Sunday, December 3, 2017

மணல் கொள்ளையும், உயர் நீதிமன்ற தீர்ப்பும்

Image may contain: sky and outdoor
தமிழகத்தில் அனைத்து மணல் குவாரிகளையும் மூட உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு. மகிழ்ச்சியை வெளிப்படுத்த வேண்டிய நேரத்திலும் ஒருவித அய்யம் இருக்கவே செய்கின்றது. இந்த தீர்ப்பு நிலைத்திருக்குமா அல்லது நீர்க்குமிழி போல் நிலை இழக்குமா என்பது தான் என அய்யத்திற்கு காரணம்.


மக்கள் நலன் காக்கும் அரசு என்றால் இயற்கையின் நன்மை, நாட்டு மக்களின் நன்மையை கருதி அமைதி காக்கும். ஆனால் மக்கள் விரோத அரசு தமிழகத்தில் ஆட்சியில் இருக்கின்றது. தேசிய நெடுஞ்சாலைகளில் மது விற்பனைக்கு தடை விதித்துஉயர் நீதிமன்றம் உத்தரவிட்ட போது உச்சநீதிமன்றம் வரை சென்று போராடி மதுக்கடைகள் திறக்க பாடுபட்டவர்கள். மக்கள் நலனில் இத்தனை அக்கறையா எனக் கேட்காதீர்கள். அவர்களுக்கு கிடைக்க வேண்டிய தொகைக்கு எத்தகைய பாதிப்பும் வந்துவிடக் கூடாது என்பதில் அக்கறை கொண்டவர்கள். அதே அக்கறை மணல் குவாரி விசயத்திலும் வந்து விட்டால் இன்றைய தீர்ப்பும் நீர்த்துப் போகுமே என்ற அச்ச உணர்வு ஏற்படுகின்றது.
நாட்டின் நலனை கருத்தில் கொண்டு நீதிமன்றம் நடவடிக்கை புதிதாக மணல் குவாரிகளை அமைக்கவும் கூடாது, சட்டவிரோதமாக மணல் அள்ளுபவர்கள் மீது கடும் நடவடிக்கை இறக்குமதி மணல் மூலம் மணல் தேவையை பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் சோதனை சாவடி வழியே செல்லும் வாகனங்களை கேமரா பொருத்தி கண்காணிக்க ஆணை மலேசிய மணலை எடுத்துச் செல்ல நீதிமன்றம் உத்தரவு சோதனை சாவடிகளில் முறையாக ஆவணங்களை பராமரிக்க உத்தரவு தூத்துக்குடி துறைமுகத்தில் முடக்கப்பட்ட மணலை விடுவித்து உயர்நீதிமன்ற கிளை ஆணை வெளிநாடுகளிலிருந்து மணலை இறக்குமதி செய்ய தமிழக அரசு உரிய அனுமதி வழங்க ஆணை மக்கள் நலன், இயற்கை வளம், விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் ஆணை வருங்காலத்தில் தமிழக அரசு விதிக்கும் கட்டுப்பாடுகளுக்கு உள்பட்டு மணலை இறக்குமதி செய்யலாம். மாநிலத்தின் நீடித்த வளர்ச்சி, நாட்டின் நலன் கருதி உத்தரவு பிறப்பிக்கப்படுகிறது. இறக்குமதி மணலை அரசு நிபந்தனைகளுக்கு கட்டுப்பட்டு விற்பனை செய்யலாம் மணல் இறக்குமதி குறித்து முறையான வழிமுறைகளை தமிழக அரசு வகுக்க வேண்டும்.
இன்னும் 600 ஆண்டுகளில் பூமி ஒரு எரிபந்துபோல ஆகிவிடும்” என்ற இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங்ஸின் எச்சரிக்கையைச் சுட்டிக்காட்டி நீதிபதி இந்த உத்தரவைப் பிறப்பித்துள்ளார்.
தமிழகத்தில் நடைபெற்ற மணல் கொள்ளை வரலாற்றைத் திரும்பிப் பார்த்தால், பூமி எரிபந்தாவதற்கான முதல் கொள்ளி, தமிழகத்தில்தான் வைக்கப்படுகிறதோ என்று எண்ணத் தோன்றும்.
மனிதன் ‘மண்’ வீட்டில் இருந்து ‘காரை’ வீட்டுக்கு மாறிய காலத்தில் இருந்தே, ‘மணல்’ பயன்பாடு அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. ஆனாலும் அது மணல் கொள்ளையாக உருவெடுத்தது 1990-களில்தான். தமிழகத்தில் உள்ள 17 பெரிய ஆறுகள், 34 சிறிய ஆறுகள், கிளை ஆறுகள் அனைத்திலும் மணல் கொள்ளை பூதாகரமானதாலும், அதனால் நிலத்தடி நீர் பாதிப்பு, சட்டம் ஒழுங்கு பிரச்சினை போன்றவை ஏற்பட்டதாலும் விவகாரம் நீதிமன்றப் படியேறியது. சட்டவிரோத மணல் கொள்ளைக்கு முடிவு கட்டுமாறு 26.7.2002 அன்று சென்னை உயர் நீதிமன்றம் அரசுக்கு உத்தரவிட்டது.
இந்த உத்தரவை ஏற்று, 1.10.2003 முதல் தமிழகத்தில் உள்ள மணல் குவாரிகள் அனைத்தையும் பொதுப்பணித்துறையே நேரடியாக ஏற்று நடத்தும் என்று அரசு ஆணையிட்டது. மணல் பயன்பாட்டை முறைப்படுத்த கிடைத்த வாய்ப்பை, மணல் கொள்ளையை சட்டப்பூர்வமாக்குவதற்குப் பயன்படுத்திக் கொண்டார்கள் ஆளும் வர்க்கத்தினர். இதில் இரு திராவிடக் கட்சிகளுக்கும் எந்த வித்தியாசமும் கிடையாது.
பெயர் தான் ‘அரசு குவாரி’ என்று மாறியதே தவிர, குவாரிகளை பொதுப்பணித்துறையால் நேரடியாக கண்காணிக்க முடியவில்லை. மணல் எடுப்பது, விற்பது ஆகிய பணிகள் அனைத்தும் ‘மணல் அள்ளி ஏற்றும் ஒப்பந்தம்’ என்ற பெயரில் ஆளுங்கட்சியினர் சுட்டிக்காட்டிய நபர்களின் பொறுப்பில் ஒப்படைக்கப்பட்டன.

தமிழகத்தில் கடந்த 15 ஆண்டுகளாக விலை உயராத ஒரே பொருள் மணல் என்றால் நம்ப முடிகிறதா? அதுதான் உண்மை. 2003-ம் ஆண்டு ஒரு லோடு மணல் (2 யூனிட்) ரூ.1000 என்றும், வரி 50 ரூபாய் என்றும் விலை நிர்ணயம் செய்தது தமிழக அரசு. அடுத்த ஆண்டே அது ரூ.650 என்று குறைக்கப்பட்டது. இப்போது வரையில் அதுதான் விலை. ஆனால், அந்த விலையில் யாரும் மணல் வாங்க முடியாது.
திருச்சி போன்ற மத்திய மாவட்டங்களில் ஒரு லோடு ரூ.18 ஆயிரத்துக்கும், சென்னை, குமரி போன்ற விளிம்பு மாவட்டங்களில் ரூ.50 ஆயிரத்துக்கும் விற்பனையாகிறது.
மிகமிக அதிக லாபம் கிடைப்பதால், மணல் கொள்ளையர்கள் கொலை செய்யவும் துணிந்தார்கள். மணல் குவாரிகள் அரசின் பொறுப்பிற்குப் போகும் முன்பு, அந்தந்த பகுதி ரவுடிகள், அரசியல்வாதிகள், சமூக விரோதிகள்தான் மணல் திருட்டில் ஈடுபட்டனர். அப்போதெல்லாம் மக்கள் ஒன்றுதிரண்டு போலீஸ் மற்றும் அரசு துறைகளின் உதவியோடு அதனை ஓரளவுக்கேனும் தடுக்க முடிந்தது. ஆனால், அரசு கைக்கு மணல் குவாரிகள் போன பிறகு, மணல் கொள்ளையும் அரசு துறைகளில் ஒன்று என்று அங்கீகரிக்கப்பட்டது போலாகிவிட்டது.
நெல்லை மாவட்டம் திசையன்விளை சதீஷ், ஸ்ரீவைகுண்டம் தேவசகாயம், வீரவநல்லூர் கம்யூனிஸ்ட் பிரமுகர் சுடலைமுத்து, வேலூர் மாவட்டம் அரக்கோணம் பகுதியில் தலைமைக்காவலர் கனகராஜ், புதுக்கோட்டை மாவட்டம் ஆவூரைச் சேர்ந்த இளைஞர்கள் கார்த்திக், ராஜேஷ் என்று பலர் கொல்லப்பட்டார்கள். இதுதவிர மணல் கொள்ளையர்களால் கொல்லப்பட்ட, தாக்கப்பட்ட போலீஸ், வருவாய்த்துறை அலுவலர்களைக் கணக்கிட்டால் 100-ஐ தாண்டும். விழுப்புரம் மாவட்டத்தில் போலீஸாரிடம் இருந்து தப்புவதற்காக சிறு சந்துக்குள் புகுந்த மணல் லாரி மோதி, யுகேஜி படிக்கும் சிறுவனும், அவனது தாத்தாவும் உயிரிழந்த கொடூரமும் நடந்தது.
வைகை, தென்பெண்ணை ஆறுகளைச் சுத்தமாகச் சுரண்டிவிட்டதால், அங்கிருந்த மணல் குவாரிகளை அரசே மூடியது. நெல்லையில் பாறை தெரிகிற வரையில் மண் எடுத்ததால், அப்பகுதி மக்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர்.
தமிழகம் முழுவதும் வெவ்வேறு குவாரிகள் மூடப்பட்டதால், பெரும்பாலான மணல் குவாரிகள் காவிரியிலும், கொள்ளிடத்திலும் செயல்பட்டன. அத்துமீறல்கள் அதிகம் நடந்ததால், திருச்சி, கரூர் மாவட்ட மணல் குவாரிகள் நீதிமன்ற உத்தரவுப்படி மூடப்பட்டன.
இந்த நிலையில் மணல் விலையேற்றத்தைக் காரணம் காட்டி, சமீபத்தில் மேலும் 70 மணல் குவாரிகளை திறக்கப்போவதாக அரசு அறிவித்துள்ளது. அவை திறக்கப்பட்டால், தமிழ்நாடு பாலைவனமாக மாறிவிடும். உயர் நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு ஆறுதலைத் தருகிறது. இது திடமான, தீர்க்கமான முடிவுகளை மேற்கொண்டால் தான் மணல் கொள்ளையடிப்பதை தடுக்க முடியும்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
02-12-2017

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...