்த வேதனைகள் அனுபவிக்க வேண்டிய ஒன்றுதான்…

நீங்கள் இல்லாமல் அவர்கள் நன்றாக இருந்தால், அவர்கள் இல்லாமல் நீங்கள் இன்னும் நன்றாக இருங்கள்.

ஒன்றைப் புரிந்து கொள்ளுங்கள் யார் உங்களை கீழே வீழ்த்த முயற்சி செய்கிறார்களோ, அவர்கள் ஏற்கனவே உங்களுக்கு கீழே தான் இருக்கிறார்கள். 

#தகுதியே_தடை

#ksrpost
5-7-2022.

Thursday, June 30, 2022

#சென்னை_பழைய_விமான_நிலையமும்_சில_நினைவுகள்…

#சென்னை_பழைய_விமான_நிலையமும்_சில_நினைவுகள்…
———————————————————
கீழே உள்ள பழைய படம் சென்னை விமான நிலையம் இன்றைக்குள்ள விமான நிலையத்திற்கு வடக்கு புறம் 800 மீட்டர் தள்ளிஅமைந்தது இருந்தது. இதுதான் 1960,70 களில் இருந்த விமான நிலையம். இன்றைக்கு கார்கோ வாக உள்ள பகுதி 70 களில் அன்றைக்கு விமான நிலையமாக செயல்பட்டு வந்தது. 

அப்போது இன்று போல பல தனியார்
விமானங்கள் கிடையாது. மத்திய அரசின் Indian Airlines வெளி நாடு செல்ல Air India மகாராஜா சின்னத்தோடு  இயங்கியது . இவ்வளவு 
தனியார் விமானங்கள் இயக்கம் 1990களில்தான்.




எவ்வளவோ நினைவுகள் வந்து செல்கின்றன. முதல் விமான பயணம் எனக்கு இந்த இடத்திலிருந்துதான் தொடங்கின. முதல் விமான பயணத்தில் சென்னையிலிருந்து டெல்லி செல்லக் கூடிய சூழல் அமைந்தது. அப்போதெல்லாம் விமான பயணத்தின் டிக்கெட் ரசீது மாதிரி 3, 4 பக்கங்களாக book let-செவ்வக வடிவில் தாள்களாக அமைந்திருக்கும். மத்தியில் நிதித்துறை ராஜாங்க அமைச்சராக இருந்த தாரகேஷ்வரா சின்கா ஸ்தாபன காங்கிரஸில் முக்கியமான அகில இந்திய நிர்வாகி. ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் அற்புதமாக பேசக்கூடிய ஆற்றல் பெற்றவர். 

அவர் தமிழகம் வந்தால் நான் உடன் இருப்பேன்.  அவருடன் பயணித்து பணிகளை செய்வது உண்டு. அவர் குறிப்பாக கன்னியாகுமரி, மதுரை,திருச்சி-ஶ்ரீரங்கம், கோவை,சிதம்பரம், மாமல்லபுரம்,திருப்பதி போன்ற இடங்களுக்கு செல்வார். 

அவர் ஒரு முறை தமிழகம் நிகழ்ச்சிக்கு வந்து திரும்பும் போது என்னை டெல்லிக்கு வருமாறு அழைப்பு விடுத்து உடன் அழைத்து சென்றார். விமான பயணச் செலவை அவரே ஏற்று என்னை டெல்லிக்கு அழைத்து சென்றார். அதுதான் என்னுடைய முதல் விமான பயணம். முதல் விமானப் பயணம் என்பதால் பல விஷயங்கள் அறியக்கூடிய வாய்ப்பு எனக்கு 48 ஆண்டுகளுக்கு முன்  கிடைத்தது. 

டெல்லி அழைத்து சென்று தாரகேஸ்வரா அம்மையாரின் வீட்டில் என்னை தங்க வைத்து மறுநாள் என்னை இன்றைக்கு உள்ள நாடாளுமன்ற கட்டத்திற்க்கு அழைத்து சென்று;  dear Son, one day you will reach this circular building என்றார். இதெல்லாம் நடந்த நினைவுகள். நான் நாடாளுமன்றம் வளாகத்தை பார்த்தே நாற்பத்தி ஏழு எட்டு ஆண்டுகளுக்கு மேல் ஆகின்றது. சின்காவின் சொன்னபடி நாடாளுமன்ற உறுப்பினராக அங்கு செல்ல 1980, 1998,2002 இல் வாய்ப்புகள் வந்தன. ஆனால் ஏதோ யாரோ சில புன்னியவான்களால் அது ஒருவகையில் தடுக்கப்பட்டது.அவர் நன்றாக இருக்கட்டும். 

ஆரம்ப காலத்தில் இந்த விமான நிலையம் சுற்றுலா பயணிகள் பார்க்க கூடிய இடமாக திகழ்ந்தது. அன்றைய காலகட்டத்தில் விமானம் தரை ஏறுவதும், தரை இறங்குவதும் மக்கள் பிரமிப்போடு பார்த்துக் கொண்டிருப்பர்கள். அந்த விமான நிலையத்தில் அன்றைக்கு எத்தனையோ தலைவர்கள் காமராஜர் இந்திரா காந்தி, ஜெபி என சென்று வரவேற்றதெல்லாம் உண்டு. அதெல்லாம் பசுமையான நினைவுகள். அப்போதெல்லாம் மிக எளிமையான முறையில் வரவேற்பும் போலீஸ் காவல் துறையின் நெருக்கடிகள் இல்லாமல் எளிமையான நிகழ்வாக இருக்கும். அரசியலில் அன்றைக்கு தேசிய அளவிலான மாணவர் அரசியலில் இருந்தால் மாதத்திற்கு ஒரு முறையாவது  விமான பயணம் செய்வது உண்டு. பழ.நெடுமாறன், கவிஞர் கண்ணதாசன் போன்றோர்
டில்லி அரசியிலிருந்து விலகல் என
நிலையில் வட புல அரசியல் தொடர்புகள் இல்லாமல் ஆனாது. இருப்பினும்
கே.பி.உன்னி கிருஷ்ணன், மறைந்த
பஸ்வான், சந்திரஜித் யாதவ், சுரேந்திர மோகன், மற்றும் அம்பிகா சோனி என
பலரின நட்பு இருந்தது இன்னும் இருக்கிறது.
#Chennai_airport_memories

கே.எஸ்.இராதா கிருஷ்ணன்.
#ksrpost
30-6-202.


Oct 30, 2025 அன்றும்! இன்றும்!! முதல்வர் ஸ்டாலினின் தங்கச்சி!!!

  அன்றும்! இன்றும்!! முதல்வர் ஸ்டாலினின் தங்கச்சி!!!