Tuesday, August 31, 2021

#டெல்லி_மோதி_மகால்_உணவகம்:

 #டெல்லி_மோதி_மகால்_உணவகம்:

———————————————————

டெல்லி சென்றால் நேரம் கிடைக்கும்போது தர்யகஞ்சில் உள்ள மோதி மகாலுக்கு, இரவு உணவுக்கு செல்வது வாடிக்கை. இது பிரதமர்கள் நேரு, வாஜ்பாய், நடிகர் ராஜ்குமார் என பல ஆளுமைகள் வந்து பெரிய முற்றம் மாதிரி இடத்தில் அமர்ந்து அப்போது உணவருந்திய இடமாகும்.
மோதி மகால் 1950-60 களில் இருந்து டெல்லியின் முக்கிய உணவருந்தும் இடமாகும். டெல்லி செங்கோட்டை பக்கத்தில் பழைய டெல்லியில் சிறிய வெங்காயத்தோடு எலுமிச்சை கலந்து பெரிய கிண்ணத்தில் ( Bowl) வைத்திருப்பார்கள். அது அவ்வளவு ருசியாக இருக்கும்.
கடந்த1973 துவக்கத்தில் நாடாளுமன்றத்தில் 1960-70 களில் கடுமையான வாதங்களை வைத்தவரும், மத்திய நிதித்துறையின் ராஜாங்க அமைச்சருமான முக்கிய அரசியல் புள்ளி தாரரகேஷ்வரி சின்கா அம்மையார்.
இங்கு அழைத்து சென்றார். அதிலிருந்து இந்த உணவகத்திற்கு செல்வது வாடிக்கை.
ஒருமுறை வைகோவோடு 1998-காலகட்டத்தில் இந்த உணவு விடுதிக்கு, இரவு உணவுக்கு சென்றபோது தென்மேற்கே ஒரு மேசையை(Table) நோக்கி கைக்காட்டி வைகோ கூறினார்; 1981 காலகட்டத்தில் ஒரு முறை வாஜ்பாயும் அவர் நண்பர்களும் உணவருந்தி கொண்டிருந்தார்கள். அன்றைக்கு நானும் வந்திருந்தேன். இரண்டு மூன்று இளைஞர்கள் வாஜ்பாய் அமர்ந்திருந்த உணவு மேசைக்கு(Table) பக்கத்தில் அமர்ந்து சத்தம் போட்டு கொண்டிருந்தனர். வாஜ்பாய் அமைதியாக அவர்களைப் பார்த்து அந்த பக்கம் போங்கள் என்று கைக்காட்டி சொல்லிக் கொண்டு இருந்தார். அனால் அவர்கள் போகவில்லை. நான் எழுந்து போய் அவர்களிடம் சத்தம் போட்டு போக சொன்னேன் என்ற செய்தியை என்னிடம் வைகோ சொன்னார்.
1983-ல் ஒரு முறை இலங்கைத் தமிழரசு கட்சித் தலைவர் அமிர்தலிங்கம், சிவ சிதம்பரம், யோகேஸ்வரன், சம்பந்தனோடு இலங்கை தமிழர் பிரச்சனை துவக்கத்தில் டெல்லி சென்றபோது இந்த மோதி மகாலுக்கு இரவு உணவருந்த சென்றோம். அங்கே ஒருசேர பா.ஜ.க தலைவர்கள் அமர்ந்து இருந்தனர். இது அசைவ விடுதிதான் இருப்பினும் இந்த தலைவர்களில் ஒரு சிலர் சைவ உணவே உண்பார்கள் என்று யோசித்துகொண்டே இருந்தேன்.
அந்த சமயத்தில், அங்கே தமிழகத்தை சார்ந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜனா கிருஷ்ணமூர்த்தி இருந்தார். அவருடன் வாஜ்பாய், அத்வானி, முரளி மனோகர் ஜோசி, சிக்கந்தர் பக்த், ஜே.பி.மார்ட்டின், சுந்தர் சிங் பண்டாரி, கே.ஆர்.மல்கானி, சுஷ்மா சுவராஜ், மதன் லால் குரானா, கல்யாண்சிங், விஜயராஜ சிந்தியாவும் இருந்தார்கள் என்று நினைவு.
ஜனா கிருஷ்ணமூர்த்தியிடம் அமிர்தலிங்கம் அவரோடு உடனிருந்த தமிழ் தேசிய கூட்டணித் தலைவர்களையும், என்னையும் அறிமுகம் செய்து வைத்தெல்லாம் இன்றும் நினைவில் உள்ளன.
மோதி மகாலுக்கு சென்றால் பட்டர் சிக்கன், தந்தூரி சிக்கன், டால் மக்கானி இப்படி பல உணவு வகைகளுடைய சுவை பாகம் அருமையாக இருக்கும். அந்த உணவினுடைய மணமும், காரமும் நம்மை உண்ணத்தூண்டும். அப்படியான உணவுவகைகள் மோதி மகாலில் கிடைக்கும்.
இந்த மோதி மகால் உணவகத்தை குண்டன் லால் குஜ்ரால் நிறுவினார்.
டெல்லியின் அடையாளம் இந்த மோதி மகால் உணவகம். கிட்டத்தட்ட 70 ஆண்டுகளுக்கு மேலாக பல்வேறு இந்திய ஆளுமைகள் கால்பதித்த உணவு விடுதி. சமீபத்தில் டெல்லிக்கு சென்றபோது பழைய டெல்லியில் இருந்த உணவு விடுதிக்கு செல்ல நேரம் கிடைத்தது. அங்கு வழக்கறிஞர், நண்பர் சுதர்சன் மேனனோடு சென்றுவந்தேன்.
அதே மணம், அதேசுவை.
தி.ஜானகிராமன் இதை பார்த்திருந்தால் இதையும் ரசித்து எழுதியிருப்பார்.
(# 3703, Netaji Subhash Marg, Daryaganj)
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
31-8-2021.

No comments:

Post a Comment

Meeting_with_HonourableAPDeputyChiefMinister, #ShriPawanKalyanGaru

  #Meeting_with_HonourableAPDeputyChiefMinister , #ShriPawanKalyanGaru #ஆந்திராவின்துணைமுதல்வர் #பவன்கல்யாண் உடன் சந்திப்பு ——————————...