*இன்றைய (29/11/2018) தினமணியில் இலங்கை பிரச்சனை குறித்து நான் எழுதிய பத்தி வெளிவந்துள்ளது.*
*
*
*
-வழக்கறிஞர். கே.எஸ். இராதாகிருஷ்ணன்.
இலங்கை அதிபர் மைத்ரிபால சிறிசேனே, இலங்கையில் இரண்டு பிரதமர்கள் இருக்கும் துக்ளக்தனமாக நெறியற்ற முறையில் உருவாக்கியது; நாடாளுமன்றத்தை அதன் தலைவரின் ஆலோசனையைப் பெறாமலேயே மைத்ரியின் விருப்பத்திற்கேற்ப ஒத்திவைத்தது; நாடாளுமன்ற ஜனநாயகத்தை குழிதோன்டி புதைத்து தெருச்சண்டை போல அங்கு கலவரத்தை உண்டாக்கி, மிளகாய் பொடியை தூவி அதன் தலைவரையே அவருடைய இருக்கையில் அமர விடாமல் ராஜபக்சே ஆதரவாளர்களின் இந்த கூத்துக்கு மைத்ரிபால சிறிசேனே துணை போனதெல்லாம் உலகமே கவனித்தது. ரணில் விக்கிரமசிங்கே பிரதமராக அமரக் கூடாது என்ற ஒரே நோக்கத்தில் தொடர்ந்து செயல்பட்டு வந்ததையெல்லாம் உலக நாடுகள் தன்னுடைய கவலையை தெரிவித்தது.
மைத்ரிபால சிறிசேனே அதிபராக இருந்து ராஜபக்சேவிற்கு மகுடம் சூட்டினாலும், ராஜபக்சேவும் மைத்ரியை பெரிதாக மதிக்கவில்லை. மைத்ரியும், ராஜபக்சேவும் கலந்து கொண்ட பொது நிகழ்விலும் அந்த நாட்டு தேசியப் பண் இசைக்கப்பட்ட போது மைத்ரியின் கையை ராஜபக்சே அலட்சியமாக தட்டிவிட்டதெல்லாம் கவனித்தபோது, மைத்ரி தனக்கு கீழே அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சராக இருந்தபோது எப்படி நடத்தினாரோ அந்த அளவிலேயே ராஜபக்சே இன்றுவரை மைத்ரியை அதிபர் என்றுகூட நினைக்காமல் செயல்பட்டார். மைத்ரி – ராஜபக்சே இடையேயான உறவுகள் தற்போது விரிசலடையவும் தொடங்கியுள்ளது. சிறிலங்கா சுதந்திரா கட்சியை சேர்ந்த அனுதாபிகள் சந்திரிகாவுடன் இணைந்துவிட்டனர். ரணிலை விரட்ட நினைத்த மைத்ரி இப்போது தனிமரமாக உள்ளார். இப்படியான நிலை இலங்கையில் மகிந்த ராஜபக்சேவின் அதிபர் வேட்பாளராக எதிர்காலத்தில் சிறிசேனே இருக்கமாட்டார். அவருக்கு பதிலாக சமல் ராஜபக்சே இருக்கலாம் என்றும் விவாதங்கள் நடக்கின்றன. இப்படி தினமும் கூத்துக்கள் இலங்கையில் நடக்கின்றன. சீனா மட்டும் அவர்களுக்கு ஆதரவாக ஓங்கி குரல் கொடுக்கின்றது. அங்கே நீதிமன்றத்தையும், நாடாளுமன்றத்தையும், அரசியல் கோட்பாடுகளையும் மதிக்காத ஒருவருக்கு சீனா எதற்கு ஆதரவு கொடுக்கிறது என்பதைக் கூட இந்தியா உணரவில்லை. அங்கு ஜனநாயகமும், ஜனநாயகத்தின் கூறுகளும் மதிக்கப்படாமல் இருக்கின்ற அசாதராண நிலை.
மான்டெஸ்கியூவின் அதிகாரப் பகிர்வு (Seperation of Powers) கோட்பாட்டின்படி நாடாளுமன்றம், நீதிமன்றம், ஆட்சி அதிகாரங்கள் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலைகளில் இயங்க வேண்டுமென்பது தான் ஜனநாயகத்தின் அடிப்படையாகும். கடந்த ஒரு மாத காலமாக பிரெஞ்சு 16ஆம் லூயியை போல சர்வாதிகாரப் போக்கில் இலங்கையை அதிபர் சிறிசேனே நானே அரசு என நடத்தி வருகிறார்.
பிரிட்டன், ஐரோப்பிய நாடுகள், அமெரிக்கா, கனடா இலங்கை அதிபரின் இந்த போக்கை கண்டித்துள்ளது. பிரிட்டிஷ் நாடாளுமன்றத்திலும், அமெரிக்க செனட்டிலும் இதுகுறித்து விவாதிக்கப்பட்டு, இலங்கை அதிபர் ஜனநாயகத்தின் நெறிமுறையை ஒருகாலும் பிறழாமல் அதை பாதுகாத்து முன்னெடுக்க வேண்டுமென்று உலக சமுதாயமே கேட்டு கொண்டது.
ஆனால், இந்தியாவோ இது குறித்து எதுவும் பேசாமல் இதை கவனித்து வருகிறோம். அது ஒரு அயல்நாட்டு பிரச்சனை நாம் தலையிட முடியாது என்று கைவிரிக்கிறது. இது அயல்நாட்டு பிரச்சனை என்றால் ஈழப் பிரச்சனைக்கு தீர்வு காண திம்பு மாநாட்டினை ஏன் நடத்தவேண்டும்? ராஜீவ் காந்தி வடமாராச்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொட்டலங்களை ஹெலிக்காப்டர்கள் மூலம் இலங்கை அரசின் ஒப்புதலில்லாமலேயே வழங்கினாரே? அதை அன்றைய அதிபர் ஜெயவர்த்தனே கண்டித்தாரே. இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தில் இந்தியா ஏன் கையொப்பமிட வேண்டும்? இலங்கைக்கு இந்திய அமைதிப் படையை (IPKF - India Peace Keeping Force) எப்படி அனுப்பியது? முள்ளிவாய்க்கால் பிரச்சனையில் இந்திய ராணுவத்தை ஏன் அனுப்பியது? முள்ளிவாய்க்காலில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இந்தியா நிதியுதவி செய்ததே? இப்போது மட்டும் அயல்நாட்டு பிரச்சனை என்பது வேடிக்கையாக இல்லையா? இப்போது இதற்காக குரல் கொடுக்காமல் மௌனம் சாதிப்பது நியாயம்தானா?
சீனாவினுடைய ஆதிபத்தியம் இந்தியப் பெருங்கடலில் இலங்கையினால் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாலத்தீவுடன் இந்தியாவிற்கு நட்பில் விரிசல் ஏற்பட்டது. இருப்பினும் புதிய அதிபர் இப்ராகிம் இபு தன்னுடைய பதவியேற்பு விழாவிற்கு மோடியை அழைத்துள்ளார். மாலத்தீவின் புதிய அதிபருடைய அணுகுமுறை எப்படியிருக்குமோ என்று தெரியவில்லை. கடந்த நவம்பர் 5ம் தேதி அமெரிக்கா பொருளாதாரத் தடைக்கு உள்ளாகியிருந்த இந்தியா, சீனா, இத்தாலி, கிரீஸ், ஜப்பான், தென்கொரியா, தைவான், துருக்கி ஆகிய நாடுகளுக்கு விளக்கமளித்தது. இந்த சூழலில் இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் வழங்கும் ஈராக், சவூதி அரேபியாவிற்கு அடுத்த மூன்றாவது நாடான ஈரானில் அமெரிக்க பரிந்துரையோடு ஈரானில் சாப்பார் துறைமுகம் கட்ட இந்தியா முதலீடு செய்துள்ளது. இதை சீனா விரும்பவில்லை.
இலங்கையில் நடக்கும் அரசியல் குழப்பத்தால் இலங்கை வழியாக இந்தியாவை மறைமுகமாக மிரட்டக்கூடிய பணிகளை சீனா ஆரம்பித்துள்ளது. எவ்வளவு தான் இந்தியா இலங்கைக்கு உதவினாலும், இலங்கை அதற்கு நன்றி பாராட்டுவதே இல்லை. 1971 காலக்கட்டங்களில் இலங்கையில் பண்டாரநாயகே பிரதமராக இருந்தபோது ஜே.வி.பி புரட்சியால் உள்நாட்டு கலவரம் மூண்டபோது இந்தியா சிங்கள அரசுக்கு உதவியது. இதே காலக்கட்டத்தில் வங்கதேசம் உதயமான போரின்போது, அன்றைய பிரதமர் இந்திரா காந்தி வேண்டிக்கொண்டதை மீறி பாகிஸ்தான் விமானங்களுக்கு எண்ணெயை நிரப்பி கிழக்கு வங்கப் போருக்கு அனுப்பியது பண்டாரநாயகா அரசு. பிரதமர் ரணில் 300 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் 40,000 வீடுகள் கட்டும் ஒப்பந்தத்தை சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதை நிறுத்தி இந்திய நிறுவனத்திற்கு வழங்க பரிந்துரை செய்தார். இது சீனாவிற்கு ஆத்திரத்தை மூட்டியது. அதிபர் மைத்ரியும் இந்தியாவிற்கு கொடுக்க விரும்பாமல் சீனாவிற்கு ஆதரவாகவே செயல்பட்டார். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முற்றம் இந்தியாவிற்கு மைத்ரியால் மறுக்கப்பட்டது.
ஆனால், ஹம்பன்தோட்டா துறைமுகத்தினை சீனாவிற்கு எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் 99 வருட குத்தகைக்கு கடந்த 2017ம் ஆண்டு வழங்கியது. திரிகோணமலை துறைமுகமும், எண்ணெய் பாதுகாப்பு கழகப் பிரச்சனைகள், கெரவலபிடிய எல்.என்.ஜி மின்சார உற்பத்தி, பலாலி, மத்தளை விமான நிலையங்கள் போன்ற பிரச்சனைகளில் சீனா மூக்கை நுளைத்து இலங்கை அரசு உறுதியளித்தும், இந்த திட்டங்களை செயல்படுத்த இந்தியா சிக்கலை சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளது. கொழும்பு துறைமுகத்தின் இரண்டு முக்கியமான பகுதிகளை ராஜபக்சே பதவியேற்றவுடன் சீனாவுக்கு வழங்க உரிய நடவடிக்கைகளை எல்லாம் மைத்ரியும், ராஜபக்சேயும் ரகசியமாக செயல்படுத்த முனைந்தனர் என்ற குற்றச்சாட்டும் தற்போது எழுந்துள்ளது. இது எவ்வளவு அபாயகரமான விடயம். இந்திய அரசு இதை கவனிக்க வேண்டாமா? மாலத்தீவில் புதிய அதிபராக முகமது இப்ராகிம் சாலிப் பதவியேற்றபோது மோடியை அழைக்கக்கூடாது என்று இலங்கையும், சீனாவும் காய்களை நகர்த்தின. சீனா மாலத்தீவிற்கு கடனுதவியையும் அப்போது அறிவித்தது.
ஆனால், புதிதாக பதவியேற்ற அதிபர் இதை ஏற்றுக் கொள்ளாமல் இந்தியாவை அழைத்தார். இதையெல்லாம் கவனத்தில் கொண்டு இலங்கை விடயத்தில் கடமையாற்ற வேண்டிய மாபெரும் பொறுப்புள்ளது. அங்கு வாழும் தமிழர்கள் இந்தியாவை நேசிப்பவர்கள். இந்து கோவில்களும், இந்துக்களும் அழிக்கப்படுகின்றனர் என்பதையாவது கவனத்தில் வைத்து பாஜக அரசாங்கம் கடமையாற்ற வேண்டாமா?
இதில் என்ன வேடிக்கை என்றால் ராஜபக்சேவுடன் முள்ளிவாய்க்கால் போரை நடத்திய மைத்ரிபால சிறிசேனேவை நல்லவர் என்று நம்பி ராஜபக்சே ஆட்சிக்கு வரக்கூடாது என்று வாக்களித்த தமிழர்களுக்கு நன்றி பாராட்டாமல் மீண்டும் ராஜபக்சேவுக்கே மகுடம் சூட்டியதை வரலாறு மன்னிக்காது.
மைத்ரி திரும்பவும் ரணிலை ஒருகாலும் பிரமராக ஏற்றுக் கொள்ளமாட்டேன் என்று பைத்தியக்காரத்தனமாக ஒரு கூற்றை சொல்லியுள்ளார். ரணில் தனது பெரும்பான்மையை நம்பிக்கை வாக்கெடுப்பில் குரல் வாக்குப்பதிவு மற்றும் எலக்ட்ரானிக் வாக்குப்பதிவு மூலமாக இரண்டு முறையிலும் நிரூபித்துள்ளார். இப்படியிருந்தும் ரணிலை பிரதமராக ஓருகாலும் ஏற்றுக் கொள்ளமுடியாது என்று கொக்கரித்து வரும் மைத்ரிக்கு பைத்தியம் தான் பிடித்துள்ளது. மைத்ரியின் இத்தகைய எதேச்சதிகார செயலை அவர் வணங்கும் புத்தரும் ஒருகாலும் மன்னிக்கமாட்டார். மைத்ரி என்பவர் நீரோ, துக்ளக் போன்றவர்களுடைய வரிசையில் எதிர்காலத்தில் இடம்பெறுவார்.
-செய்தித் தொடர்பாளர், திமுக,
இணையாசிரியர், கதைசொல்லி,
rkkurunji@gmail.com
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
20/11/2018
#KSRPostings
#KSRadhakrishnanPostings
#ராஜபக்சே
#ஈழத்தமிழர்
#ஈழம்
No comments:
Post a Comment