Thursday, August 19, 2021

#ஒலி_என்பது_மெலிந்தது. #ஓசை_என்பது_மிகுந்தது.

 #ஒலி_என்பது_மெலிந்தது. #ஓசை_என்பது_மிகுந்தது.

———————————————————-

ஒழுங்குபடுத்தப்பட்ட ஓசை இசை ஆகிறது. ஒழுங்குக்கு உட்படாத இசை ஓசை ஆகிவிடுகிறது.
கொலைகாரனுக்கு மாத்திரம் இசை பிடிக்காது என்று எங்கோ நான் படித்திருக்கிறேன். பாட்டுப் பாடிக்கொண்டே பாதகம் செய்கிறவர்களைப் பார்த்தால் நான் படித்ததில் அநேகம் தவறு என்று படுகிறது. நமக்கு வேகமான இசை உண்டு. என்றாலும் பொதுவாகவே நமது இசை ஆடிப் பெருக்கைப் போல அவசரப்படாமல், மாரிக்காலத்தின் தொடக்கத்தில் மையலோடு புறப்படுகிற சிறுவாணி ஆற்றைப்போல் மெல்ல வருவதாகும்.
பொதுவாக என்று சொல்லுவதைக் கலைஞர்கள் கவனிக்க, நமது இசை மெல்லப் போகிறது. நமது நடனம் நடக்கிறது. நமது தாய்மாரின் தாலாட்டுப் பாடல் தாய்மார்களையே தூங்க வைக்கிறது. நமது பேருந்துகள் நொண்டுகின்றன. நமது குழந்தைகள் பிந்திப் பிறக்கின்றன. தொன்மை என்கிற சொல்லைச் சொல்லி, நாம் தப்பித்துக் கொண்டிருக்கிறோமே தவிர, நாம் பொதுவாகவே அழிந்து போகிற அளவிற்கு நிதானம் உள்ளவர்கள். நம்மை நிர்மூலம் ஆக்குகிற நிதானம் தான், நமது இசை, நடனம், பேருந்து, பிழைப்பு எல்லாவற்றிலும் தெரிகிறது.
அநேக நாடுகளில் குதிரைகளை வளர்க்கிறபோது, நாம் எருமைகளுக்கு எள்ளுருண்டை போட்டுக் கொண்டிருக்கிறோம். உலகம் அநித்தியமானதில் அழிந்து கொண்டிருக்கிற போது, இந்திய மனம் நித்தியத்தை மாத்திரமே நேசித்துக் கொண்டிருக்கிறது. ஆகவேதான், நேரத்தை வீணடிக்கிறவர்களின் எண்ணிக்கை இந்தியாவில் மாத்திரமே அதிகமாக இருக்கிறது.
“மேற்கு இன்றையில் வாழ்ந்து கொண்டிருக்கிறது. நாம் நேற்றில் கரைந்து கொண்டிருக்கிறோம்”.
என் மாதிரி, அரட்டை அடித்துக் கொண்டிருக்கிற மனிதர்களை நான் எந்த இடத்திலும், எப்போதும், சந்திக்க மாட்டேன் என்றே நினைக்கிறேன்.
நமக்கு ஏழு ஏழு பிறவி என்பதால், அதிகமான நேரம் இருக்கிறது; செலவழிக்கவே வேளை இருக்கிறது என்கிற எண்ணம் இந்தியர்களின் உள் மனத்தில் உறங்கிக் கிடக்கிறது. ஆகவேதான், இன்றைக்கே நடக்க வேண்டிய மாறுதல்கள் ஒத்தி வைக்கப் பட்டுக் கொண்டே போகின்றன. எருமைகளைப் பார்த்தால் எனக்கு ஆத்திரம் வருவதற்குக் காலத்தைப் பற்றிய அவைகளின் கவலை இன்மையே காரணமாக இருக்கிறது.
வேகமாக ஓடுகிற நதிகள் கூட
இந்தியாவில் குறைவாகத்தான் இருக்க வேண்டும். இல்லாவிட்டால், பதறாத காரியம் சிதறாது, ஆக்கப் பெறுத்தவன் ஆறப் பொறுக்க வேண்டும், பொறுத்தார் பூமி ஆள்வார் என்கிற பழமொழிகள் தமிழ் நாட்டில் தழைத்திருக்காது. வேகமின்மையே கூடச் சில நேரங்களில் நமது விவேகமின்மையாக இருக்கிறது. நாளைக்கே செத்துவிடப் போகிறோம் என்கிற அவசரத்தில் பரபரப்போடு பணியாற்றுகிறவர்களே வரலாற்றில் சுவடுகளைப் பதித்துவிட்டுப் போகிறார்கள்.
காலண்டரில் தேதிகளைக் கிழிப்பதற்குச் சங்கடப் பட்டு, வருட முடிவில் அப்படியே அவைகளை எறிந்துவிடுகிற சோம்பேறிகளை நான் பார்த்திருக்கிறேன். இவர்கள் சாப்பிட்டுவிட்டுக் கை கழுவாமல் இருந்தால், அடுத்த வேளை சாப்பிடாதபடி இந்த மகான்களின் வாய்களை ஊசி நூல் போட்டுத் தைத்துவிடுவது நல்லது.
எறும்பின் சுறுசுறுப்பைப் பற்றி ஒரு சோம்பேறிக்குக் கவிதை எழுத இந்தியாவில் ஏழு நாட்கள் ஆகின்றன.தகுதியற்ற செயல்பாடு இல்லாதவர்களை கொண்டாடுகறேம்.
இந்தியா சோம்பேறிகளின் மடமாக இருக்கிறவரை, பூலோக சொர்க்கம் ஒரு புரட்டாகவே இருக்கும். குழாயடிகளில் சண்டை போட்டுக் காலத்தை நெரித்துக் கொல்லுகிற சில தாய்மார்கள் தேச வரைபடத்தை தினமும் சாப்பிடுகின்ற கரையான்கள். எதற்கு வந்தாய் என்று கேட்கிறபோது, சும்மா என்று சொல்லுகிறவன் குறைந்தபட்சம் ஆறு அடிகளுக்காவது உட்படுத்தப்பட வேண்டும். பொழுது போக்கு என்கிற சொல்லை நமது அகராதிகளில் இருந்து அகற்றிப் போடாதவரை நமது முன்னேற்றம் நத்தையின் நாலு கால் பாய்ச்சலாகவே இருக்கும். இந்த வேகத்தின் காரணமாகவே, எல்லா இசைகளுக்கும் எனது காதுகள் நீளுகின்றன.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
19.08.2021

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...