ஏ.கே.கோபாலன் எதிரி சென்னை மாகாண அரசு என்ற வழக்கு.
ஏ.கே.கோபாலன் vs ஸ்டேட் ஆஃப் மெட்ராஸ் என்ற வழக்கு நடந்து முடிந்து ஏறத்தாழ 71 ஆண்டுகள் முடிந்து விட்டன. ஏ.கே.கோபாலன் அவர்கள் கைதுக்கு எதிராக தொடுத்திருந்த இந்த வழக்கு இந்திய நீதி துறையின் வரலாற்றில் ஒரு மைல்கல் ஆகும். தனிமனிதனின் சுதந்திரமும், உரிமைகளும் பாதுகாக்கபட வேண்டும். தடுப்புக்காவல் சட்டத்தில் விருப்பம்போல யாரையும் கைது செய்ய முடியாது. அடிப்படை உரிமைகள், மனித உரிமைகள் பேணப்பட வேண்டும், என தீர்பளித்த முக்கிய வழக்காகும். இந்த வழக்கு தினமும் நீதிமன்றங்களில் உச்சரிக்கப்படுகின்றது.
—————————————
இந்திய பொதுவுடமை இயக்கத்தின் மூத்த தலைவர் ஏ.கே.கோபாலன் அவர்களின் அரிய புகைப்படம் ஒன்று தான் இப்பதிவிற்கு அச்சாரம். நிழற்படங்கள் என்பவை சில நேரங்களில் நினைவுகளை அசைபோட வைக்கும் நிஜங்கள்.
ஏ கே.கோபாலன் கேரளாவை சேர்ந்தவர். எப்படி உணவு தயாராகிக் கொண்டிருக்கும் வேளையில் வாய் உண்பதற்கு முன்பாக வாசம் மூக்கை அடைகின்றதை போல அவரது பெயரை நினைத்த வேளையில் முகம் நினைவுக்கு வருவதற்கு முன்பாக அவர் அணியும் மேல்சட்டை கண்ணுக்கு தெரியும். ஆம், அவர் அணியும் மேல்சட்டை நாம் அணிவதைக் காட்டிலும் சற்று வித்தியாசமானதாக இருக்கும்.
நான் சட்டக்கல்லூரியில் படித்துக் கொண்டிருந்த போது சட்டக்கல்லூரி விடுதியில் தங்காமல் பிராட்வே உள்ள சென்னை பல்கலைகழக கிளப்பில் தங்கி படித்தேன். பொதுவுடமை இயக்கத்தின் மூத்த தலைவர்களில் ஒருவரான கோவில்பட்டி தொகுதி சட்ட மன்ற உறுப்பினர் சோ.அழகிரிசாமி அங்கு வருவார். அந்த கிளப்க்கு எதிரேயுள்ள ஜனசக்தி அலுவலகத்திற்கும் அவர் வருவது வடிக்கை. அப்போது என் விடுதி அறைக்கு வருவதுண்டு.தொழிற்சங்க உறுப்பினர்களும், இயக்கத் தோழர்களும் சந்தித்த்துக் கொள்ளக் கூடிய இடமாக ஜனசக்தி அந்த சிவப்பு கட்டிடம் இருந்தது. கட்சி 1964 பிரியும் வரை ஏ.கே.கோபலன் அவர்களும் அங்கு வருவார்.
அன்றைக்கு ஆட்சியில் இருந்த காங்கிரஸ் அரசு திரு. *ஏ.கே. கோபாலன்* மீது பல வழக்குகளைத் தொடுத்தது. அந்த வழக்குகளையெல்லாம் *ராவ் & ரெட்டி* நிறுவன வழக்கறிஞர்கள் அவருக்காக வாதாடினார்கள். இந்த ராவ் & ரெட்டியின் அலுவலகம் சென்னை உயர்நீதிமன்றத்தின் எதிர்புறம் உள்ள தம்பு செட்டித் தெருவில் உள்ள ஆந்திரா இன்சூரன்ஸ் கட்டிடத்தில் இன்னமும் இயங்கி வருகிறது. இந்த படத்தில் உள்ள அலுவலகத்திற்கு தான் ஏ.கே.கோபாலன் அடிக்கடி வந்து செல்வார் என்று *சோ. அழகிரிசாமி* சொன்னதுண்டு.
மற்றொரு படம் எதிர்புறமுள்ள சிகப்பு கட்டிடத்தில் ஏ.கே.கோபலனின் நண்பர்கள் இருந்த அந்த கட்டித்திற்கும் சென்றதாக 1970 காலகட்டங்களில் சோ. அழகிரிசாமி என்னிடம் சொன்னார். ஏ.கே.கோபாலன் பொது வாழ்விற்கு இலக்கணமாகத் திகழ்ந்தவர். இவர் பல ஆண்டுகள் தலைமறைவு வாழ்க்கை (Underground Life) வாழ்ந்தவர். இவர்தான் இந்தியா காபி ஹவுஸ் நிறுவனம் செயல்பட முக்கிய கர்த்தாவுமாவார். இந்தியா காபி இந்திய ஹவுஸ் அளவில் பிரபலமடைந்தது. இந்தியா முழுவதும் பல கிளைகளை கொண்டுள்ள இந்தியா காபி ஹவுஸின் ஒவ்வொரு கிளையிலும் அவரின் படத்தை மாட்டி வைத்திருப்பார்கள். இன்றைக்கும் தி.நகரில் பேருந்து நிலையத்திற்கு எதிர்புறம் உள்ள இந்தியன் காபி ஹவுஸ் கடையில் அவரது படம் பெரியதாக மாட்டி வைக்கப்பட்டுருக்கும். எப்போது சென்றாலும் சூடான பஜ்ஜி, மற்றும் மணக்கும் சுவையான காபியும் பித்தளை தட்டிலும், பித்தளை டவரா செட்டிலும் கொடுப்பார்கள்.
டெல்லியில் உள்ள இந்திய மார்க்சிஸ்ட் கட்சி அலுவலகம் இவரது பெயரை சுமந்து ஏ.கே.ஜி பவன் இயங்கி வருகின்றது குறிப்பிடத்தக்கது.
மேலும்,இவரின் வழக்கின் தீர்ப்பு இன்று
முன் வழிகாட்டுதலுக்கு நீதிமன்றங்கள்
எடுத்துக்கொள்கிறது
பெஸ்ட் பார்லிமெண்டேரியன் என பெயர் பெற்றவர். இவர் தலைமறைவு வாழ்க்கை முடிந்து வெளியே வரும்போது இவரது முதல் மனைவிக்கு வேறொருவருடன் திருமணம் நடந்த சம்பவங்கள் எல்லாம் இவர் வாழ்வில் நடந்ததுண்டு. அதன்பின்னர்தான் சுசீலாவை மணந்தார். இவர் நாடாளுமன்ற வாழ்க்கை குறித்துச் சொன்னது இன்றும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் பால பாடம். பாராளுமன்றம் ஒரு சொர்க்கப்பூமி, அதன் சொகுசில் மயங்கிவிட்டால் உங்கள் கொள்கைகள் காற்றில் பறந்துவிடும். அதில் சிக்காமல் வாழவேண்டும் என்று சொல்வார். வாழ்ந்தும் காட்டியவர்.
கட்சியில் மிகப்பெரிய தலைவராக இருந்தும், அவர் இந்தியாவில் எதாவது ஒரு மூலையில் போராட்டம் நடந்தால் மக்களோடு மக்களாக போராட்டத்தில் இறங்கி கைதாவாராம். இதுகுறித்து அப்போது இஎம்எஸ்சிடம் செய்தியாளர்கள் ஏன் இப்படி ஏகேஜி செய்கிறார் என்று கேட்டபோது இ எம் எஸ் சொன்ன பதில் அது அவரால் மட்டுமே முடியும், அதனால்தான் அப்படி செய்கிறார் என்றாராம்.
கேரளத்தின் வடக்கு மலபார் பகுதியின் சிறக்கல் மாவட்டத்திலுள்ள மாச்சேரி எனும் சிறு கிராமம் ஒன்றில், 1904 ஆம் ஆண்டு அக்டோபர் 1 அன்று அயில்யாத் நாயர் குடும்பத்தில் பிறந்தார் அயில்யாத் குட்டியாரி கோபாலன். அரசாண்ட குடும்பம் அது. இவரது தந்தை அந்தக் காலத்திலேயே சீர்திருத்தவாதியாக இருந்தார். ஆங்கிலப் பள்ளி ஒன்றை துவக்கினார். பழமைவாதிகள் கோபமுற்றனர். பெண்கள் நாகரீகமாக உடை அணிந்து ஆண்களுடன் இணைந்து பள்ளிக்கு செல்வது பற்றி சிந்திக்க முடியாத காலம் அது. ஏ.கே.ஜி தன் சகோதரர்களுடன் பள்ளிக்குச் சென்றார். தந்தை நாயர் சொசைட்டி தலைவராக இருந்து சீர்கேடுகளை ஒழிக்க மேற்கொண்ட முயற்சிகளால் திருமணத்தில் தாலி உள்ளிட்ட சடங்குகள் மாறின. இவைகளினால் மற்றவர்களிலிருந்து இவரின் வாழ்வு மாறுபட்டதாக அமைந்தது.
தந்தை நடத்திய 'தொழில் நண்பன்' என்னும்பத்திரிகைஅச்சிடப்படுவதைபார்வையிடுவது, கட்டுரைகளை படி எடுப்பது வட்டாரச் செய்திகள் குறிப்பு எடுப்பது சந்தாதாரர்களின் முகவரி எழுதுவது , கணக்கு வழக்கு பராமரிப்பது என பல வேலைகளை செய்யும் வாய்ப்பு பெற்றார். தந்தை நெல், வேர்க்கடலை, கரும்பு என பல பயிர்களை புதிதாக பயிரிட்ட காரணத்தினால் விவசாயத்தில் மாற்றம் தேவை எனும் உணர்வு மக்களிடம் உருவாகியது. சிற்றக்கல் பகுதி தேர்தலில், மக்களை சந்திக்கும் வாய்ப்பு கிடைக்க அது தந்தை மீதான மக்களின் நம்பிக்கையை உணரும் வாய்ப்பை உருவாக்கியது. இவை அவருக்கு பொது வாழ்க்கையின் ஆரம்ப பாடங்களாகின.
மகன் மீதான அன்பினால் அரசியல் விசயங்களில் பரிச்சயம் பெற்ற தாய் தனது சாதியப் பார்வையைக் கூட மாற்றிக் கொண்டார். வீட்டினுள் வரவிடாது இருந்த தாழ்ந்த சாதிப் பெண்ணை அனுமதித்ததுடன், மகனின் காதல் மனைவி சுசிலாவையும் வரவேற்றார். 1954 ம் ஆண்டில் தேர்தல் பணியின் போது ' என் உடல் நலக்குறைவை அவனுக்குத் தெரிவித்து அவனைத் தொந்தரவு செய்ய வேண்டாம்' எனக் கூறும் அளவுக்கு அந்தத் தாய் பாக்குவம் பெற்றிருந்தார். விடுதலைப்போரில் கம்யூனிஸ்டுகளின் பங்களிப்பு, கம்யூனிஸ்ட் கட்சிக்குள் சித்தாந்தப் போராட்டம், அவசரநிலைக் காலம் போன்ற வரலாறின் ஊடாக, 1904 ம் ஆண்டு பிறந்து 1977-ல் மறைந்த சுதந்திரப் போராட்ட வீரரும் தொழிலாளி வர்க்கத்தின் ஒப்பற்ற தலைவருமான தோழர் ஏகேஜி வாழ்வை அறிகிறோம். எனவே மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் "அவரின் வாழ்க்கை அக்கால அரசியல் மாற்றங்களின் காலக்கண்ணாடி "எனக் குறிப்பிடுவது மிகவும் பொருந்துகிறது.
ஏ.கே.ஜி.யின் வாழ்வு களப் போராட்ட அனுபவம் கதைகளும் சிறை அனுபவம் கதைகளும் நிறைந்தது. அத்துடன் கேரள மக்களின் வாழ்நிலை பிரச்சனைகள் அதையொட்டிய போராட்டங்கள் மற்றும் அதன் காரணமாக அவைகளில் உருவான மாற்றங்களும் அடங்கியது. ஏழு ஆண்டுகள் ஆசிரியராக பணிபுரிந்து தனது வாழ்வை துவங்கி விடுதலைப் போரின் போதும் அதன் பிறகும் என 17 ஆண்டுகாலம் சிறைவாசம் அனுபவித்தார். காவலர்களிடம் அடி உதைகளையும் கொடும் தாக்குதல்களையும் எதிர்கொண்டார். மனநலம் குன்றிய கைதிகளுடன் அடைபட்டு உறங்கவும் முடியாத சூழலை எதிர் கொண்டார். தனிமை சிறைக் கொடுமையை அனுபவித்தார். பத்து பவுண்ட் இரும்பு குண்டுகள் உடன் கூடிய சங்கிலி காலில் பிணைந்திருக்க கேழ்வரகு அரைத்து சங்கிலி உரசிய புண் தந்த வேதனைகளை தாங்கினார். தூங்கும் போதும் சங்கிலியை கழற்றி வைக்க அனுமதி மறுக்கப்பட்டவராக பல்வகை சித்திரவதைகளுக்கு ஆளானார். பலமுறை சிறையுள் நீண்ட உண்ணாவிரத போராட்டங்கள் நடத்தி அரசியல் கைதிக்கான உரிமைகளை வென்றெடுத்தார்.
இந்தப் போராட்டங்களினூடே மக்களின் மனதை அறிந்து கிருஷ்ணப்பிள்ளை, இ.எம்.எஸ் போன்ற தோழர்களுடன் இணைந்து தொழிலாளர்கள் விவசாயிகளோடு செயல்பட்டார். தொழிலாளர்களின் வேலைநிறுத்தப் போராட்டங்களில் பங்கெடுத்தார். அக்குடும்பங்களுடன் பழகி அவர்களில் ஒருவனாக வாழ்ந்தார். விவசாயிகள் சங்கம் மாநாடுகள் நடத்தவும் இரவுப் பள்ளிகள் நூல் நிலையங்கள் நிறுவி நடத்தவும் முன்நின்றார். அரசின் கடும் அடக்குமுறைகளை அவர் உட்பட அனைவரும் எதிர் கொண்டனர். முரண்பட்டவர்க்கங்கள் சமூகத்தில் இருக்கும் வரை முரண்பட்ட நலன்கள் இருக்கும் அவையவை அதனதன் நலன்களுக்காக இறுதிவரை போராடி கொண்டிருக்கும் என்ற தெளிவுடன் ஏ.கே.ஜி இவைகளை அணுகி மன உறுதியின் உச்சத்திலிருந்து இவற்றை எதிர்கொண்டார்.
இ.எம்.எஸ் ஆசிரியராகப் பொறுப்பேற்றிருந்த 'பிரபாதம்' எனும் இதழ் துவங்கி இதன் நிதிக் தேவைக்காக பல நாடுகளுக்கு ஏ.கே.ஜி சென்றார். அந்நாடுகளின் தொழிலாளர் விவசாயிகள் நிலைமைகளை கூர்ந்து கவனித்து அறிந்தார். 1939 ல் இரண்டாம் உலக யுத்தம் துவங்கியது. இதை சாதகமாக்கி முதலாளி வர்க்கத்திற்கு எதிராக தொழிலாளிகளை காங்கிரஸ் சோசலிஸ்ட் கட்சி ஒருங்கிணைந்து போராடவில்லை. எனவே தொழிலாளர் வர்க்கப்பிரதிநிதி என சொல்லிக் கொள்ளாத அந்த கட்சியில் இருந்து அவர் வெளியே வந்து கம்யூனிஸ்ட் கிளையில் இணைந்தார்.
அடுத்து தலைமறைவாக மக்கள் பணியாற்றும் புதியதொரு அனுபவம் துவங்கியது. பல நாள் பட்டினி, கல்லும், முள்ளும் நிறைந்த கடினப் பாதையில் பயணித்து நீரில் மீனாக மக்கள் மத்தியில் வாழவும் அம்மக்களுக்கு வழிகாட்டும் அனுபவங்களையும் பெற்றார். இது போன்றதொரு சூழலில்தான் கிருஷ்ணபிள்ளை அரவம் தீண்டி மாண்டார். உலக யுத்தம் முடிந்தபின் திவான் ஆட்சி ஒழிப்பிற்கான எழுச்சியும் தீரமிகு புன்னப்புரா வயலார் விவசாயிகள் போராட்டமும் தென் கர்நாடகம் பீடி சுருட்டு தொழிலாளிகள் போராட்டமும் நடந்தன. இப்படிப்பட்ட மகத்தான போராட்டங்கள் மற்றும் தியாகங்களினால் தான் கேரள கம்யூனிஸ்ட் கட்சி மக்கள் கட்சியாக வளர்ந்ததும் ஆட்சியை பிடித்ததும் சாத்தியமானது என ஏ.கே.ஜி அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார்.
மத்திய சட்டசபையில் நாடாளுமன்றம் அங்கீகரிக்க கம்யூனிஸ்ட் உறுப்பினர் குழு தலைவராக செயல்பட்ட ஏ.கே.ஜி எவ்வித சலனத்துக்கும் ஆளாகாமல் முன்னுதாரண வாழ்க்கை வாழ்ந்தார். அதனால் முழுத்தகுதி கொண்டவராக ஒருவனின் வாழ்வில் அதிகார மமதை, மண்டைக் கனம் இன்ப வாழ்வின் மீது ஆவல் என பலவும் ஊர்ந்து வர வாய்ப்புள்ள இடம் எனக் கூறினார். தியாக வாழ்வு கேலிக்கு உள்ளான போதும் போராடுகிறவர்கள் சிறு கவனக்குறைவிற்கு ஆளாகினாலும் சீரழிவு கொள்வது உறுதி என்கிறார். சீனா, சோவியத் யூனியன், எகிப்து, இத்தாலி, பிரான்ஸ், செக்கோஸ்லோவேகியா, போலந்து, பல்கேரியா இங்கிலாந்து போன்ற பல நாடுகளுக்கும் சென்றதையும் அங்கு கிடைத்த அனுபவங்களையும் நமக்குள் ஆழமான சிந்தனை உருவாகும் வகையில் விரிவாக பதிந்துள்ளார். மொழிவழி மாநிலங்கள் கோரி நாடு முழுமையும் மக்களின் எழுச்சி மிகு கிளர்ச்சிகள் நடக்க கடும் அடக்குமுறைகளும் நிலவின. அவைகளை எதிர்கொண்ட மக்களுக்கு வெற்றி கிட்டியதையும் இன்று நாம் காண்கிறோம்.
பஞ்சாப் மாநில விவசாயிகள் 1959-ம் ஆண்டில் தண்ணீர்வரி, உபரிவரி போன்றவைகளுடன் பக்ரா நங்கல் கால்வாய் தண்ணீருக்காக அபிவிருத்தி வரி போடப்பட்டதை எதிர்த்து கடும் போராட்டம் நடத்தினர். எண்ணிலடங்கா துயரை தீரமாக எதிர்கொண்டு அந்த வரியை ரத்து செய்ய வைத்தனர். இந்த பரம்பரையின் தீரமிகு போராட்டத்தை தான் நாம் இன்று நாட்டின் தலைநகரில் கண்டு கொண்டிருக்கிறோம். உலக வரலாற்றில் முதன்முதல் தேர்தலின் மூலம் கம்யூனிஸ்ட் கட்சி கேரளத்தில் ஆட்சியைப் பிடித்தது. இ.எம்.எஸ் முதல்வரானார். இந்த ஆட்சி எடுத்த நடவடிக்கைகளால் ஆதாயம் இருந்த சுயநலமிகள், முதலாளிகள் மற்றும் நிலப்பிரபுக்களும் கைகோர்த்தனர். இவர்களின் கூட்டு சதியில் காங்கிரஸ் மற்றும் கம்யூனிஸ்ட் எதிர்ப்பாளர்கள் உடந்தையாக 26 மாத காலத்தில் ஆட்சி கவிழ்க்கப்பட்டது. ஏ.கே.ஜி 25 ஆண்டுகள் விவசாய சங்கத் தலைவராக செயல்பட்டார். அதன்பிறகு உடும்பன் சோலை மக்கள் சுருளி கீரித்தோடு பகுதி விவசாயிகள் வெளியேற்றங்களை எதிர்த்து பலவித போராட்டங்கள் நடத்தப்பட்டன. தொடர்ந்து விவசாயிகள் பிரச்சனைகளை மையப்படுத்தி நடைபயணம் பிரச்சார இயக்கம் கேரளாவிலும் தமிழகத்திலும் நடந்தன.
1975 ஜூலை 21 அன்று நாடாளுமன்றத்தில் அவசரகால சட்டத்தை எதிர்த்து ஏகேஜி அற்புதமான உரை நிகழ்த்தியுள்ளார் அதில் நாடு அசாதாரண நிலையில் இருப்பதை அழுத்தமாக எடுத்துக் காட்டினார் ஆளும் கட்சியின் அதிகாரத்தை நிலைநிறுத்தவும் மக்களைச் சுரண்டும் முதலாளித்துவத்தை மேலோங்க செய்யவும் தான் அடக்கு முறைகள் அனைத்தும் பயன்பட்டன, என்னும் உண்மையை அம்பலப்படுத்தி பேசினார். அதிகாரத்திற்கு நாங்கள் என்றும் அடிபணிய மாட்டோம், வரலாறு எங்களுக்கு நீதி வழங்கும் என ஓங்கி முழங்கினார். ஏ.கே.ஜி: உண்மையின் உரைகல்.
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
16-08-2021
No comments:
Post a Comment