Thursday, November 29, 2018

*மேகதாட்டு அணை பிரச்சனையும், சமாச்சாரமும்.* அகண்ட் காவிரி வறண்ட காவிரி ஆகின்ற வேதனை .......



-------------------------------------

மைசூரு, மாண்டியா மாவட்டங்களுக்கு நீர் பாசனத்திற்காகவும், பெங்களூரு மாநகரின் குடிநீருக்காகவும், காவிரி நதியில் மேகதாட்டு பள்ளத்தாக்கில் ஏறத்தாழ 66.5 முதல் 96 டி.எம்.சி., தண்ணீர் தேங்கும் வகையில் ஒரு அணையை கட்ட கர்நாடக அரசு திட்டமிட்டுள்ளதற்கு மத்திய அரசின் நீர்வள ஆணையமும் ஒப்புதலை வழங்கிவிட்டது. காவிரி தமிழ்நாடு, கர்நாடகா, கேரளா, புதுச்சேரி மாநிலங்களை உள்ளடக்கிய நதியாகும். இந்நிலையில் அங்கு கர்நாடகம் அணை கட்டுவது காவிரி நதிநீர் நடுவர்மன்றம் அளித்த இறுதித் தீர்ப்புக்கும், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்புக்கும் எதிரானது. இதையெல்லாம் சற்றும் சிந்திக்காமல் மத்திய அரசு மேகதாட்டு அணையை கர்நாடகத்தில் கட்ட ஒப்புதல் அளித்துள்ளது கண்டனத்துக்குரியதாகும். மேகதாட்டு (ஆடுதாண்டி) என்பது காவிரி நதி தமிழகத்திற்கு நுழையும் முன்னர் சற்று மேலேயுள்ள பள்ளத்தாக்கு ஆகும். இந்த பகுதியில் தான் காவிரியுடன் அர்க்காவதி நதியும் சேரும் இடத்தில் தான் இந்த மேகதாட்டு அணையை கட்ட கர்நாடகம் முனைந்துள்ளது.

கிருஷ்ணராஜசாகர் அணைக்கு கீழேயுள்ள கபினியில் 19.5 டிம்சி தண்ணீரை சேமிக்கலாம். இந்த அணையில் நிரம்பிய உபரிநீர் அனைத்தும் காவிரியில் சேரும் பொழுது அர்க்காவதி காவிரியில் சேரும்போது மழைக்காலங்களில் நீர்ப்பெருக்கு அதிகம் இருக்கும். அந்த தண்ணீரெல்லாம் தமிழகத்திற்கு வரவேண்டிய தண்ணீர். அந்த நீர் மேட்டூர் அணைக்கு தான் வரும். தற்போது அந்த அணை கட்டப்பட்டுவிட்டால் மேட்டூருக்கு வரும் நீர் தடுக்கப்பட்டுவிடும். மேகதாட்டு அணையை இருப்புத் தண்ணீர் இருக்கும் அணை (Balance Reservoir) என்று சொல்கிறது. இந்த அணையை கபினி, அர்க்காவதி நிறைந்தது போக உபரி நீரை தேக்கி வைக்கும் அணை என்பது தான் கருத்து. அப்படியெனில் அந்த தண்ணீர் மேட்டூர் அணைக்கு தான் வரவேண்டும். 

அந்த தண்ணீரை தமிழகத்திற்கு வராமல் தடுத்து தண்ணீரை தேக்கிவைத்து மின்சாரத்தை தயாரிக்கும் திட்டத்தை கடந்த பல ஆண்டுகளாக கர்நாடகம் திட்டமிட்டது. இந்த திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியவர் அன்றைய பிரதமர் தேவேகவுடா. மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் ஒப்புதலோடு, சுற்றுச் சூழல் அமைச்சகம், மத்திய மின்சக்தி ஆணையத்தின் ஒப்புதல் பெற்ற திட்டக்குறிப்புகளை கர்நாடக அரசு அனுப்பி ஒப்புதல் கிடைத்துவிடும் என்று தெரிகிறது. அதற்கு ஒப்புதல் கிடைத்துவிடும் என்ற நம்பிக்கையையும் கர்நாடகம் தெரிவித்துள்ளது. உச்சநீதிமன்றத்தின் இறுதி தீர்ப்பின்படி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் ஒப்புதலின்றி இந்த மேகதாட்டு அணையை செயல்படுத்த முடியாது. ஏற்கனவே காவிரி மேலாண்மை ஆணையத்தின் தலைவர் மசூத் உசேன் மேகதாட்டு அணை திட்டத்தை தமிழகத்தின் ஒப்புதலின்றி நிறைவேற்ற முடியாது என்று கூறியுள்ளார். வருகின்ற டிசம்பர் 6ம் தேதி காவிரி மேலாண்மை ஆணையத்தின் கூட்டத்தில் இதை பற்றி விவாதிக்கப்படும் என்று கூறியுள்ளார். காவிரி மேலாண்மை ஆணையத்தின் அனுமதி இல்லாமலேயே மத்திய அரசு எப்படி ஒப்புதல் அளித்தது. தமிழகத்திற்கு வரவேண்டிய காவிரி நீர் 177.25 டி.ம்.சி நீரை வழங்கவே மேகதாட்டில் அணை கட்டுவதாக கர்நாடக முதலமைச்சர் குமாரசாமி கூறியுள்ளது அபத்தமாக உள்ளது. காவிரியில் பெய்யும் மழையின் 50 விழுக்காடு என்ற அடிப்படையில் தமிழகத்திற்கு தரவேண்டிய தண்ணீர் 177.25 டிம்சி என்று கணக்கிட்டு உறுதி செய்யப்பட்டது. மழை அதிகம் பெய்தாலும் கூடுதல் தண்ணீர் பெறவும், கடைமடை மாநில விவசாயிகளுக்கு உரிமை உள்ளது என்ற நிலையில் தமிழ்நாடு மேகதாட்டு பிரச்சனையில் கேள்வி எழுப்ப முடியாது என்று கர்நாடக அமைச்சர் சிவகுமாரின் கருத்து தவறானது. இந்த நிலையில் மத்திய அரசும், கர்நாடக அரசும் உச்சநீதிமன்ற தீர்ப்பையும், நடுவர்மன்ற இறுதித் தீர்ப்பையும், காவிரி மேலாண்மை வாரியத்தையும் பொருட்படுத்தாமல் மேகதாட்டுவில் மேட்டூர் அணையை விட அதிக கொள்ளளவை கொண்ட பெரிய அணையை கட்ட திட்டமிட்டுள்ளது தமிழகத்தை வஞ்சிக்கும் நிலைப்பாடே. இதே போல ராசிமணல், சிவசமுத்திரம் ஆகிய இடங்களிலும் காவிரியின் குறுக்கே அணைகள் கட்ட கமுக்கமான நடவடிக்கைகளை கர்நாடக அரசு எடுத்து வருகிறது என்பதும் கவனத்தில் கொள்ள வேண்டும். கிட்டத்தட்ட 20 ஆண்டுகளுக்கு மேலாகவே இந்த மேகதாட்டு பிரச்சனையில் கர்நாடக அரசு காட்டும் முனைப்பை எதிர்த்து தமிழக அரசு காட்டி வந்த எதிர்ப்பினை மத்திய அரசு கவனத்தில் கொள்ளவில்லை. 

நடந்தாய் வாழி காவிரி என்பது வறண்டாய் காவிரி என்று தமிழகம் வேதனைப்படும் அளவில் மத்திய அரசும், கர்நாடக அரசும் செய்துவிடுமோ என்ற வினா தான் நமக்கு ஏற்படுகிறது.

#காவிரி
#மேகதாது
#ராசிமணல்
#சிவசமுத்திரம்
#Cauvery_issue
#megathathu
#rasimanal
#sivasamudram
#letter_to_cabinet_secretary_on_cauvery_issue
#KSRadhakrishnanpostings
#KSRpostings
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
29/11/2018

No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...