Wednesday, November 28, 2018

நமக்கு கேளிக்கைகளும் கூத்தாட்டங்களும், தரமற்றவர்களும், தகுதியற்றவர்கள் தான் முக்கியம். ஐராவதம் மகாதேவன் மறைவும்

 நமக்கு கேளிக்கைகளும் கூத்தாட்டங்களும், தரமற்றவர்களும், தகுதியற்றவர்கள் தான் முக்கியம். ஐராவதம் மகாதேவன் மறைவும்...*
-----------------
பாரதிக்கு பதினான்கு பேர்தான் சென்றனர். ஐராவதம் மகாதேவனுக்கு 40 பேர் தான் இறுதிச் சடங்கிற்கு சென்றுள்ளனர். வாழ்க நமது பண்பாடு.
ஐ.ஏ.எஸ் அதிகாரியாக இருந்து தினமணி ஆசிரியர்;நேர்மையான வரலாற்றை சொன்ன கல்வெட்டு ஆய்வாளர் நேற்று முன்தினம் மறைந்தார்.
இத்தனை மணிக்கு சந்திக்க வாருங்கள் என்று அழைத்தால் அந்த நேரத்திற்கு தயாராக இருப்பார். நாம் சற்று தாமதமாக சென்றால் அவரது முகபாவனை நமக்கே உணர்த்தும். க்ரியா வெளியிட்ட குறுந்தொகை நேர்த்தியாக வரவேண்டுமென்று க்ரியா ராமகிருஷ்ணனோடு இணைந்து கவனம் செலுத்தியவர். சிந்துவெளி நாகரிகம் என்பது திராவிட நாகரிகம் தான் என்று ஆதாரங்களோடு சொன்னவர். இதற்காக 50 ஆண்டுகளை சவாலாக எடுத்துக் கொண்டு களப்பணி செய்தவர்.
வெள்ளைச் சட்டை, வெள்ளை பேண்ட் அல்லது ஜிப்பா, வேட்டியுடன் அவரை பார்க்கலாம் .
தினமணியில் வெளியிட்ட என்னுடைய கட்டுரைகள் ஏற்ற இறக்கம் இல்லாமல் பல்வேறு தரவுகளும், ஆய்வுகளும் இருப்பதால் பாராட்டி, அதுகுறித்து தனியாகவும் நேரில் அழைத்தும் விவாதிப்பார். கோவில்பட்டி சட்டமன்றத் தொகுதித் தேர்தல்களில் வெற்றிவாய்ப்பை இழந்தபோதுயெல்லாம் உங்களையெல்லாம் மக்கள் தேர்ந்தெடுக்கவில்லை என்றால் இந்த மக்களை என்ன சொல்ல என்று கோபத்துடன் என்னிடம் பேசியதுண்டு. நதிநீர் சிக்கல்கள், நதிநீரை இணைக்க வேண்டுமென்று 1983லிருந்து 30 ஆண்டுகளாக போராடிய வழக்குகளை குறித்தும் அடிக்கடி என்னை நேரில் பாராட்டியதும் உண்டு. காவிரி விவகாரம், முல்லை பெரியாறு போன்ற வழக்குகளிலும், தமிழகத்தின் உரிமையான கேரளத்திடமிருந்து கண்ணகி கோவிலை மீட்பது குறித்தான வழக்கு, ஆலங்குளம் சிமெண்ட் ஆலை, விவசாயிகள் மீதான ஜப்தி நடவடிக்கை போன்ற வழக்குகளை தொடுத்தபோது அதையே பெரிய செய்தியாக அவரே தினமணியில்விரும்பிவெளியிட்டார்.
அப்போதெல்லாம் நீதிமன்ற செய்திகள் பத்திரிக்கைகளில் பெரிதாக வெளியிட்டதில்லை.
ஈழப்பிரச்சனையிலும் அவ்வப்போது என்ன நடக்கிறது என்று என்னிடம் தொலைபேசியில் கேட்டு தெரிந்து கொள்வது வாடிக்கை. சிலசமயங்களில் பிரபாகரன், விடுதலைப் புலிகள் குறித்து மாறுபட்ட கருத்துகள் அவரிடம் இருந்தாலும், அதற்கு ஆதரவாக நான் சொல்லும்போது நியாயம் என்றால் அதை ஏற்றுக் கொள்வது வாடிக்கை. எம்.ஜி.ஆர் ஆட்சிக்காலத்தில் 1980களின் துவக்கத்தில் பாலசிங்கம், சந்திரஹாசன், சத்யேந்திரா தமிழகத்தில் இருந்து நாடு கடத்தப்பட்டபோது, சென்னை உயர்நீதிமன்றத்தில் சனி, ஞாயிறன்று சிறப்பு அனுமதி பெற்று அவர்களை திரும்பவும் இந்தியாவிற்கு அழைத்துவர உத்தரவு பெற்றதை என்ன, ஏது என்று தனது அலுவலகத்திற்கு அழைத்து விசாரித்ததெல்லாம் நினைவுகளாக மனதில் வருகின்றன.
இன்றைக்கு எட்டுத் திக்கும் மரண தண்டனை ஒழிக்கப்பட வேண்டும் என்று குரல்கள் எழுந்த காலத்தில், 1983லேயே இரண்டு வரி தந்தியில் எந்த மனுவும் இல்லாமல், குடியரசுத் தலைவரிடம் இருமுறை கருணை மனு தள்ளுபடி செய்யப்பட்ட வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசு குருசாமி நாயக்கரின் தூக்குத் தண்டனையை சென்னை உயர்நீதிமன்றத்தில் ஆயுள் தண்டனையாக குறைத்து உத்தரவு பெற்ற நான் எழுதிய கட்டுரை தினமணியில் வந்ததை பார்த்து நேரடியாக எப்படி இது நடந்தது என்று அன்போடு கேட்றிந்தார்.
ஏ.என். சிவராமன் ஆசிரியராக இருந்த காலத்திலிருந்து இன்றைக்கு நண்பர் கே. வைத்தியநாதன் ஆசிரியராக இருக்கும் இந்த காலக்கட்டத்தில் வரை39 ஆண்டுகளாக எனது கட்டுரைகள் நடுப்பக்கத்தில் தொடர்ந்து வெளிவருகின்றன.
ஒரு சமயம் 1989 என்று நினைக்கிறேன். தமிழகத்தில் மத்திய அரசு கிடப்பில் போடப்பட்டுள்ள திட்டங்ளைப் பற்றி விரிவாக கட்டுரை எழுதி, அதை நடுப்பக்கத்தில் வேறொரு முக்கியமான இரா. செழியன் கட்டுரை போடவேண்டிய நிலையில் என்னுடைய கட்டுரையை அன்றே போட வேண்டுமென்ற ஐராவதம் மகாதேவனுடைய விருப்பத்தால் மரபை மாற்றி தலையங்கத்தின் எதிர்ப்பக்கத்தில் முழுப்பக்கமாக வெளியிட்டனர். அது தமிழகத்தில் பெரும் வரவேற்பை பெற்றது. அன்றைய
தினம் பல நண்பர்கள் தொலைபேசியில் அழைத்து பாராட்டி பேசினார். சேது சமுத்திர திட்டம், கச்சத்தீவு குறித்தான பல கட்டுரைகள் அந்த சமயத்தில் வெளிவந்தது. அந்த கட்டுரைகளை வைத்துக்கொண்டு அன்றைக்கு நாடாளுமன்றத்தில் பலர் பேசியதெல்லாம் நினைவுகள்.
அணுக் கொள்கையை குறித்த எதிரான கருத்து கொண்டவர். 1989 காலக்கட்டத்தில் திமுக ஆட்சிக்கு வந்த காலத்தில் கூடங்குளம் கூடாது என்று 30 ஆண்டுகளுக்கு முன்பாக ராதாபுரம் பகுதிகளில் களப்பணிகளை ஆற்றி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கும் தொடுத்தேன். அப்போது திமுக ஆட்சிக்கு வந்து கலைஞர் முதல்வர். கூடங்குளம் பிரச்சனை தொடர்பாக மக்களின் கருத்தை அவர்களின் அச்சத்தை போக்கி; கூடங்குளம் அணுமின் நிலையம் அமைப்பது சுற்றுச்சூழலுக்கு உகந்ததா என்று ஆய்வு நடத்தி அங்கு அணுஉலையை அமைக்க வேண்டுமென்று சட்டமன்றத்தில் கூறினார். இதைகுறித்து ஐராவதம் மகாதேவன் அவர்கள் கலைஞரின் நிலைப்பாட்டோடு தொடர்ந்து இரண்டு நாட்கள் கூடங்குளம் பெரும் பாதிப்பு ஏற்படுத்தும் என்று இரண்டு தொடர்பத்திகளை நடுப்பக்கத்தில் வெளியிட்டார்.
ஜெயலலிதா முதலமைச்சராக 1991-96இல் இருந்தபோது கடுமையாக, மென்மையற்ற போக்கில் அவர் இருந்த காலம்அது. ஜெயலலிதா என்பது சமஸ்கிருத உச்சரிப்பு. ஜயலலிதா என்று தான் தமிழில் எழுத வேண்டுமென தினமணியில் எழுதியிருந்தார்.. அப்படிப்பட்ட நேரத்தில் ஐராவதம் மகாதேவன் இப்படி எழுதிவிட்டாரே, என்ன நடக்கப்போகிறதோ என்று பேசிக்கொண்டிருந்த சமயத்தில் ஜெயலலிதா ஐராவதம் மகாதேவனுக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். எப்படி என்றால், நீங்கள் சொல்வது போல ஜயலலிதா என்று தான் எழுத வேண்டும் மறுப்பதற்கில்லை. பழக்கத்தில் ஜெயலலிதா என்று எழுதப்பட்டுவிட்டது. நடைமுறையில் அதை மாற்றுவது சற்று சிரமம் என்று மென்மையான போக்கில் பதிலளித்தது கடந்த கால நினைவுகள். தனக்கு இணையாசிரியராக பணியாற்றிய கஸ்தூரிரங்கனுடைய செய்திக் கட்டுரைகளும் அப்போது தினமணியில் பல தரவுகளோடு வெளிவரும்.
அப்படிப்பட்ட மாமனிதர் மறைந்தபோது நடைபெற்ற இறுதிச் சடங்கில் 40 பேர் மட்டுமே கலந்து கொண்டனர். இதுதான் நமது தமிழ் பண்பாடா, கலாச்சாரமா, அக்கறையா? சர்க்கார் போன்ற திரைப்படங்கள், மீடு போன்ற தேவையற்ற பிரச்சனைகளை பேச்சுகளில் அக்கறை காட்டுவது தான் நமக்கு முக்கியம். நமக்கு ஐராவதம் மகாதேவன் போன்ற ஆளுமைகளை கண்டுகொள்ளவேண்டிய அவசியமில்லை. அதற்கான அவகாசமும், நேரமும் நமக்கு இல்லை. இது தான் வரலாற்றை படித்த தமிழகம் கவனம் செலுத்தாமல் இருந்தால் அண்ணா சொன்னவாறு வடபுலம் நம்மை தாழ்ந்த தமிழகம் ஆக்கிவிட்டது என்றார். இப்படியான நியாயங்களை எல்லாம் மறுதலித்து தேவையற்ற கசடுகளில் அக்கறை காட்டும் நாம் நாமே நமது மண்ணை தாழ்ந்த தமிழகம் நாமே ஆக்கிவிடுவோமோ என்ற ஐயப்பாடு வந்துள்ளது.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
28-11-2018

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...