Tuesday, November 14, 2017

குமரி அனந்தன்

குமரி அனந்தன் ராயப்பேட்டை அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு  சிகிச்சை பெற்று வருவதாக ஊடகங்கள் வழியாக  பார்த்தேன். 







சற்று வருத்தமாக இருந்தது. இருப்பினும் காமராசரின் சீடர் எளிமையாக இருப்பதின் மூலமே காமராசருக்கு பெருமை சேர்க்க முடியும் என நினைக்கின்றாரா என தெரியவில்லை.  

காங்கிரஸ் கட்சியின் தலைவராக , நாடாளுமன்ற உறுப்பினராக, சட்டமன்ற உறுப்பினராக கடமையாற்றிய போதிலும்.தியாகி பென்ஷன் ரூபாய் 35,000 பெற்று, அதில் தன்னை கவனித்துக் கொள்கின்றார்.  குமரி அனந்தன் ஒருகாலத்தில் எவ்வளவு செல்வாக்குடன் இருந்தார் என்பதை நினைத்துப் பார்க்கின்றேன் . பெருந்தலைவர் காமராசருடன் நெருங்கி இருந்த ஒருவர். 

நெடுமாறன், குமரி ஆனந்தன், சபாநாயகர் செல்லபாண்டியன், , பொன்னப்ப நாடார், திண்டிவனம் ராமமூர்த்தி, டி.என்.அனந்தநாயகி, மகாதேவன்பிள்ளை, ஏ.பி.சி.வீரபாகு, துளசி அய்யா வாண்டையார், செங்காளியப்பன்,  , செங்கோட்டு வேலன், ராமசாமி உடையார்,,  காளியண்ணன்,பூவராகவன், லட்சுமிபதி ராஜூ, மணிவர்மா, விநாயகமூர்த்தி, பாடாலாசியர் நேதாஜி, சிரோன்மணி, ஏ.கே.தாஸ், உ.சுப்ரமணியம், அப்துல்காதர், தமிழருவி மணியன், பழ.கருப்பையா என பல கழக முன்னோடிகள் சத்தியமூர்த்தி பவனில் என பலர் செயல்பட்டதை பார்த்தது உண்டு. 

குமரி அனந்தன் அன்று இளைஞர் காங்கிரஸ் தலைவர் . நெடுமாறன் தமிழ்நாடு காங்கிரஸ்பொதுச்செயலாளர் மற்றும் ஓன்று பட்டமதுரை மாவட்ட காங்கிரஸ் தலைவர் அப்போது.

மூப்பனார் அவர்களை கூட தஞ்சை மாவட்ட காங்கிரஸ் கமிட்டியின் தலைவராக இருந்தார். சிவாஜி கணேசன் அதிகமாக சத்தியமூர்த்தி பவன் வரமாட்டார்.  அப்போதும் நெடுமாறன், குமரி அனந்தன் என இரு கோஷ்டிகளாக செயலாற்றினர். நெடுமாறன் களப்பணியாளர். குமரி ஆனந்தன் நல்ல  பேச்சாளர்.  

நிஜவீரப்பா, தெள்ளூர் தர்மராஜன், ஆலடி சங்கரைய்யா,முன்னாள் அமைச்சர்  புலவர் இந்திரகுமாரி, எர்ன்டஸ் பாலு போன்றோர் குமரி அனந்தனுடன் நெருக்கமாக பணியாற்றினர். குமரி அனந்தனின் மாமனார் மிகவும் வசதியான வணிக குழுமத்தின் உரிமையாளர். குமரி அனந்தன் Chevrolet கார் வைத்திருந்தார். பாக்கெட்டில் சிறிய சீப்பு ஒன்று வைத்துக் கொண்டு அடிக்கடி தலைசீவும் வழக்கம் கொண்டவர்.  குமரிப்பேனா எனும் வணிக நிறுவனம் நடத்தி வந்தார்.  

தலைவராக இருந்த மத்திய முன்னாள் அமைச்சர் பா.ராமச்சந்திரன் உடன் கருத்துமாற்றம் ஏற்பட்டு காந்தி காமராஜ் தேசிய காங்கிரஸ் எனும் கட்சியை மூர்மார்கெட் திடலில்  தொடங்கினார். ஆரம்பத்தில்  சாத்தூர் மற்றும் மதுரையில் டுடோரியல் காலேஜ் எனப்படும் தனியார் பயிற்சிக் கல்லூரியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். 

பிரதமர் நந்தா , அச்சுதபட்டவர்தன், சுரேந்திரமோகன், கக்கன் ஆகியோர் எளிமையாக வாழ்ந்தனர். கக்கன் மதுரை அரசு பொது மருத்துவமனையில் தன்னை அமைச்சர் எனக் காட்டிக் கொள்ளாமல் அனுமதிப்பெற்று தரையில் பாய் போட்டு படுத்து சிகிச்சைப் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அத்தகையவர்களின் வரலாற்றை அறிந்த குமரி அனந்தன் இவ்வாறாக எளிமையான முறையில் சிகிச்சை பெற்று வருவது எவ்வித ஆச்சர்யமும் இல்லை. முழுவதும் குணமாகி  விரைவில்  வீடு திரும்ப விழைகின்றேன். 

#குமரிஆனந்தன்
#விரைவில்குணமாகவேண்டும்.
#KSRadhakrishnanpostings 
#KSRpostings
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
14-11-2017

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...