Saturday, August 28, 2021

#இலங்கை_அகதிகள்_குறித்து_கவனத்தில்_கொள்ள_வேண்டியவை

 #இலங்கை_அகதிகள்_குறித்து_கவனத்தில்_கொள்ள_வேண்டியவை

———————————————————-
சட்டமன்றத்தில் தமிழக முதல்வர் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு ரூ.317 கோடி மதிப்பில் நலத்திட்டங்களை அறிவித்துள்ளார், மகிழ்ச்சி. நல்ல முன்னெடுப்பு.
இந்த விடயத்தில் இலங்கை அகதிகள் தங்கள் நாட்டுக்குத் திரும்புவதைக் குறித்து சில முக்கிய விஷயங்களையும் கவனத்தில் கொள்ளவேண்டும்.
தமிழகத்தில் உள்ள ஈழஅகதிகள் குறித்தான இன்றைய (28.08.2021) தினமணி தலையங்கமும் சரியான புள்ளியை நோக்கித் தனது கருத்தை தெளிவாகச் சொல்லியுள்ளது. தொடர்ந்து தமிழகத்தில் அடியேன் மட்டும் தான் இந்த கருத்தை கடந்த சில வருடங்களாக வலியுறுத்தி வருகின்றேன். பலர் இதற்கு எதிர் வினையும்
ஆற்றினார்கள். தினமணி தலையங்கத்தில் குறிப்பிட்டவாறு இலங்கையிலுள்ள தமிழ் மக்கள் தொகை குறைந்துவிடும் என்ற கருத்தை கவனத்தில் கொள்ளவேண்டும்.
ஈழ அகதிகள், 40 ஆண்டு காலமாக தமிழகத்திலேயே வாழ்கின்றனர் என்பதில் மாற்றுக்கருத்தில்லை. திபெத் அகதிகளுக்கு வழங்கும் சலுகைகளின் அளவுகள் கூட ஈழஅகதிகளுக்கு மத்திய அரசு வழங்கவில்லை என்ற நிலையும் இருந்தது.
இந்த விடயத்தில் என்ன செய்ய வேண்டும் என்பதை நேர்கோட்டில் தொலைநோக்கு பார்வையில் பார்க்க வேண்டும்.
ஈழ அகதிகளை பொருத்தவரை :
1. இலங்கைக்கு திரும்பிச் செல்லமுடியாமல் 40 ஆண்டுகாலம் தமிழகத்திலேயே அகதிகளாக தங்கி திருமணம், தொழில், வியாபாரம் என்ற நிலையில் இருக்கும் இவர்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கவது சரியே.
2. இலங்கைக்குச் செல்லவிரும்பும் அகதிகளுக்கு இங்கேதங்கிய காலத்திற்கானக் கட்டணவரி (Staying charge) வசூலிக்காமல் இலவசமாக கட்டணச்சீட்டில்லாமல் இலங்கைக்கு அனுப்பி வைப்பதுதான் நல்லது. அவ்வாறு இலங்கைக்கு செல்லும் இவர்களுக்கு இந்திய அரசு அங்கு கட்டிக்கொடுக்கும் வீடுகளையும் ஒதுக்கவேண்டும்.
3. இரட்டைக் குடியுரிமை என்பது இந்த நிலையில் அர்த்தமற்றது என்பதையும் உணர வேண்டும்.
கடந்த 1950-லிருந்துஇலங்கையிலுள்ள தமிழர்கள் உரிமைக்காக நடத்திய போராட்டங்கள், இழப்புகள், தியாகங்கள் என கவனத்தில் கொண்டு
இந்த பிரச்சனையை பார்க்க வேண்டும. இந்தியவில் அகதி இருந்து விட்டால் இலங்கையில் தமிழ மக்கள் தொகையே குறைந்துவிடும். இன்றைய இரண்டாம் நிலையில் உள்ள தமிழர்களுடைய எண்ணிக்கை மூன்றாம் நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும்.
சிங்களர்கள் மேலும் தமிழர்களை இன அழிப்புச்செய்து, தமிழர்களுடைய மக்கள் தொகை குறைந்துவிடும் நிலையில், சிங்கள ஆட்சியாளர்களுடைய நோக்கம் எளிதாக நிறைவேறிவிடும்.
ஒருகாலும் ஈழத்தில் தமிழர்களுடைய மக்கள் தொகை குறைந்துவிடக்கூடாது என்ற நோக்கத்தில் கவனமாக இருக்கவேண்டும். இதுவரை அங்கு. போராடி தமிழர்கள் சிந்திய குருதிக்கு அர்த்தமில்லாமல் ஆகி விடும்,தினமணி தனது தலையங்கத்தில் இந்த சூழலுக்கு ஏற்றவாறு ஆலோசனையை வழங்கியுள்ளது.
••••••••••••••••••
குடியுரிமையல்ல, குடியமர்த்தல்:
இந்தியாவில் தஞ்சமடைந்திருக்கும் இலங்கை அகதிகளுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்பது, பிரதமர் நரேந்திர மோடியை தில்லியில் சந்தித்தபோது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் முன்வைத்த பல கோரிக்கைகளில் ஒன்று. இப்போது, தமிழகத்தில் தங்கியிருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு ரூ.317.4 கோடி அளவிலான திட்டங்களை அவர் அறிவித்திருக்கிறார். அவர்களுக்காக 7,469 வீடுகள் கட்டித் தரப்போவதாகவும் தெரிவித்திருக்கிறார்.
திமுகவின் 2021 தேர்தல் அறிக்கையில், இலங்கைக்குத் திரும்ப விழையும் அகதிகளுக்கு எல்லா உதவிகளும் வசதிகளும் இந்திய அரசு செய்து கொடுக்க வேண்டும், அவர்களுக்கு சிறப்பு அந்தஸ்து வழங்க வேண்டும் என்று இலங்கை அரசை வற்புறுத்த வேண்டும் என்று கூறப்பட்டிருக்கிறது. ஐ.நா. மனித உரிமை அமைப்பின் அறிக்கையின்படி, 2002-க்கும் 2020-க்கும் இடையில் 17,718 அகதிகள்தான் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டிருக்கிறார்கள். இதிலிருந்து அவர்களில் பெரும்பாலோருக்கு இலங்கைக்கு திரும்புவதில் ஆர்வமில்லாத நிலை இருப்பது தெரிகிறது.
அகதிகளாக நுழைபவர்களுக்கெல்லாம் மனிதாபிமான அடிப்படையில் குடியுரிமை வழங்குவது என்பதை கொள்கையாகக் கடைப்பிடிக்க முடியாது. ஏற்கெனவே வறுமைக் கோட்டுக்குக் கீழே கணிசமான பகுதியினர் வாழும் நிலையில், அகதிகளையும் அனுமதித்து கூடுதல் சுமையைத் தாங்க இந்தியப் பொருளாதாரம் இடமளிக்காது. இதைத்தான் முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி, வங்கதேசப் போருக்குப் பிறகு லட்சக்கணக்கில் அகதிகள் நுழைய முற்பட்டபோது தெளிவுபடுத்தினார். இந்தியாவிலுள்ள தமிழ் அகதிகள் மீண்டும் இலங்கைக்கு திருப்பி அனுப்பப்பட்டு முறையாக குடியமர்த்தப்படுவார்களா? மாட்டார்களா? என்பது கேள்விக்குறியாகத் தொடர்கிறது. அவர்களில் பெரும்பாலானோர் இந்தியக் குடியுரிமை பெற்று இங்கேயே இணைந்து விடுவது என்பதில்தான் ஆர்வம் காட்டுகிறார்கள் என்பதை மறுப்பதற்கில்லை.
1983 முதல் தமிழகத்தில் 3, 04,269 இலங்கைத் தமிழ் அகதிகள் இருக்கிறார்கள். அவர்களில் 52,822 பேர் 29 மாவட்டங்களிலுள்ள முகாம்களில் தங்கியிருக்கிறார்கள். பெரும்பாலானோர் முகாம்களுக்கு வெளியே இருக்கிறார்கள். அவர்களில் சிலர் வெளிநாடுகளுக்கு போய்விட்டனர். பலர் மக்களோடு மக்களாகக் கலந்துவிட்டனர்.
இந்தியாவில் தஞ்சமடைந்த இலங்கை அகதிகளுக்கும், சிறிமாவோ - சாஸ்திரி ஒப்பந்தத்தின் கீழ், இந்தியா திரும்பாத இலங்கை வாழ் தமிழர்களுக்கும் குடியுரிமை வழங்கும் சட்டத்தை இலங்கை அரசு 2003-இல் நிறைவேற்றியிருக்கிறது. அதனடிப்படையில் இந்தியாவிலிருந்து இலங்கைக்குத் திரும்பும் அகதிகள் யாராக இருந்தாலும் அவர்கள் குடியுரிமை பெறுவது பிரச்னையாக இருக்காது. அப்படியிருந்தும் இலங்கை திரும்ப அகதிகள் விரும்பாமல் இருப்பதற்குப் பல காரணங்கள் இருக்கின்றன.
சிங்கள இனவெறித் தாக்குதலுக்கு மீண்டும் உள்ளாகிவிடுவோமோ என்கிற அச்சமும், அமைதியாக வாழ முடியுமா என்கிற கவலையும் அவர்களை யோசிக்க வைக்கின்றன. அதையும் மீறி தாயகம் திரும்பினால், தங்களது வாழ்வாதாரத்துக்கு என்ன வழி என்பது தெரியாத நிலையும் அவர்களின் தயக்கத்தை அதிகரிக்கிறது.
இந்திய குடியுரிமைச் சட்டத்தின் அடிப்படையில், ஹிந்துக்களான இலங்கைத் தமிழ் அகதிகள் இந்தியக் குடியுரிமை பெறுவதற்கான தகுதி பெறவில்லை. இஸ்லாமிய நாடுகளான பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், வங்கதேசத்திலிருந்து இனவெறித் தாக்குதலுக்கு உள்ளான ஹிந்து, கிறிஸ்தவ, பௌத்த, சீக்கிய, பார்ஸி, சமணர்களைப்போல இலங்கைத் தமிழ் அகதிகள் கருதப்படாததுதான் அதற்கு காரணம். இலங்கையில் சிங்கள இனவெறி காணப்பட்டாலும், அது தன்னை ஒரு மதச்சார்பற்ற நாடாக அறிவித்திருப்பதால் ஏற்பட்டிருக்கும் பிரச்னை இது.
சிங்கள பௌத்தர்களுக்கு எதிராக யாழ்ப்பாணத் தமிழர்கள் போராட வேண்டிய நிர்பந்தத்தை ஏற்படுத்தியது மதப் பிரச்னைதானே தவிர, மொழிப் பிரச்னை அல்ல. வடக்கு மாகாணங்களில் உள்ள தமிழ் ஹிந்துக்களுக்கும், கிழக்குப் பகுதியில் வாழும் தமிழ் முஸ்லிம்களுக்கும் எதிராக சிங்கள பௌத்தர்களால் தொடுக்கப்பட்ட இனவெறித் தாக்குதலின் விளைவுதான் இலங்கைப் பிரச்னை என்பதை பலரும் மறந்துவிடுகிறார்கள். பனதுராவில் பிராமண அர்ச்சகர் ஒருவர் சிங்கள இனவெறியர்களால் உயிருடன் எரிக்கப்பட்ட சம்பவம்தான், விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனைக் கொதித்தெழ வைத்தது என்பது வரலாறு.
இலங்கைத் தமிழ் அகதிகளுக்கு இந்தியக் குடியுரிமை வழங்குவது என்பது இலங்கையிலிருந்து தமிழர்களை ஒட்டுமொத்தமாக விரட்டியடிக்கும் ராஜபட்ச சகோதரர்களின் இன வெறிக்கு வலு சேர்ப்பதாக அமைந்துவிடும். வட கிழக்கு மாகாணத்தின் மண்ணின் மைந்தர்களான தமிழர்கள் அனைவரும் இலங்கைக்குத் திரும்பி, தங்களது சொத்துக்களை மீட்டெடுத்து, சம உரிமையுடன் வாழும் நிலைமைக்கு வழிகோலுவதுதான் சரியான அணுகுமுறையாக இருக்குமே தவிர, வட கிழக்கு மாகாணத்தை சிங்களர்களுக்கு தாரை வார்ப்பது என்ன நியாயம்?
தமிழகத்தில் தஞ்சமடைந்திருக்கும் இலங்கைத் தமிழ் அகதிகளுக்கான நல்வாழ்வுத் திட்டங்கள் அவர்களை இங்கே நிரந்தரமாகக் குடியேற வழிகோலுமானால், ஈழத்தின் மீதான தமிழர்களின் உரிமையை சிங்களர்களுக்கு விட்டுக் கொடுப்பதாக அமைந்துவிடக் கூடும். போராளிகள் சிந்திய ரத்தத்துக்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும். குடியுரிமை வழங்குவதைக் கைவிட்டு, பாதுகாப்பாக இலங்கை அகதிகளை தாய் மண்ணில் குடியமர்த்துவதுதான் இந்திய அரசின் நோக்கமாக இருக்க வேண்டும்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
28-8-2021.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...