Monday, April 6, 2020

க(த)ண்டிக்கபடாத_மனித உரிமை மீறல்*

இன்றைய (06.04.2020) தினமணி நாளிதழில் *க(த)ண்டிக்கபடாத_மனித உரிமை மீறல்* என்ற தலைப்பில் எனது பத்தி வெளியாகி இருக்கிறது.

#ஈழத்தமிழரும்_ஐநா_மனித உரிமை #ஆணையமும்
​​​​​————————————————
ஜெனீவாவில் நடக்கும்  ஐநா மனித உரிமை ஆணையத்தின் 43வது கூட்டத் தொடருக்கு செல்ல விசாவும் பயணச்சீட்டு வாங்கியும் கொரானா வைரசால் இந்த ஆண்டு செல்ல முடியவில்லை. இந்த கூட்டத் தொடர் விரைவாக கடந்த 20.03.2020 அன்று கோவிட் - 19 நிறைவு பெற்றது. மைய அரங்கில் மட்டும் தான் கூட்டம் நடந்தது. பக்க அரங்குகளில் கூட்டங்கள் நடைபெறவில்லை. உலகளவில் நடக்கும் மனித உரிமை சிக்கல்கள் இனப் பிரச்சினைகள், சுற்றுச் சூழல் பாதிப்புகள் என இங்கே விவாதிக்கப்படுவதுண்டு. ஒவ்வொரு வருடமும் மார்ச் செப்டம்பர் என வருடத்திற்கு இரண்டு கூட்டத்தொடர்கள் நடப்பது வாடிக்கை.
கடந்த 2009ல் இலங்கையில் முள்ளிவாய்க்காலில் நடந்த இறுதிப் போரில் ஒன்றரை லட்சத்திற்கும் மேலான தமிழர்கள் கொல்லப்பட்டனர். இந்த கொடுமையான நிகழ்வு அனைத்து தரப்பினரையும் ரணப்படுத்தியது. இங்கு நடந்த மனித உரிமை மீறலையும், போர்க்குற்றங்களையும் குறித்து சர்வதேச சுதந்திரமான நம்பகமான புலனாய்வு விசாரணை பொறிமுறை வேண்டுமென்று தீர்மானங்களை ஐநா மனித உரிமை ஆணையத்தில் முன்னெடுக்கப்பட்டது. அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் ஈழத்தமிழருக்கு ஆதரவாக இந்த விடயத்தில் குரல் கொடுத்ததோடு தீர்மானங்களையும் முன்னெடுத்தது. கடந்த 2012-13ல் ராஜபக்சே இலங்கை அதிபராக இருக்கும்போது இந்த தீர்மானத்தின் படி நல்லிணக்க குழு அமைத்து அதனுடைய பரிந்துரைகளை முன்னெடுப்பேன். ஈழத்தமிழர்கள் நலன் காக்க 13 மட்டுமல்ல 13+ஐயும் நடைமுறைப்படுத்துவேன் என்று தமிழரை கொன்றொழித்த ராஜபக்சே அரசு இந்த மன்றத்தில் உறுதியளித்தும் நடைமுறைப்படுத்தவில்லை. இதுகுறித்து அவகாசம் தான் இலங்கை அரசு கேட்டுக் கொண்டே இருந்தது. பிறகு ராஜபக்சே தோல்வியுற்றார். மைத்ரி சிரிபாலாவும், ரணில் விக்ரமசிங்கே காலத்திலும் ஐநா மனித உரிமை ஆணையத்தின் முன்னெடுப்புக்கு எந்த வித ஒத்துழைப்பும் அவர்களும் வழங்கவில்லை. திரும்பவும் ராஜபக்சே பிரதமராக விட்டார். முள்ளிவாய்க்கால் கொடூரத்தை ராஜபக்சேவுடன் இராணுவத்தை வழிநடத்திய ராஜபக்சேவின் சகோதரர் கோத்தபய இன்று அதிபர். சகோதரர்கள் இருவரும் இலங்கையில் ஆட்சியை நடத்துகிறார்கள்.



இந்நிலையில் கடந்த பிப்ரவரி மாதம் ராஜபக்சே ஐநா மனித உரிமை ஆணையத்தில் நிலுவையில் உள்ள தீர்மானத்தில் இருந்து இலங்கை விடுவித்துக் கொள்ளும் என்று தெளிவுப்படுத்தினார்.
இதற்கேற்ப இந்த 43ஆவது கூட்டத்துக்கு முதல் நாளன்று இலங்கை வெளியுறவு அமைச்சர் இந்த மன்றத்தில் நிலுவையில் இருக்கும் 30, 40 தீர்மானத்திலிருந்து வெளியேறுகிறோம் என்று சொன்னபோது ஐ.நா. மனித உரிமை ஆணையம் ஏற்றுக்கொள்ளவில்லை.
2009 இலங்கைப் போரில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு இன்னமும் நீதி வழங்கப்படவில்லை. அப்பாவி மக்களை படுகொலை செய்துவிட்டு இலங்கை அரசாங்கம் இன்னமும் வீரம் பேசிக் கொண்டிருப்பதுதான் பாதிக்கப்பட்ட மக்களை பெரும் நோவுக்குள்ளாக்குகிறது.
போர்க்குற்றங்கள் தொடர்பாக சர்வதேச விசாரணை நடத்த வேண்டும் என்ற ஐ.நா., அதில் இலங்கை அரசு செய்த போர்க்குற்றங்களும் விசாரிக்கப்பட வேண்டும் என்று இலங்கை அரசு செய்த போர்க்குற்றங்களின் நீண்ட பட்டியலையும் வெளியிட்டது. ஆனால் அப்போதைய ராஜபக்சே அரசு, ஐ.நா.வின் இந்தப் போர்க்குற்றச்சாட்டுக்களை நிராகரித்ததுடன், தமது ராணுவம் ஓர் இனத்துக்கு எதிராகப் போரிடவில்லை என்றும் விடுதலைப்புலிகள் என்ற குழுவுக்கு எதிராகவே போரிட்டது என்றும் கூறியது.
ஆனால் இலங்கை அரசு ஈழத்தமிழர்களை இன அழிப்பு செய்தது பற்றிய ஆதாரங்களை சேனல்-4 தொலைக்காட்சி சாட்சியங்களுடன் வெளியிட்டது. அதோடு, தமிழர்களின் வடக்கு மாகாண சபையும் ‘ஈழத்தில் நடந்தது இனப்படுகொலைதான்’ என்பதை ஆதாரபூர்வ தீர்மானமாக வெளியிட்டது.
இந்த நிலையில், அமெரிக்கா கொண்டுவந்த இலங்கைப் போர்க்குற்ற விசாரணையை, இலங்கையின் முன்னாள் அரசான சிறிசேனா-ரணில் அரசு ஏற்றுக்கொண்டது, சர்வதேச அரங்கில் அதை ஒப்புக்கொண்டதாக ஆயிற்று.
இந்த சூழலில் ஐநா தீர்மானத்தை நீர்த்துப் போகச் செய்யும் அளவில் இலங்கை அரசு காரியங்களி ஆற்றியது. இலங்கை வெளியுறவு செயலாளர் ரவிநாத் ஆரிய சிங்க இதற்கான பணிகளில் இறங்கினார். ஏற்கனவே இலங்கைக்கு ஆதரவாக கடந்த காலத்தில் இருந்த கம்யூனிஸ்ட் நாடுகளான, ரஷ்யா, சீனா, கியூபா மற்றும் ஜப்பான் போன்ற நாடுகளிடம் ஆதரவைக் கோரினார். இதில் என்னவொரு வேதனையான விடயம் என்றால் கம்யூனிஸ்ட் கொள்கையை ஏற்றுக் கொண்ட நாடுகள் கூட இலங்கையில் நடந்த தமிழின அழிப்பை எதிர்க்கவில்லை என்பதுதான் நமது கவலை. அதற்கு மாறாக சிங்கள அரசுக்கு ஆதரவாக சீனாவும், ரஷ்யாவும் ,கியூபாவும் இருந்தது எப்படி என்று தெரியவில்லை.
இந்நிலையில், இத்தாலியில் வைரஸ் நோயினால் பாதிக்கப்பட்டதற்கு கியூபா மனிதாபிமானத்துடன் உதவிக்கரம் நீட்டியது வரலாற்றில் ஒரு தவமாகும். இது பாராட்டுக்கு மட்டுமல்ல படிப்பினையும் கூட. பாதிப்பு எங்கு ஏற்பட்டாலும் உதவிக்கரம் என்பது அவசரம் அவசியமானது.
ஆனால் கியூபா ஈழத்தமிழர் பிரச்சினையில் ஏன் அப்படி நடந்துக் கொண்டது என்பது புரியாத வினாவாக கடந்த எட்டாண்டுகளாக விடை காணாமல் உள்ளது.

இலங்கையில் இறுதிப் போரின் போது இந்தியாவின் உதவியோடு ராஜபக்சே சிங்கள அரசு தமிழினத்தை அழித்த கொடூரம் இன்னும் நம் மனதில் இருந்து அகலாத துயரங்கள் ஆகும்.
கம்யூனிசம் உலகவாதமும் உலக நலன்களையும் முன்னெடுப்பதாகும். சாதாரண மனிதர்களுக்கு பாதிப்பு ஏற்படுத்தக் கூடாத கம்யூனிச கொள்கைகளை வகைப்படுத்திய கார்ல் மார்க்ஸ், ஏங்கல்ஸ், லெனின், மாவோ போன்ற தலைவர்கள் இலங்கை தமிழர்களுக்கு நடந்த கொடுமைகளுக்கு எதிராக நிச்சயமாக குரல் கொடுத்திருப்பார்கள். தற்போது communist block என்று சொல்லக் கூடிய ரஷ்யா, சீனா, கியூபா தமிழர்களுடைய நியாயங்களுக்கு துணையில்லாமல் இருந்தது வேதனை தருகின்ற விடயமாகும். இவையெல்லாம் ஐநா மனித உரிமை ஆணையத்தில் தொடர்பு உள்ளவர்களுக்கு மட்டுமே தெரிந்த சங்கதி ஆகும்.

இந்த காலக்கட்டத்தில் இவ்வளவு உதவிக் கரம் நீட்டும் கியூபா ஒன்றரை லட்சத்திற்கும் மேல் தமிழர்கள் அழிக்கப்பட்ட போது ஏன் மெளனம் சாதித்தார்கள் என்பது தான் பார்வையாளராக நடுநிலையோடு செய்யவேண்டிய பதிவும் கூட.
இம்மாதிரியான ஆதரவுகளால் ஐநா மனித உரிமை 43வது கூட்டத்தொடரின் முதல் நாள் அன்று நிலுவையில் உள்ள தீர்மானங்கள் 30-40ல் உடன்பாடு இல்லையென்றும் மனித உரிமை மீறல், போர்க்குற்ற குற்றச்சாட்டு தீர்மானம் தேவையில்லை என்றும் மனித உரிமை ஆணையத்தின் நிலுவையில் இருக்கும் தீர்மானத்தில் இலங்கை விடுவித்துக் கொள்ளும் என்றும் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் தினேஷ் குணவர்த்தனே சற்றும் சிந்திக்காமலும் பேசியது எப்படி என்று தெரியவில்லை.
ஆனால் இலங்கை அரசாங்கம் ஏற்கனவே ஐ.நா.வில் ஏற்றுக்கொண்ட தீர்மானத்திலிருந்து தன்னிச்சையாக இப்படி விலகிவிட முடியாது என்று ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் செயலர் மிச்செல் பெச்சலட் தெரிவித்துள்ளார். இது இலங்கை அரசுக்குப் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காரணம், ஐ.நா.வில் ஏற்றுக்கொண்ட ஒரு தீர்மானத்தை அதன் உறுப்பு நாடு பின்னர் மறுக்க முடியாது என்பது ஐ.நா. கவுன்சிலின் சட்டமாகும்.
இது மட்டுமல்ல; இலங்கையில் இனியும் தொடர்ந்து தமிழர்களுக்கு எதிரான சித்திரவதைகள் நடக்கலாம் என தான் அஞ்சுவதாகவும் கூறியுள்ளார் ஐ.நா. மனித உரிமைக் கவுன்சில் செயலர் மிச்செல் பெச்சலட்.
இனி அடுத்து 44வது கூட்டத்தொடரில் தான் வரும் செப்டம்பர் மாதம் இதுகுறித்தான முடிவுகள் ஐநா மனித உரிமை ஆணையத்தில் தெரிய வரும். இவ்வளவு கடுமையான கொடூர இன அழிப்பை இலங்கையில் நடத்திவிட்டு அது குறித்தான குற்றச்சாட்டுகளுக்கு ஐநா மனித உரிமை ஆணையத்தில் பதில் சொல்லாமல் தப்பிக்க நினைக்கும் ராஜபக்சேவுடைய கபட நாடகம் உலக மனித நேயத்திற்கே விடப்பட்ட சவாலாகும். இந்தியா இதைக் குறித்து வாய்மூடி மெளனியாக உள்ளது. வெற்றிப் பெற்ற கோத்தபயேவும் ராஜபக்சேவும் இந்தியாவிற்கு தான் முதலில் வந்தார்கள் என்று சிலர் சொல்கின்றனர். எதற்கு வந்தார்கள்? இந்தியாவின் தயவை பெற்றுவிட்டால் சீனா என்றைக்கும் நம்மோடு தோழனாய் இருக்கின்றார். பிரச்சினை இல்லை என்றுதான் ராஜபக்சே சகோதரர்கள் கருதுகின்றார்கள்.
கொரோனா வைரஸ் பாதிப்பில் சீனா சிக்கலில் இருந்தாலும் இன்றைக்கு இலங்கைக்கு 500 மில்லியன் அமெரிக்க டாலர்களை பல சலுகைகளோடு, நீண்ட கால கடனாக வழங்கியுள்ளது. இந்தியாவுக்கு வருகை தந்த கோத்தபயவும் மகிந்த ராஜபக்‌சேவும் இந்தியாவிடம் இலங்கைப் பாதுகாப்புக்காக உதவி நிதியை வாங்கிச் சென்றார்கள். இதைக் காட்டி சீனாவிடம் மறுபடியும் பேரம் பேசி 500 மில்லியன் டாலர்களைப் பெற்றதன் பின்னணி என்னவென்று தெரியவில்லை. இந்தியா, சீனா-இலங்கை நிதி பரிவர்த்தனையில் நடந்த கமுக்கங்களையும், ரகசியங்களையும் அறியுமா? எல்லாம் இந்துமகா சமுத்திரத்துக்கும் திரிகோணமலைக்கும்தான்…. இது சீனா-இலங்கைக்கு மட்டுமே தெரிந்த ரகசியம்.
இப்படித்தான் இந்தியாவை இலங்கை ஏமாற்றுகிறதோ என்ற ஐயங்கள் நமக்கு எழுகின்றன. ஐநா மனித உரிமை ஆணையத்தில் தொடர்ந்து இந்தியா ஈழத்தமிழர் பக்கம் ஆதரவாக இருந்ததில்லை. இந்தியாவின் டெஸ்க் அதிகாரிகளை ஐநா மனித உரிமை ஆணையத்தில் சந்தித்தாலும் நம்மை தவிர்ப்பார்கள். இப்படியான போக்கு ஒன்றரை லட்சம் தமிழர்களுக்கு மேல் கொல்லப்பட்ட முள்ளிவாய்க்கால் துயரத்திற்கு நீதி கிடைக்க இவ்வளவு தாமதங்களும் தடைகளும் உள்ளன. அமெரிக்கா, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகள் ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக இருக்கும் போது இந்தியா மட்டும் ஈழத்தமிழர் என்ற அணுகுமுறை இல்லாவிட்டாலும் அங்கு நடந்த போர்க் குற்றங்களுகாக இந்தியா குரல் எழுப்ப வேண்டாமா? இந்தியாவின் தென்முனை பாதுகாப்பு இந்தியப் பெருங்கடல் ஆளுமை என்ற நிலைகளில் தனக்கு சாதகமாக்கிக் கொள்ள ஈழத்தமிழர் பிரச்சினையை புவி அரசியல் சதுரங்கத்தில் எடுத்துக் கொள்ள வேண்டாமா? இப்படி தான் நியாயங்கள் தமிழர்களுக்கு கிடைக்காமல் இலங்கையில் தவிக்கின்றனர்.
 
இந்த கையறு நிலையில் ஈழத்தமிழர்களுக்கு,
1.   முள்ளிவாய்க்கால் போரின் போது கைதுச் செய்யப்பட்டவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும். பத்தாண்டுகளுக்கு மேலாகி விட்டன.
2. அந்த போரின் போது காணாமல் போனவர்கள் எங்கு உள்ளார்கள் என்று தெரியவில்லை.
3. தமிழர்களிடம் இந்த அபகரிக்கப்பட்ட விவசாய நிலங்களை அதன் உரிமையாளர்களிடம் வழக்குத் தொடுத்தும் திரும்ப வழங்கப்படவில்லை. மைத்ரி சிரிபாலா தனது ஆட்சிக் காலத்தில் உறுதிக் கொடுத்தும் இதை நடைமுறைப்படுத்தவில்லை.
4. மாகாண கவுன்சிலுக்கு உரிய அதிகாரங்களை வழங்குவோம் என்று உறுதி கொடுத்தும் மாகாண கவுன்சில் முதல்வர்களை எந்த கடமையும் ஆற்ற முடியாமல் தவிக்கின்ற நிலை தான்.
5. மீன்பிடி உரிமை போன்ற உரிமைகள், நில வருவாய், நில நிர்வாகம் இந்திய மாநில அரசுகளுக்கு உள்ள அதிகாரங்களைப் போன்று மாகாண கவுன்சிலுக்கு வழங்காமல் தட்டிக் கழித்தது.
6. வடக்கு கிழக்கு மாநிலங்கள் போர் முடிந்து 10 ஆண்டுகள் மேலாகியும் இராணுவத்தை திரும்பப் பெறாமல் தமிழர்களுடைய நிலங்களில் பெரிய கூடாரங்கள் அமைத்து தமிழ்ப் பகுதிகளில் பதட்டத்தை உருவாக்குகின்றது சிங்கள அரசு.
7. தமிழர்கள் விரும்பும் அரசியல் தீர்வை முறைப்படுத்த உலக சமுதாய கண்காணிப்பும் பொது வாக்கெடுப்புக்கு கூட சிங்கள அரசு தயாராக இல்லை.
8. இதுவரை நடந்த மனித உரிமை மீறல் போர்க் குற்றங்களை விசாரிக்க சர்வதேச சுதந்திரமான நம்பகமான விசாரணைக்கும் சிங்கள அரசு உடன்பாடாமல் தட்டிக் கழிக்கின்றது.
9. இந்து மதத்தில் இந்தியாவில் கேதார்நாத், பத்ரிநாத், இராமேஸ்வரம் போன்று நான்கு ஈஸ்வர ஸ்தலங்கள் இந்து மத நம்பிக்கையில் உண்டு. ஆனால் இவையெல்லாம் மறைக்கப்படுகின்றன. இந்துக் கோயில்கள் எல்லாம் அழிவு நிலையில் உள்ளன.

இப்படியான பிரச்சினைகளை தீர்வு காண சிங்கள அரசு முன்வரவில்லை. இந்திய அரசும் இதைக் குறித்து கேட்க வேண்டாமா?  சில நாட்களுக்கு முன்பு கூட இலங்கையில் ராஜபக்சே அரசு,
சார் ஜென்ட் சுனில் ரத்த நாயக் என்ற (ராணுவ  குற்றவாளி)   தூக்கு தனடணையை கைதி நேற்று சகல மரியாதைகளோடு கரோனா வைரஸ் காரணம் காட்டி விடுதலை செய்துள்ளது.இதை ஐநாவும் கண்டித்தது.
பிரிட்டன் பிரதமர் நேரில் வந்து இதைக் குறித்தெல்லாம் அறிந்து கடந்த காலத்தில் கருத்தைச் சொன்னார். ஆனால் நம் தொப்புள் கொடி உறவு என்று வாய்மூடி மெளனமாக இருக்கின்றோம். இலங்கையில் தமிழர்கள் சரிசமமாக, சமநீதிப் பெறக் கூடிய நிலையில் தொடர்ந்து பாதிக்கப்படுகின்றனர். இன்றைக்கு அங்கே நாடாளுமன்ற தேர்தல் பணிகளில் ஒவ்வொருவரும் களத்தில் உள்ளனர். தேர்தல் வரும் போகும், ஆனால் அமைப்பு ரீதியான பாதுகாப்பு ஒழுங்குமுறை அவசியம் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே ஐநா மனித உரிமை ஆணையத்தில் உள்ள நிலுவையில் உள்ள தீர்மானங்களை திரும்பப் பெறவோ தன்னை விடுவித்துக் கொள்ளவோ சர்வதேச சட்டங்களின் படி முடியாது என்பதை உலக சமுதாயம் குரலெழுப்ப வேண்டும்.
சரி, தமிழர் என்று பார்க்காமல் மனிதநேயம் என்றாவது பார்த்து இந்தியா குரலெழுப்புமா?
சர்வதேச சமுதாயமும் இதைக் குறித்து முனைப்பு காட்ட வேண்டாமா?

கே. எஸ். இராதாகிருஷ்ணன்.
06.04.2020
#ksrposts

No comments:

Post a Comment

இலங்கை நாடாளுமன்ற தேர்தல் முடிந்தது இன்று

———————————————————-  இலங்கையில் ஜனாதிபதித் தேர்தல் முடிந்து. இதில்   தமிழர்கள்    அதிகம்   வாழும்பகுதி யாழ்ப்பாணம்   இங்கு   6. எம்பிக்கள்,...