தமிழகத்தில், மணல் குவாரிகளை அரசே நிர்வகித்து நேரடி மணல் விற்பனையில் அரசே ஈடுபட்டாலும், மீண்டும் மணல் மாபியாக்களின் அட்டகாசம் தலைதூக்கியுள்ளது.
தமிழகத்தில், பாலாறு, காவிரி, வைகை, தாமிரபரணி ஆற்றுப் படுகைகளில் முறைகேடாக பல சதுரமைல்களில் மணல் அள்ளப்படுவதாக கூறி ஆற்றையே சுரண்டுவதாக அடுக்கடுக்கான புகார்கள் வந்ததையடுத்து அங்கு செயல்பட்டுவந்த மணல் குவாரிகளுக்கு நீதிமன்றம் தடைவிதித்தது.
எனினும் மணல் தட்டுப்பாட்டை காரணம் காட்டி 30 இடங்களில் குவாரிகள் துவங்க மாநில சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையத்திடம் அரசு அனுமதி கோரியது. பொதுப்பணித்துறையின் மேற்பார்வையின் கீழ் விழுப்புரம், கடலூர், வேலூர், நாகை, இராமநாதபுரம் ஆகிய இடங்களில் 8 மணல் குவாரிகள் இணையதளம் மூலம் முன்பதிவு செய்து அனுமதி கிடைத்தபின் மணல் வினியோகிக்கும் முறையில் நேரடி குவாரிகளாக திறக்கப்பட்டன. ஒவ்வொரு குவாரியிலும் தலா 150 லோடு மணல் மட்டுமே வழங்கப்படுகிறது.
இது தமிழகத்தின் மணல் தேவையை பூர்த்தி செய்யாததால், வெளிச்சந்தையில் ரூ. 13,000த்திற்கு விற்கப்பட்ட மணல் அதிரடியாக ரூ. 30,000த்திற்கு விற்கப்படுகிறது. இந்திலையில் உயர்நீதிமன்றம் தடைசெய்த பகுதிகளில் விதிமுறைகளை மீறி சட்டவிரோதமாக மணல் குவாரிகள் செயல்படுவதாக புகார் எழுந்துள்ளது. பொதுப் பணித்துறை கட்டுப்பாட்டில் உள்ள 8 குவாரிகளில் இணையதளம் வாயிலாக விண்ணப்பித்தாலும் கூட, ஆளுங்கட்சி முக்கிய பிரமுகர்களின் தலையீட்டால் உள்ளூர் நபர்களுக்கே முன்னுரிமை வழங்கப்படுவதாகவும், குவாரிகளின் எண்ணிக்கையை அதிகரிக்க அரசும் போதிய முயற்சிகளை எடுக்கவில்லை.
இந்த சூழலை பயன்படுத்தி மணல் மாபியாக்களின் அட்டகாசம் மீண்டும் தலைதூக்க ஆரம்பித்துள்ளது. உச்ச நீதிமன்றம், உயர் நீதிமன்றம் தடைவிதித்த போது மூடப்பட்ட 14 குவாரிகளில் மீண்டும் மணல் கொள்ளையை துவங்கியுள்ளது. தினந்தோறும் சுமார் 150 முதல் 200 லோடுகள் வரை அனைத்து குவாரிகளிலும் சேர்த்து சுமார் 3000 லோடுகள் வரை போலி இரசீதுகளை பயன்படுத்தி கொள்ளையடிக்கப்பட்டு அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் உள்ளது.
இரண்டு யூனிட் மணல் 10,000 ரூபாய்க்கு பெறப்பட்டு அதை 30,000 ரூபாய்க்கு விற்கும் செயலும் அரங்கேறுகிறது. காவல் துறையினர் சில லாரிகளை மட்டும் கைப்பற்றியதாக கணக்கு காண்பித்துவிட்டு மணல் கொள்ளையை கண்டும் காணாமல் உள்ளனர். மணல் கொள்ளையில் ஈடுபடுவோர் ஆளுங்கட்சி முக்கிய பிரமுகர்கள் மட்டுமின்றி உள்ளூர் கட்சி நிர்வாகிகளுக்கும், பொதுப்பணித்து அதிகாரிகளுக்கும் போதியளவில் ‘கப்பம்’ கட்டிவிடுதால் அவர்கள் கமுக்கமாக உள்ளனர் என சமூக ஆர்வலர்கள் கொதிக்கிறார்கள்.
அரசு இணையதள வாயிலாக விற்பனையை செய்தாலும் அதை முடக்கி மணல் கொள்ளையில் ஈடுபடுவதை தடுக்க சிறப்பு படையை அமைத்து கண்காணிக்க வேண்டும் என்பதே மக்களின் கோரிக்கையாக உள்ளது.
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
21-11-2017
No comments:
Post a Comment