கவிஞர் கனகா பாலன் அவர்கள் தமிழில் மிகச் சிறந்த ஒரு கவிஞராக வளர்ந்து வருகிறார்! அவரின் “#கூராப்பு’’ கவிதை தொகுப்புக்கு என் வாழ்த்துரை!
Kanaga Balan
•••••
எங்களது கந்தக கரிசல் மண்னின் இலக்கிய தலைநகர் கோவில்பட்டி அருகே என் தாய்யார் பிறந்த பசுமையான நெல் பயிர், வாழை என வானம் பார்த்த பூமியில் சூழ்ந்த, 1982 இல் சகோ. வேலுப்பிள்ளை பிராபாகரன் கண்டு மகிழ்ந்த வெள்ளாகுளம் கிராமத்தை சேர்ந்த தங்கை திருமதி கனகா பாலன் அவர்கள் தமிழில் மிகச் சிறந்த ஒரு கவிஞராக வளர்ந்து வருகிறார்! இப்பொழுது “கூராப்பு” என்ற அவரது நான்காவது தொகுதியை கொண்டு வந்திருக்கிறார்.
மிக எளிமையான மொழியில் வாசிப்பவர் வியக்கும் வண்ணம் அவரது கவிதைகள் சிறப்பாக வந்திருக்கின்றன. கவிதைகள் எழுதுவதற்கென்று ஒரு தனி மனம் வேண்டுமாய் இருக்கிறது.
இல்லற வாழ்வில் இருந்து கொண்டு மெல்ல மெல்ல மொழியைச் சேகரித்து தான் பார்க்கும் பல்வேறு சம்பவங்களைக் காட்சிகளை ஒரு சித்திரம் போல படைத்து மென்மையான பெண் குணங்களோடு மட்டுமல்லாமல் சமூகப் பார்வைகளையும் சேர்த்து இக் கவிதை தொகுப்பை கொண்டு வந்திருக்கிறார். அதற்கு முதலில் எனது பாராட்டுகள்!!
இவரது கவிதைகள்
ஆனந்த விகடன்
கணையாழி
ஆவநாழி
படைப்பு
நுட்பம் போன்ற இதழ்களில் வெளிவந்துள்ளன!
“மார்பகக் கோப்பை
நிறைந்து கனத்து
தானாக ஒழுகத் தொடங்கிவிட்டதில்
மாராப்புச் சேலையில்
மலர்ந்திருந்தது
ஈரப் பூ
வாடாதிருக்க
வேண்டுமென்றே
தொண்டைக்கு வெளியே
நனையுமாறு
அடிக்கடி நீரருந்தி
கடிகாரம் பார்க்கிறாள்
விடுப்பு முடிந்து
பணிக்குச் சென்ற நாளில்
புதுத்தாயானவள்.
என இன்றைக்குத் திருமணம் முடிந்து குழந்தைகளைப் பாலூட்டி பராமரிப்பதற்கு கூட அவகாசம் இல்லாமல் வேலைக்கு போகும் இளம் பெண்களின் நிலையை இந்த ஒரு கவிதையில் அற்புதமாக நம் கண் முன் நிறுத்துகிறார்”
மொத்தக் கவிதை தொகுப்பும் வாசிக்க ஆர்வத்தைத் தூண்டும் படியாக உள்ளன!
எங்கள் கிராமத்து கரிசல் மண்ணில் பிறந்த பெண்ணாகியதால் அந்த மண்ணின் மணமும் அத்துடன் இல்லாமல் ஒரு கருத்தையோ காட்சியையோ கவிதையாக்குவதில் பொறுப்பும்
அறிவும் உணர்ச்சிகளும் கலந்தவராக இருக்கிறார்! அவரது பல கவிதைகளை வாசித்த போது
தன்னைத்தான் நன்கு அறிந்த கவிஞராகவும் இருப்பதையும் அறிந்து கொண்டேன்.
கோவில்பட்டி நிலத்தில் பிறந்து வளர்ந்து எனக்கு மிக அறிமுகமான நெருக்கமான குடும்பத்தில் இருந்து வந்திருக்கும் கனகா பாலன் கவிதைகள் எழுதி இந்த தமிழ் நிலத்தில் பெயர் பெறுவதும் புகழ் பெறுவதும் நமக்கு ஒரு மகிழ்ச்சியான விஷயம் தானே!
சோர்வில்லாத வாசிக்க இதமான நன்மையான கவிதைகள்! மனிதர்களை மதிக்கிற மரபு வழி சார்ந்த விரசங்கள் ஏதுமற்ற எங்கள் நிலத்துப் பெண் மொழியும் இதுதான்!
அவர் இன்னும் சிறப்பாக தொடர்ந்து எழுதி புகழ் பெற வேண்டும் என்று அவரை வாழ்த்தி மகிழ்கிறேன் . இவரின் பாட்னார் திருக்குறள் பற்றாளர்
ஆசிரியர் முத்து வீரப்பன் தமிழ் மற்றும் கனித ஆசிரியாக
எங்கள் கிராமம் ப.யூ. நடு நிலை பள்ளியில் 1960 களில் பணி புரிந்தவர். அறம் சார்ந்தவர் . அவர் வழியில் அவரின் பேத்தி கனகா பாலன். அவரின் இலக்கிய பணி மேலும் சிறக்க வாழ்த்துக்கள். கனகா பாரதி, கு. அழகிரிசாமி, கிரா என கரிசல் இலக்கிய வரிசையில் புது வரவு.
வாழியவே….!
வழக்கறிஞர் கே எஸ் இராதாகிருஷ்ணன்,
அரசியலாளர்,
ஆசிரியர் -கதை சொல்லி,
சென்னை.
முகாம்- கோவில்பட்டி.
நாள்-8-10-2024.
#ksrpost
#கேஎஸ்ஆர்போஸ்ட்
18-10-2024.

No comments:
Post a Comment