Friday, March 31, 2017

மதுரை

மதுரை கோபி ஐயங்கார் டிபன் சென்டர்:
 -----------------------------------
மதுரையில் மேற்கு சித்திரை வீதி, வடக்கு சித்திரை வீதி இணையும் இடத்தில்  காங்கிரஸ் அலுவலகம் இருந்தது. தென் மாவட்ட விடுதலை வீரர்கள் காமராசர் உட்பட பலரும் தங்கிய இடம்.

1960களிலிருந்து பழ. நெடுமாறனுடைய நிர்வாகத்தின் கீழ் இக்கட்டடம் இருக்கின்றது.அரசியல் மாணவர் பருவத்திலிருந்து நான் சென்ற இடம். 1970ல் சில நேரம் கூட மதுரைக்கு தொடர் வண்டியில் சென்றுவிட்டு, அங்கு குளித்துவிட்டு கிராமத்திற்கு சென்ற காலங்கள் எல்லாம் உண்டு.


இந்த மாடியின் கீழ் கோபி உணவு விடுதியுண்டு. சுவையான பலகாரங்கள் கிடைக்கும். கோபி ஐயங்கார் டிபன் சென்டரில் வெள்ளை ஆப்பம், கோதுமை தோசை, கத்தரிக்காய் பஜ்ஜி, அடை அவியல், ரவா பொங்கல், பால்போளி, சீரக போளி, புளியோதரை, கார சட்னி ஃபில்டர் காபி  போன்ற சுவையான உணவு வகைகள் மதுரையில் பிரபல்யம்.
100 ஆண்டுகளாக இந்தக் கடை உள்ளது. இந்தக் கடையை மூலக்கடை என்று அழைப்பதும் உண்டு. இந்தக் கடையின் உரிமையாளர் கோபாலன் ஐயங்கார் 18 வயதில் இந்த டிபன் சென்டரை துவக்கினார்.இன்றைய ஆங்கில ஹிந்துவில் விரிவான பத்தி வெளி ஆகியுள்ளது.

மதுரை மேலச் சித்திரை வீதியில் இந்த பிள்ளையார் கோவில் மண்டபம்;1924ஆம் ஆண்டில் தியாக சீலரான சுப்பிரமணிய சிவா அந்த மண்டபத்தில் தேசியப் பள்ளிக்கூடம் ஒன்றைத் தொடங்கினார். அப்பள்ளியில் மாணவ, மாணவியருக்கு பாரதியின் பாடல்கள் மற்றும் இந்திய நாட்டின் வரலாறு, தமிழ்மொழியின் சிறப்பு போன்றவை கற்பிக்கப்பட்டன. சிவா அவர்களின் மறைவிற்கு பிறகு அம்மண்டபம் காங்கிரசு கட்சியின் அலுவலகமாக மாறியது.
மதுரை நகரையும், மதுரை மாவட்டத்தையும் சேர்ந்த நா.ம.ரா. சுப்புராமன்,  அ. வைத்தியநாதய்யர், மௌலானாசாகிப், என்.ஆர். தியாகராசன், ஆர். சிதம்பரபாரதி,  அ. சிதம்பர முதலியார், எல். கிருஷ்ணசாமி பாரதி, பூ, கண்ணன், புலி, மீனாட்சிசுந்தரம், சீனவாச வரதன், இலட்சுமிபதி ராசு போன்ற தியாக சீலர்கள் அவருக்குத் தோள் கொடுத்துத் துணை நின்றார்கள். இம்மண்டபத்தில்தான் அவர்கள் கூடி விடுதலைப் போராட்டத்திற்கான திட்டங்களைத் தீட்டினார்கள். விருதுநகரிலிருந்து தலைவர் காமராசர் மதுரை வரும்போதெல்லாம் இம்மண்டபத்தில் தங்கி, தோழர்களுடன் கலந்தாய்வு செய்வது வழக்கம். அவர் முன்னின்று நடத்திய பல போராட்டங்களுக்கான பாசறையாகவும் இம்மண்டபம் திகழ்ந்தது. மண்டபத்திற்குள்ளேயிருக்கும் பிள்ளையார் சிலைக்குப் பின்புறம்தான் தங்களது ஆயுதங்களைத் தொண்டர்கள் மறைத்து வைப்பது வழக்கம்.
#மதுரை 
#கோபிஐயங்கார்டிபன்சென்டர்
#காங்கிரசு
#KSRadhakrishnanpost
கே.எஸ். இராதாகிருஷ்ணன்
31.03.2017

No comments:

Post a Comment

*What lies behind you and what lies before you are tiny matters compared to what lies within you*.

*What lies behind you and what lies before you are tiny matters compared to what lies within you*. Believe in yourself. You know personal de...