Tuesday, November 7, 2017

இலக்கிய படைப்புலக கர்த்தாக்களின் ரணங்களும், தனிமைகளும்.

நா.விச்வநாதனின் புனைவு வெளியில் தமிழ் படைப்பாளிகளான சி.சு.செல்லப்பா, கரிச்சான் குஞ்சு, தஞ்சை ஸ்வாமிநாத ஆத்ரேய, புதுமைபித்தன் என்ற கதைமன்னன், லா.ச.ரா, க.நா.சு, ஆர்.சூடாமணி, ஜி.நாகராஜன், தி.ஜானகிராமன், நகுலன், ப.சிங்காரம், ஓயாமல் பேசிய மௌனி, எம்.வி. வெங்கட்ராம், கு.ப.ரா, ந.பிச்சமூர்த்தி, கு.அழகிரிசாமி, காதம்பரி வெங்கட்ராமன், தஞ்சை பிரகாஷ் போன்ற இலக்கிய ஆளுமைகளை குறித்து சிறு நூலாக படைத்துள்ளார். அற்புதமான பணிகளை மேற்கொண்ட இந்த ஆளுமைகளுக்கு இறுதிகாலம் மகிழ்ச்சியாக இல்லை. இதில் ஓரளவு வசதியாக இருந்தவர்களாக எடுத்துக் கொண்டால் மௌனி, கு. அழகிரிசாமி, தஞ்சை பிரகாஷ், லா.ச.ரா., தி.ஜானகிராமன், நகுலன், சூடாமணி ஆகியோரை தான் சொல்ல முடியும்.


ஆர். சூடாமணி வசதியான குடும்பத்தில் பிறந்திருந்தாலும் அவருடைய வாழ்க்கையில் கிடைக்க வேண்டிய மகிழ்ச்சி இல்லையென்று தான் புலப்படுகின்றது. சூடாமணி தன்னுடைய வாழ்வை நேசித்தார். தனக்கு எதுவும் கிட்டவில்லையென்றாலும், தன்னுடைய 21 கோடி ரூபாய் சொத்தை பிறர் நலனுக்காக பிரித்து கொடுத்தார். இப்படி யாருக்கு மனது வரும். சூடாமணியின் இயல்பான சொற்களே வீரியமாகவும், வசீகரமாகவும் இருப்பதற்கு மெல்லிய இறகுகளைப் போல அசைந்தாடும்.

சி.சு.செல்லப்பா ஆசிரியராக இருந்தாலும் 112எழுத்துஇதழ்களை வறுமையிலும் வைராக்கியமாக கொண்டு வந்தார். தலையில் தன்னுடைய படைப்புகளை சுமந்து கொண்டு கல்லூரிகளுக்கும், நண்பர்களின் வீடுகளுக்கும் அலைந்து திரிந்து விற்பார். அதிலும் எதிர்பார்த்த வரும்படி இல்லை. ஐந்து ரூபாய்க்கு கீரை வாங்கினாலும் கீரைக்காரியிடம் பேரம் பேசி வாங்க வேண்டிய நிலைமை. இவ்வளவு சிரமங்களுக்கு மத்தியிலும் எழுத்து யோகியாக வாழ்ந்தார் வத்தலக்குண்டுகாரர்.

கரிச்சான் குஞ்சு அற்புதமான படைப்பாளி மட்டுமல்ல வாசிப்பும் புரிதலும் உள்ளவர். தமிழ் மட்டுமல்லாமல் ஆங்கிலம், இந்தி, சமஸ்கிருதம், கன்னடம் என பல மொழிகளில் எழுதுவதிலும், சொற்பொழிவாற்றுவதிலும் வல்லவர். யஜுர் வேதத்தை கரை கண்டவர். ஜெயகாந்தன் இவரை சிம்மம், ஞான பண்டிதர் என்று அழைத்ததுண்டு. அவர் வீட்டில் இவருக்கென்று பிரத்யேகமாக ஒரு மர நாற்காலி உண்டு. பாண்டிச்சேரியில் பிரெஞ்சு மொழி நிறுவனத்தில் வேலை பார்க்கும் போது இவருக்கும் கோபால அய்யருக்கும் பிடிக்காமல் பதவி விலகினார். கல்யாண மந்திரங்களை அச்சு பிசகாமல் சொல்லி நடத்துபவர். கம்யூணிஸ்ட் கட்சியை ஆதரித்தவர். கம்யூணிஸ்ட் தோழர்கள் எப்போதும் இவரை சுற்றியிருப்பது உண்டு. பூணூலையே அறுத்துப் போட்டாராம். இவர் கும்பகோணத்தில் டபீர்க்குளத் தெருவில் வாடகை கொடுக்க முடியாமல் ஈசிச்சேரில் ஹிந்து பேப்பர் படித்து கொண்டிருந்த போது, வீட்டின் சொந்தக்காரர், “வாடகை கொடுக்க வக்கில்லை. இந்து பேப்பர் ஒரு கேடாஎன்று கேட்ட போது எவ்வளவு மனம் புண்பட்டிருக்கும். அதுவும் அவரது இறுதி காலத்தில் என்ற போது நமக்கே வேதனையை தருகிறது. ஆனாலும் தனது கஷ்ட காலத்தில் எனக்கு ஆத்ம பலம் உண்டு எனத் சொல்லிக் கொள்வார்.

தஞ்சை ஸ்வாமிநாத ஆத்ரேய, இவர் மணிக்கொடி மரபு எழுத்தாளர். அதிகமாக பேச மாட்டார். தனிமை விரும்பி. தஞ்சாவூர் தெற்கு வீதியில் துணிக்கடை வைத்திருந்தார். அதன் பெயர் லலித மஹால். வ. ரா. தி. சா. சொக்கலிங்கம், ஸ்டாலின் சீனிவாசன் போன்றவர்களுடன் நெருக்கமாக இருந்தவர். ஃபிரி ப்ரஸ் ஜர்னலிலும் எழுதினார். இவர் மீது வழக்குகள் அவ்வப்போது வரும். ஸ்டாலின் சீனிவாசன் இவரை பிணையில் அவ்வப்போது எடுப்பார். இவருடைய கடைசி சிறுகதை சல்லி வேர்கணையாழியில் வந்தது. வைணவ ராமானுஜரின் பணிகளை பாராட்டுவார். தி.ஜானகிராமன், தி.சு.செல்லப்பா, ஆர்.வி.திரிலோகசீத்தாராம் போன்றோரின் நட்பு வட்டமும் இவருக்குண்டு. துளசிதாசரின் ராமாயணத்தை மொழிபெயர்த்தார். தனிமையில் இறுதி காலத்தில் படுத்த படுக்கையாக இருந்த போது இவருக்கு குடும்பம் இல்லை. மனைவி முன்பே காலமாகிவிட்டார். அவர் மறைந்த இரண்டு நாட்களுக்கு பின்பு தான் மரண செய்தியே தெரியவந்தது. அவரின் சடங்குகள் முறையாக நடக்காமல் அநாதையாக போனார் என்ற துக்கம் அனைவரையும் வாட்டியது.

நவீன புதினத்தின் முன்னோடி என்ற புதுமைப்பித்தன் பசியிலும் மருத்துவச் செலவுக்கு பணம் இல்லாமல் க.நா.சுவிற்கு கடிதம் எழுதி விட்டு அதே கடிதத்தில் புதுமை பித்தன் மறைந்தார் என எழுதினார் என்றால் அவருடைய ரணங்கள் அப்போது எப்படி இருந்திருக்கும்.

லா.ச.ரா என்கிற லால்குடி சப்தரிஷி ராமாமிர்தம் வங்கி பணியாற்றிக் கொண்டே இலக்கியப் படைப்புகளை படைத்தார். லால்குடியை விட்டு சென்னையில் குடியேறினார். மற்ற படைப்பாளிகளை போன்று இவருக்கு கஷ்டங்கள் எதுவும் ஏற்படவில்லை. 6 நாவல்குளும், 200க்கும் மேலான சிறுகதைகளும், 2 வாழ்க்கை வரலாறுகளும் படைத்தார் லா.ச.ரா.

கந்தடை நாராயணசாமி சுப்ரமணியம் என்கிற .நா.சுவைக் கண்டால் சிலருக்கு பிடிக்கும். சிலருக்கு பிடிக்காமல் போகும். இலக்கிய விமர்சனம், தத்துவ தரிசனம் ஆகியவை இவருடைய  போக்கில் அதிகம். தமிழும் ஆங்கிலமும் அற்புதமாக எழுதுவார், பேசுவார். இராமபானம், இலக்கிய வட்டம், சூறாவளி, முன்றில், LIPID LITREARY MAGAZINE என்று இதழ்கள் நடத்திப் கையை கடித்துக் கொண்டார். இலக்கியத்தில் தரம் இருக்க வேண்டுமென்று விரும்புபவர். தாம்ஸ்மன், ஆர்தர் கெய்சர், கதே, மொபசான், டால்ஸ்டாய், எலிசபெத் காஸ்கெல், நட்ஹாம்சன் என்ற பெயர்களை தமிழுக்கு தெரியப்படுத்தியது இவரே. இவருக்கு சொந்தமானது ஒரு பெரிய பையும், அதில் நான்கு வேஷ்டி துண்டும், ஜிப்பாக்களும், சில புத்தகங்களும், ஒரு டைப்ரைட்டரும் மட்டுமே. தஞ்சையில் மங்களாம்பிகா ஹோட்டலில் கடனில் தான் சாப்பிடுவார். பணம் வரும்போது தருவார். இப்படியான கஷ்டமான ஜீவனம் அவருக்கு. ஆனாலும் இலக்கியத்திலும் அதன் அளவு கோள்கள், இலக்கிய வீச்சைப் பற்றி இவ்வளவு சிரமங்களுக்கு மத்தியிலும் தன்னுடைய இலக்கிய பணிகளை ஆற்றிக் கொண்டார்.

மதுரை ஜி. நாகராஜன் எழுத்தாழுமை ஒரு அற்புதமான ரசாயன கலவையாகும். இலக்கியத்தை படித்தார். ஒரு நாடோடியாக திரிந்தார். போதை வஸ்துக்கள், குடும்ப வாழ்வு சுகமில்லை, தனிமை போன்ற மனநிலையில் இருந்தாலும், எழுத்துக்களுடைய கம்பீரம் நிமிர்ந்து நிற்கும். வறுமை வாட்டியது. டெர்லின் சட்டையும், எட்டு முழு வேஷ்டியும், அக்காலத்தில் டுட்டோரியல் (தனிப்பயிற்சி) கல்லூரி பணியும் இவருக்கு அடையாளங்களாகும். மதுரையில் எந்த மூலையிலும் இவரது காலடி பட்டிருக்கும்.

கும்பகோணம், காவிரி கரை, தஞ்சை பாஷை முதலியவைகளை கொண்டாடிய தி. ஜானகிராமனை பற்றி சுருக்கமாக சொல்லிவிட முடியாது. தன்னுடைய கதையில் அக்ரஹாரத்து பழக்கவழக்கங்களையும், ஆச்சார சீலராக இருந்தாலும் ஏகாந்தங்களையும், மோகங்களையும் பற்றி சிறப்பாக பேசுவார். இவர் கரிச்சான் குஞ்சு, மௌனி மாதிரி வெளிப்படையாகவும் வேகமாகவும் பேச மாட்டார்.
சுசீலாவின் நகுலன் என்ற துரைசாமி குடந்தையில் இருந்தாலும் மலையாள தேசத்தின் திருவணந்தபுரத்தில் தனது இறுதி காலத்தில் தனிமையில் வாழ்ந்தார். வெளிப்படையாகவே யாராவது சந்திக்க வந்தால் மது வாங்கி வந்தாயா? என்று உரிமையோடு கேட்பது அவருடைய வாடிக்கை. நகுலனை வாசிக்க வேண்டுமென்றால் நகுலனாகவே மாறிவிட வேண்டும். அவர் சொல்லுகிறார்,
“அலைகளைச் சொல்லிப்
பிரயோஜனமில்லை
கடல் இருக்கிறவரை
---
“வந்தவன் கேட்டான்
என்னைத் தெரியுமா
தெரிய வில்லையே
உன்னைத் தெரியுமா
எனக் கேட்டேன்
தெரியவில்லையே என்றான்
பின் என்னதான் தெரியும்
என்றான்.
உன்னையும் என்னையும் தவிர
வேறு எல்லாம் தெரியும்
என்றேன்.
---
“ராமச் சந்திரனா
என்று கேட்டேன்
ராமச் சந்திரன்
என்றார்
எந்த ராமச் சந்திரன்
என்று
நான் கேட்கவுமில்லை
அவர் சொல்லவும் இல்லை
---
“நான் இறந்த பிற்கு என்
அஞ்சலிக் கூட்டத்திற்கு யாரும்
வரவேண்டாம். ஏனென்றால்
என்னால் வரமுடியாது.
---
இப்படி தன்னுடைய மனநிலைகளை தனிமையை குறித்தே கவிதை படிக்கின்றார் ஆங்கிலப் பேராசிரியர் நகுலன். அவருடைய முரண்கள் அபாரமானவை. அவருடைய சுயத்தை அறிந்து கொள்ள எதுவும் இல்லை. அவருடைய பூனைகள், நாய்கள், அவருடைய மானசீக சுசீலா, மது தான் நம்முன் தெரிகின்றது.

பா.சிங்காரம் மதுரை தினத்தந்தியில் பணியாற்றினாலும் அவருடைய எழுத்துக்கள் யாவும் பின்நவீனத்துவத்தை சார்ந்தது. இரண்டாம் உலகப்போரில் இந்தோனேசியா, மலேய மக்கள் பட்ட இன்னல்களை எல்லாம் தெளிவாக எடுத்து சொல்லியிருக்கிறார். மதுரையில் எந்த ஹோட்டலில் எந்த உணவு பிரபலம், ருசியாக இருக்கும் என்று சிறப்பாக சொல்லிக் கொண்டு வருவார். சிங்காரம் எளிமையானவர்.

பல இழப்புகளையும் வலிகளையும் எதிர்கொண்ட மௌனி, தனி மனித தேடல்களாகவும் தன்னுடைய தளத்தை அமைத்து கொண்டார். கணிதம் படித்தவர். செம்மங்குடியில் பிறந்த இவர் செம்மங்குடி சீனிவாசனுக்கு உறவினர். இவருடைய கதைகளில் காதல், மரணம் என்பது பிரதானமானவை. சில நேரங்களில் திமிராக பேசுவார் மௌனி. கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் தான் வாழ்ந்த தில்லை நடராஜர் கோவிலுக்கு செல்வது வாடிக்கை. மௌனிக்கு எதிலும் போதாமை இருந்தது. அரிசி ஆலை தொழிலை வைத்து கொண்டு வாழ்க்கையில் சிரமமின்றி காலத்தை நகர்த்தினார்.

எம்.வி.வெங்கட்ராம் கும்பகோணத்தில் நெசவு, சரிகை வணிகத்தில் ஈடுபட்ட சௌராஷ்டிரா குடும்பத்தில் பிறந்தவர். வாழ்க்கையில் நிறைய துன்பங்களை சுமந்தவர். இவருக்கு அதையெல்லாம் சுமக்கும் உள்ளாற்றல் இருந்தது. விபூதி பொட்டுடன் காட்சியளிப்பார். இவருடைய துணைவி எழுதுவது ஒரு தொழிலா என்றாலும் தன்னுடைய எழுத்தை கொண்டு சிறப்பாக செயலாற்றுவார். ஆண், பெண் இருவருக்குமே விடுதலை தேவை. பெண்ணை அடிமைபடுத்தியிருக்கும் ஆணும் கூட அடிமையாகிவிடுகிறான். எனவே தான், கூன் விழாத எந்த ஆணையும் பார்க்கவே முடியவில்லை. இதன் காரணமாக நொடிக்கொரு விபத்தை நாம் சந்திக்கிறோம். அதுவே பழகியும் போய்விடுகிறது. முழுமையான வாழ்வு என்பது இல்லவே இல்லை.

இப்படியான இவருடைய படைப்பு போக்குகள் இருக்கும். எம்.வி.வி அதிகமாக பேசப்படாமல் இருக்கலாம். இவர் சொல்வார், பெரும்பான்மையான வாக்குகளால் இலக்கியம் வாழ்வதில்லைஎன்பார்.

கு.பா.ரா. என்கிற ராஜகோபாலன், 93 சிறுகதைகள் படைத்தவர். எதையும் மூடி மறைக்காமல் இந்த பிரபஞ்சத்தோடு யதார்த்தமாக பேசு. அதுவே பெருநிம்மதி, தூய்மை என்ற போக்கில் கதையாடல்கள் இருக்கும். கு.பா.ரா.வின் வாழ்க்கையும் சுவாரஸ்யமாக இல்லை. அரசு வேலையில் தொடர முடியவில்லை. வாழ்க்கையில் பணமில்லாமல் கஷ்டம். கும்பகோணத்தில் அவர் துவங்கிய மறுமலர்ச்சி நிலையத்தில் புத்தகங்கள் விற்கவில்லை. ஆனால் வந்தவர்கள் அவரின் புத்தகங்களை படித்துவிட்டு சென்றுவிடுவார். கரிச்சான்குஞ்சு ஏனய்யா, இப்படி பண்ணுற என்று கேட்பார். எப்படியாவது படித்தால் சரிதான் என்பார். புதுக்கவிதை ந. பிச்சமூர்த்தி வின் பக்கத்து வீட்டுக்காரர்.
கவிதையை ந. பிச்சமூர்த்தி கவிதையை ஆளும் அதிகாரம் பெற்றவராக திகழ்ந்தார். தத்துவத்தில் பட்டம் பெற்று வழக்கறிஞராக இருந்தார். தனிமை தான் நம்மை ஆள்கிறது என்று சொல்வதுண்டு.
“எழுதுவதைவிட,
எழுதாமை உயர்ந்தது,
ஓசையைவிட ஒடுக்கம் உயர்ந்தது,
மரத்தைவிட,
விதை உயர்ந்தது,
வெளிப்படுவதைவிட,
உட்படுவது உயர்ந்தது”
---
“வாழ்வும்
செயலும் கலை
நாமும் கொக்கு
சிலவேளை மீனழகு
பலவேளை நிழலகா
இவருடைய நரைத்துப் போன நீண்ட தாடியும், மீசையும் கூட்டங்களில் ஈர்த்தது. ரபீந்திரநாத் தாகூர் போல பழைய கால ஓட்டு வீட்டில் உட்கார்ந்து காலை ஆட்டிக் கொண்டிருக்கும் அவர் சம்பாஷனைகளை நடத்தி கொண்டிருப்பார். இதுவே பார்த்து ரசிக்க தோன்றம். பேசிக்கொண்டே இருப்பார். பிறகு ஒரு நீண்ட மௌனம். அழுத்தமான ஆசாமி. எதிலும் பிடிபடாமல் இருப்பார்.

காதம்பரி வெங்கட்ராமன். ஓய்வு பெற்ற கருவூல அதிகாரி, எழுத்தாளர், வாசகர், மெளனியை ஆசானாக கொண்டு தன்னுடைய இலக்கிய களப்பணிகளை தொடங்கியவர். இவர் தான் ஏழ்மையில் வாடிய கரிச்சான் குஞ்சுக்கு ஓய்வூதியம் கிடைக்காமல் இருந்ததை கிடைக்க செய்தவர். குடும்ப வாழ்க்கையில் தகராறு இருந்த நிலையிலும் எழுதுவதில் ஆர்வம் செலுத்தினார். வாழ்க்கை என்னை அடித்து போடுகிறது. அதில் இருந்து மீள முடியவில்லை என்று கூறுவார். விரக்தியானது என்று சதா யோசனை செய்து கொண்டே தனது வாழ்க்கையை கழித்தார். தஞ்சை பாரதி சங்கத்தின் ஆஸ்தான பேச்சாளர். மணிக்கணக்கான தியானம் செய்வார். ருத்திராஷங்களை உருட்டிக் கொண்டிருப்பார். முதலில் இறை மறுப்பாளராக இருந்தார். பெரியாரை யோகி என்பார்.

தஞ்சை பிரகாஷ் ஒரு ஊர் சுற்றி. இலக்கிய கர்த்தாக்களை கொண்டாடியவர். இலக்கியம் அனைத்து தளத்துக்கும் செல்லவேண்டுமென்று குறியாக இருந்தவர். யாரையும் உபசரித்து தன்னுடைய விடுதியில் தங்கவைத்து பசி பிணி நீக்கும் மருத்துவராக பிரகாஷ் இருந்தார். மீனின் சிறகுகள், மிஷன் தெரு, கரமுண்டார்வூடு போன்ற படைப்புகளில் ஒரு வித்தியாசமாக மாற்றாக யாரும் தொடாத பகுதிகளை சுற்றி காட்டுவார்.

நகுலன் என்ற எழுத்து மேதைக்குள் நாங்கள் ஆட்பட்டதும் இவ்வாறு தான். அப்புறம் பிரமிள், ஆத்மாநாம், இன்றுவரை எங்களை இவர்கள் அலைக்கழித்து கொண்டிருப்பதும் இதானல் தான். க.நா.ச, .பிச்சமூர்த்தி, எம்.வி.வி.புதுமைப்பித்தன், தி.ஜானகிராமன், கு.ப.ரா, கரிச்சான்குஞ்சு, ஆர். சண்முகசுந்தரம், ந. சிதம்பர சுப்ரமணியன் போன்றவர்களை எப்படி அணுக வேண்டும் என்று காட்டுவார்.

ஏற்கனவே எங்கள் கரிசல் இலக்கியத்தின் ஆளுமை கு. அழகிரி சாமியை பற்றி பலசமயம் பதிவு செய்துள்ளேன்.

ந.விச்வநாதனின் புனைவு வெளியில் தி.சு. செல்லப்பாவில் இருந்து தஞ்சை பிரகாஷ் வரை இந்த நூல் எப்படியெல்லாம் தனிப்பட்ட வாழ்க்கையில் ரணங்கள், சச்சரவுகள் இருந்தாலும், அற்புதமாக படைப்புகளை படைத்த இந்த ஆளுமைகளின் புகழை நாம் மேலும் அறிய செய்யவேண்டியது அடிப்படை பணியாகும்.

#புனைவு_வெளி
#தமிழ்_படைப்பாளிகள்
#KSRadharkrishnanPostings
#KSRPostings
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
08-11-2017

No comments:

Post a Comment

நீங்கள் நீங்களாகவே இருக்கணும் …குறை ஒன்றும் இல்லை

ஏறக்குறைய மானவர் பருவத்தில் 17 வயதில் அரசியல  தொடர்பு ஏற்பட்டது. என்னுடைய நண்பர்கள் கிரிக்கெட், ஃபுட்பால்,வாலிபால் என விளையாடிக் கொண்டிருக்க...