Wednesday, November 29, 2017

“30 நாட்களில் முதலமைச்சர் ஆவது எப்படி?” என பரிகாசமான படமா…?


‘30 நாட்களில் முதலமைச்சர் ஆவது எப்படி என்ற தலைப்பில் ஒரு புத்தகத்தை படத்தில் போட்டு கேலியாக பேசக்கூடிய அளவில் முதலமைச்சர் பதவி ஆகிவிட்டதே என்ற நிலை. தமிழக முதலமைச்சர்களாக இருந்த ஓமந்தூராரில் இருந்து கலைஞர் வரை மக்களிடம் சென்று களப்பணிகள் ஆற்றியே முதல்வரானதுண்டு. ஆனால் இன்றைக்கு நிலைமைகள் மாறி முதலமைச்சர் பதவி அவ்வளவு எளிதாக நினைக்கக்கூடிய வகையில் ஆகிவிட்டதே என்ற வேதனையான சூழல். தகுதியே தடை. எந்த அடிப்படை தகுதியில்லாமலும் யார் வேண்டுமானலும் அனுபவமற்ற எந்த உழைப்பில்லாத வகையில் முதலமைச்சர் ஆகிவிடலாமென்ற போக்காகிவிட்டது. இது ஆரோக்கியமான நிலையல்ல. தேர்தலில் 50% மேல் வாக்குகளை பெற்றவர்கள் தான் வெற்றிபெற்றவர்களாக அறிவிக்கவேண்டும். ஆனால் இங்கோ 20% முதல் 30% வாக்குகளை பெற்றாலே வெற்றி பெற்றுவிடலாமென்று நாம் ஏற்றுக்கொண்ட ஜனநாயக வாடிக்கையாகிவிட்டது.
தரம், தகுதி, ஊழல் செய்தவர்கள், கிரிமினல்கள் எல்லாம் அமைச்சர்கள் மக்கள் பிரதிநிதிகளாக ஆகிவிட்டதல் தான் இப்படி எல்லாம் பரிகாசமான படங்கள் வெளியாகின்றன.
ஒரு வியம் அரசியலில் கவனிக்க வேண்டியது. ஒருவர் எவ்வளவுதான் திறமையானவராகவோ நேர்மையானவராகவோ ஆளுமையானவராகவோ இருந்தாலும் தேர்தலில் வெல்வது எளிதல்ல. அதற்கு தற்போதுள்ள நிலையில் ஓர் தனி கணக்குண்டு. நிலைமைகள் எல்லாம் உண்மைக்கு மாறாக பொய்கள் மௌனமாக அடர்த்தியாகிவிட்டது. என்ன செய்ய…?
அவர் ரோடு போட்டார் சரி; பள்ளிக்கூடம் கட்டினார், குடிநீர் கொடுத்தார் சரி; என்பதெல்லாம் முக்கியமல்ல. எங்கேயோ என்னவோ பண்ணிட்டு போங்க. அதனால எனக்கு என்ன பலன்? என்கிற கேள்வி தான் நம்மூர் வாக்கு அரசியலின் அடிநாதம்.
தனிப்பட்ட முறையில் தனக்கான பலன் என்பதைப் பார்த்துவிட்டு வாக்களிக்கும் மக்கள்தான் 80 சதவீதத்துக்கும் மேலானவர்களாக இருக்கிறார்கள். சுயநலம், தேர்தலுக்கு காசு வாங்கி வாக்களிப்பது என்ற நிலை வந்துவிட்டது. பணம் கொடுத்து வாக்கினை பெற்று வெற்றி பெற்றவர் தன்னுடைய பதவியை பல கோடிக்கு தன்னுடைய ஆதரவை வழங்க விலை போகிறார். தேர்ந்தெடுக்கப்பட்டவரோ தன்னலம், தன்னுடைய புகழ் என்பது தான் அவருடைய திடமான நோக்கமாக இருக்கிறது. அவருக்கு மக்களை பற்றி சிந்திக்க வேண்டியதுமில்லை, மக்களுக்கு பதில் சொல்லவேண்டிய அவசியமில்லை. ஏனெனில் அவர் ஏற்கனவே தேர்தலில் மக்களுக்கு பணம் கொடுத்து வாக்குகளை பெற்றுவிட்டார். அவருடைய வாக்குச் சந்தை கடமையை நேர் செய்துவிட்டார்.
பிறகெப்படி ஆரோக்கியமான ஜனநாயக அமைப்புகளோ அதன் செயல்பாடுகள் எப்படி இருக்கும். மக்கள் சரியான போக்கில் சென்று ஏன், எதற்கு என்று கேள்வி கேட்டு மெய்ப்பொருள் கண்டால் தானே நேர்மையான பிரதிநிதிகளை தேர்ந்தெடுப்பார்கள்.
முடிதிருத்தும் நிலையத்துக்கு செல்கையில் நாம் சரியாக அமர்ந்தால் தானே முடியை வெட்டி திருத்துவார். தலையை ஆட்டிக் கொண்டிருந்தால் அவரால் என்ன செய்ய முடியும். அதில் பாதிக்கப்படுவது முடியை வெட்ட வந்தவர் தானே. அதே போல தான் தேர்தலில் மக்கள் சரியாக அணுகவில்லையெனில் எப்படி நேர்மையாளர் ஆட்சிக்கு வரமுடியும். பிறகெப்படி மக்கள் நல திட்டங்களை செயல்படுத்த முடியும்.
மேற்கத்திய நாடுகளில் கூட பெரும்பான்மை மக்கள் ஆதரிக்கிறார்கள் என்று தவறானவர்களை தலைவர்களாகவோ ஏற்றுக் கொள்ள முடியாது என்ற கருத்து பரவிவிடுகிறது. தலைவர்களுக்கான இலக்கணத்தை இல்லாதவர்கள் தான் இந்த வணிக அரசியலில் தலைவர்களாக தலையெடுத்து வியாபார அரசியலை நடத்துகின்றனர். இதை கண்கூடாக நாமும் பார்க்கின்றோம்.
இல்லாத மேடையிலே,
எழுதாத நாடகத்தை,
எல்லோரும் நடிக்கின்றோம்,
நாம் எல்லோரும் பார்க்கின்றோம்.
இப்படியான நிலையில் எப்படி அறம், நேர்மை, கண்ணியம், பொது வாழ்வில் தூய்மை என்பதை காண முடியும்? ஆனால் இதற்கும் முடிவுண்டு.
#அரசியல்
#பொது_வாழ்வு
#politics
#Public_life
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.

28-11-2017.

No comments:

Post a Comment

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️

#*இ.ந்.தி.யா தேர்தல்க்கூட்டணி* ⁉️ ••••• இந்த இ.ந்.தி.யா தேர்தல்க் கூட்டணிகளின் விசித்திரங்களை  எவ்வாறு அணுகுவது என்று மிகச் சிறந்த பத்திரிகை...