Thursday, November 16, 2017

மன அழுத்தத்திற்கு மரணம்தான் முடிவா?

திரு வா.மணிகண்டன் அவர்களின் பதிவிலிருந்து. 
படிக்க மனம் கணக்கிறது......வேதனை. இன்றைய இளைஞர்களின் நிலைமை 
..............................................................
மன அழுத்தத்திற்கு மரணம்தான் முடிவா?

முப்பத்தேழு வயது அவருக்கு. கும்பகோணத்துக்காரர். திருமணமாகி ஒரு குழந்தை. மூன்றாம் வகுப்பு படித்துக் கொண்டிருக்கிறது. மென்பொருள் துறையில்தான் வேலை. பிடிஎம் லே-அவுட்டில் ஒரு அபார்ட்மெண்ட்டில் குடியிருக்கிறார். எப்பொழுதோ பேருந்துப் பயணத்தில் அறிமுகம். அதன் பிறகு நிறைய முறை சந்தித்திருக்கிறோம். பெங்களூரில் சில கூட்டங்களுக்கும் வந்திருக்கிறார். அலைபேசியில் பேசிக் கொள்வோம். ‘சாகற வரைக்கும் வீட்டுக்கடன் கட்டுவேன்’ என்று ஒரு முறை சொன்னது நினைவில் இருக்கிறது. கடன் முடிந்திருக்க வாய்ப்பில்லை. ஆனால் அவர் செத்துவிட்டார்.
நேற்றிரவு அலுவலகம் முடித்து அதிகாலை இரண்டு மணிக்கு வந்தாராம். ‘அப்பா பாவம்..உறங்கட்டும்’ என்று அம்மாவும் மகளும் அவரை எழுப்பவேயில்லை. காலையில் குழந்தையைக் கிளப்பி பள்ளிக்கு அனுப்பிவிட்டு மனைவியும் அலுவலகத்துக்குத் தயாராகிவிட்டு ‘வீட்டைப் பூட்டிக்குங்க வாங்க’ என்று எழுப்பும் போதுதான் வெற்று உடலென்று உணர்ந்திருக்கிறார். ‘சில்லுன்னு ஆகிடுச்சுங்க’ என்று அழுது கொண்டிருந்தார். என்ன செய்வதென்று தெரியாமல் நண்பர்கள் சிலரை அழைக்க பக்கத்தில் இருந்தவர்கள் மருத்துவமனைக்குத் தூக்கிச் சென்றிருக்கிறார்கள்.
அந்தப் பெண்ணின் தம்பி இதே ஊரில்தான் இருக்கிறான். அவன் அக்காவையும் அக்கா பெண்ணையும் அழைத்துக் கொண்டு அதே ஆம்புலன்ஸ் வாகனத்தில் செல்கிறான்.
குழந்தை ‘அப்பாவுக்கு என்னாச்சும்மா?’ என்று கேட்டுக் கொண்டே செல்கிறது.
மிக் இயல்பாக இருந்திருக்கிறார். குடிப்பழக்கம் இல்லை. பீடி சிகரெட் இல்லை. சர்க்கரை இல்லை. ஒரேயொரு இருதய நிறுத்தம். ஆளை முடித்திருக்கிறது. மருத்துவர்களிடம் பேசினோம். ‘ஸ்ட்ரெஸ்தான்’ என்றார். அதேதான். கடந்த மாதம் முழுக்கவவும் அலுவலகத்தில் ஆட்களைத் துரத்தியிருக்கிறார்கள். தன்னையும் வேலையைவிட்டு அனுப்பிவிடக் கூடும் என்று பயந்திருக்கிறார். போனால் வேலைதானே! தைரியமாக இருந்திருக்கலாம். இழுத்துப் போட்டு வேலைகளைச் செய்திருக்கிறார். சோறு தண்ணி இல்லாத உழைப்பு. தினசரி நள்ளிரவு தாண்டிய தூக்கம். எந்நேரமும் அலுவலக நினைப்பு. ஆளையே முடித்துவிட்டது.
அங்கே யாரிடமும் சொற்கள் இல்லை. சமீபத்தில் இத்தகைய சில சாவுகளைக் கேள்விப்பட்டேன். இப்பொழுது நேரடியாகப் பார்த்தாகிவிட்டது.
என்ன சொல்வது எனத் தெரியவில்லை. வேலை போனால் குடி முழுகிப் போய்விடாது.
இன்னொரு நண்பரைப் பற்றிச் சொல்லியாக வேண்டும். ஒன்றேகால் லட்ச ரூபாய் சம்பளம் வாங்கிக் கொண்டிருந்தார். என்னவோ காரணம் சொல்லி அனுப்பிவிட்டார்கள். இப்பொழுது திருப்பூருக்குப் பக்கத்தில் ஒரு கடை வைத்து வாழ்க்கையை ஓட்டிக் கொண்டிருக்கிறார். பெங்களூருவில் வாங்கிக் குடியிருந்த அபார்ட்மெண்ட்டில் பதினைந்தாயிரம் ரூபாய் வாடகை வருகிறது. ஒரு திருமணத்தில் சந்தித்த போது‘இது போதும்’ என்றார். ஊருக்குள் அவரைப் பைத்தியகாரன் என்கிறார்கள். என்னிடம் கூட அப்படித்தான் சொன்னார்கள். ‘இப்பொழுதே வேலையை விட்டுவந்துவிட்டான்’ என்று கிண்டலடிக்கிறார்கள். ஊர் எப்பொழுதுதான் வாழ்த்தியிருக்கிறது? இப்படி இருந்தாலும் பேசுவார்கள்; அப்படி இருந்தாலும் பேசுவார்கள். ஊர் வாயை அடைக்க முடியாது. அவர் மிகத் தெளிவாக இருக்கிறார். அமைதியான சூழல். அளவான வருமானம். சிரமமில்லாத வாழ்க்கை. ஒன்றும் ஆகிவிடவில்லை.
பெங்களூரிலும் சென்னையிலும் இருப்பவர்கள் ஏன் இவ்வளவு பதறுகிறார்கள்?
வேலையில் இருக்கும் அரசியல், பணியிடங்களில் கொடுக்கப்படும் அழுத்தம் என எல்லாமும் சேர்ந்து மனிதர்களைப் பாடாய்ப்படுத்துகின்றன. தமக்கே தெரியாமல் அவற்றை தலையில் ஏற்றிக் கொண்டு மெல்ல மெல்ல உயிரை விட்டுக் கொண்டிருக்கிறார்கள். வேலைக்காக உயிரைக் கொடுப்பது மடத்தனம். ஏன் இவ்வளவு அழுத்தங்களை எடுத்துக் கொள்ள வேண்டும்? பணி செய்யுமிடங்களில் அழுத்தட்டும். ‘போங்கடா டேய்’ என்று மனதுக்குள்ளாவது சொல்கிற மனநிலை அவசியம். அதிகபட்சம் என்ன செய்வார்கள்? வேலையை விட்டு அனுப்புவார்கள். இது ஒன்றுதான் வேலையா? இரண்டு மாதத்தில் இன்னொரு வேலை வாங்கிக் கொள்ள வேண்டியதுதான். அப்படியே இல்லையென்றாலும் திருப்பூர்க்காரரைப் போல வாழ்க்கையை எதிர்கொள்ளலாம். கடை வியாபாரமும், ஆல்டோ காரும், அரசுப் பள்ளியில் படிக்கும் குழந்தையுமாக வாழ்க்கையை வாழ்வதற்கு எவ்வளவோ வழிகள் இருக்கின்றன.
மருத்துவமனையின் வெளியில் அமர்ந்திருந்தோம். மயான அமைதி விரவிக் கிடந்தது. பிரேத பரிசோதனைக்காக கூடத்துக்குள் உடல்கள் வந்து கொண்டேயிருந்தன. இவரது உடல் வெளியே வர மாலை ஆகிவிட்டது. இடையில் அவருடனான நினைவுகள் வந்து போயின. சில வருடங்களுக்கு முன்பாக சேலம் செல்லும் போது பக்கத்து இருக்கையில் அமர்ந்திருந்தார். பேச்சுக் கொடுத்து நண்பர்களானோம். ஊரிலிருந்த அம்மா அப்பாவைப் பார்ப்பதற்காகச் சென்று கொண்டிருந்தார். ஃபோனில் பேசிக் கூட சில மாதங்கள் ஆகிவிட்டது. இலை உதிர்வதைப் போல உதிர்ந்துவிட்டார். மரணத்திற்குப் பிறகு அவருடைய அலைபேசியிலிருந்த எண்களுக்கெல்லாம் குறுஞ்செய்தியை அனுப்பியிருந்தார்கள். அலுவலகத்தில் சொல்லிவிட்டுக் கிளம்பிச் சென்றிருந்தேன்.
அவரது மனைவிக்கு என்ன ஆறுதல் சொல்வது எனத் தெரியவில்லை. உடல் வெளியில் வருவதற்கு கொஞ்ச நேரத்துக்கு முன்பாக குழந்தையை அழைத்து வந்திருந்தார்கள். அது அம்மாவின் தோளில் சாய்ந்து கொண்டது. உடல் வெளியே வந்தவுடன் அம்மாவும் மகளும் கதறினார்கள். உடலை ஏற்றிய பிறகு அவர்கள் மூவரும் ஏறிக் கொண்டார்கள். அவர் மீது போடப்பட்டிருந்த மாலையிலிருந்து ரோஜா இதழ்கள் விழுந்தன. வண்டி கிளம்பியது. அவரவர் தாம் வந்த திசையில் திரும்பினார்கள்.
அந்தக் குழந்தையைவிடவுமா வேலையும் சம்பளமும் முக்கியம்? அந்தக் குழந்தையும் குடும்பமும் இனித் தாங்கப் போகிற சுமையைவிடவுமா மேலாளர் அழுத்திவிட்டான்? யோசிப்பதேயில்லை.
ஒன்றைத்தான் திரும்பத் திரும்ப நினைத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது- நம்முடைய உடலும் உயிரும் நமக்கானது. நம் குடும்பம் முக்கியம். பிள்ளைகளின் எதிர்காலம் முக்கியம். மற்ற அத்தனையும் இதற்குப் பின்னால்தான்.


#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
15-11-2017

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...