#தாலிபான்_ஆப்கானிஸ்தான்
———————————————————-
தாலிபான் கட்டுப்பாட்டிலுள்ள ஆப்கானிஸ்தானில் நிகழும் பிரச்சனைகள் புவியரசியலில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது.
ஊடகத்தில் பணியாற்றும் ஷாப்னம் தவ்ரன் எப்படியெல்லாம் அங்கு நிலமைகள் இருக்கின்றன என்பதையும், பெண்உரிமை, அடிப்படை உரிமைகள், பின்நவீனத்துவ வழக்கங்கள் என அனைத்தும் முடக்கப்பட்டுள்ளன என்று கூறியுள்ளார். மன்னராட்சி, இடதுசாரி ஆதிக்கம், ரஷ்ய - அமெரிக்காவின் கட்டுபாட்டில் ஆப்கான், இந்நிலையில் தாலிபான் என ஸ்திரமற்ற நிலைமை திரும்பவும் அங்கே ஆராம்பித்துவிட்டது. இது ஆப்கான் பிரச்சனை மட்டுமல்ல, ஒட்டுமொத்த ஆசியாவுக்கே எதிர்காலத்தில் இது பெரும் சவாலாகிவிடும். மதரீதியான அத்துமீறல் கூடாது என பேசுபவர்கள் ஆப்கான் பிரச்சனைக் குறித்தும் சிந்திக்க வேண்டும்.
ஆப்கான் பிரச்சனையால் இந்தியாவிலிருந்து அனுப்பப்படும் சர்க்கரை, மருந்துகள், தேயிலை, காப்பி, மசாலா பொருட்கள், தொழில்நுட்ப பாகங்கள், ஆடை - துணி வகைகள் என ஏற்றுமதி இல்லாமல் ஆகிவிடும். ஆப்கானிலிருந்து இந்தியாவுக்கு இறக்குமதி செய்யப்படும் உலர் பழங்கள், பெருங்காய மூலப்பொருட்கள், வெங்காயம் போன்றவை வரத்தில்லாமல் ஆகிவிட்டது. இதனால் தற்போது பெருங்காய மூலப்பொருட்களின் விலை ரூ.8000-லிருந்து ரூ.13000 வரை கூடுதலாகிவிட்டது.
ஆப்கானிலிருந்து வெளியேற காபூல் விமானநிலையத்தில் ஆயிரக்கணக்கில் மக்கள் கூடியுள்ளனர். அங்கே மக்களின் முற்றுகைப்போராட்டம் நடக்கின்றது. இந்த போராட்டத்தில் 12 பேர் சுட்டுக்கொல்லப்பட்டுள்ளனர். ஆப்கானினுடைய விடுதலை நாள் ஆகஸ்ட் 19. நேற்றைக்கு சில இடங்களில் நடந்த விடுதலை திருநாள் நிகழ்ச்சிகளிலும் கலவரம் ஏற்பட்டுள்ளது. இந்தியாவிற்கு முன்பே 1919-ல் ஆப்கான் பிரிட்டிஷாரிடம் இருந்து விடுதலை பெற்றது. ஆப்கான் துணை அதிபர் அமருல்லா, நான் நிர்வாகத்தில் இருக்கின்றேன், நாட்டின் சுதந்திரமும், நாட்டின் தேசிய கொடியும் பாதுகாக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
காபூல் அரண்மனையைக் கைப்பற்றி, இனிமேல் ஆப்கான், இஸ்லாமிக் எமிரேட்ஸ் ஆஃப் ஆப்கானிஸ்தான் என அழைக்கப்படும் என்றும் அறிவித்தனர்.
இது குறித்து சர்வதேச பத்திரிகையாளர்கள் “ஆப்கானை வல்லரசுகளின் கல்லறை” என்றே அழைக்கிறார்கள். 1970களில் ரஷ்யா ஆப்கானை ஆக்கிரமித்திருந்தது. அப்போது அமெரிக்காவால் முஜாஹிதீன்கள் இயக்கம் உருவாக்கப்பட்டு ஆயுதங்கள் வழங்கப்பட்டதால் 10 ஆண்டு கால உள்நாட்டுப் போரில் ஒன்றரை லட்சம் பேர் பலியானார்கள். முஜாஹிதீன்களின் கொரில்லா அட்டாக்கை தாக்குப் பிடிக்க முடியாமல் தோல்வியுடன் வெளியேறியது. இது அந்நாட்டு மக்களின் மனதில் ஆறாவடுவாய் இன்னமும் உள்ளது.
அதன் பின்னரே அல் கொய்தா, ஐ.எஸ்.ஐ.எஸ். போன்ற தீவிரவாத அமைப்புகள் தோன்றின. அமெரிக்க உதவியுடன் புர்ஷானூதீன் ரப்பானி அதிபராயிருந்தார். அவருக்கு எதிராக பின்லேடன், முல்லா ஓமர் ஆகியோரது தலைமையில் தாலிபான் இயக்கம் உருவாகி முஜாஹிதீன்களை விரட்டிவிட்டு 1996-ல் ஆப்கான் ஆட்சியைப் பிடித்தது. தாலிபான்களுக்கு அமெரிக்கா மற்றும் இந்தியா என்றாலே வேப்பங்காய். எனவே 1999-ம் ஆண்டு காந்தகாரிலிருந்து 150 பயணிகளுடன் புறப்பட்ட ஏர் இந்திய விமானத்தைக் கடத்திச் சென்று, தீவிரவாதிகள் மவுலானா மசூத் அசார், அஹமத் ஓமர் சையீத் ஷேக் ஆகியோரை விடுவிக்க வைத்தனர்.
இதனைத் தொடர்ந்து 11.09.2001-ம் தேதி அமெரிக்க இரட்டை கோபுரத்தை தகர்த்து அமெரிக்காவை நிலைகுலைய வைத்தனர். அவ்வளவுதான், வெகுண்டெழுந்த அமெரிக்கா, ஆப்கனில் புகுந்து தாலிபன்களை வேட்டையாடியது. தாலிபன்கள் பாகிஸ்தானில் போய் பதுங்கிக் கொண்டனர். இனியும் ஒரு தீவிரவாத அட்டாக் இருக்கக் கூடாது என அமெரிக்கா எண்ணியதால் அமெரிக்கப் படைகள் நிரந்தரமாக ஆப்கானில் தங்கிவிட்டன. இந்தியாவுக்கும் ஆப்கான் ஒரு மாபெரும் ஸ்டேட்டஜி பாயிண்ட். காஷ்மீர் தீவிரவாதிகளை தூண்டிவிடும் பாகிஸ்தானுக்கு பாடம் புகட்ட ஆப்கானை கையில் எடுத்தது.
கடந்த 20 ஆண்டுகளில் இந்தியா ஆப்கானில் மூன்று பில்லியன் டாலரை செலவழித்திருக்கிறது. 200 பொது மற்றும் தனியார் பள்ளிகள் கட்டிக் கொடுத்திருக்கிறது. ஆயிரம் மாணவர்களுக்கு ஸ்காலர்ஷிப், 16,000 பேர் படிக்க ஆகும் செலவையும் ஏற்றுக் கொண்டிருக்கிறது. சார்க் நாடுகளின் கூட்டமைப்பில் ஆப்கானை சேர்க்க நடவடிக்கை எடுத்து வருகிறது. 90 மில்லியன் டாலர் செலவில் பாராளுமன்றக் கட்டடம், 290 மில்லியன் டாலர் செலவில் இந்திய – ஆப்கான் நட்புறவு அணையான சல்மா அணையையும் கட்டிக் கொடுத்திருக்கிறது.
இரண்டு எம்.ஐ. ரக ஹெலிகாப்டர்கள், 400 பஸ்கள், 200 மினி பஸ்கள், 105 முனிசிபல் லாரிகள், 285 ராணுவ வாகனங்களையும் பரிசாக வழங்கியிருக்கிறது. இவை அனைத்தும் தற்போது தாலிபான் வசம் சென்றிருக்கிறது. தவிர, 150 மில்லியன் டாலர் செலவில் ஈரான் சப்ஹார் துறைமுகம் டு ஆப்கான் வரை நெடுஞ்சாலை, உள்நாட்டை இணைக்கும் சாரன்ஞ்டெலராம் நெடுஞ்சாலை என ஆப்கானின் உள்கட்டமைப்பு வசதிகள் அனைத்தையும் இந்தியா செய்து கொடுத்திருக்கிறது.
தாலிபான் எதிர்ப்பாளர்கள் ஒன்றுகூடி வடக்குக்கூட்டணி என்று அமைத்துள்ளனர். காபூல் விமான நிலையத்தில் ஆப்கான் நாட்டின் கொடியோடு பேரணி நடத்தி தாலிபான்களுக்கு எதிராக கோசங்கள் இடப்பட்டன. ஆப்கானிஸ்தான் வளங்கள் பெற்றும், 100 ஆண்டுகளுக்கு மேல் விடுதலை பெற்றும் இப்படி ஸ்திரமற்ற நிலையில் தான் இருந்துகொண்டு வருகிறது.
பாக்கிஸ்தான், ஆப்கானிஸ்தானை ஒரு கட்டத்தில் ஆதரித்தது. பிறகு ஆப்கானினாலே பாக்கிஸ்தானுக்கு தலைவலி வந்தது. தற்போது பாகிஸ்தானின் பிரதமர் இம்ரான் கான், ஆப்கான் இனிமேல் சுதந்திரம் பெற்று நிம்மதியாக இருக்கும் எனக்கூறியுள்ளார். ஆப்கானின் புதிய அதிபராக தாலிபான்களின் தலைவர் முல்லா அப்துல் கனி பராதர் பொறுப்பேற்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பிரச்சனை ஏற்பட்டவுடன் காலில் ஷூ அணியக்கூட முடியாமல் அந்நாட்டு முன்னாள் அதிபர் அஷ்ரப் கனி தப்பிவிட்டதாக கூறியுள்ளார். அப்படி தப்பவில்லை என்றால் 1996-ல் தாலிபான்கள் முகமது நஜிப்புல்லாவை பொது இடத்தில் தூக்கிலிட்டது போல என்னையும் தூக்கிலிட திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளார்.
சீக்கியர்கள் பயப்பட வேண்டாம் என தாலிபான்கள் காபூல் குருத்வாராவில் நேரில் சந்தித்து கூறியதாகவும் செய்திகள் வருகின்றன. தொலைக்காட்சி ஊடகங்கள் முற்றிலும் முடக்கப்பட்டு பெண் பத்திரிக்கையாளர்களுக்கும் ஊடகவியலாளர்களுக்கும் கடுமையான சிக்கல்கள் இருப்பதாக கருத்துகள் வெளிவருகின்றன. சாகக் காத்திருக்கிறேன்:
பெண்களை அடிமைகளாய் நினைக்கும் ஆப்கானின் பெய்டன் வார்டேஸ் மாகாண முதல் பெண் மேயர் 26 வயதே ஆன சரீஃபா கஃபாரி, மாஜி அமெரிக்க அதிபர் டிரம்பால் வுமன் ஆஃப் கரேஜ் அவார்டு பெற்றவர். தற்போது ஆப்கானில் தாலிபான்கள் கோலோச்சத் தொடங்கியவுடன் அரண்டு போயிருக்கும் மேயர், நான் தாலிபான்களுக்காக என் கணவருடன் காத்திருக்கிறேன். அவர்கள் என்னை நிச்சயம் கொன்றுவிடுவார்கள். என் குடும்பத்தை விட்டு எங்கு போவேன்? என்று கண்ணீர் விட்டபடி சமூக வலைதளங்களில் பதிவிட்டிருப்பது வைரலாகி வருகிறது.
இதற்குமத்தியில் தமிழக குன்னூர் வெலிங்டன் இராணுவத்தில் ஆப்கான் இராணுவர்களும் பயிற்சி பெறுகின்றனர். அவர்கள் ஆப்கான் செல்வதிலும் சிக்கல்கள் இப்போது ஏற்பட்டுள்ளது. ஆப்கான் பிரச்சனை அந்த நாட்டு பிரச்சனை மட்டுமல்லாமல், அதனால் ஏற்படும் நேரடி, மறைமுகமான எதிர்வினைகள் பல நாடுகளை பாதிக்கும் என்ற புரிதலும் வேண்டும்.
#KSRposting
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
20.08.2021
No comments:
Post a Comment