———————————-
தலையாலங்கானத்துச் செருவென்ற பாண்டியன் நெடுஞ்செழியன் மதுரையை ஆண்டபோது, அங்கு திருவோணத் திருவிழா நடைபெற்ற செய்தியை மாங்குடி மருதனார் மதுரைக் காஞ்சியில் விரிவாகப் பாடியுள்ளார். ஆவணி மாதம் நிறைமதி நன்னாளான திருவோணத்தன்று திருமால் பிறந்ததாகவும், அதனை மக்கள் அனைவரும் ஒன்றுகூடி விழாக் கொண்டாடியதாகவும் குறிப்பிடுகிறார். இதனை,
”கணம்கொள் அவுணர்க் கடந்த பொலந்தார்
மாயோன் மேய ஓண நல் நாள்,
கோணம் தின்ற வடு ஆழ் முகத்த,
சாணம் தின்ற சமம் தாங்கு தடக்கை,
மறம் கொள் சேரி மாறு பொரு செருவில்,
மாறாது உற்ற வடுப் படு நெற்றி,
சுரும்பு ஆர் கண்ணிப் பெரும் புகல் மறவர்
கடுங் களிறு ஓட்டலின், காணுநர் இட்ட
நெடுங் கரைக் காழகம் நிலம் பரல் உறுப்ப,
கடுங்கள் தேறல் மகிழ் சிறந்து திரிதர'' (ம.கா.590-599)
என்ற மதுரைக்காஞ்சி பாடலடிகள் மெய்பிக்கின்றன. ஓண நன்னாளன்று காய்கறி, கனி முதலிய உணவுப் பொருள்களை விருந்தினருக்குக் கொடுத்து மகிழ்ந்திருந்தனர். வீரர்கள் "சேரிப்போர்' என்னும் வீர விளையாட்டை நிகழ்த்தினர் என்றும், வெற்றி பெற்ற வீரர்களுக்குப் பசுக்களைப் பாண்டிய மன்னன் வழங்கினான் என்றும் மதுரையில் நடைபெற்ற ஓணம் பண்டிகையை விளக்கியுள்ளார் மாங்குடி மருதனார். இறையனார் களவியல் உரைக்காரர் நக்கீரர், தமிழ்நாட்டில் நடைபெற்ற திருவிழாக்களைக் கூறுமிடத்து ""மதுரை ஆவணி அவிட்டமே, உறையூர்ப் பங்குனி உத்திரமே, கருவூர் உள்ளி விழாவே என இவையும்'' என்று குறிப்பிடுகிறார். இவர் குறிப்பிடும் மதுரை ஆவணி அவிட்டம், திருவோணத் திருவிழாவையே குறிப்பதாக மு.இராகவையங்கார் கருதுகிறார்.
தமிழ் நாட்டில் நடைபெற்ற ஓணம் பண்டிகையைப் பெரியாழ்வாரும் திருஞானசம்பந்தரும் குறிப்பிடுகிறார்கள். திருமாலுக்கு உரிய நாள் திருவோணம் என்ற போதிலும், சென்னை - மயிலாப்பூர் கபாலீசுவரர் திருக்கோயிலில் திருவோண விழா நடைபெற்ற செய்தியை திருஞானசம்பந்தர் குறிப்பிடுகிறார்.
தமிழகத்தில் பண்டைக் காலத்தில் சிறப்பாக நடைபெற்ற இந்த ஓணம் பண்டிகை, பின்னர் ஏனோ வழக்கொழிந்து போயிற்று. ஆனால், இன்று ஓணம் பண்டிகை கேரளா முழுவதும் விழாக் கோலம் பூண்டு இன்பத் திருவிழாவாகக் கொண்டாடப்பெற்று வருகிறது.
இன்றைக்கு கேரளம் பண்டைய காலத்தில் தமிழர்கள் ஆண்ட சேர நாடு தென் கர்நாடகம் வரை தமிழ் மன்னர்கள் சென்று சாளுக்கிய தேசத்தை பிடித்து ஆண்டனர். அதுபோலவே ஆந்திரத்தில் கிருஷ்ணா - கோதாவரி ராஜமுந்திரி நகர் வரை சோழர்கள் ஆட்சி செய்தனர் என்ற வரலாறு இருக்கிறது. இந்த வகையில்தான் திராவிடம் என்று குறிப்பிடுகிறோம் என்பதை மனதில் கொள்ள வேண்டும்.
No comments:
Post a Comment