Saturday, November 11, 2017

கருப்பு பணமும் கொள்ளையடிக்கப்பட்ட திருட்டு பணம் தானே.

கடந்த ஒரு வருடத்திற்கு முன் இந்தியாவில் கருப்பு பணம் பதுக்கல், அதை மாற்றுதல் அதிகமாக நடந்துள்ளதாக நண்பரான மத்திய அரசின் உயரதிகாரி ஒருவர் கூறியபோது அதிர்ச்சியாக இருந்தது. அரசுத் துறைகளில் மட்டும் 22,000 கோடி ரூபாய்களுக்கு மேல் மாற்றப்பட்டுள்ளதாகவும், இந்த கருப்பு பணத்தை வைரங்களாக வாங்கப்பட்டு உருமாற்றம் செய்யப்பட்டதாகவும் செய்திகள் சொன்ன போது; இவ்வளவு கருப்பு பணமா?
இது திருட்டுப் பணமல்லவா. கள்ளத்தனமாக கபளீகரம் செய்து இந்த பண பரிமாற்றங்களை செய்தவர்களை சட்டத்துக்கு முன் நிறுத்த வேண்டாமா? அதுதானே நியாயமான நடவடிக்கை.

மற்றொரு செய்தி.
-----------
5,800 வர்த்தக மற்றும் தொழில் நிறுவனங்கள், 13,140 போலி வங்கி கணக்குகளை துவக்கி, அதிலும் பல கோடி கணக்கில் பணப் பரிவர்த்தனைகள் நடந்துள்ளது. இதில் ஒரு தொழில் நிறுவனம் மட்டும் 2,134 வங்கிக் கணக்குகளை வைத்துள்ளதாக ரிசர்வ் வங்கி கடந்த அக்டோபர் மாதம் அறிவித்தது.

தமிழகத்தில் ஒரே குடும்பத்தை சார்ந்த உறவினர்களுக்கு நூற்றுக்கணக்கான போலி வங்கி கணக்குகள் இருப்பதாகவும் நம்பத்தகுந்த செய்திகள் வருகின்றன. இந்த போலி கணக்குகளைத் துவக்கி ஆயிரக்கணக்கான கோடிகளை சேர்த்து பின்னால் அந்த பணம் எங்கே சென்றது என்று தெரியாத நிலையும் உள்ளது. லட்சக்கணக்கான காளான் கம்பெனிகள், தொழில் நிறுவனங்கள் உதிக்கின்றன. சில காலங்களில் இவை காணாமலும் போய்விடுகின்றன.

இதற்கிடையில் இவைகளில் பணப்பரிவர்த்தனை மட்டும் கோடிக்கணக்கில் நடக்கின்றன. என்ன தொழில், என்ன வணிகம் போன்ற விவரங்கள் கூட வெளியே தெரிவதில்லை. சென்னை தி. நகரில் ஒரு அடுக்ககத்தில் உள்ள மூன்று அறை கொண்டதொரு வீட்டில் 10 கம்பெனிகள் இயங்கப்பட்டதாக சொல்வதுண்டு. ஆனால் அந்த முகவரியில் உள்ள வீடோ எப்போதும் பூட்டப்பட்ட நிலையில் தான் இருந்தது என அந்த அதிகாரி தகவல் சொல்லும்போது, இப்படியுமா மனிதர்கள்?

வாழப்போவது வருடக்கணக்கில் தான். எப்படியும் மனித உடல் புதைகுழிக்கு செல்வது இயற்கை. அதற்குள் இப்படியெல்லாம் தகிடுதத்தங்கள் செய்து தவறான வழியில் பணம் சேர்த்து ஏதோ இந்த பூமியில் நிலையாக வாழப்போகின்றோம் என்ற பேராசையால் இப்படி குற்றங்களை செய்யலாமா?

இது போன்ற பொருளாதார குற்றங்களால் நாட்டினை சுரண்டி நாசப்படுத்தும் போலியான, பிம்ப ஆதிக்க சக்திகளை சும்மா விடலாமா???

இதை குறித்தெல்லாம் விசாரணை நடத்தி உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டாமா?

#கருப்பு_பணம்
#KSRadharkrishnanPostings
#KSRPostings
கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
11-11-2017

No comments:

Post a Comment

#விருதுநகர்மாவட்டத்தில்களப்பணியிலமுதல்வர்முகஸ்டாலின்!

#விருதுநகர்மாவட்டத்தில்களப்பணியிலமுதல்வர்முகஸ்டாலின்! அந்த மாவட்டத்தின் அமைச்சர்களான சாத்தூர் ராமச்சந்திரனையும் தங்கம் தென்னரசுவையும் அதற்கா...