*ஜம்மு - காஷ்மீர் சட்டப்பேரவை கலைப்பு Art 356.*
-----------------------
-----------------------
காஷ்மீரில் நடைபெற்று வந்த மக்கள் ஜனநாயக கட்சி, பாஜக கூட்டணி ஆட்சி கடந்த ஜூன் மாதம் பாஜக தனது ஆதரவை வாபஸ் பெற்றதால் அங்கு ஆட்சி கவிழ்ந்தது. ஜம்மு – காஷ்மீர் சட்டமன்றமும் முடக்கப்பட்டது. திடீரென 2 சட்டமன்ற உறுப்பினர்களைக் கொண்ட ஜம்மு - காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சி (ஜே.கே.எம்.சி) கடந்த 21/11/2018 அன்று ஆளுநரிடம் ஆட்சியமைக்க கோரிக்கை வைத்தது. தனக்கு பாஜகவின் 26 சட்டமன்ற உறுப்பினர்கள், மற்ற கட்சிகளை சேர்ந்த 18 சட்டமன்ற உறுப்பினர்களின் ஒருமித்த ஆதரவு உள்ளதாக கூறியது. இதேபோல மறுபுறத்தில், மக்கள் ஜனநாயகக் கட்சி 28 உறுப்பினர்களுடன் ஆட்சியமைக்க உரிமை கோரியது. இவர்களுக்கு தேசிய மாநாட்டுக் கட்சியின் சட்டமன்ற உறுப்பினர்கள், காங்கிரசின் 18 உறுப்பினர்களின் ஆதரவு அளிக்க இருப்பதாகவும் மக்கள் ஜனநாயக கட்சியான பிடிபி தெவிரித்தது. இந்நிலையில் மாநில ஆளுநரான சத்யபால் மாலிக் இரண்டு தரப்புகளின் கோரிக்கைகளையும் பரிசீலிக்காமல் தன்னிச்சையாக சட்டப்பேரவையை கடந்த 21/11/2018 அன்று கலைத்து உத்தரவிட்டார்.
இரண்டு தரப்பினரில் யாருக்கு ஆதரவு அதிகமாக உள்ளதோ அதை கண்டறிந்து ஆட்சியமைக்க ஆளுநர் அழைக்காமல், தான்தோன்றித்தனமாக அரசியல் சட்டத்தின் 356-வது பிரிவை பிரயோகப்படுத்தியது முற்றிலும் தவறானது, நியாயமற்றது, கண்டனத்துக்குரியது. இதற்கு ஆளுநர் சொல்லும் காரணங்கள் என்னவென்று பார்த்தால்;
சட்டமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்கும் வகையில் குதிரைபேரம் நடக்கும் என்றும், பொருந்தாத கூட்டணியாக எப்படி ஆட்சியமைக்க முடியுமென்றும், காஷ்மீரின் நலனைக் குறித்தே பிரிவு 356-ன்படி சட்டப்பேரவை கலைக்கப்பட்டதாக கூறியுள்ளார். அப்படியெனில், எதிரெதிரான கொள்கைகளை கொண்ட பாஜகவும், பிடிபியும் கடந்த காலத்தில் எப்படி ஆட்சியமைக்க முடிந்தது. அதுபோல, பிடிபி கட்சி தன் ஆதரவு எம்.எல்.ஏக்களின் பட்டியலை தொலைநகல் (Fax) மூலமாக அனுப்பியது கிடைக்கவில்லை என்றும், 21/11/2018 நாளானது விடுமுறை என்றும் ஒரு காரணத்தை சொல்லியுள்ளார். ராஜ்பவனில் அதிகாரிகள் இருப்பார்களே, அப்படியிருந்தும் எப்படி கிடைக்கவில்லை என்று அலட்சியமாக பதிலளிக்கிறார்கள் என்பது வேதனையளிக்கிறது. ஆனால், அதே தேதியில் ஜம்மு - காஷ்மீர் மக்கள் மாநாட்டுக் கட்சி (ஜே.கே.எம்.சி) அனுப்பிய தொலைநகல் மட்டும் ஆளுநர் மாளிகைக்கு சென்றது எப்படி என்பது புரியவில்லை.
இதற்கிடையில், பாஜக பொதுச் செயலாளர் ராம் மாதவ் தன்னுடைய டிவிட்டரில் பாகிஸ்தானின் உத்தரவுப்படியே ஆட்சியமைக்க பிடிபி, தேசிய மாநாட்டுக் கட்சியும் உரிமை கோரியதாக ஜமுக்காளத்தில் வடிகட்டிய பொய்யை அபத்தமாக கூறியபோது, முன்னாள் காஷ்மீர் முதல்வர் உமர் அப்துல்லா அதை கண்டித்தபின் தன்னுடைய கருத்தை திரும்பப்பெற்றார் என்பதெல்லாம் மிகவும் விளையாட்டுத்தனமான, முட்டாள்தனமான நடவடிக்கையே. இப்படி பல சந்தேகங்கள் காஷ்மீர் ஆட்சிக்கலைப்பில் எழுந்துள்ளன. மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவர் மெகபூபா முப்தியும் பாஜக கூட்டணியில் முதல்வராக இருந்தவர். அவரும் ஆளுநர் மாலிக்கின் இந்த நடவடிக்கையை கடுமையாக கண்டித்துள்ளார்.
ஆளுநர் ராஜ்பவனில் அமர்ந்து கொண்டே தன்னிச்சையாக முடிவு செய்து சட்டமன்றத்தை கலைத்திருப்பது, எஸ்.ஆர்.பொம்மை வழக்கில் உச்சநீதிமன்றத் தீர்ப்புக்கு முரணாணது. மத்திய - மாநில அரசு உறவுகளை ஆய்வுசெய்த சர்காரியா கமிஷனின் பரிந்துரையை புறந்தள்ளி அதற்கு மாறாக ஆளுநர் மாலிக் மேற்கொண்ட நடவடிக்கை பொறுப்பற்றதாகும். சட்டத்தைப் பாதுகாக்க வேண்டியவரே அதை அத்துமீறிய ஆளுநரின் நடவடிக்ககையை ஒருகாலும் ஏற்றுக்கொள்ள முடியாது. பெரும்பான்மை ஆதரவு பெற்ற கட்சிகளின் கோரிக்கைகளை பரிசீலனை செய்து ஆட்சியமைக்கும் அதிகாரம் மட்டுமே ஆளுநருக்கு உள்ளது. அதன்பின் ஆட்சியமைத்த கட்சி சட்டமன்றத்தில் குறிப்பிட்ட காலக்கட்டத்திற்குள் நம்பிக்கை வாக்கெடுப்பை நடத்த வேண்டுமென்று உத்தரவிடுவது மட்டும்தான் ஒரு பொறுப்புள்ள ஆளுநரின் சட்டப்பூர்வமான ஜனநாயகக் கடமையாகும். இதைவிடுத்து ஒரே கட்சியா, ஒரே கொள்கையா என்பதையெல்லாம் பரிசீலிப்பது ஆளுநரின் உரிமை கிடையாது. சட்டப்பேரவையில் பெரும்பான்மை ஆதரவை நிரூபிப்பது தான் நடைமுறை. அதை விட்டுவிட்டு ராஜ்பவனில் நான்கு சுவர்களுக்குள் முடிவெடுக்கும் அதிகாரம் ஆளுநருக்கு கிடையாது. கடந்த மே மாதம் நடைபெற்ற கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் அம்மாநில ஆளுநர் பெரும்பான்மை கொண்ட மதசார்பற்ற ஜனதாதளம் - காங்கிரஸ் கூட்டணியை அழைக்காமல் பாஜகவை ஆட்சியமைக்க அழைத்து அந்த ஆட்சியும் தானாகவே சட்டமன்றத்தில் தனது ஆதரவை நிரூபிக்க முடியாமல் அதன் முதல்வர் எடியூரப்பா ராஜினாமா செய்தார்.
பாஜக ஆட்சியில் உத்தரகாண்ட், அருணாச்சல பிரதேசத்திலும் இந்த கூத்தை நடத்தினார். அருணாச்சல பிரதேசத்தில் 2016இல் குடியரசுத் தலைவர் ஆட்சி அமலுக்கு வந்தபின் வழக்கு உச்சநீதிமன்றத்தில் தொடுத்து ஆளுநரின் ஆட்சிக்கலைப்பு தவறானது என்று பாஜக அரசு அப்போது குட்டு வாங்கியது. அதேபோல, உத்தரகாண்டில் ஹரீஸ்ராவூத் தலைமையிலான அரசாங்கத்தை நம்பிக்கை வாக்கெடுப்புக்கு முதல்நாளே கலைத்தது. அதை மறுபடியும் உத்தரகாண்ட் உயர்நீதிமன்றம் ஆளுநரின் ஆட்சிக்கலைப்பை தவறு என்று தீர்ப்பளித்து அவரே மீண்டும் பொறுப்பேற்றார். 2005இல் பீகாரில் பூட்டாசிங் கவர்னராக இருந்து ஆட்சிக் கலைப்பு நடந்தபோது, உச்சநீதிமன்றம் ஆளுநரின் நடவடிக்கை தவறானது என்று உத்தரவிட்டு பெரும்பான்மை உள்ள ஆட்சியை கலைக்கமுடியாது என்றும் ஆணையிட்டது. ஜார்க்கண்டில் 2004இல் கவர்னர் சையது 41 சட்டமன்ற உறுப்பினர்கள் கொண்டவரை ஆட்சியமைக்க அழைத்தார். ஆனால், எதிர்முனையில் 80 பேர் ஆதரவுபெற்ற அர்ஜீன் முண்டாவை அழைக்காமல் ஆளுநர் சையது செய்த நடவடிக்கையை கண்டித்தபின் 2004இல் அர்ஜூன் முண்டா ஜார்கண்ட் முதல்வரானார். இதேபோல, நாகாலாந்தில் 1992இல் அம்மாநில ஆளுநர் முதலமைச்சரின் பரிந்துரையின் பேரில் ஆட்சியைக் கலைத்தார். ஆனால், அது முற்றிலும் முரணாணது என்று திரும்பவும் ஆட்சி நிறுவப்பட்டது. அதேபோல, 2009 நவம்பரில் குஜராத்தில் ஆளுநர் கமலா பெனிவால், நரேந்திரமோடி முதலமைச்சராக இருந்தபோது, லோக்அயுக்தா விடயத்தில் கவர்னருக்கும் மோடிக்கும் அங்கு பிரச்சனை ஏற்பட்டது. பிற்காலத்தில் கமலா பெனிவாலை அன்றைய குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி அதிகாரத்தை துஷ்பிரயோகம் செய்துவிட்டார் என்று ஆளுநர் பதவியில் இருந்து நீக்கப்பட்டதெல்லாம் வரலாறுகள். கடந்த காலத்தில் மாநில ஆளுநர்களுக்கும், முதல்வர்களுக்கும் நடந்த பனிப்போரை பற்றி என்னுடைய பதிவுகள் வருமாறு.
No comments:
Post a Comment