Thursday, April 5, 2018

ஸ்டெர்லைட், விவசாயம், குடிநீர்

ஸ்டெர்லைட் நிறுவனம் பல ஆயிரம் கோடி வரிஏய்ப்பு செய்து வருகிறது. இந்நிறுவனம் ரூ. 750 கோடி வரி ஏய்ப்பு செய்தது கண்டுபிடிக்கப்பட்டு அதன் துணைத்தலைவரான வரதராஜன் என்பவர் கைது செய்யப்பட்டார். ரூ. 200 கோடியை வங்கியில் வைப்புத் தொகையாக செலுத்தப்பட்ட பின்பே விடுவிக்கப்பட்டார். ஸ்டெர்லைட் ஆலையில் தாதுப் பொருட்களிலிருந்து தங்கம், தாமிரம், பிளாட்டினம், பல்லாடியம் ஆகிய உலோகங்களும் கிடைக்கிறது. இதில் பிளாட்டினம் மற்றும் பல்லாடியம் தங்கத்தைவிட உயர்ந்தது. தங்கத்தை ஏற்றுமதி செய்வதாக கூறி பிளாட்டினம் மற்றும் பல்லாடியத்தை கடத்திய போது பிடிக்கப்பட்டது. மத்திய, மாநில அரசுகளை ஏமாற்றியும், அதன் துணையுடனும் இது போன்ற மோசடிகளை செய்து வருகிறது.

குடிநீருக்கும், விவசாயத்திற்கும் தண்ணீருக்காக அல்லற்பட்டுக் கொண்டிருக்கும் தமிழகத்தில் தூத்துக்குடி, திருநெல்வேலி, விருதுநகர் மற்றும் இராமநாதபுரம் ஆகிய நான்கு மாவட்ட மக்களின் குடிநீர் தேவைகளையும், திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில் 86,000 ஏக்கரில் நெல், வாழை, கொடிக்கால் போன்ற விவசாயமும் தாமிரபரணி ஆற்றை நம்பி தான் உள்ளது. கடுமையான தண்ணீர் தட்டுப்பாட்டால் குடிநீரும், விவசாயமும் பெரும் கேள்வியாகவே உள்ளது. கடந்த ஆண்டு ஏற்பட்ட வரலாறு காணாத வறட்சி காரணமாக முதன்முறையாக தாமிரபரணி ஆற்றுப் பாசனத்தில் ஒரு போகம் கூட நெல் விவசாயம் நடைபெறவில்லை.

மீதமுள்ள கொஞ்ச நஞ்ச நிலங்களிலும் விவசாயம் செய்தாலும் இங்கு விளையும் பொருட்களில் நச்சுத் தன்மை உள்ளதாக வியாபாரிகள் வாங்குவதில்லை. மாடுகளுக்கு போடப்படும் நாற்று நச்சுத் தன்மை காரணமாக மாடுகளுக்கு கழிச்சல் நோய் ஏற்படுகிறது. இந்த நிலையில் ஸ்ரீவைகுண்டம் ஆற்றில் கிணறு அமைத்து தாமிரபரணி ஆற்று நீரை ராட்சதக் குழாய் மூலம் தினந்தோறும் 75 லட்சம் லிட்டர் தண்ணீரை ஸ்டெர்லைட் ஆலைக்கு கொண்டு செல்லப்படுகிறது. இத்தகைய படுபாதகச் செயலை தமிழக அரசும் அனுமதிக்கிறது.

சிப்காட் விரிவாக்கம் என்ற பெயரில் மீளவிட்டான் தெற்கு வீபாண்டியபுரம், அ.குமரெட்டியாபுரம், குமாரகிரி ஆகிய கிராமங்களில் விவசாயிகளிடமிருந்த நிலங்கள் எடுக்கப்பட்டன. இந்த நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்கப்படவில்லை.
ஸ்டெர்லைட் ஆலை விரிவாக்கப் பகுதிக்கும் அ.குமரட்டியாபுரம் கிராமத்திற்கும் 200 மீட்டர் தூரம் தான் இடைவெளி உள்ளது. விதிகளை மீறி வேதாந்தா குழுமம் ஆலை விரிவாக்கப் பணிகளை மேற்கொண்டு வருகிறது. கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
04-04-2018

No comments:

Post a Comment

*If you're not making mistakes. Then you're not making decisions*

*If you're not making mistakes. Then you're not making decisions*. You know success seems to be connected with action. Successful pe...