Thursday, August 19, 2021

#ஆப்கனிஸ்தான்*


 #ஆப்கனிஸ்தான்*

*புலிகளுடன் தொடர்பில்லைஎன தலிபான் கூறுவது ஒரு ஒருநாள் செய்தி. அவ்வளவுதான்*
தங்களது எதிர்காலத்தை தீர்மானித்துக் கொள்ள ஆப்கன் மக்களுக்கு உரிமை இருக்கிறது.
கடந்த பல பத்தாண்டுகளாக முதலில் அன்றைய சோவியத், பின்னர் இன்றைய அமெரிக்கா என்ற இரண்டு வல்லரசுகளின் விளையாட்டு திடலாக ஆப்கன் ஆகியது.
தலிபான், முஹாஹிஜிதீன்களின் நிர்மாணத்திற்கே அமெரிக்கர் தான் பிள்ளையார்-சுழி போட்டனர்.
ஆனால், இடைக்காலத்தில் தலிபான்களின் ஆட்சி ஒன்றும் சொல்லிக்கொள்ளும் படியாக இருக்கவில்லை.
அனைத்துலகம் ஏற்றுக் கொண்டுள்ள மனித உரிமை பட்டயத்தை மிகவும் ஆவேசமாக அவர்கள் மீறினார்கள்.
அனைத்துமே மேற்கத்திய ஊடக அவப்பிரசாரம் என்று அவர்கள் இன்று பூசி மெழுக முடியாது.
எனினும் இன்று காலம் அவர்களுக்கு பாடம் படிப்பித்து இருக்கும் என நம்புவோம்.
வல்லாதிக்க நோக்கங்களுக்கு வெளியே தம் நாட்டின் எதிர்காலத்தை தீர்மானிக்க அப்பாவி ஆப்கன் மக்களுக்கு இருக்கின்ற உரிமையை, முதலில் ஆப்கன் ஆட்சியாளர்கள்தான், அவர்கள் எவராக இருந்தாலும் பொறுப்புடன் பயன்படுத்த வேண்டும்.
கடந்த காலங்களில் இரு வல்லரசுகளின் போட்டியில் சீரழிந்த தம் வரலாற்றை மனதில் கொண்டு இப்போது மற்றுமொரு வல்லரசான சீனாவின் விளையாட்டு திடலாக ஆப்கன் மாற, தலிபான்கள் இடமளிக்க கூடாது.
சமூக நீதி, பெண் உரிமை,சட்ட ஒழுங்கு, மனித உரிமைகள், குறிப்பாக கல்வி கற்பதற்கும், தொழில் செய்வதற்குமான ஆப்கன் பெண்களின் உரிமை ஆகியவற்றை மதிப்பதன் மூலம், சொல்லொணா துன்பங்களை அனுபவித்த ஆப்கன் மக்களுக்கு, இது "நம்ம ஆட்சி" என்ற நம்பிக்கையை ஏற்படுத்த தலிபான்கள் படிப்படியாக முன்வர வேண்டும்.
நாட்டை மீண்டும் அடிப்படைவாத 9ம் நூற்றாண்டுக்கு கொண்டு சென்று, கடந்த 20 ஆண்டு கால அமெரிக்க ஆக்கிரமிப்பு ஆட்சியே பரவாயில்லை என ஆப்கன் இளைய தலைமுறை தீர்மானிக்கும் நிலைமையை, தலிபான்கள் ஏற்படுத்த கூடாது.
இல்லா விட்டால் இயல்பு வாழ்வு திரும்பாது. ஸ்திரமான ஆட்சியும் ஏற்படாது.
ஆகவே, ரஷ்யா, அமெரிக்கா போன்று சீனாவும் இன்னொரு சுற்று ஓடலாம். அது இறுதி சுற்றாகவும் மாறி விடலாம்.
அப்பாவி ஆப்கன் மக்கள் மத்தியில் இரத்த ஆறு இனியும் ஓடக்கூடாது.
"புலிகளுடன் எங்களுக்கு தொடர்பிருக்கவில்லை" என்று இன்று தலிபான் பேச்சாளர் கூறுவது, இலங்கையில் ஒரு "ஒருநாள் செய்தி".
கடந்த இடைக்கால தலிபான் ஆட்சியில், "பாமியன்" உலக பெளத்த மரபுரிமை சின்னங்கள் குண்டால் தகர்க்கப்பட்டமை உண்மைதானே..!
இதுபோன்ற ஆவேச முட்டாள்தனங்களை செய்யாமல் ஆப்கன் மக்களின் உடனடி தேவையான "அமைதி-நிம்மதி" யை பெற்றுத்தரும் உள்நாட்டு, வெளிநாட்டு சூழலை ஏற்படுத்த தலிபான்கள் முன்னுரிமை வழங்க வேண்டும்.
17-8-2021.

No comments:

Post a Comment

#மீனாட்சிபுரம்மதமாற்றம் 1981 #Meenakshipurammassconversion

*Meenakshipuram mass conversion had a ripple effect* Around 150 Adi Dravidar families embraced Islam at Meenakshipuram in Tirunelveli in 198...