Thursday, November 2, 2017

யாரும் கண்டுகொள்ளாத தமிழகம் 61

நவம்பர் 1ம் தேதி, இன்றைய தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் 1956 இல் உதயமானது.
நேற்றைக்கு (நவம்பர் 1) கேரளா மக்கள் ‘நவகேரளம்’ என்று கொண்டாடுகிறார்கள். இதற்கு பிரதமர் மோடியும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
கர்நாடகம் ‘அகண்ட கர்நாடகம்’ ஆக ராஜ்ய உற்சவமாக நேற்று விழா கொண்டாடியது.முதல்வர் சித்தராமையா கலந்து கொண்ட நிகழ்ச்சி சிறப்பாக நடந்துள்ளது. அந்த மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் விழா எடுக்கப்பட்டுள்ளன. நடிகை காஞ்சனா போன்ற திரையுலக ஆளுமைகளும், இலக்கிய ஆளுமைகளும் கௌரவிக்கப்பட்டனர்.
விசால ஆந்திரம் என்று ஆந்திரம் நேற்று கொண்டாடி உள்ளது. மகாராஷ்டிரம் ‘சம்யுக்த மகாராஷ்டிரம்’ என்று கொண்டாடியுள்ளது, குஜராத்தும் ‘மகா குஜராத்’ என்று கொண்டாடியுள்ளது. ஆனால் தமிழகத்தில் மட்டும் நேற்று கொண்டாட்டங்கள் இல்லை.

இது போன்ற நிகழ்ச்சிகளை 2006 ம் ஆண்டிலிருந்து ஒரு விழாவாக எடுத்தேன் என்ற முறையிலும், நேற்றைக்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் சார்பில் மயிலை பாலு தலைமையில் ‘மொழிவழி மாநிலம் அமைந்த நாள்’ நிகழ்ச்சி நடைபெற்றது. அந்நிகழ்ச்சியில் நானும், நண்பர் ஆழிசெந்தில்நாதனும் கலந்து கொண்டிருந்தோம். மயிலை பாலு மட்டுமே தமிழகத்தில் ஒரு விழா எடுத்திருந்தார். அதுவும் மழையின் காரணமாக பலர் வர முடியாத நிலையில் அந்த நிகழ்ச்சி சிறப்பாக நடந்தேறியது.
தமிழ் மண்ணின் மீது நமக்குள்ள அக்கறையை பாருங்கள். நம் முன்னேற்ற பாதையில் தான் செல்கின்றோமா? 

மாலைகளை போடுகிறோம் பலருக்கு. மண்ணிருந்தால் தானே மாலைகள் போட முடியும். மண்ணை கொண்டாடுவது தான் முக்கியம். அடிப்படையும் கூட.
இப்படி வரலாற்று ரீதியான நிகழ்வுகளை கொண்டாடலாம், சில பகுதிகளை நாம் இழந்ததால் விழிப்புணர்வு நாளாகவும் ஏற்பாடு செய்யலாம். எதையும் சிந்திக்காமல், இந்த நிகழ்வை கவனிக்காமல் இருக்கிறோமே; எப்படி தமிழ்நாடு முன்னேற்ற பாதையில் செல்லும். எதிலும் போலி பாசாங்கு, பிம்ப அரசியலை நம்பினால் ஒன்றும் செய்ய முடியாது. காவிரியில் தண்ணீர் வராது, முல்லை பெரியாறில் தண்ணீர் வராது, நீராதாரங்கள் பாதிக்கப்படும், மீனவர் சுடப்படுவான், விவசாயிகளுக்கு புனர்ஜென்மம் கிடைப்பது சிரமம். நம்முடைய உரிமைகளையே நினைத்து பார்க்க நேரமில்லாத நமக்கு நாம் எப்படி நம்முடைய பிரச்சினைகள் தீரும். தமிழகம் என்ற மண் உதயமானது கூட நினைவில் இல்லாமல் வேறு விசயத்தை பேசிக்கொண்டு காலத்தை போக்கி கொண்டிருக்கிறோமே.
விதியே! விதியே!! தமிழ் சாதியே!!!
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
02-11-2017

No comments:

Post a Comment

Confidence means believing in yourself, feeling comfortable with who you are, and recognizing that you have worth.

  Confidence means believing in yourself, feeling comfortable with who you are, and recognizing that you have worth. Believing in yourself, ...