ஏ தள்ளு தள்ளு தள்ளு !!!
இன்று(1-12-2017)பிற்பகல் 2.50 சாந்தோம் அருகே பாலவாக்கத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறேன்.
காரை நிறுத்தி ஒரு காவலர் வந்து தள்ளு தள்ளு என்று அடிப்படை மரியாதைகூட இல்லாமல் கத்தினார். ஹார்ன் ஒலி சத்தமாக ஒலித்து மகாகனம் பொருந்திய தூ துணைமுதலமைச்சர் பரிவாரங்களோடு பத்துப் பதினைந்து கார்களில் ஊளையிட்டுக்கொண்டே பவனிவருகிறாராம்…
சாலையில் விலக்கூட வழி இல்லை.நாம் விலகவேண்டுமாம். கடுமையாக எச்சரித்தேன். நான் ஏன் விலக வேண்டும்? இது ஜனநாயக நாடா இல்லையா?
வண்டியைத் துளிகூட மாற்றமில்லாமல் அப்படியே ஓட்டிச்செல் என்றேன் என் ஓட்டுநர் மணியிடம். தன்னால் விலகிச்சென்றார்கள் அரசியல் தற்குறிகள். என்ன அவமானமிது! ஓவன்னா பன்னீர்செல்வம் என்ன அரசியல் ஞானியா? மக்களுக்காகவே ஊனுடல் உருகத் தியாகம் செய்பவரா! சுயநலப்பேய்களுக்குப் பந்தா ஒரு கேடா?
அண்டை மாநிலங்களில் இந்தக் கூத்து உண்டா? கேரளாவில் பினராயி விஜயனோ, அச்சுதானந்தனோ, கர்நாடகாவில் சித்தராமையாவோ, ஆந்திராவில் சந்திரபாபுநாயுடுவோ இப்படி பந்தா செய்து மக்களை வதைப்பதுண்டா? தமிழ்நாட்டிற்குப் பிடித்த கேடுகள்தான் இப்படி நடந்துகொள்கின்றன. பிரிட்டிஷ் மகாராணிகூட ஒரு சிறிய கார் குறுக்கே சென்றால் நின்று செல்கிறார். இங்கே இந்தப் போக்கிரிகள் கும்மாளமிடுகின்றனர்.
இந்த ஓ.பன்னீர்செல்வத்தைவிட நான் அரசியலில் மூத்தவன். களப்பணியாற்றியவன். கடந்த 1972 லிருந்து அரசியல் தளத்தில் இயங்குவன்.உச்சநீதிமன்றம்வரை சென்று நதிநீர் இணைப்புக்காகவும், விவசாயிகள் மீதான் ஜப்தி நடவடிக்கையைத் தடுப்பதற்காகவும், சுற்றுச்சூழல் பிரச்னைகளுக்காகவும் மனித உரிமைப் பிரச்னைகளுக்காகவும் அவ்வளவு போராடியிருக்கிறேன். அந்த நேர்மையான மிடுக்கோடுதான் இன்று காவலரிடம் ‘’போயா உன் வேலையப் பார்த்துகிட்டு, இந்திராவைப்பாத்துருக்கேன், காமராஜரைப் பாத்துருக்கேன் , கலைஞரைப் பாத்துருக்கேன், பிரபாகரனைத் தோழனாக வீட்டில் தங்கவைத்தவன். உன் வீரத்தையெல்லாம் வேறயார்கிட்டயாவது காட்டு’’ என்றேன்.
இவ்வளவு உழைத்தவர்கள் இந்தப் பதர்களையெல்லாம் ஒரு பொருட்டாக மதிக்கவேண்டிய அவசியமே இல்லை. தொண்ணூற்றியெட்டில் இந்த ஓவன்னா பன்னீர்செல்வத்தையெல்லாம் யாருக்காவது தெரியுமா தமிழ்நாட்டில்? எந்தத் தியாகமும் செய்யாமல் மழைக்கு முளைத்த காளான்களைப்போல முளைத்த இவர்கள் ஏதாவதொரு பதவியில்போய் ஒட்டிக்கொள்கின்றனர். அரசியலில் மக்களுக்காக நான் பட்ட பாட்டில் பத்தில் ஒருபங்கேனும் பட்டிருப்பாரா இந்த மனிதர்?
சங்கரய்யா, நல்லகண்ணு, நெடுமாறன், குமரிஅனந்தன் போன்ற மனிதர்களெல்லாம் இன்னும் இந்த மாநிலத்தில்தான் வாழ்கின்றனர். அவர்களைப் பார்த்தேனும் படியுங்கள் பதர்களே! இரா.செழியன் போன்றவர்களெல்லாம் இருக்கும் இடம் தெரியாமல் மறைந்தேவிட்டார்கள்! தமிழ்நாட்டின் குடிகெடுக்க வந்த இவர்கள் கும்மாளம் போடுகின்றனர். பணிவு வேடம் போடும் கபடவேடதாரிகளெல்லாம் போவார்கள் போவார்கள் ஐயோவென்று போவார்கள் எழுதிவைத்துக்கொள்ளுங்கள்.
#ksradhakrishnanposts
#ksrpost
#கபடவேடதாரிகள்
#அரசியல்தற்குறிகள்
#வெட்டிப்பந்தா
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
1-12-2017
No comments:
Post a Comment