Sunday, November 19, 2017

உச்ச நீதிமன்றத்திலும்...........................


ஒடிஷாவை சேர்ந்த பிரசாத் கல்வி அறக்கட்டளையின் மருத்துவ கல்லூரிக்கு இந்திய மருத்துவ கவுன்சில் அங்கீகாரம் அளிக்க மறுத்தது. இதுதொடர்பாக அந்த அறக்கட்டளை ஒடிசா நீதிமன்றத்தை அணுகியது. இந்த வழக்கில் தங்களுக்கு சாதகமான தீர்ப்பை பெற விஸ்வநாத் அகர்வாலா என்ற இடைத்தரகரை அறக்கட்டளை நிர்வாகிகள் அணுகியதாக கூறப்பட்டது. மேலும் இந்த வழக்கில் அறக்கட்டளைக்கு சாதகமாக தீர்ப்பை பெற்றுத் தர ஒடிசா உயர்நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தை சில நீதிபதிகளின் பெயரில் விஸ்வநாத் அகர்வாலா பெருந்தொகையை பெற்றதாகக் கூறப்படுகிறது.
இந்த விவகாரம் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்தி, ஒடிசா உயர்நீதிமன்ற முன்னாள் நீதிபதி இஸ்ரத் மஸ்டூர் குட்டூசி, இடைத்தரகர் விஸ்வநாத் அகர்வாலா, பிரசாத் கல்வி அறக்கட்டளை நிர்வாகிகள் மீது கடந்த செப்டம்பர் 19-ம் தேதி வழக்கு பதிவு செய்தது. இதன் விளைவாக முன்னாள் நீதிபதி குட்டூசி கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார்.
நீதிபதிகள் பெயரில் லஞ்சம் பெறப்பட்ட விவகாரம் தொடர்பாக சிஜேஏஆர் என்ற தன்னார்வ தொண்டு நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 8-ம் தேதி மனு தாக்கல் செய்தது. மூத்த வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண் இந்த மனுவை தாக்கல் செய்தார். இம்மனு நீதிபதி செலமேஸ்வர் அமர்வு முன்பு 10-ம் தேதி விசாரணைக்கு வரும் என்று தெரிவிக்கப்பட்டது.
இதே விவகாரம் தொடர்பாக காமினி ஜெய்ஸ்வால் என்ற வழக்கறிஞர் உச்ச நீதிமன்றத்தில் கடந்த 9-ம் தேதி மனு தாக்கல் செய்தார். அவரது சார்பில் வழக்கறிஞர் துஷ்யந்த் தவே ஆஜராகி அவசர வழக்காக விசாரிக்க வேண்டும் என்று கோரினார். இதை ஏற்று நீதிபதி செலமேஸ்வர், நீதிபதி அப்துல் நசீர் அடங்கிய அமர்வு அன்றைய தினமே விசாரணை நடத்தியது. இந்த வழக்கை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற செலமேஸ்வர் அமர்வு உத்தரவிட்டது.
இதனிடையே சிஜேஏஆர் தொண்டு நிறுவனம் தொடர்ந்த வழக்கு நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் அமர்வு முன்பு நேற்றுமுன்தினம் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் கூறியபோது, “இந்த விவகாரம் மிகவும் முக்கியமானது. நீதித்துறையை யாரும் களங்கப்படுத்த அனுமதிக்க முடியாது. எனினும் ஒரே விவகாரம் தொடர்பாக இரு வழக்குகள் தொடரப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறதுஎன்று தெரிவித்தனர்.
இதற்கு வழக்கறிஞர் பிரசாந்த் பூஷண்,நாங்கள் தாக்கல் செய்த மனு நீதிபதி செலமேஸ்வர் அமர்வு முன்பு விசாரணைக்கு வர வேண்டும். ஆனால் தலைமை நீதிபதியின் உத்தரவின்பேரில் உங்கள் (நீதிபதி ஏ.கே.சிக்ரி) தலைமையிலான அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கையில் தலைமை நீதிபதி மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எனவே தலைமை நீதிபதி, வழக்கு விசாரணையில் இருந்து விலகியிருக்க வேண்டும். அவரது உத்தரவின்பேரில் எங்களது வழக்கு வேறு அமர்வுக்கு மாற்றப்பட்டது மிகுந்த வேதனையளிக்கிறது.என்று தெரிவித்தார்.
இறுதியில் வழக்கறிஞர் காமினி ஜெய்ஸ்வால் வழக்குடன் சிஜேஏஆர் வழக்கையும் சேர்த்து விசாரிக்க நீதிபதிகள் ஏ.கே.சிக்ரி, அசோக் பூஷண் உத்தரவிட்டனர்.
இந்நிலையில் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில் நீதிபதிகள் ஆர்.கே.அகர்வால், அருண் மிஸ்ரா, அமிதவா ராய், ஏ.எம்.கான்வில்கர் அடங்கிய அரசியல் சாசன அமர்வு நேற்றுமுன்தினம் மாலை அவசரமாக கூடியது. அப்போது, நீதிபதிகள் பெயரில் லஞ்சம் பெறப்பட்ட வழக்கை 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வுக்கு மாற்ற வேண்டும் என்று நீதிபதி செலமேஸ்வர் பிறப்பித்த உத்தரவை தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா ரத்து செய்தார்.
இதுதொடர்பாக தலைமை நீதிபதி தலைமையிலான அமர்வு கூறியபோது, வழக்குகளை எந்த அமர்வு விசாரிப்பது என்பதை தலைமை நீதிபதிதான் முடிவு செய்ய வேண்டும். உச்ச நீதிமன்றத்தின் அனைத்து நடவடிக்கைகளுக்கும் அவரே பொறுப்பாளர், அவரே தலைவர் என்று தெரிவித்தனர்.
இந்த வழக்கு விசாரணையின்போது தலைமை நீதிபதி தீபக் மிஸ்ராவுக்கும் வழக்கறிஞர் பிரசாந்த் பூஷணுக்கும் இடையே கடும் வாதம் நடைபெற்றது.
தலைமை நீதிபதி, நீதிபதிகள் பெயரில் லஞ்சம் பெறப்பட்ட வழக்கின் முதல் தகவல் அறிக்கையில் எந்த இடத்தில் என் மீது குற்றம் சாட்டப்பட்டுள்ளஎன்று கேள்வி எழுப்பினார். அதற்கு பிரசாந்த் பூஷண் குறிப்பிட்ட பகுதியை வாசித்தார். இதற்கு பதிலளித்த தலைமை நீதிபதி, “இப்போதே உங்கள் மீது அவமதிப்பு வழக்கு தொடர முகாந்திரம் இருக்கிறதுஎன்றார். இந்த வாதத்தின்போது பிரசாந்த் பூஷண் பாதி விசாரணையிலேயே நீதிமன்றத்தில் இருந்து வெளியேறினார்.
இவ் வழக்கு குறித்த செய்திகளை வெளியிட ஊடகங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என்று சில வழக்கறிஞர்கள் வலியுறுத்தினர். இதனை தலைமை நீதிபதி ஏற்கவில்லை. பேச்சுரிமை, கருத்துரிமையில் எனக்கு நம்பிக்கை இருக்கிறதுஎன்று அவர் தெரிவித்தார்.
#நீதித்துறை
#லஞ்சம்
#உச்சநீதிமன்றம்
#Judiciary
#bribery
#KSRadharkrishnanPostings
#KSRPostings
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.

19-11-2017

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...