Monday, August 16, 2021

நாட்டின் விடுதலை திருநாள் 75 மத்திய மாநில உறவுகள் – மாநில சுயாட்சி குறித்தான குறிப்புகள்:

5

 

நாட்டின் விடுதலை திருநாள் 75

மத்திய மாநில உறவுகள் – மாநில சுயாட்சி குறித்தான குறிப்புகள்:

சங்கிலியின் வலிமை அதன் வளையத்தில்என்பார்கள். மத்திய அரசின் வலிமைபலமானமாநிலங்கள்தான். இதை ஓரிரு மத்தியஆட்சியாளர்கள் புரிந்துகொள்ள மறுக்கிறார்கள்.மாநிலங்களிடமிருந்து அதிகாரங்களைப்பறிப்பதற்கும்மத்திய அரசிடம்அதிகாரங்களைக் குவிப்பதற்கும் செய்யப்படும்பல்வேறு முயற்சிகள் கடந்த 75 ஆண்டுகளில் நடந்துகொண்டே இருக்கின்றது. நாளை விடுதலைத் திருநாள். நாடு விடுதலைப் பெற்று 75 ஆண்டுகள் நிறைவு பெறுகின்ற நாளாகும்.

இதுவரை பிரிவு -356 ஐ கொண்டு மத்திய அரசு மாநில அரசுகளை ஏறத்தாழ 128 முறை கலைத்துள்ளது. எஸ்.ஆர்.பொம்மை வழக்கு தீர்ப்பிற்கு பின் ஓரளவு இந்த முறை கட்டுபடுத்தப்பட்டுள்ளது.

 

1. மாகாண சுயாட்சி என்பதைக் குறித்து திலகர், சுயராஜ்யம் எங்களுடைய பிறப்புரிமை என்று சொன்ன காலத்திலிருந்து கவனிக்கவேண்டும்.காங்கிரஸ் தலைவர்கள் 1916-ல் மதன்மோகன் மாளவியா, சாப்ரு, ஜின்னா, முகமது அலி அடங்கிய 19 பேர் கொண்ட குழு மற்றும் லக்னோ ஒப்பந்தம் என்று மாநில எல்லைக்குள் முழு சுயாட்சி வேண்டும் என்று பிரகடனப்படுத்தினர். அதன் பின்பு 03.04.1946-ல் மௌலானா அபுல்கலாம் ஆசாத்தும் மாநிலங்கள் எல்லைக்குட்பட்ட அதிகாரங்களை சமரசம் செய்யக்கூடாதென்று கூறினார்.

 

2. தினமணி ஆசிரியர் ஏ.என்.சிவராமன் இதே காலக்கட்டத்தில் தமிழில் மாகாண சுயாட்சி என்றபுத்தகத்தை தினமணி பிரசுரமாக வெளியிட்டார்.(அன்றைய சென்னை ராஜதானி பகுதியில்).

 

3. கே.அனுமந்தையா தலைமையில் லால் பகதூர்சாஸ்திரி பிரதமராக இருந்த காலத்தில் மத்திய அரசு நிர்வாகக்குழு சீர்த்திருத்தக் குழுஅறிக்கையில், மத்திய மாநில உறவுகள் கூட்டாட்சி அமைப்பைக் குறித்து அந்தஅறிக்கையில் பரிந்துரைகளும் வழங்கப்பட்து.கே.அனுமந்தையா கர்நாடக முதல்வராக இருந்தவர். அரசியல் சாசன நிர் அவையில் மாநிலசுயாட்சிக்காக காங்கிரஸ் கட்சியிலிருந்தே குரல் கொடுத்தார். இவருடைய அறிக்கையேமுதல் முதலாக சுதந்திர இந்தியாவில் மாநிலசுயாட்சி குறித்து வழங்கிய முதல்அறிக்கையாகும். 

 

4. பேரறிஞர் அண்ணா தன்னுடைய உயிலில்:

மாநிலங்கள் அதிக அளவில் அதிகாரங்களைப் பெறத் தக்கவிதத்தில் இந்திய அரசியல் சட்டம் திருத்தி அமைக்கப்பட வேண்டும் என்பது பற்றி, வாய்ப்புக் கிடைக்கும் போதெல்லாம் எடுத்துக் கூறி வருகிறேன். இதற்கான நல்லாதரவு நாளுக்குநாள் வளர்ந்தபடி உள்ளது என்பதிலே எனக்குத் தனியானதோர் மகிழ்ச்சி; நமது கழகம் மட்டுமின்றி வேறு பல அரசியல் கட்சிகளும் கட்சி சாராத அறிவாளர் பலரும் இதற்கு ஆதரவு காட்டுகின்றனர். அரசினுடைய இறையாமை (ஒப்புயர்வற்ற ஆட்சி அதிகாரம்) (Sovereignty) என்பதற்கு நாம் கொள்ளும் பொருள் என்ன? அரசியல் இறைமையானது (Political Sovereignty) பொது மக்களிடம் நிலைத்துள்ளதென நமது அரசியலமைப்பின் (Constitution) முகவுரை கூறுகிறது. சட்டம் சார்ந்த இறைமையானது (Legal Sovereignty) கூட்டாட்சி ஒன்றியத்திற்கும் (மத்திய அரசு) அதன் அங்கங்களுக்குமிடையே (மாநிலங்கள்) பிரித்துத் தரப்பட்டுள்ளது. இன்னும் அதிகப் பயன்களை விளைவிக்கும் இறைமையைப் பெற்ற அங்கங்களாக, மாநிலங்களைத் திகழச் செய்வதற்கே எங்கள் திட்டங்கள் பயன்படுகின்றன என்று நீங்கள் ஏன் எடுத்துக் கொள்ளக் கூடாது? திராவிட நாடு வேண்டும் என்ற கோரிக்கையைக் கிளப்பியவுடன், நாங்கள் இறைமையின் ஆணிவேரை வெட்டுகிறோம் என நீங்கள் ஏன் எண்ணிக் கொள்கிறீர்கள்?முழுமையான இறைமை, குறிப்பிட்ட ஒரே ஓர் இடத்தில் எப்போதும் தங்கி விடுவதில்லை.

நாம் ஒரு கூட்டாட்சி அமைப்பை (Fedral from) ஏற்றிருக்கிறோம். அரசமைப்பை உருவாக்கியவர்கள், ஒற்றையாட்சி அமைப்புக் (Unitary from) கூடாது; கூட்டாட்சியமைப்பு முறை தான் வேண்டுமென்று விரும்பினார்கள். ஏனெனில், அரசியல் தத்துவஞானிகள் பலர் சுட்டிக் காட்டியுள்ளபடி, இந்தியா மிகப் பரந்து கிடக்கின்றது. உண்மையில் அதனை ஒரு துணைக் கண்டம் என அழைக்கக் கூடிய அளவிற்கு அது பரந்து விரிந்து கிடக்கின்றது.எஃகால் செய்த வரைச் சட்டத்தைப் போல் வலிவான ஓர் ஒற்றையாட்சியமைப்பை ஏற்க முடியாத அளவிற்கு, இந்நாடு மாறுபட்ட மரபுகளையும், வேறுபட்ட வரலாறுகளையும், பல திறப்பட்ட மனோபாவங்களையும் கொண்டுள்ளது. சென்ற பதிமூன்றாண்டுகளாக நமது கூட்டாட்சி செயல்படும் தன்மையானது மாநிலங்களிடையே விரக்தி உணர்ச்சியைத் தோற்றுவித்துள்ளதென்பதே எனது குற்றச்சாட்டு.மாநிலங்கள், சுங்கத் தொகை வசுலிக்கக்கூடிய சாதாரண நகராட்சி மன்றங்களைப் போல் விரைந்து மாறி வருகின்றன. அவை, இருக்கும் இடம் தெரியாமல் பின்னணிக்குத் தள்ளப்பட்டுள்ளன. அதிக அதிகாரங்கள் தரப்பட வேண்டுமென்ற இயற்கையான உணர்வுகள் மாநிலங்களிடம் தோன்றியுள்ளன. நமது கூட்டாட்சியமைப்பின் இவ்வகையான நடைமுறை, மாநிலங்களை மேலும் மேலும் விரக்தியடையச் செய்துள்ளது என்பதை நான் தெளிவாக்க விரும்புகிறேன். நமது அரசியல் சட்டம் மறுபரிசீலனை செய்யப்படவேண்டும் – மறு ஆய்வும் செய்யப்பட வேண்டும் – இதனை மத்திய அரசு உணர வேண்டும் என்பதே மாநிலங்களின் கோரிக்கைகளாகும்.

எனவே நமது அரசமைப்புச் சட்டத்தின் கூட்டாட்சி முறையிலுள்ள பல ஒற்றை ஆட்சித் தன்மைகளை எதிர்த்துப் போரிடுகின்ற ஒரு தாக்குதல் முன்னணியாகவே (Spearhead) நீங்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தைக் கருதிக் கொள்ள வேண்டுகிறேன். நாடாளுமன்றத்தின் அறிவுசால் உறுப்பினர்களாகிய நீங்கள் (மாநிலங்களின்) இந்தச் சிக்கலை ஏன் மூடி மறைக்கின்றீர்கள்? அதனை உயர்மட்ட அரசு  மன்றத்திற்குக் கொண்டு வருவீர். அதனை (அச்சிக்கலை) தங்குத் தடையின்றி நடமாட அனுமதிப்பீர்; (தற்போதைய) கூட்டாட்சியை, ஒரு மெய்யானக் கூட்டாட்சியாக மலர வைப்பதற்கு வழி வகை செய்திடுவீர், என முழங்கினார்.விடியற்காலையே வாழ்க (Hail the Dawn) என்ற மகுடமிட்டு, 1969-ஆம் ஆண்டின் ஹோம்ரூல் (Home Rule) வார இதழில் தம்பிக்கு எழுதிய தன் இறுதி முடங்கலில், அன்புத்தம்பி பதவிப் பித்துப் பிடித்துத் திரிபவனல்லன் நான். வெற்றுத்தாளில் கூட்டாட்சி சார்புடையது எனக் கூறி, நடைமுறையில் மத்திய அரசிற்கு மென்மேலும் அதிகாரங்களைக் குவித்துக் கொண்டிருக்கிற (நமது) அரசியல் சட்டத்தின் கீழியங்கும் ஒரு மாநிலத்திற்கு நான் முதலமைச்சர் என்பதில் சிறிதும் மகிழ்ச்சி அடையவில்லை. இதற்காக மத்திய அரசிற்கு எரிச்சலூட்டி, டெல்லியுடன் சச்சரவு கொள்வதே என் நோக்கம் என்று எனது நல்ல நண்பரான உயர்திரு. நம்பூதிரிபாடு கூறுவதையும் நான் விரும்பவில்லை. அதனைச் சரியான கால கட்டத்தில் தீர்மானிக்க வேண்டுமென்பதும் இன்றியமையாதது.உண்மைதான்; அப்படித் தீர்மானிக்கும் முன்னர், கூட்டாட்சித் தத்துவத்தை மக்களுக்குக் கற்றுத் தரவேண்டும். கொல்லைப்புற வாயில் வழியாக நுழையும் ஒருவகை இரட்டை ஆட்சியே நமது இன்றைய அரசியல் சட்டம் என்பதை, தி.மு.க. ஆட்சிப் பொறுப்பிலிருப்பதன் மூலமாக, சிந்திக்கும் ஆற்றல் படைத்த மக்களின் கவனத்திற்குக் கொண்டு வரமுடியுமெனில், உண்மையில் அதுவே நாம் அரசியல் உலகத்திற்குச் செலுத்திய உரிய பங்காகும்.

 

5. தலைவர் கலைஞர் சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ராஜமன்னார், உயர்நீதிமன்ற நீதிபதி பி.சந்திர ரெட்டி, சென்னை பல்கலைக்கழக துணை வேந்தரான ஏ.லட்சுமண சுவாமி முதலியார் ஆகிய மூவரின் தலைமையில்மாநிலசுயாட்சி கோரிக்கைக்கான ஆய்வு குழுவை தன்னுடைய ஆட்சிகாலத்தில் அமைத்தார். புது டில்லியில் தலைவர் கலைஞர் 17.03.1969-ல் இந்த அறிவிப்பைச் செய்தார். இராஜமனார் குழுவின்அறிக்கையை 27.05.1971-ல் அன்றைய முதல்வர் தலைவர் கலைஞரிடம் இந்த குழுவினர் வழங்கினர்.

 

6. தமிழக ட்டப் பேரவையில் இராஜமனார் குழுவின் அறிக்கையை குறித்த விவாதத்திற்கு பின்பு 1974 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மாநில சுயாட்சி தீர்மானத்தை தலைவர் கலைஞர் முன்மொழிய,தீர்மானம் நிறைவேற்றப்பட்டு மத்திய அரசுக்கு அன்றே அனுப்பட்டது. அதற்கு அன்றைய பிரதமர் இந்திராகாந்தி, முதல்வர் கலைஞருக்கு இது குறித்து பதிலும் அனுப்பினார்.

 

7. தினமணி ஆசிரியர் ஏ.என்.சிவராமனுக்குப் பின், தமிழகத்தில் ம.பொ.சி, முரசொலிமாறன், கு.ச.ஆனந்தன், செ.மாதவன், பழ நெடுமாறன் என பலர் மாநில சுயாட்சி குறித்து விளக்க நூல்கள்எழுதி வெளியிட்டனர்.

 

8. இந்திரா காந்தி 356 பிரிவை கொண்டு மாநில அரசுகளை தங்கள் விருப்பம் போல கலைத்ததால்பெரும் எதிர்வினைகளை அவர் சந்திக்க வேண்டியிருந்தது. இந்த நிலைமையை சமன்படுத்தவும், எதிர்வினைகளை எதிர்கொள்ளவும் நீதிபதி சர்காரியா தலைமையில் மத்திய மாநில உறவுகளைக் குறித்து ஆராயக்குழு அமைத்து, பின் அந்த குழு இரண்டு தொகுதிகளாக அறிக்கையும் வழங்கியது. இந்த காலகட்டத்தில் குடியரசு தலைவராக இருந்த நீலம் சஞ்சீவ ரெட்டி தனது மாநிலங்களுடைய அதிகாரங்கள் பறிபோக கூடதென்று தன்னுடைய உரையில் தெளிவாக அறைகூவலாக பேசியது பெரும் விவாதத்தை உறுவாக்கியது.

 

9. மேற்கு வங்க முதல்வராக இருந்த ஜோதிபாசு மத்திய மாநில உறவுகள் மற்றும் நிதி பங்கீடுகுறித்து வெள்ளை அறிக்கையும் வெளியிட்டதும்விவாதத்தை கிளப்பியது.

 

10. ஆந்திர முதல்வராக இருந்த என்.டி.ராமராவ் மத்திய மாநில உறவுகள், பிரிவு:356 திரும்பப்பெறல் குறித்தான காங்கிரஸ் அல்லாத எதிர்கட்சிகள் மாநாட்டை தராபாத்தில் கூட்டி நிறைவேற்றபட்ட தீர்மாங்கள் மத்திய மாநில உறவுகளான அடிப்படை ஆவணமாக இன்றைக்கும் உள்ளது.

 

11. அசாம் மாணவர்கள் அமைத்த அசாம் கணபரிசத்கட்சியின் சார்பில் எதிர்கட்சிகளை அழைத்துசில்லாங்கில் கூட்டிய மாநாட்டில் நிறைவேற்றிய தீர்மானங்கள்.

 

12. எம்.ஜி.ஆர். ஆட்சிகாத்தில் சென்னை கன்னிமாரா ஓட்டலில் இரண்டு நாள் நடந்த மத்திய மாநில உறவுகள் குறித்தான அகில இந்தியாவை சார்ந்த பலர் கலந்துகொண்ட கருத்தரங்கம்.

 

13. காஷ்மீர் மாநில முதல்வராக இருந்த பாரூக் அப்துல்லா ட்சியை கலைத்த போது, காங்கிரஸ் இல்லாத எதிர்கட்சிகளை அழைத்து அவர்தலைமையில் மாநாடு ஸ்ரீநகரில் நடந்தது.தலைவர் கலைஞர் இந்த மாநாட்டில் கலந்துகொண்டார். இந்த மாநாட்டின் உரைகள் அனைத்தும் ஒரு நூலாக பின்பு வெளியிடப்பட்டது.

 

14. கர்நாடக முதல்வராக இருந்த ஜனதாதளத்தைச்சேர்ந்த எஸ்.ஆர்.பொம்மையுடைய ஆட்சி கலைக்கப்பட்டது. உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தார். உச்சநீதிமன்றம் மத்திய அரசு தன் விருப்பம் போல மாநில அரசுகளை கலைக்கமுடியாது என்று கூறி சில நிபந்தனைகளையும் மத்திய அரசுக்கு வழங்கியது. இதனால் பிரிவு 356 பயன்படுத்துவது தற்போது அதிகமாக இல்லை. இதுவரை 105 முறைக்கு மேல் மாநில அரசுகள் கலைப்பு கடந்து வந்த 75 ஆண்டுகளில் நடந்துள்ளன. அரசியல் சாசனத்திருத்தமும் இதுவரை 127 திருத்தங்கள் வரை எட்டிவிட்டன. இப்படி குழப்பமான சூழலிலும் நம்முடைய இந்திய ஜனநாயகம் இயங்கிகொண்டுதான் இருக்கின்றது.

 

15. கர்நாடக முதலமைச்சராக ராமகிருஷ்ண ஹெக்டே இருந்த போது காங்கிரஸ் அல்லாதமுதல்வர்கள் மாநாட்டைக்கூட்டி கவர்னர் அவசியமில்லை என்ற வெள்ளை அறிக்கையும், பிரிவு-356ஐ பயன்படுத்த கூடாதென்றும் எனப் பல்வேறு முக்கிய தீர்மானங்கள், முடிவுகள் இந்த மாநாட்டில் எடுக்கப்பட்டன.

 

16. ஜம்மு காஷ்மீர் முதல்வர் பாரூக் அப்துல்லா 1999 காலகட்டங்களில் காஷ்மீருக்கு சுயாட்சி வழங்கவேண்டுமென்ற நிபுணர் குழுவின் அறிக்கையை வெளியிட்ட மாநாட்டில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 

17. வாஜ்பாய் பிரதமராக இருந்த காலத்தில் இந்திய அரசியல் சாசனத்தை இன்றைக்குள்ள நிலையில் மாற்றவோ, திருத்தவோ என்னென்ன காரணங்கள், பிரச்சனைகள் உள்ளன என்பதை அறிய எம்.என்.வெங்கடாசலையா குழு அமைக்கப்பட்டது. அதிலும் மத்திய மாநில உறவுகளை குறித்து ஆராயப்பட்டு எம்.என்.வெங்கடாசலையா குழு தனது பரிந்துரைகளையும் வழங்கியது. இதுவரை நமது அரசியல் சாசனத்தில் 127 திருத்தங்களை முன்னெடுத்துள்ளோம். பிரிவு 356 கொண்டு மாநில அரசை கலைப்பது குறித்தான விடயங்களும் உள்ளன. 

 

18. மன்மோகன் சிங் ஆட்சிகாலத்தில் நீதிபதி பூஞ்சி தலைமையில் மத்திய மாநில உறவுகளும், மத்திய பாதுகாப்பு படைகளை மாநில அரசின் ஒப்புதல் இல்லாமல் அனுப்புவதை அறிய குழு அமைக்கப்பட்டது. நீதிபதி பூஞ்சி தை ஆய்வுசெய்து இரு தொகுப்பான அறிக்கையைவழங்கினார்.

 

இப்படியான மத்திய - மாநில அரசுகளின் உறவுகள், மாநில சுயாட்சிக் குறித்தான அறிக்கைகள், மாநாட்டுத் தீர்மானங்கள் நினைவில் கொள்ளவேண்டும்.

 

#KSRpostings

கே.எஸ்.இராதாகிருஷ்ணன்

16-8-2021.

 

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...