#தலிபான்_ஆப்கான்_அமெரிக்க_வடவியட்நாம்
———————————————————-
கடந்த 1975 மார்ச் மாதம் 29-ஆம் தேதி தென் வியட்நாம் வட வியட்நாமிடம் முழுவதுமாகத் தோற்ற பிறகு தென் வியட்நாமியர்கள் – குறிப்பாக அமெரிக்கத் துருப்புக்களோடும் தென் வியட்நாம் துருப்புக்களோடும் சேர்ந்து போர் புரிந்தவர்கள் வட வியட்நாம் கம்யூனிஸ்டுகளிடமிருந்து தங்களைக் காப்பாற்றிக்கொள்ள சைகானிலிருந்து டனாங் துறைமுகம் வந்த அமெரிக்கக் கடைசி விமானத்தில் ஏறித் தப்பியோட முயன்றனர். விமானம் தரையிறங்கியதும் நூற்றுக்கணக்கானோர் விமானத்தை நோக்கி ஓடினர். விமானத்திற்குள் ஏறும் படி கீழே இறங்கியவுடனேயே தென் வியட்நாம் ராணுவத்தின் சில வீரர்கள் விமானத்திற்குள் முண்டியடித்துக்கொண்டு ஏறினர். ஒரு வயதான பெண் அவர்களோடு ஏற முயன்றபோது ஒரு வீரர் அவளுடைய முகத்தில் உதைத்தார். விமானம் மெதுவாக ஓடுதளத்தில் ஓடத் தொடங்கியதும் ஏற முடியாமல் விடப்பட்ட சிலர் விமானத்தின்மீது குண்டை எறிந்ததும் அதன் ஒரு இறக்கையில் கோளாறு ஏற்பட்டது. விமானம் மேலே பறக்க ஆரம்பித்தும் விமானத்திற்குள் ஏறும் படி தொங்கிக்கொண்டே இருந்தது. அதில் தொற்றிக்கொண்டு இருந்தவர்களின் கால்கள் அதிலிருந்து தொங்கிக்கொண்டு இருந்தன. அவர்களில் ஒருவர் விமானம் கடலின்மீது பறக்கும்போது கடலில் விழுந்து இறந்தார்; மற்றவர்களும் பின் கீழே விழுந்து இறந்தனர். 189 பேர் மட்டுமே பயணம் செய்ய வேண்டிய அந்த விமானத்தில் 268 பேர் பயணம் செய்தனர். சாமான்கள் வைக்கும் இடத்தில் இன்னொரு 60 பேர் அடைந்திருந்தனர்.
இப்போது கிட்டத்தட்ட அதே காட்சி நம் முன் நடந்துகொண்டிருக்கிறது. அமெரிக்கா ஆப்கானிஸ்தானத்தை விட்டு வெளியேற முடிவுசெய்து தன் துருப்புகளை வாபஸ் வாங்கிக்கொண்டிருக்கிறது. தாலிபான்களின் கைகளில் சிக்காமல் தப்பிப்பதற்காக ஆஃப்கானியர்கள், தன் துருப்புகளை மீட்பதற்காக அமெரிக்கா அனுப்பிய விமானங்களில் அவர்களோடு சேர்ந்து பயணம் செய்து நாட்டை விட்டுச் செல்வதற்கு முயன்றனர். அமெரிக்க விமானம் காபூல் விமானநிலையத்தில் தரையிறங்கி விமானத்திற்குள் ஏறும் படியை இறக்கியவுடனேயே கூட்டம் கூட்டமாக ஆஃப்கானியர்கள் விமானத்தை நோக்கி ஓடினர். கூட்டத்தைப் பார்த்துப் பயந்த விமானத்தில் பணிபுரிபவர்கள் வேகமாக விமானத்திற்குள் ஏறும் படியை மறுபடி விமானத்திற்குள் தூக்கிவிட்டனர். இதற்குள் பல ஆஃப்கானியர்கள் விமானத்தின் இறக்கைகளில் தொத்திக்கொண்டனர். விமானப் பணியாளர்களுக்குத் தெரியாமாலே சிலர், விமானம் தரையிறங்கியதும் வெளியே வந்து பின் மேலே ஏறியதும் மடங்கிக்கொள்ளும் விமானச் சக்கரங்களின் குழிகளுக்குள் ஏறிக்கொண்ட்னர். இறக்கைகளில் தொற்றிக்கொண்டிருந்தவர்களை விரட்டிவிட்டு விமானம் மேலே ஏறியது. சிறிது தூரம் சென்ற பிறகு ஏதோ கோளாறு இருப்பதாகத் தோன்றவே விமானிகள் பணியாளர்களை விமானத்தில் இருக்கும் சிறு துவாரம் வழியாகக் கீழே பார்க்கும்படி கூறினர். விமானச் சக்கரங்கள் மடங்கிக்கொள்ளும் குழிகளுக்குள் நசுங்கிய மனித உடல்களின் பாகங்கள் இருப்பது தெரிய வந்தது.
ஒவ்வொரு முறை விமானம் மேலே பறக்க ஆரம்பிக்கும் முன் பல முன்னெச்சரிக்கை ஏற்பாடுகள் மேற்கொள்ளப்படும். அப்படி ஒரு விமானப் பயணத்தில் இப்படியும் நேர்ந்திருக்கிறது.
No comments:
Post a Comment