Sunday, December 3, 2017

மறு பிரேத பரிசோதனை சாத்தியமா?

மறு பிரேத பரிசோதனை சாத்தியமா? தூண்டில் கேள்வியும் சிக்கிய பதில்களும். உங்களுடன் பகிர்ந்துக் கொள்கின்றேன்.
சாத்தூரில் போலீசார் தாக்கியதால் இருவர் பலியானதாக வழக்கு மறு பிரேத பரிசோதனைக்கு மதுரை ஐகோர்ட் கிளை உத்தரவிட்டதை தொடர்ந்து தினசரி பத்திரிக்கை ஆசிரியர் ஒருவர் தொடர்புக்கொண்டு இப்படி செய்ய சட்டம் அனுமதிக்கின்றதா, முன்மாதிரிகள் உண்டா எனக் கேட்டார்.
ஏனில்லை. பல வழக்குகள் உள்ளன. கடந்தாண்டு விழுப்புரம் மருத்துவக் கல்லூரி மாணவி மோனிஷாவின் உடலை மறுபிரேத பரிசோதனை செய்ய சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டதை நினைவு படுத்தினேன். இன்னும் சொல்லப்போனால் நானே மனு செய்து உத்தரவை பெற்று இருக்கின்றேன்.
1992ல் ஜெயலலிதா முதல்வராக இருந்தபோது கோவில்பட்டி அருகே உள்ள வெங்கடசலபுரம் கிராமத்தைச் சார்ந்த எத்திராஜ் நாயக்கர், அகிலாண்டபுரத்தை சேர்ந்த ஜோசப் இருதய ரெட்டியார், கோவில்பட்டி நகரில் நடந்த துப்பாக்கிச் சூட்டில் லட்சுமி ஆலை அருகே போலிசாரால் கொல்லப்பட்டனர். சட்டப்பேரவையில் ஜெயலலிதா வெளியிட்ட 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிடப்படவில்லை. இது முற்றிலும் மறைக்கப்பட்டுள்ளது. முதலில் இவர்கள் நோய்வாய்ப் பட்டு இறந்தார்கள் என்று அரசு இவர்களின் தியாக மரணத்தை கொச்சைப்படுத்தியது. இது குறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜோசப் இருதய ரெட்டியாரின் உடலைத் தோண்டி மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று நான் ரிட் மனுவை தாக்கல் செய்தேன். அந்த மனுவை விசாரணை செய்த நீதிபதி கே.எஸ். பக்தவத்சலம், இருதய ஜோசப் ரெட்டியாருடைய உடலை தோண்டி மறு பிரேத பரிசோதனை செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டார். அது மட்டுமல்லாமல் இந்த துப்பாக்கிச் சூடு குறித்து ஓய்வு பெற்ற நீதிபதி சுப்பிரமணியம் தலைமையில் கோவில்பட்டி நடந்த நீதி விசாரணையிலும் ஆஜரானேன். இதன் மூலமாக இவர் அடித்துக் கொல்லப்பட்டனர் என அறியப்பட்டது.
இந்தியாவிலே முதன்முதலாக உச்சநீதிமன்றம் தூக்குதண்டனை இறுதி செய்து, குடியரசு தலைவருக்கு மூன்று முறை கருணை மனு வழங்கி மூன்று முறையும் அதாவதி 1977 ஜூன் 15, இரண்டாவது முறையாக 1981 செப்டம்பர் 15 மற்றும் மூன்றாவது முறையாக 1984 ஜூன் 21 ஆகிய நாள்களில் கருணை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்ட குருசாமி நாயக்கர் வழக்கை இரண்டு வாக்கியத் தந்திகளை வைத்துக்கொண்டு சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குதொடுத்து அவரைக் காப்பாற்றியவன் அடியேன். 1984 செப்டம்பர் 27 சென்னை உயர்நீதிமன்ற இறுதி தீர்ப்பை பெற்றேன். அன்றைக்கு இம்மாதிரி ஊடகங்களோ செய்தித்தாள்களோ இந்நிகழ்வை பெரிதாக வெளியிட்டதில்லை. விளம்பரப்படுத்த விரும்பவில்லை ஆனால் இந்தப் பதிவு தூக்குதண்டனை வரலாற்றில் இருக்கவேண்டும் என்ற நோக்கத்தில் குறிப்பிடுகின்றோம். இன்றைக்கு தூக்குதண்டனை பற்றி பேசும் எவரும் இந்த முன் உதாரணமான எனது வழக்கை மறந்துவிட்டு பேசுவதுதான் வேதனையாக இருக்கின்றது. சுயநலமில்லாமல் எந்தவித வழக்கறிஞர் கட்டணமும் இல்லாமல் சமூகப் பொறுப்போடு செய்த காரியத்தை உரிமையோடும் அப்போது எவ்வத வசதிவாய்ப்புகளும் இல்லாத காலத்தில் இவ்வழக்கிற்காக தனிமனிதனாக உழைத்ததை சொல்லவேண்டியது என்கடமை. இதனை விளம்பரம் என யார் நினைத்தாலும் அதனைப் பற்றி கவலைப்ப்பட போவதில்லை. இனி அரசியலில் பொறுப்புகள் கிடைக்கு என்று எதிர்பார்பும் இல்லை. எனக்கு உதவியாளராகவும், தட்டச்சாளராகவும் இருந்தவர்கள் பொறுப்புகளை அனுபவித்து வரும் வேளையில் அந்த பொறுப்புகளை நான் அடைய விரும்பவும் இல்லை. ஆனால் என் பொதுவாழ்வில் நான் சாதித்தவை. என் தலைமுறைக்கு நான் சொத்து எழுதி வைக்கவில்லை. ஆனால் எதிர்கால தலைமுறைக்கு வரலாற்றை எழுதி வைப்பது அவசியம் எனக் கருதி இப்பவும் எழுதுகின்றேன்.
தேசிய மனித உரிமை ஆணையம், மாநில மனித உரிமை ஆணையம் என்ற அமைப்புகள் இருப்பதை முதன் முதலாக நாடறிய செய்ததும் அடியேன் தான்.
விவசாயிகளுடைய கடன் தொல்லைக்கு வருவாய் துறை அதிகாரிகள், விவசாயிகளின் வீட்டிலுள்ள பண்டபாத்திரங்களையும், கதவுகளையும் 1975 அவசரநிலை காலத்தில் பிடுங்கி சென்றதை எதிர்த்து வழக்குத் தொடுத்து ஜப்தி நடவடிக்கைகளை நிறுத்தியும், கடன் நிவாரணத்தையும் விவசாயிகளுக்கு, விவசாய குடும்பத்தில் பிறந்த அடியேன் பெற்றுத் தந்தது மனதிற்கு ஓர் ஆறுதலான செய்தி. அப்போதெல்லா அரசியலில் பொறுப்புகளோ, பதவிகளுக்கோ வருவேன் என்று கிஞ்சித்தும் யோசிக்காமல் பொதுநலனை கருத்தில் கொண்டு செயல்பட்டேன். இன்றும் அதே மனநிலையில் இவற்றை எல்லாம் பதிவு செய்கின்றேன்.
1993ல் மாநிலங்களில் மனித உரிமை ஆணையம் அமைக்க பிரதமர் நரசிம்மராவ் சட்டம் பிறப்பித்தார். அன்றைய முதல்வர் ஜெயலலிதா அமைக்க விரும்பாத மனித உரிமை ஆணையத்தை தலைவர் கலைஞர் அவர்கள் 1996ல் அமைத்ததின் பலனை அவரும், கழக உடன்பிறப்புகளும் பெற்றனர்.
ஜுன் 30, 2001 ஆண்டு உலகமே கண்ணீர் வடிக்கும் வகையில், தமிழக முதல்வர் தலைவர் கலைஞர் அவர்களை மனித நேயமற்ற வகையில் நடு இரவில் வீடு புகுந்து தாக்கி கைது செய்தது ஜெயலலித்தவின் ஏவல்துறை.

தலைவர் கலைஞர் நள்ளிரவில் கைது செய்யபட்ட போது தமிழகம் முழுவதும் ஏறத்தாழ ஒரு லட்சம் பேர் கைது செய்யப்பட்டு 15 நாட்கள் ரிமாண்ட் உத்தரவு நீதிமன்றத்தால் பிறப்பிக்கப்பட்டது. எனினும் அடியேன் தான் மனித உரிமைகள் ஆணையத்தின் மீது நம்பிக்கை வைத்து ஜூலை முதல் நாள் மதியம் இரண்டு மணி அளவில் ஆணையத்தின் கதவை தட்டினேன்.
முன்னாள் சடட அமைச்சர் ஆலடி அருணா அவர்களும், முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா அவர்களும் உடன் வந்தனர். ஒரு லட்சம் பேர் சிறையில் அடைக்கப்பட்டு கழிவறை வசதி இல்லாமலும், உணவு , குடினீர் வழங்கப்படாமலும் துன்புறுத்தப்படுவதாக புகார் அளித்தோம்.
அடுத்த நாள் அனைத்து செய்தி தாள்களிலும் படத்துடன் செய்தி வந்தது. நீதிபதி சமிதுரை கடலூர்,சென்னைசிறைச்சாலைகள்-சென்று ஆய்வு செய்து நாங்கள் அளித்த புகாரில் உண்மை இருப்பதறிந்து 15 நாட்கள் ரிமாண்ட் உத்தரவை ரத்து செய்து 48மணி நேரத்தில் ஒரு லட்சம் பேரும் விடுதலை செய்யப்பட்டனர். என் வாழ்நாளில் மிகப்பெரிய கடமையை நிறைவேற்றியதாக உணர்கின்றேன். 
எனது பொதுநலப் பணியை நான் இந்த உலகுக்கு சொல்லாமல் யார் சொல்லப் போகின்றார்கள்? அத்தகைய பொதுநலம் கொண்ட ஊடகங்கள் உள்ளனவா? இவ்வாறாக பதிவு செய்வதின் மூலம் எதிர்கால தலைமுறை தாங்கள் அனுபவித்து எல்லாவற்றையும் கற்றுக் கொள்ள முடியாது. இது போன்ற அனுபவங்கள் அவர்களுக்கு சில முன்னுதாரணங்களை அடையாளம் காட்டும் என்ற நம்பிக்கையில் பதிவு செய்திருக்கின்றேன்.இப்படி 20 மேலான
தமிழக உரிமைகள், பொது நல முக்கிய வழக்குகள் என உச்ச நீதிமன்றம், உயர் நீதி மன்றத்தில் தொடுத்து உத்தரவுகளை பெற்றுள்ளேன். அதையெல்லாம் வரிசை படித்தினால் பெரிய பட்டியல்யாகி விடும்.

இதை ksradhakrishnan.in ல் எனது profileல் பார்க்கலாம்.

கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 
03-12-2017

No comments:

Post a Comment

சென்னை தாம்பரத்தில் வைத்து நயினார் நாகேந்திரனின் கணக்கில்

  சென்னை தாம்பரத்தில் வைத்து நயினார் நாகேந்திரனின் கணக்கில் வராத 4 கோடி ரூபாய் வருமான வரித் துறையால் கைப்பற்றப்பட்டது என பேசப்பட்டது. இது வி...