#மாறிவரும்_இந்துமகாசமுத்திர_பிராந்தியத்தின்_வலுச்சமநிலையும்…
———————————————————
புவியியல்ரீதியில் சீனா ஒரு இந்து சமுத்திர நாடல்லாத நிலையில் இந்து சமுத்திரத்தின் மேற்கில் அமைந்திருக்கும் பாகிஸ்தானின் குவாதர் துறைமுகத்தையும், கிழக்கில் மியன்மாரின் கோகோத்தீவுகளையும், இலங்கையில் அம்பாந்தோட்டை துறைமுகத்தையும்(99 வருட) குத்தகைக்கு பெற்றுக் கொண்டதோடு கொழும்பில் கடல் நகரம் ஒன்றினை மிகப் பிரமாண்டமான அளவில் கட்டுவதிலும் சீனா ஈடுபட்டுள்ளது. இந்துசமுத்திரத்தில் குவாதர் -அம்பாந்தோட்டை - கொக்கோ தீவுகள் என்ற மூன்று புள்ளிகளை இணைத்து இந்தியாவை முற்றுகைக்குள் வைக்கக்கூடியதான இராணுவப் பலம்வாய்ந்த ஒரு புதிய அரசியற் புவியியலை சீனா தோற்றுவித்துவருகிறது.
சீனாவின் இவ்அரசியற் பொருளியற் செயற்பாடுகள் இந்தியாவின் புவிசார் அரசியல் பாதுகாப்பு வளையத்தை புறந்தள்ளி சீனாவுக்கான புதிய அரசியற் புவியியல் சூழலை உருவாக்கியுள்ளது. இதன்மூலம் இந்தியாவினது புவிசார் அரசியல் மேலாண்மை தற்போது சீனாவினால் கீழ்நிலைக்கு தள்ளப்பட்டு வருகிறது.
இலங்கையின் வட-கிழக்கில் உள்ள தமிழர்களே இந்தியாவின் பலம். கிழக்கில் சிங்கள குடியேற்றங்களின் மூலம் தமிழ் நிலத்தை சிங்கள அரசு கபளீகரம் செய்துவிட்டது. வடக்கின் எல்லையோரப் பகுதிகளை புதிய குடியேற்றங்கள் மூலம் கபளீகரம் செய்ய தொடங்கிவிட்டது. ஈழத் தமிழர்களின் ஆயுதப் போராட்டத்தையும் படுமோசமான இனப்படுகொலையின் மூலம் தோற்கடித்துள்ளது.
அம்பாந்தோட்டையிலும், கொழும்பிலும் சீனா நிலைபெற்றுவிட்டால், இந்து சமுத்திரத்தின் வடபகுதி முழுவதுமான செல்வாக்கினை இந்தியாவும், அமெரிக்காவும் இழந்துவிடும் நிலை உள்ளது. அங்கு சீனா தனது அரசியல் பொருளாதார இராணுவ மேலாண்மையையைப் பெறக் கங்கணம் கட்டி நிற்கின்றது. . எனவே சீனாவின் வருகை என்பது பரந்த இந்தியாவினதும் அதன் கிழக்கு இந்து சமுத்திரத்தில் உள்ள அந்தமான் நிக்கோபார் தீவுகளினதும் பாதுகாப்பையும் கேள்விக்கு உள்ளாக்கிவிடும்.
சீனா இந்து சமுத்திரப் பிராந்தியத்தில் குறிப்பாக தென்னாசியப் பிராந்தியத்தில் குவதார் துறைமுகம், கோகோதீவுகள் இலங்கையில் அம்பாந்தோட்டை ஆகிய மூன்று முக்கிய கேந்திர புள்ளிகளில் தன்னை நிலைநிறுத்தி இந்தியாவை முற்றுகையிட்டிருக்கின்றது. தென் ஆசியாவிலும், இந்து சமுத்திரத்திலும் சீனா தலையெடுக்கத் தொடங்கியிருப்பதுவும், சீன-பாகிஸ்தானிய உறவு இன்று பெரிதும் வலுவடைந்திருப்பதுவும் அதனால் சீனாவின் இராணுவ சமநிலை மேலும் கையோங்குவதையும் இந்தியாவால் ஒருபோதும் சகித்துக்கொள்ள முடியாது.
சீனாவின் "One belt one road" திட்டத்தின் வாயிலாக புவியியல், அரசியல், பொருளாதார, இராணுவரீதியாக சீனாவுடன் மத்திய கிழக்கு, தென்னாசிய, ஆப்பிரிக்க, மத்திய ஆசிய நாடுகள் என்பனவற்றை உள்ளடக்கிய அனைத்து இஸ்லாமிய நாடுகளும் சீனாவுடன் நெருக்கமாக கைகோர்க்க்கத் தொடங்கியிருக்கின்றன.
தென்னாசியாவில் இந்தியா மட்டுமே சீனாவிற்கு முரணானது. ஆனால் இந்தியாவைச் சுற்றியிருக்கக்கூடிய இஸ்லாமிய மற்றும் பௌத்த மேலாண்மை கொண்ட இலங்கை, பர்மா போன்ற நாடுகள் சீனாவிற்கு வாய்ப்பானவையாக இருப்பதனால் இந்தியாவை கட்டுப்படுத்தக்கூடிய வல்லமையை சீனா பெற்றுவருகிறது. அத்தோடு இந்து சமுத்திரத்தின் தெற்கிலிருக்கும் டீகாகோசியாத்தீவின் பாதுகாப்பையும் சீனாவின் இத்தகைய வளர்ச்சி கேள்விக்குள்ளாக்கிவிடும். இதனை சமன் செய்யவே அமெரிக்க தரப்பு "இந்தோ-பசுபிக் " என்று சொல்லப்படும் "இந்தோ-பசுபிக்" கொள்கையை வகுத்திருக்கிறது.
இலங்கை என்பது இந்தியாவின் கால்மாட்டில் இருக்கின்ற ஒரு முக்கிய ஸ்தானம். அதேநேரத்தில் மூலோபாய ரீதியில் இந்தியாவின் நுழைவாயில் என்று பார்த்தால் இலங்கையை இந்தியாவின் தலைமாட்டில் இருக்கின்ற மையப்பகுதி என்று சொல்லலாம். இத்தகைய கேந்திர மூலோபாயத்தின் பின்னணியிற்தான் 1980களில் தமிழீழ விடுதலைப் போராட்டம் இந்திரா காந்தியின் கடும் போக்கு ஆதரவுடனு வெற்றி பெற்றுவிட்டால் திருகோணமலைத் துறைமுகம் தமக்கு எந்த வகையிலும் பயன்பட முடியாது என்பதனாலேயே அமெரிக்கா அன்று தமிழ் தகுதியான திருகோணமலையைத் தவிர்த்து இந்தியாவுக்கு நேர்ரெதிரே உள்ள சிங்கள பகுதியான புத்தளத்தில் அமைந்துள்ள இரணவிலவில் ”வாய்ஸ் ஒப் அமெரிக்கா” என்ற நிறுவனத்தை நிர்மாணித்ததை இங்கு அறிவியல் பூர்வமாக கருத்தில் கொள்ளவேண்டும்.
அம்பாந்தோட்டையை சீனா பெற்றுவிட்டமைதான் அமெரிக்காவின் கவலையும், அதற்காகன நெருக்கடியும் . அதனாற்தான் இன்று அவர்கள் திருகோணமலை துறைமுகத்தை தமது பார்வைக்குள் செலுத்தத் தொடங்கிவிட்டனர். இலங்கையில் வெளி வல்லரசுகள் வராத வரைக்கும் அமெரிக்காவிற்கு இந்து சமுத்திரம் சார்ந்த எந்தப் பிரச்சனையும் கிடையாது. ஆனால் ஈழத்தமிழர் போராட்டம் முள்ளிவாய்க்காலில் முடக்கப்பட்டதன் பின்னர் இலங்கையில் சீனாவின் செல்வாக்கு படிப்படியாக அதிகரிக்கத் தொடங்கிவிட்டது. இதனைக் கண்டு அமெரிக்கா அச்சமும், கவலையும் கொள்கிறது. எனவே இலங்கை மீது அதிக கவனம் செலுத்தத்த் தொடங்கிவிட்டது.
அவ்வாறே பனிப் போரின் பின்னர் இந்தியாவும் அமெரிக்காவும் கூட்டு நாடுகளாக மாறிவிட்ட சூழ்நிலையில் இந்த பிராந்தியத்தில் சீனா போன்ற வளர்ந்து வரும் பெரும் வல்லரசுகள் இலங்கைத்தீவில் கால் பதித்து நிலைபெறுவதை இந்தியா விரும்பவில்லை. இந்தியா சார்ந்த மேற்குலக அணியும் விரும்பவில்லை. இதனை இவர்கள் ஒருபோதும் அனுமதிக்கவும் மாட்டார்கள்.
சீனா இலங்கையில் முள்ளிவாய்க்கால் யுத்தத்தின் பின்னர் வேகமாக தனது உறவை பலப்படுத்தி உள்நுழைவு செய்துகொண்டு வருவதையும், இந்து சமுத்திரத்தில் ஆதிக்கம் செலுத்துவதையும் இந்தியாவால் தனித்து நின்று எதிர்க்க முடியாது. அவ்வாறே அமெரிக்காவாலும் இன்று தனித்து நின்று எதிர்க்க முடியாது என்ற நிலையை உணர்ந்துள்ளது.
"இருதரப்பினரது நலன்களும் சந்திக்கின்ற சந்திப்பில் கூட்டுக்கள் உருவாக்கப்படுவது இயல்பே" எனவேதான் இந்தியா, ஜப்பான், அவுஸ்திரேலியா, அமெரிக்கா இணைந்த குவாட்என்றகூட்டுஉருவாக்கப்பட்டு
ள்ளது. இந்தக் கூட்டுத்தான் சீனாவுக்கு எதிரான இந்தோ-பசிபிக் கொள்கையை வகுத்துள்ளது. இதனை தலைமைதாங்கி இந்து சமுத்திரத்தில் நடத்துவது இந்தியாதான். எனவே இதில் கிங்பின் அதாவது தலையாய ஊசி இந்தியாதான்
இந்த விடயத்தில் இந்தியாவைப் பொறுத்தவரையில் சீனாவின் இராணுவ பலத்திற்கு மாற்றீடாக அரசியல் , இராணுவ கூட்டுக்களை உருவாக்க வேண்டியதுதான் அதற்கு இருக்கக்கூடிய ஒரே ஒரு வழியாகும் . இந்தியாவால் தனித்து நின்று சீனாவுடன் மல்லுப்பிடிக்கா முடியாது என்பதனை 1962ஆம் ஆண்டு சீன-- இந்திய யுத்தத்தின் பின்னர் இந்தியா உணர்ந்ததன் வெளிப்பாடாகத்தான் அரசியலில் கிடைக்கின்ற வெளி வல்லரசுகள் சார்ந்த வாய்ப்புகளை தவறவிடாமல் பயன்படுத்தும் முடிவை கொண்டுள்ளது. அதன்படி தற்போது சீனாவுக்கு எதிராக இந்தியா அமெரிக்க சார்பு மேற்குலக கூட்டுக்குள் தன்னை இணைத்துள்ளது.
இன்று,அமெரிக்காதிருகோணமலையில் அக்கறை செலுத்துகின்றதென்றால் அது சீனா தனது எல்லையை மீறி முன்னேறி இந்துசமுத்திரத்தில்நுழைந்துவிட்டமையை புரிந்துகொண்டமையினால்தான்.
அண்மையில் சீனாவின் கம்யூனிஸ்ட் கட்சியின் 100-வது ஆண்டு விழாவில் உரையாற்றிய சீனத் தலைவர் ஷீ ஜின்பிங் கடும் போக்கிலான சொல்லாடல்களை பயன்படுத்தியுள்ளார். இதிலிருந்து சீனாவை பேச்சுக்கள் மூலம் வழிக்குக் கொண்டுவர முடியாது என்பதை அமெரிக்கா உணர்ந்துள்ளது அல்லது அமெரிக்காவும் அதன் இந்தியா உள்ளிட்ட மேற்குலக அணியும் உணர்த்தப்பட்டுள்ளன. எனவே இலங்கை சார்ந்து பேச்சுவார்த்தைகள் மூலம் எதனையும் சாதிக்க முடியாது என்ற கட்டத்தை இந்தியா அடைந்துள்ளதெனத் தெரிகிறது.
எனவே அமெரிக்காவுடன் இணைந்து இந்தியா இராஜதந்திர வியூகங்களை வகுப்பதில் முனைப்புக் காட்டத் தொடங்கியுள்ளது. இந்தியாவின் அனுமதியின்றி திருகோணமலைக்கு அமெரிக்கா வரும் என்று கற்பனை செய்வது மிகக் தவறானதாகும். அவ்வாறு அமெரிக்கா வருகின்றது என்றால் அது இந்தியாவின் அனுமதியுடனும், அனுசரணையுடனும், இந்திய நலன்களை உள்ளடக்கியதான ஒரு நடவடிக்கையாகவும் அமைவது இயல்பானது. தவிர இந்தியாவுக்கு அப்பாற்பட்டு அதனை மீறிய செயலாக எடுத்துக்கொள்ளக் கூடாது. எது எப்படி இருப்பினும் இந்த இராஜதந்திர வியூகங்கள் பற்றி அவசரப்பட்டு மனம் போன போக்கில் முடிவுகளை வெளியிடுவது ஆய்வியலுக்கு ஆரோக்கியமானதல்ல.
அமெரிக்காவிற்கு தற்பொழுதும் இலங்கையை கட்டுப்படுத்தக் கூடிய சிறிய வாய்ப்பு இருக்கின்றது. அதாவது தற்போது நிதி அமைச்சராகப் பதவி ஏற்றிருக்கும் பசில் ராஜபக்ச அமெரிக்கக் குடியுரிமை பெற்றவர். அவர் அமெரிக்க குடியுரிமையை இன்னும் விலக்கவில்லை. அமெரிக்க குடிமகன் அமெரிக்க தேச நலனுக்கு எதிராகச் செயற்பட முடியாது அது தேச விரோதக் குற்றச் செயலாகும். எனவே அமெரிக்க குடியுரிமை பெற்ற பசில் ராஜபக்சவை கணிசமான அளவு கட்டுப்படுத்தக் கூடிய வல்லமை அமெரிக்க அரசுக்கு உண்டு என்பதை கவனிக்க வேண்டும்.
ஆகவே அண்மையில் பசில் ராஜபக்ஷவின் அமெரிக்க பயணம் என்பது ஒரு திட்டமிடப்பட்ட பயணம். இதன்போது இலங்கையில் சீனாவின் அதீத வளர்ச்சி, உள்நுழைவு சார்ந்த விவகாரங்களில் அமெரிக்காவின் நிலைப்பாடுகள் சம்பந்தமாக இறுக்கமான அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டு இருக்கலாம். இதனை பசில் ராஜபக்சவும் ஏற்றுக் கொண்டிருக்கலாம் என்பதுவும் மறுப்பதற்கில்லை. எனினும் இந்த விடயத்தில் இலங்கையின் பௌத்த மகா சங்கங்களும் அமெரிக்க எதிர்ப்பு வாதிகளும் இலகுவாக விட்டு வைக்கப் போவதில்லை என்பது ஒருபுறம் இருக்க சீனாவும் இதனை பொறுத்துக்கொள்ள மாட்டாது.
இந்தப் பின்னணிகளை எல்லாம் கருத்தில் கொண்டு இந்தியாவுக்கு நெருக்கமாக உள்ள தமிழர் தாயகப் பகுதியை நோக்கி தற்போது சீனா அதிக கவனம் செலுத்த தொடங்கியுள்ளது. தமிழ் மக்களுக்கான நீதிக்கும் உரிமைகளுக்கும் புறம்பாக தமிழர் தாயகத்தில் தொழில்விருத்தி, வேலைவாய்ப்பு என்ற அடிப்படையில் இனிப்பு கொடுத்து தமிழ் மக்களின் ஆதரவைத் திரட்ட முயல்கிறது. தற்போது தமிழ் மக்களை தன்பக்கம் வளைக்கவேண்டிய அத்தியாவசியத் தேவை சீனாவுக்கு எழுந்துள்ளது என்பதை சீனா தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளும் நடவடிக்கைகள் மூலம் உணர முடிகிறது.
தென்பகுதியில் சீனாவுக்கு கிடைத்திருக்கின்ற 99 வருட குத்தகை அடிப்படையிலான அம்பாந்தோட்டை துறைமுகத்தையும், கொழும்பு கடல் நகரத்தையும், தனக்குச் சார்பான சிங்கள மக்களையும், பௌத்த மகாசங்கத்தையும், தன்னை இறுகப்பற்றியிருக்கும் சிங்கள அரசையும் டிராகன் கையில் வைத்துக் கொண்டிருக்கிறது. இந்நிலையில் இவற்றையெல்லாம் புறந்தள்ளி தமிழர் நலனுக்காக சீனா ஏதேனும் செய்யும் என்று தமிழ்த் தரப்பினர் கற்பனை செய்வார்களேயானால் அது கண்ணை மூடிக்கொண்டு படுகுழியில் வீழும் செயலாகவே அமைய முடியும்.
No comments:
Post a Comment