Sunday, March 26, 2023

#அன்றைய விசாலமான வீடுகள்

#அன்றைய விசாலமான வீடுகள்…. 
————————————————————-
கடந்த 1970 கள் வரை இம்மாதிரி வீடுகள் விசாலமாக இருக்கும். மின் விசிறிகள் இல்லையென்றால் கூட, எங்கள் பகுதியில் குற்றாலம் சீசன் காற்று, ஜன்னல் வழியாகத் தவழ்ந்து வரும். இப்பெரிய வீடுகளில் குறைந்தபட்சம் எட்டுப் பேர்களாவது இருப்பார்கள். இன்றைக்கும் இம்மாதிரி வீடுகளைக் கிராமப்புறங்களில் பார்க்கக் கூடிய நிலை உள்ளது. இவையெல்லாம் நூறாண்டுகளுக்கு முன்னால் கட்டப்பட்ட வீடுகளாகும்.
























 
சிமெண்ட் கருங்கல் கலவையில் இன்றைக்கு கான்கிரீட் போடுகிறோம். அன்றைக்கு தேக்குமர கட்டைகள் மூலம் ஒழுங்காக, அழகாக மட்டப்படுத்தி அதைச் சுவருக்கு மேல் வைத்து வீட்டின் மேல்தளத்தை செங்கல்கள் சுண்ணாம்பு வைத்து தார்சு குத்தி சுத்துவார்கள். கடுக்காய் நீரை அப்போது கலக்கி மாடி தளம் அமைப்பது உண்டு.
 
வீடுகளின் சுவர்களைப் பூசுவதற்கு சிமெண்ட் கிடையாது. சுவரைப் பூசுவதற்கு சுண்ணாம்பை பெரிய அம்மியில் வைத்து அரைத்து அதை வைத்து சுவரை மட்டமாகப் பூசி வெள்ளையடிப்பதும் உண்டு.
 கல் கட்டடமோ, செங்கல் கட்டடமோ கட்டுவது என்றால் சுண்ணாம்புக் கல்லை வட்டமான வடிவத்தில் போட்டு, அதற்கு மேல் ரோடு ரோலர் மாதிரி ஓர் உயரமான உருளையை வைத்து, அதை மாட்டை கட்டி இழுத்து சிமிண்ட் போல கலவையாக்கி கருங்கல்லையோ செங்கல்லையோ வைத்து 70 முதல் 75 வரை கட்டுவது வாடிக்கையாக இருந்தது. உயரமான சுவர்களில் பெரிய சன்னல்களும் இருக்கும். பாட் என்ற செவ்வக வடிவ சின்ன சன்னல்களும் இருக்கும்.
 
இந்தப் படத்தில் உள்ளவாறு குறுகிய படிகள் மேல்தளத்திற்குச் செல்லும். கீழ்தளம், மேல்தளம், மொட்டை மாடி இருக்கும். இன்றைக்கு உள்ளதைப் போல தண்ணீர் டாங்குகள் மொட்டை மாடியில் இல்லை. வீட்டிற்குப் பின்புறம் கிணறும் குளியலறையும் இருக்கும். 
வீட்டுக்குப் பின்புறத்தில் வெந்நீர் போட அடுப்பின் மேல் பெரிய கொப்பரையை வைத்து அடுப்பை எரிப்பார்கள். 

மண் பானை விறகு சமையல், இட்லி, தோசை மாவை அரைக்க உரல், சட்னி, துவையல் அரைக்க அம்மி, வீட்டிலேயே தோட்டத்தில் உற்பத்தியான எள்ளில் நல்லெண்ணெய் என எதையும் நாடாமல் கடந்து வந்த நாட்களைத் திரும்பித்தான் பார்க்க முடியுமே தவிர, திரும்பப் பெற முடியாது. 

வீட்டின் முன் வராந்தாவில் உயர்ந்த தேக்குமரம், கல் என அகலமான தூண்கள், பெரிய வாசல் கால்கள், கதவுகள், பிரமாண்டமான வேலைப்பாடு அமைந்த கதவுகள்,  வீட்டின் உள்ளே மர இரும்பு உத்திரங்கள்,  ஆர்ச் வளைவான வராண்டா, ஆர்ச் வளைவான ஜன்னல்கள், வீட்டின் முகப்பில் மூன்றடிக்கு மூன்றடிக்கு இரண்டு பக்கமும் திண்ணைகள், சமையல் அறை எப்போது தென்கிழக்குப் பகுதியில் அமைந்திருக்கும். டைனிங் டேபிள் இல்லாமல் நீண்ட பந்திப் பாய்கள், வாழை இலைச் சாப்பாடு, வாரத்துக்கு இருமுறை எண்ணெய்க் குளியல். வீட்டில் அரைத்த சீயக்காய், மணம் வரும் காபி பவுடர், சில காப்பித் தூள்களில் சிக்கரி கலந்திருக்கும். மர்பி ரேடியோ பிலிப்ஸ் ரேடியோ என பெரிய பெரிய ரேடியோக்கள், மடக்குக் கட்டில்கள், நார் பின்னிய கட்டில்கள், ஈசிச் சேர் போன்ற சாய்வு நாற்காலிகள், பணம்,நகை வைக்க இரும்பு பெட்டிகள் ஒரு பக்கம். பருத்தி, மிளகாய், தானியங்கள் என விவசாய உற்பத்தி பொருள்களை வைக்க தனித்தனி கிட்டங்கி அறைகள். 

புத்தகங்களை அடுக்கி வைக்க மர அலமாரிகள். அந்தக் கால மேஜை, நாற்காலிகள் வித்தியாசமாக இருக்கும் என்பதெல்லாம் இந்தப் படங்களைப் பார்த்தவுடன் நினைவுகளில் வந்து செல்கின்றன. 

அந்த வீடுகளில் சந்தோசமாக வாழ்ந்த உறவுகள், உற்றார் உறவினர்கள் வருகைகள், தொடர்புகள் குறைந்துவிட்டன. அந்த வீடுகள் மட்டும் இப்போது உள்ளன. வீடுகளில் இரண்டு மூன்று பேர் வாழ்கிறார்கள். வீடுகள் சிதிலமடைந்துவிட்டன. இந்த வீடுகள் உள்ள கிராமப் பகுதிளுக்கோ, உறவினர் வீடுகளுக்கோ செல்லும் போது மலரும் நினைவுகளாக நெஞ்சில் இனிக்கின்றன.
 கிராமத்தில் இருக்கும்போது சென்னைக்குச் செல்ல வேண்டும் என்று துடித்த நெஞ்சம், ஏன் கிராமத்தைவிட்டு வந்துவிட்டோம், ஒரு விருந்தாளியைப் போல கிராமத்துக்குச் செல்ல வேண்டி இருக்கிறதே என்ற மனத்தாங்கல் அடிக்கடி ஏற்படுகிறது.

#ksr, #ksrvoice, #KS_Radhakrishnan,, #கேஎஸ்ஆர்போஸ்ட், #கேஎஸ்_இராதாகிருஷ்ணன்

கே.எஸ்.இராதா கிருஷ்ணன்.
#KSR_Post
26-3-2023.


No comments:

Post a Comment

*Confident Walking is more Successful than Confused Running*.

*Confident Walking is more Successful than Confused Running*. Confidence doesn't come when you have all the answers. Be brave to live fr...