Tuesday, November 13, 2018

*இலங்கையில் நாடாளுமன்ற கலைப்புக்கு பின்னணி என்ன?*

இன்றைய (13/11/2018) தினமணியில் இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதைன் பின்னணி குறித்தான எனது விரிவான பத்தி வெளியாகியுள்ளது.



------------------------------------ 

இலங்கை நாடாளுமன்றம் கலைக்கப்பட்டதை குறித்து அமெரிக்கா, கனடா, பிரிட்டன் போன்ற நாடுகள் தங்களுடைய எதிர்ப்பைக் காட்டி வருகின்றன. இந்தியா அதைகுறித்து கவனித்து வருவதாக கூறுகிறது. சீனா மட்டும் மைத்ரியின் நடவடிக்கைகளை ஏற்புடையது என்று தெரிவித்தது. கடந்த இரண்டு வாரங்களாக இலங்கையில் நடந்த அரசியல் கூத்து ஜனநாயகத்தையே அழித்துவிட்டது. நாடாளுமன்றத்தை கூட்டப்பட வேண்டிய தேதியை அதிபர் தள்ளிப் போட்டார். அந்த அவையின் தலைவர் தன்னுடைய கண்டனத்தையும் தெரிவித்தார். ராஜபக்சேவுடன் பொறுப்பேற்ற மனுஷா நாணயக்காரா தன்னுடைய அமைச்சர் பதவியை விட்டு விலகினார். இப்படி தான்தோன்றித்தனமாக டான் குயிக்சாட் போன்று தன் பதவியின் கண்ணியத்தைக் காக்காமல் அதிபர் மைத்ரி நடந்து கொண்டதை உலகமே விமர்சித்தது. இறுதியாக பாராளுமன்றத்தையும் கலைத்துவிட்டார்.

இதன் பின்னணியில் என்ன நடந்தது என்று பார்த்தால், குதிரை பேரம் நடத்தி 113 நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஆதரவை மைத்ரி, ராஜபக்சே ஆகியோரால் பெறமுடியாமல் ஜனநாயக நெறிமுறைகளை சாகடித்து அவையை கலைக்க வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டனர். இதில் ராஜபக்சேவும், அவரின் சகோதரர் பசிலும் நாடாளுமன்றத்தைக் கலைத்துவிட்டால் உள்ளாட்சி தேர்தலில் தாங்கள் பெற்ற வெற்றியைப் போல நாடாளுமன்றத் தேர்தலில் வென்றுவிடலாம் என்று முடிவு செய்தனர். இந்த நிலையில் மைத்ரிபால சிறிசேனே நாடாளுமன்றத்தைக் கலைப்பது குறித்து இலங்கை உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் கருத்து கேட்டபோது, அவர் வழங்கிய 9 பக்க அறிக்கையில் நாடாளுமன்றத்தைக் கலைக்க இயலாது; இன்னும் பதவிக்காலம் இருக்கிறது. நிதிநிலை மசோதா குறித்தான விவாதம் நடந்து கொண்டிருக்கும் நிலையில் நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியாது என்று சுட்டிக்காட்டியதாக தகவல்கள்.
இந்த அறிக்கை மைத்ரிக்கு கடும் எரிச்சலை உருவாக்கியதாகவும் செய்திகள். இந்நிலையில் முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருந்த சரத் என் சில்வா, முன்னாள் சபாநாயகர் விஜயமு லொக்கு பண்டார ஆகியோரிடம் மைத்ரிபால சிறிசேனே ஆலோசனை கேட்டிருந்தார். அவர்கள் மைத்ரி விரும்பியவாறு அதிபர் என்ற அதிகாரத்தை பயன்படுத்தி நாடாளுமன்றத்தைக் கலைக்கலாம் என்றும், அரசியலமைப்புச் சட்டத் திருத்தம் 19வது பிரிவு 17(1)ன்படி நாடாளுமன்றத்தைக் கலைப்பது மற்றும் கலைக்க முடியாது குறித்து இருப்பினும் நாடாளுமன்றம் நீடிக்கப்பட்டுள்ள வேளையில் கலைக்க முடியாது என குறிப்பிடாதிருப்பதால், அதை கலைக்க முடியும் என சரத் என் சில்வா ஒரு கருத்தை முன்வைத்தார்.

இது தவறான வாதம். இந்நிலையில் இல்லாத சட்டங்களையும், நெறிமுறைகளையும் ஏற்படுத்திக் கொண்டு இலங்கை நாடாளுமன்றத்தை 09/11/2018அன்று நள்ளிரவில் மைத்ரிபால சிறிசேனே கலைத்தார். ராஜபக்சே தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஆதரவை பெற்றுவிடலாம் என்று தமிழில், “இனிமேல் நாம் எல்லோரும் சேர்ந்து இருப்போம்” என்று தமிழர்களை பார்த்து பாசாங்குத்தனமான பாசத்தை எல்லாம் காட்டிப் பார்த்தார். ஒருகாலத்தில் ராஜபக்சேவிற்கு ஆதரவளியுங்கள் என்ற பாலசிங்கத்தின் காணொளியைக்கூட சமூக ஊடகங்களில் அவருடைய ஆதரவாளர்கள் வெளியிட்டனர். ஆனால் எதுவும் அவர்களுக்கு சாதகமாக நடக்கவில்லை. இறுதியாக வேறு வழியில்லாமல் சேற்றில் காலை வைத்ததை மைத்ரியும், ராஜபக்சேயும் முழுமையாக சிக்கிக் கொண்டனர். அதற்கான ஆயிரம் நியாயங்களை அவர்கள் இன்றைக்கு சொல்லி வருகின்றனர். 

என்னதான் ராஜபக்சேவை பிரதமராக்கினாலும், மைத்ரிக்குராஜபக்சே மீது சந்தேகம் உண்டு. அதை வெளிப்படையாக காட்டிக் கொள்ளாமல்பலமற்ற மைத்ரி ராஜபக்சேவோடு கைகோர்த்துள்ளார். இவர்களுடைய ஆதரவு பேரணியை கொழும்பில் நடத்தியபோது, மைத்ரியின் கையை தேசிய கீதம் இசைத்தபோது, ஒரு அதிபர் என்று கூட பார்க்காமல் ராஜபக்சே தட்டியதெல்லாம் கண்கூட பார்க்க முடிந்தது. இலங்கை சுதந்திரம்பெற்ற காலத்திலிருந்து, டொன் ஸ்டீபன் சேனாநாயக்க ஆட்சியில் துவங்கிய தமிழர் விரோதப் போக்கும், அரசியலமைப்புச் சட்டத்தையும், நாடாளுமன்ற ஜனநாயக நெறிமுறைகளை மீறுவதும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது. உலகத்தில் எங்கும் நடக்காத ஒரு நிகழ்வு 1964இல் இலங்கை நாடாளுமன்றத்தில் அதிபருடைய நாடாளுமன்ற துவக்க உரையின் மீதிருந்த நம்பிக்கைத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டு அன்றைக்கு இருந்த ஆட்சி கலைந்ததை அபத்தமானது என்று உலக நாடுகள் விமர்சித்தது.
இதுவரை தமிழர்கள், சிங்களவர்கள் என நேரடியாக பிரச்சனைகள் இருந்தது. இப்போது சிங்களவர்களுக்குள்ளேயே சிக்கல்கள் துவங்கியுள்ளது. இதுவொரு வித்தியாசமான சூழல். 

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியில் இருந்து விலகிய ராஜபக்சே ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் இணைந்துள்ளார். ராஜபக்சேவுடன் சேர்ந்து ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் 50 முன்னாள் எம்.பி.களும் கட்சி மாறியுள்ளனர். இதனால் ஐக்கிய தேசிய கட்சி மற்றும் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆகிய கட்சிகளை விட ஸ்ரீலங்கா சுதந்திர கட்சி தனது செல்வாக்கை இழந்துள்ளது. மைத்ரி, ராஜபக்சே, ரணில் என்ற முக்கோணத்தில் அதிகாரத்தை பிடிக்க நேரடியாகவும், மறைமுகமாகவும் அதிகாரப் போட்டிகள் நடக்க ஆரம்பித்துவிட்டன. எதிர்காலத்தில் இது எப்படியெல்லாம் விளைவுகளை ஏற்படுத்தும் என்று யூகிக்க முடியாது. அரசியல் சதுரங்கத்தின் இன்னொரு பக்கத்தில் முன்னாள் அதிபரான சந்திரிகாவும் காய்களை நகர்த்திக் கொண்டிருக்கிறார். அவரும் இந்த மூவரையும் முறியடிக்க வேண்டுமென்று தான் நினைப்பார்.

இலங்கையில் ஜனநாயகமும், அரசியலமைப்புச் சட்டமும் தமிழர்களுக்கும் சிங்கள அரசாங்கத்திற்கும் இடையே நடந்த பத்திற்கும் மேலான ஒப்பந்தங்களையும் ஆட்சிக்கு வந்த சிங்களவர்கள் குப்பைத் தொட்டியில் தான் போட்டார்கள். இப்படி அரசியலமைப்புச் சட்டத்தை மீறுவது 1949லிருந்தே தொன்றுதொட்டு நடந்து வருகிறது. இதை பற்றியெல்லாம் அவர்களுக்கு எந்தவித வெட்கமும், அச்சமும் வந்ததில்லை.

1949இல் சால்பரி அரசியலமைப்புச் சட்டம் பிரிவு 29-ன்படி மலையகத் தமிழர்களுடைய குடியுரிமை பறிக்கப்பட்டது. 1956இல் அனைத்தும் சிங்களமயமே என்று அரசியல் சாசனம் திருத்தப்பட்டது. 1978இல் அதிகாரங்கள் அனைத்தும் அதிபருக்கே என்று திருத்தப்பட்டது. நடந்து முடிந்த கடைசித் தேர்தலில் மைத்ரிபால சிறிசேனே அதிபரான பிறகு 2015இல் 19வது அரசியலமைப்பு சட்டத்திருத்தம் கொண்டு வரப்பட்டது. ஜனநாயகத்தில் நியாயங்கள் நிராயுதபாணி ஆகிவிட்டது.

மான்டெஸ்கியூவின் அதிகாரப் பகிர்வு (Seperation of Powers) கோட்பாட்டின்படி நாடாளுமன்றம், நீதிமன்றம், ஆட்சி அதிகாரங்கள் தங்களுக்காக ஒதுக்கப்பட்ட நிலைகளில் இயங்க வேண்டுமென்பது தான் ஜனநாயகத்தின் அடிப்படையாகும். கடந்த 20 நாட்களுக்கும் மேலாக பிரெஞ்சு 16ஆம் லூயியை போல சர்வாதிகாரப் போக்கில் இலங்கையை அதிபர் சிறிசேனே நானே அரசு என நடத்தி வருகிறார். இந்தியாவோ இது குறித்து எதுவும் பேசாமல் இதை கவனித்து வருகிறோம். அது ஒரு அயல்நாட்டு பிரச்சனை நாம் தலையிட முடியாது என்று கைவிரிக்கிறது.

இது அயல்நாட்டு பிரச்சனை என்றால் ஈழப் பிரச்சனைக்கு தீர்வு காண திம்பு மாநாட்டினை ஏன் நடத்தவேண்டும்? ராஜீவ் காந்தி வடமாராச்சியில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவுப் பொட்டலங்களை ஹெலிக்காப்டர்கள் மூலம் இலங்கை அரசின் ஒப்புதலில்லாமலேயே வழங்கினாரே? அதை அன்றைய அதிபர் ஜெயவர்த்தனே கண்டித்தாரே. இந்தியா - இலங்கை ஒப்பந்தத்தில் இந்தியா ஏன் கையொப்பமிட வேண்டும்? இலங்கைக்கு இந்திய அமைதிப் படையை (IPKF – India Peace Keeping Force) எப்படி அனுப்பியது? முள்ளிவாய்க்கால் பிரச்சனையில் இந்திய ராணுவத்தை ஏன் அனுப்பியது? முள்ளிவாய்க்காலில் பாதிக்கப்பட்ட தமிழர்களுக்கு இந்தியா நிதியுதவி செய்ததே? இப்போது மட்டும் அயல்நாட்டு பிரச்சனை என்பது வேடிக்கையாக இல்லையா? இப்போது இதற்காக குரல் கொடுக்காமல் மௌனம் சாதிப்பது நியாயம்தானா?

சீனாவினுடைய ஆதிபத்தியம் இந்தியப் பெருங்கடலில் இலங்கையினால் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. மாலத்தீவுடன் இந்தியாவிற்கு நட்பில் விரிசல் ஏற்பட்டது. இருப்பினும் புதிய அதிபர் இப்ராகிம் இபு தன்னுடைய பதவியேற்பு விழாவிற்கு மோடியை அழைத்துள்ளார். மாலத்தீவின் புதிய அதிபருடைய அணுகுமுறை எப்படியிருக்குமோ என்று தெரியவில்லை. கடந்த நவம்பர் 5ம் தேதி அமெரிக்கா பொருளாதாரத் தடைக்கு உள்ளாகியிருந்த இந்தியா, சீனா, இத்தாலி, கிரீஸ், ஜப்பான், தென்கொரியா, தைவான், துருக்கி ஆகிய நாடுகளுக்கு விளக்கமளித்தது. இந்த சூழலில் இந்தியாவிற்கு கச்சா எண்ணெய் வழங்கும் ஈராக், சவூதி அரேபியாவிற்கு அடுத்த மூன்றாவது நாடான ஈரானில் அமெரிக்க பரிந்துரையோடு ஈரானில் சாப்பார் துறைமுகம் கட்ட இந்தியா முதலீடு செய்துள்ளது. இதை சீனா விரும்பவில்லை.

இலங்கையில் நடக்கும் அரசியல் குழப்பத்தால் இலங்கை வழியாக இந்தியாவை மறைமுகமாக மிரட்டக்கூடிய பணிகளை சீனா ஆரம்பித்துள்ளது. எவ்வளவு தான் இந்தியா இலங்கைக்கு உதவினாலும், இலங்கை அதற்கு நன்றி பாராட்டுவதே இல்லை. 1971 காலக்கட்டங்களில் இலங்கையில் பண்டாரநாயகே பிரதமராக இருந்தபோது ஜே.வி.பி புரட்சியால் உள்நாட்டு கலவரம் மூண்டபோது இந்தியா சிங்கள அரசுக்கு உதவியது. இதே காலக்கட்டத்தில் வங்கதேசம் உதயமான போரின்போது, அன்றைய பிரதமர் இந்திரா காந்தி வேண்டிக்கொண்டதை மீறி பாகிஸ்தான் விமானங்களுக்கு எண்ணெயை நிரப்பி கிழக்கு வங்கப் போருக்கு அனுப்பியது பண்டாரநாயகா அரசு. பிரதமர் ரணில் 300 மில்லியன் டாலர் மதிப்பீட்டில் 40,000 வீடுகள் கட்டும் ஒப்பந்தத்தை சீன நிறுவனத்திற்கு வழங்கப்பட்டதை நிறுத்தி இந்திய நிறுவனத்திற்கு வழங்க பரிந்துரை செய்தார். இது சீனாவிற்கு ஆத்திரத்தை மூட்டியது. அதிபர் மைத்ரியும் இந்தியாவிற்கு கொடுக்க விரும்பாமல் சீனாவிற்கு ஆதரவாகவே செயல்பட்டார். கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு முற்றம் இந்தியாவிற்கு மைத்ரியால் மறுக்கப்பட்டது. ஆனால், ஹம்பன்தோட்டா துறைமுகத்தினை சீனாவிற்கு எந்தவிதமான பிரச்சனையும் இல்லாமல் 99 வருட குத்தகைக்கு கடந்த 2017ம் ஆண்டு வழங்கியது. திரிகோணமலை துறைமுகமும், எண்ணெய் பாதுகாப்பு கழகப் பிரச்சனைகள், கெரவலபிடிய எல்.என்.ஜி மின்சார உற்பத்தி, பலாலி, மத்தளை விமான நிலையங்கள் போன்ற பிரச்சனைகளில் சீனா மூக்கை நுளைத்து இலங்கை அரசு உறுதியளித்தும், இந்த திட்டங்களை செயல்படுத்த இந்தியா சிக்கலை சந்திக்க வேண்டிய நிலையில் உள்ளது.
இதில் என்ன வேடிக்கை என்றால் ராஜபக்சேவுடன் முள்ளிவாய்க்கால் போரை நடத்திய மைத்ரிபால சிறிசேனேவை நல்லவர் என்று நம்பி ராஜபக்சே ஆட்சிக்கு வரக்கூடாது என்று வாக்களித்த தமிழர்களுக்கு நன்றி பாராட்டாமல் மீண்டும் ராஜபக்சேவுக்கே மகுடம் சூட்டியதை வரலாறு மன்னிக்காது. அவர் வணங்கும் புத்தரும் ஒருகாலும் மன்னிக்கமாட்டார். மைத்ரி என்பவர் நீரோ, துக்ளக் போன்றவர்களுடைய வரிசையில் எதிர்காலத்தில் இடம்பெறுவார்.

*கே.எஸ்.இராதாகிருஷ்ணன்*
13-11-2018

#KSRadhakrishnan_postings
#KSRpostings
#இலங்கை_நாடாளுமன்ற_கலைப்பு
#இலங்கை_தேர்தல்
#ராஜபக்சே
#மைத்ரிபால_சிறிசேனே
#ரணில்_விக்கிரமசிங்கே
#இந்திய_பாதுகாப்பு
#சீன_ஆதிக்கம்
#rajapaksa
#sirisena
#ranil_wickramasinghe

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...