எங்கள் கரிசல் மண்ணின் மேலாண்மை
கரிசல் மண்ணின் வாடாமலர்
சாகித்திய அகாடமி விருது பெற்ற படைப்பாளி மேலாண்மை பொன்னுசாமி காலமானார். என் கிராமத்திற்கு அருகேயுள்ள மேலான் மறைநாட்டில் பிறந்து சிறு பலசரக்கு கடை வைத்து ஆரம்ப பள்ளியில் பயின்று இலக்கியத்தினை கற்றவர்.
எனக்கு 1969 ல் இருந்து இவருடன் நட்புடன் அறிமுகம். என் கிராமத்திற்கு அருகேயுள்ள திருவேங்கடத்தில் சந்தித்து கொள்வோம். முடிதிருத்தும் கடை (சலூன்) வைத்திருந்த சர்க்கரை அந்த வட்டாரத்தின் கம்யூனிஸ்ட் கட்சியின் பொறுப்பாளர். அவர் கடையில் தான் தீக்கதிர் போன்ற பத்திரிக்கைகள் கிடைக்கும். அங்கு அடிக்கடி மேலாண்மை பொன்னுசாமி போன்றோர் வந்து செல்வதுண்டு.
திருவேங்கடத்தில் நாங்கள் பேசினால் நேரம் போவது கூட தெரியாது. எனக்கு நீண்ட நெடுங்காலமாக 48 வருடமாக நட்பு பாராட்டியவர். என்னுடைய பல நூல் வெளியீட்டு விழாக்களில் கலந்து கொண்டவர். வானம் பார்த்த எங்கள் கரிசல் பூமியில் தீப்பெட்டி தொழிலில் உள்ள சிரமங்களையும் அந்த வட்டாரத்தில் வாழ்ந்த வெள்ளந்தி விவசாயிகளின் பாடுகளைப்ப பற்றி கி.ராஜநாராயணனைப் போல தன் படைப்புகளின் மூலம் எடுத்து சொன்னவர். கி.ரா வை நேசித்தவர். நான் நடத்தும் கதைசொல்லியில் பலமுறை தன்னுடைய படைப்புகளை வழங்கியவர்.
கரிசல் மண்ணில் ஸ்ரீவில்லிபுத்தூர், ராஜபாளையம், சிவகாசி, சாத்தூர், சங்கரன்கோவில், திருவேங்கடம், கோவில்பட்டி பகுதிகளை கதைத்தளங்களாக படைப்புத் தளங்களாக வைத்து எழுதிய எங்கள் மண்ணின் மைந்தர். எளிமையானவர். எங்களுடைய கரிசல் மண் பாஷையை நேர்மையாக பேசக்கூடியவர். பொதுவுடைமைவாதி. சமீபகாலமாக உடல்நலமின்றி சென்னையில் அவருடைய மகன் வீட்டில் தங்கியிருந்தார்.
நான் கோவில்பட்டி சட்டமன்ற தொகுதியில் போட்டியிட்டு தோற்றபோது தொலைபேசியிலேயே தேர்தல் முடிவுகளைக் கேட்டு கண் கலங்கி ஆறுதல்படுத்தியவர். அதற்கு பிறகு பார்க்கும் போதெல்லாம் உங்களைப் போன்றவர்கள் அரசியலில் மக்கள் பிரதிநிதிகளாக செல்ல முடியவில்லை எனில் பிறகு அரசியலில் என்ன தரம் இருக்கும் என்று மன வேதனையை வெளிப்படுத்தியவர்.
இளவயதிலேயே தாயையும் இழந்து அவரும் அவருடைய தம்பி கரிகாலனும் வாழ்வோடு மல்லுக்கட்டி வறுமையைத் தங்கள் மனபலத்தால் வென்று தம்மை நிலை நிறுத்திக்கொண்டவர்கள்.
வறிய பொருளாதாரச் சூழல் காரணமாக ஐந்தாம் வகுப்புக்கு மேல் அவரால் பள்ளிக்குச்செல்லமுடியவில்லை.குழந்தைஉழைப்பாளியாக வாழ்வை எதிர்கொண்ட அவர் தஞ்சாவூர் உள்ளிட்ட பல பகுதிகளுக்கும் கடலைமிட்டாய் விற்பனைசெய்பவராகத் துவங்கி சிறு சிறு தொழில்கள் செய்து பின்னர் உள்ளூரிலேயே சின்னப் பெட்டிக்கடை ஒன்றைத் துவங்கி தம்பியுடன் இணைந்து வாழ்க்கைப் போராட்டத்தைத் தொடர்ந்தார்.
கல்வி மறுக்கப்பட்ட குழந்தையாக வளர்ந்த அவருக்குப் புத்தகங்களின் மீது தீராக்காதல்இருந்த்து.சிறுகதை
களையும் பத்துக்கு மேற்பட்ட நாவல்களையும்கட்டுரைத்தொகுப்புகளையும் வெளியிட்டார்.கல்கி,ஆனந்த விகடன் போன்ற வெகுசன இதழ்களில் கதைகளும் தொடர்கதைகளும் எழுதினார் .
• 2007இல் சாகித்திய அகாதமி விருது
• கல்கி சிறுகதை போட்டியில் இரண்டு முறை முதல் பரிசு
• தமிழ் அரசி சிறுகதை போட்டியில் முதல் பரிசு
• ஆனந்த விகடன் பவழ விழா ஆண்டில் முத்திரை பரிசுகள் உள்ளிட்ட பல பரிசுகள்
• மனப் பூ தொகுப்புக்கு தமிழக அரசின் இலக்கிய விருது
• வட அமெரிக்கத் தமிழ் சங்கப் பேரவையின் "மாட்சிமைப் பரிசு" என்ற கேடயம்.
• உயிர்க் காற்று தொகுப்புக்கு பாரத ஸ்டேட் வங்கியின் இலக்கிய விருது
என அவர் வாழும் காலத்திலேயே மதிப்பும் பாராட்டும் பெற்ற படைப்பாளி.
சிபிகள்,பூக்காத மாலை,பூச்சுமை,மானுடப் பிரவாகம்,காகிதம்,கணக்கு,மனப் பூ,தழும்பு, தாய்மதி, உயிர்க்காற்று,என்கனா,மனப்பூ,ஒருமாலைப் பூத்து வரும்,அன்பூவலம்,வெண்பூமனம், மானாவாரிப்பூ, இராசாத்தி போன்ற சிறுகதைத் தொகுப்புகளும் ஈஸ்வர..,பாசத்தீ,தழும்பு,கோடுகள் போன்ற குறுநாவல்களும் முற்றுகை,அச்சமே நரகம்,ஆகாயச்சிறகுகள்,மின்சாரப்பூ,ஊர்மண்,முழுநிலா உள்ளிட்ட பல நாவல்களும் சிறுகதைப்படைப்பின் உள்விவகாரங்கள் போன்ர கட்டுரைநூல்களும் என வளமான பங்களிப்பு அவருடையது.
அவருடைய படைப்புகள் எல்லாமே எளிய கரிசல்காட்டு உழைப்பாளி மக்களின் வாழ்வையும் வறுமையையும் அதன் அழகுகளையும் நுட்பங்களையும் பற்றிப் பேசியவையே.வியர்வையின் வாசம் மணக்கும் படைப்புகளுக்குச் சொந்தக்காரர்தான் மேலாண்மை பொன்னுச்சாமி.
அன்புக்குரிய தோழர் மேலாண்மை பொன்னுசாமியின் பணி இலக்கிய வரலாற்று பக்கங்களில் என்றென்றும் நிலைத்திருக்கும். அவரை பிரிந்து வாடும் அவருடைய குடும்பத்தாருக்கும், நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கல்.
#மேலாண்மைபொன்னுசாமி
#கரிசல்இலக்கியம்
Rajapalayam Sattur
#மேலாண்மை_பொன்னுசாமி
#KSRadhakrishnanPostings
#KSRPostings
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
30-10-2017
No comments:
Post a Comment