என்னுடைய கல்லூரித் தோழர், சக வழக்கறிஞர், உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர், இன்று காலை கைபேசியில் தொடர்பு கொண்டு 1995இல் *மோகமுள்* படம் வந்ததை பார்த்தோமே அது மாதிரி இந்த 96 திரைப்படம் இருக்கின்றதே என்றார்.
அவரிடம் நான் அது வேறு, இது வேறு என்று சொன்னேன். அந்த படத்தில் பாபு (அபிஷேக்), யமுனா (அர்ச்சனா) என்ற பாத்திரங்களுடைய உளவியல் வேறு. யமுனாவின் திருமணம் தட்டிப்போகும்போது, பாபு மீது பட்டும் படாமல் காதல் கண்கள் வீசுகிறாள். பாபுவுக்கும் அந்த எண்ணம் இருந்தாலும், வயது குறைவானதால் அந்த உறவையோ, நட்பையோ ஏற்றுக் கொள்ளலாமா என்ற தயக்கம் இருந்தாலும், மனதளவில் யமுனாவை பாபு விரும்புகிறார். அந்த படத்தில் யமுனாவிடம் மனதை பறிகொடுத்துவிட்டு பாபு உளவியல் ரீதியாக அதை எளிதில் கடந்து போக இயலாமல் உள்ள தவிப்பு வேறு. அது சந்தர்ப்பவசம் மட்டுமல்ல, அந்த உறவுகளில் இருவரிடமும் மனிதநேயமும் இருந்தது. தி. ஜானகிராமனின் கதைப்போக்கும், திரைப்படம் தயாரித்த அணுகுமுறையும் 96 திரைப்படத்தைவிட மாறுபட்டது.
ஆனால், இதே 1995 காலக்கட்டங்கள் தான் 96 படத்தின் சாரமும் கூட. இதே போல பாக்யராஜ் நடித்த *அந்த 7 நாட்கள்* படத்தில், “_என் காதலி இன்னொருவர் மனைவியாகலாம், ஆனால் இன்னொருவர் மனைவி எனது காதலியாக முடியாது_.” என்ற வசனத்திற்கு கடுமையான விவாதமும் அப்போது நடந்தது.
96 திரைப்படத்தில் பத்தாம் வகுப்பில் ஏற்படும் காதல், கவர்ச்சி போன்றவை காலங்கள் கடந்து நினைக்கும்போதோ, நேரே சந்திக்கும் போதோ மானசீகமாக ஒரு பார்வையும், சிரிப்பும் தான் நாம் நேசித்த காதலியிடம் காட்ட முடியுமோ ஒழிய இப்படியெல்லாம் பேசமுடியுமா என்று தெரியவில்லை. யதார்த்தமாகவும் படவில்லை. மனித மனம் அளக்க முடியாத ஆழமானது. அதற்குள் எத்தனையோ நிலவறைகள், என்னங்களை வைத்து கடந்து செல்லத்தான் முடியும். இது முற்றாக
அகத்தினில் மட்டுமே இருப்பு கொண்டது .
ஆனால் '*96 திரைப்படம்*' நல்லமுறையில் நகர்த்தியுள்ளார்கள். எப்படியென்றால், 1964இல் காதலிக்க நேரமில்லை படத்தினைப் போன்றதொரு பார்க்கும் போது அகமகிழ்ச்சியைத் தருகிறது. எவ்வளவு தான் கெட்டவராக இருந்தாலும், தான் நேசிப்பவளிடம் நல்லவனாகத் தான் இருப்பார். போலியான உருவங்கள் ,பிம்பங்கள் காதலில் தெரியாது, காதல்கள் ஏமாற்றப்படலாம். அப்படி ஏமாற்றப்படும்போது தான், ஏமாற்றப்படுவதின் பல்வேறு சூழல்களும், காரணங்களும் தெரியும். போலித்தனத்தோடு இரண்டு மனங்கள் எப்போதும் ஒன்று சேராது. 96 திரைப்படத்தில் மணவாழ்க்கைக்கு பின், காலங்கடந்தபின் ஜானு (த்ரிஷா), பள்ளிப்பருவக் காதலை எப்படி உண்மையாக ஏற்றுக் கொள்கிறாள் என்பது கேள்விக்குறியான விடயம்.
இருப்பினும் திரைப்படம் என்ற நிலையில், சந்தர்ப்ப சூழ்நிலையால் பிரிய நேர்கிற காதலர்கள்22 ஆண்டுகள் கழித்து சந்திக்கும் போது அவர்களுக்கு ஏற்படும் உணர்ச்சிகைள மன போராட்டங்கைள
பார்க்கமுடிகிறது. நினைத்திருந்தால் எல்லைகளை வேலிகளை தண்டியிருக்க முடியும். விஜய் சேதுபதி -த்ரிஷா நடிப்பு
பாராட்டுக்குரியது
ஆனலும்,குடும்ப பாரம், மனமாற்றங்கள், குழந்தைகள் என்பது மட்டுமல்லாமல், கடந்துவிட்ட வாழ்க்கையை திரும்பவும் யதார்த்தமாக யோசிப்பது உளவியல் ரீதியாக சரியாகப் படவில்லை. மொத்தத்தில் 96 பொழுதுபோக்கான நல்ல படம். அதன் கலைஞர்களை பாராட்ட வேண்டும்.
இன்றைக்கு மக்கள்படும் பாடுகள் மக்களுக்கே நன்றாகத் தெரியும், அதை மக்களிடம் சொல்வதற்கே காசு வாங்கிக் கொண்டு நடிக்கும் நடிகர்களுக்கு மத்தியில், 96 சராசரி வாழ்க்கை முறைக்கு மாறுபட்டாலும், ஒரு பொழுது போக்காக பார்க்கப்பட வேண்டிய படம் மட்டுமல்ல, கவனிக்கப்பட வேண்டிய சில விடயங்களும் அதில் உள்ளன.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
07/11/2018
No comments:
Post a Comment