நேற்று கிராமத்தில் இருந்து சென்னை திரும்பிக் கொண்டிருந்த போது ஒரு அழைப்பு, அவர் மூத்த படைப்பாளி, மதுரையில் இருக்கின்றேன் சந்திக்க வேண்டும் என்றார். ஏறத்தாழ 95வயதுடையவர். 1950களில் கம்யூனிஸ்ட் , சதி வழக்கில் கைது செய்யப்பட்டவர். மதுரை காலேஜ் ஹவுஸில் தங்கியுள்ளார். அவரை சந்தித்து அவருடன் உணவருந்தி விட்டு புறப்பட்டேன். புறப்படும் போது , " அரசியல் என்ன, இப்படி போய்ட்டு இருக்கு? சாதி சார்ந்த அரசியல், மார்க்கெட்டிங் எனப்படும் வியபார அரசியலாக போய்விட்டதே, கொள்கை அரசியலுக்கு இடமில்லாமல் போய்க் கொண்டிருக்கின்றதே, இந்த மாற்றங்கள் ஏமாற்றம் அளிக்கின்றதே என ஆதங்கப்பட்டார்.
மேற்கண்ட வாங்கியங்களை அவர் உதிர்த்த போது எனக்கு அவர் பேசியதாக உணரவில்லை. ஒரு நிமிடம் தலைவர் கலைஞர் என்னிடம் பேசியதாக உணர்ந்தேன். ஆம், இதே கருத்தை 2014ம் ஆண்டு, நாடாளுமன்ற தேர்தலின் போது தலைவர் கலைஞர் அவர்கள் என்னிடம் சொல்லி ஆதங்கப்பட்டார். என்னய்யா! சாதி அரசியல், மார்க்கெட்டிங் பாலிடிக்ஸ் என நிலைமை தலைகீழாக போயிடுச்சு. இதிலேயும் அரசியல் செய்ய வேண்டிய கட்டாயத்தில் இருக்கின்றோம். இந்த நேரத்தில் நாடாளுமன்ற தேர்தலில் உனக்கு என்னால் வாய்ப்பளிக்க முடியாமல் போய்விடுகின்றது என்றார். இதனை முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் இரா.செழியன் அவர்களும் சந்தித்த போது கூறியுள்ளார்.
நேற்று அந்த மூத்த படைப்பாளியுடன் பேசிவிட்டு வந்த பின்னர் , பொதுநல அரசியலுக்கு வந்திருக்கும் சாவால்கள் குறித்து எனக்குள் எழுந்த கேள்விகள் ஏராளம். ஒருவித மனஅழுத்தத்திற்கு ஆளானேன் எனலாம். யார் வேண்டுமானால் அரசியலுக்கு வரலாம் என்பதில் துளியளவும் மாற்றுக் கருத்து இல்லை. பெரும்பான்மையானவர்கள் குரல் தான் ஜனநாயகத்தின் குரல் என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் இவைகளை வியபார அரசியலால் வளைத்து தகுதியற்றவர்களும், மக்கள்நலனில் மறுதலித்து பொதுநலனில் அக்கறையற்றவர்களும், இலாப நோக்குடம் செயல்படுபவர்கள் வேகமாக வளர்ந்து வரும் அரசியல் போக்கு வேதனை அளிப்பது மட்டுமல்ல ஜனநாயகத்தை இரணமாக்கும் விடயமாகும்.
பொதுவாழ்வில் சுயமரியாதையோடு மக்கள் நலன் சார்ந்து இயங்க வேண்டும் என நினைப்பவர்களின் மனநிலை வேதனைக்குரியதாகும். நேர்மையான அரசியல் களப்பணிக்கு இடமில்லை என்றால் வளர்ச்சியும், மக்களின் முன்னேற்றமும் , அவர்களது அபிலாசைகளும் சாத்தியமாகும்? நேர்மையான ஆட்சி எப்படி தரமுடியும்?
மக்கள் சுரணையுடன் இருந்தால் சிப்பாய் கலகம், பிரஞ்சு புரட்சி, ரஷ்ய புரட்சிகள் போன்று மக்கள் புரட்சி வெடித்தன.
(நேற்று நவம்பர் 7 ரஷ்ய புரட்சி நாள் எனுவும் நினைவு படுத்தினார். அன்று இந் நாள் என்பது வெறும் நாளல்ல. பட்டினி கிடந்தவர்களின் ஆத்திரம், ஒரு வல்லரசை எப்படி தலைகீழாய் புரட்டிப்போட்டது என்பதை உலகுக்கு இன்றும் சுட்டிக்காட்டிய நாள். ஜாருக்குப் பின் வந்த கெரன்ஸிக்கு எதிராக ஏறத்தாழ 10 நாட்கள் லெனினின் போல்ஷ்விக் கட்சியும், எளிய மக்களும் புரட்சி வெடித்த நாள் என்பதும் நினைவுக்கு வருகின்றது. இதேநாளில் ரஷய புரட்சி குறித்து பேசுவோம் என புரட்சியாளர்கள் நினைத்திருக்க வாய்ப்பில்லை.
தலைமறைவு வாழ்க்கை முடித்து பின்லாந்திலிருந்து, ரகசியமாக ரஷியாவிற்குள் நுழைந்து பெட்ரோகிராட் வந்து சேருகிறார் லெனின். போல்ஷ்விக் என்ற பெயரில் செயல்பட்ட கம்யூனிஸ்டு கட்சியின் தலைமை அலுவலகம் அப்பொழுது பெட்ரோகிராடில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
தலைமறைவு வாழ்க்கையில் மறைந்திருந்து எழுதிய எழுத்துக்களின் பெரும் எழுச்சியை உருவாக்கிக் கொண்டிருந்த லெனின், எந்த அறிவிப்பும் இல்லாமல் லெனின் ரஷிய வருகை திசையெங்கும் பரவுகிறது. மக்கள் வெள்ளத்தில் கட்சி அலுவலகம் மூழ்கியது. தோழர்களே என்ற சொல்லை உச்சரிக்கறார்.லெனின் புரட்சி பிரகடனத்தை அறிவித்தார். ராணுவம் தன் செயல்திறனை இழந்தது. ஆயுத தொழிற்சாலைகள் பெட்ரோகிராட்டில் தான் இருந்தன. ஆலையைக் கைப்பற்றினார்கள்.புரட்சிக்கு தேவையான ஆயுதங்களை வழங்கத் தொடங்கி விட்டார்கள். மக்கள் அனைவரும் புரட்சியை நிகழ்த்திக் காட்டும் தீவிரத்தில் களத்தில் குதித்தார்கள்.
ஆகாவென்று எழுந்தது பார் யுகப்புரட்சி என்றான் பாரதி. பாடியது பிப்ரவரி புரட்சியைத்தான். ரஷியப் புரட்சி யுகப்புரட்சியாய் உலத்தை மாற்றியது.)
இப்போது தீவினைகள் வெளியே வராமல், வெளிச்சத்துக்கு வராமல் பீடுநடை போடுகின்றன. இவைகள் தடுக்கப்பட வேண்டியதும், மக்கள் நலன் ஆபத்துகளில் இருந்து காக்கப்பட வேண்டியதும் நம் அனைவரின் கடமையாகும்.
நம்முடைய உன்மையான பிரச்சனைகளையும் நேர்மையான அனுகுமுறையும் இல்லாமல் காலத்தையும் நேரத்தையும் விரயம் செய்து தீவினைகளை கொண்டாடுகின்றோம் என்றால் வேறென்ன சொல்ல முடியும்? கொள்கை முரசங்களும், நேர்மையான அரசியலும், தேவையான கோட்பாடுகளும் புறந்தள்ளத்தான் படும். தரமான அரசியல் இல்லாமல் போய்விடுமோ என்ற அச்ச உணர்வு அந்த மூத்த படைப்பாளியின் வேதனை உணர்த்தியது.
*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
08-11-2018.
No comments:
Post a Comment