படத்தில் உள்ள சென்னையின் அடையாளமாக இருக்கும் ‘ஹிக்கின் பாதம்ஸ்’ புத்தக நிலையம். இது 1844ல் கட்டப்பட்டு, அமால்கமேசன் நிறுவனம் நடத்தி வருகிறது. பேரறிஞர் அண்ணா, காமராஜர், இராஜாஜி முதல் தலைவர் கலைஞர் வரை தமிழகத்தின் முக்கிய ஆளுமைகளின் காலடி பட்ட இடம்.
அண்ணா சாலையில் பேரணிகள் நடக்கும் போது காமராஜர் போன்ற பல்வேறு தலைவர்கள் அந்த கட்டிடத்தின் மேலடுக்கில் நின்று காண்பார்கள். நானும் ஒரு பேரணியை அங்கிருந்து பார்த்த நினைவு எனக்கு இருக்கிறது.
கடந்த 6 மாத காலமாக இந்த கட்டிடத்தின் மேல் செடிகள் வளர்ந்து கொண்டிருக்கிறது. இதை நீக்குவார்கள் என்று பார்த்து கொண்டிருந்தேன். ஆனால் இன்று வரை நிர்வாகத்தினர் கண்டுகொள்ளவில்லை. கோப மிகுதியால் இன்று நிறுவனத்திடமே இதுகுறித்து காட்டமாக முறையிட்டேன்.
இப்போது மட்டும் அமால்கமேசன் நிறுவனர் திரு. அனந்தராமகிருஷ்ணன் அவர்கள் பார்த்திருந்தால் இதுபோன்றவற்றை பொறுத்துக் கொள்ளமாட்டார். லாபநோக்கில்லாமல் மக்கள் நூல்களை படிக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்தில் தொடங்கப்பட்ட இந்த பாரம்பரியமிக்க ஹிக்கின்பாதம்ஸ் கட்டிடத்தை பராமரிக்க கூட முடியவில்லையே என்று வருத்தமாக உள்ளது.
இதே நிலைமையில்தான் சென்னை சட்டக் கல்லூரியின் பழமை வாய்ந்த
கட்டிடமும் உள்ளது.
------
இதே போல போர் நினைவுச் சின்னம், அண்ணா மேம்பாலம் போன்ற முக்கிய இடங்களில் செடிகள் வளர்ந்து அந்த கட்டிடத்தை சேதமடையச் செய்கிறது. இதை கூட கவனிக்காமல் அரசு நிர்வாகம் இருக்கிறது.
அண்ணா சாலையில் உள்ள ஐசிஐசிஐ வங்கியின் பெயர் பலகையில் இன்றும் மவுன்ட் ரோடு என்றே எழுதப்பட்டுள்ளது. இது குறித்தும் பலமுறை முறையிடப்பட்டுவிட்டது.
வருடக்கணக்கில் இந்த நிலைமை அப்படியே இருக்கின்றன. இதையும் பார்த்து கொண்டு அந்த சாலைகளில் வேகமாக சென்று கொண்டிருக்கிறோம்.
நமக்கே வெட்கமாக இல்லையா.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
09/11/2017
இது குறித்தான தனிப்பதிவை சிலகாலம் முன்பே செய்திருந்தேன். அது உங்கள் பார்வைக்கு,
War Memorial / போர் நினைவுச் சின்னத்தின் நிலையைப் பாரீர்.
---------------------------------
சென்னை தலைமைச் செயலகம் அருகில் கடற்கரை, காமராஜர் சாலையில் போர் நினைவுச் சின்னம் (War Memorial) சென்னை மாநகரின் அடையாளமாக விளங்குகின்றது. இதற்கு 70 ஆண்டு வரலாறு உண்டு. நேற்றைக்கு வழக்கறிஞர்களாக இருந்த சகாக்கள் இன்று உயர்நீதிமன்ற நீதிபதிகள். என் தாயாரின் மறைவைக் குறித்து துக்கம் விசாரிக்க வீட்டிற்கு வந்திருந்தனர். அப்போது பழைய நட்பு ரீதியான விஷயங்கள் எல்லாம் பேசிக் கொண்டிருந்த போது சென்னை கடற்கரை போர் நினைவுச் சின்ன கல் சுவர்களில் செடிகள் வளர்ந்துள்ளன. நீண்ட நாட்களாக கண்ணில்படுகிறது. அதை அகற்ற யாருக்கும் மனம் வரவில்லையோ என்று சொன்னார்கள். இன்றைக்கு அந்த வழியாக நான் பயணிக்கும் போது இதை நேரில் கண்டேன்.
இந்த மூன்று படங்களில் சிகப்பு வளையமிட்டு காட்டப்பட்டுள்ள இடங்களில் எல்லாம் தேவையற்ற செடிகள் வளர்ந்துள்ளதை வெட்டி அப்புறப்படுத்த யாருக்கும் மனம் வரவில்லையே என்று வருத்தத்தை தந்தது. நாட்டின் விடுதலைப் பெருநாள் சமீபத்தில் தான் முடிந்துள்ளது. அந்த விழாவின் போது கடற்கரைச் சாலை சீர்படுத்துவதுண்டு. அப்படி செய்கையில் இது கூட கண்ணில் படவில்லையா என்பது தான் நமது வினா.
அமைச்சர்கள், ஐ.ஏ.எஸ் அதிகாரிகள் போன்ற முக்கியப் பிரமுகர்கள் செல்லும்போது அவர்களின் கண்ணில் இது படுவதில்லையா? அப்படி கண்ணில் பட்டாலும் இதை விட வேறு முக்கிய அலுவல்கள் இருக்கின்றனவோ என்று நினைக்கத் தோன்றுகிறது.
கடந்த 2014ல் இதே போன்று அண்ணா சாலையில் உள்ள அண்ணா மேம்பாலத்தில் செடிகள் வளர்ந்து பாலத்தை பாதிக்கும் என்று புகைப்படம் எடுத்து முகநூலில் பதிவும் செய்திருந்தேன். அதை குறித்து மாநகராட்சிக்கு கடிதம் அனுப்பிய பின்பு, நீண்டகாலம் கழித்து அந்த செடிகள் காணாமல் போனது. சிங்காரச் சென்னை என்பது இது தான்.
#KSRadhakrishnanPostings
#KSRPostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
No comments:
Post a Comment