Wednesday, November 14, 2018

Pt Nehru பண்டித நேரு

நவ-14

கடந்த 14-11-2015 அன்று தினமணி நாளிதழில் “ பண்டித நேரு நிறையும்-குறையும் ”  என்ற தலைப்பில் வெளிவந்துள்ள எனது தலையங்கப் பக்க  கட்டுரை. நேருவின் 125வது பிறந்தநாளான அன்று வெளியான சிறப்புக் கட்டுரை ஆகும் .

___________________________________________

 இந்த ஆண்டு ஆசியாவின் ஜோதி, மனிதர்களின் மாணிக்கம் என்று அழைக்கப்பட்ட பண்டிதர் நேரு பிறந்து 125ஆண்டுகள் நிறைவாகின்றது. அவர் மறைந்து 50ஆண்டுகளும் கடந்துவிட்டன.
இதையொட்டி அவரைப்பற்றிய பல நூல்கள் வெளிவந்துள்ளன. அப்படி தற்போது வெளிவந்துள்ள மூன்று முக்கியமான நூல்கள்..

1. Nehru: A troubled Legacy - R N P Singh.
2. Nehru's India: Essays on the Maker of a Nation - Nayantara Sahgal
3. The God Who Failed: An Assessment of Jawaharlal Nehru's Leadership - Madhav Godbole

இவற்றுள் Nehru's India: Essays on the Maker of a Nation - Nayantara Sahgal என்ற நூல் நேருவின் சகோதரி விஜயலட்சுமி பண்டிட்டின் மகள் நயன்தாரா சஹால் தொகுத்த நேருவைப் பற்றிய  கட்டுரைகள் அடங்கிய நூல்.

நவீன இந்தியாவைப் படைக்க நேருவினுடைய முயற்சிகள் ஏராளம். அவை பட்டியலில் அடங்காது. சோசிலிசம், மதநல்லிணக்கம், ஜாதிய மடமைகளுக்கு அப்பால் புதியதோர் சமுதாயம் படைக்க அவர் எடுத்துக்கொண்ட நடவடிக்கைகள் தான் இன்றைக்கு அடித்தளமாக இருக்கின்றன.

1946ல் மகாத்மா காந்தி நேரு ஒரு தவிர்க்கமுடியாத நபர் என்று குறிப்பிடுகின்றார்.  'Jawaharlal cannot be replaced today whilst the charge is being taken from the British. He, a Harrow boy, a Cambridge graduate, and a barrister, is wanted to carry on the negotiations with the Englishmen'

இந்தியா விடுதலை பெற்றவுடன் சர்தார் பட்டேலும் பிரதமர் வேட்பாளர் என்று குரல் கேட்ட பொழுது காந்தி அதை ஒப்புக்கொள்ளவில்லை. நேருவுக்கு ஆதரவாக இருந்தார். பிரதமர் ஆக பொறுப்பேற்ற நேரு உள்துறை அமைச்சராக இருந்த பட்டேலோடு பல பிரச்சனைகளில் மாறுபட்டு இருவருக்கும் மத்தியில் தேவையற்ற கசப்புணர்வுகள் ஏற்பட்டதெல்லாம் வரலாற்றுச் செய்திகள்.

நேரு இந்திய-மேற்கத்திய கலாச்சாரங்களினுடைய கலவையாக இருந்தார். ஆனால் சர்தார் பட்டேலோ ஒரு இந்திய விவசாயியைப் போன்ற அணுகுமுறை கொண்டவர். 

நேதாஜி சுபாஸ் சந்திர போஸுக்கும் நேருவுக்கும் விடுதலைக்கு முன்பு சரியான உறவுகளும் இருக்கவில்லை. ஆனால், நேதாஜி தன்னுடைய உறவினர் சம்பந்தமான விசயமாக  நேருவிடம் செல்லுங்கள் என்று வழிகாட்டியபோது, நேரு அதற்கு அக்கறைகாட்டினார் என்று ஒரு செவிவழிச் செய்தியும் உண்டு.

நேருவுக்கும் போஸுக்கும் மாறுபட்ட அணுகுமுறைகள் இருந்தாலும் இருவரும் தங்களுக்குள் நட்பு பாராட்டிக்கொண்டார்கள்.  அதேபோல ஜெயப்பிரகாஷ் நாராயணனுக்கும், நேருவுக்கும் பல விஷயங்களில் முரண்பாடுகள் உண்டு.

முதல் அமைச்சரவை அமைக்கும்போது, ஜெயப்பிரகாஷ் நாராயணனையும், அச்சுதப் பட்டவர்த்தன், ஜே.சி. குமரப்பா போன்றவர்களையும் அமைச்சரவையில் சேரச் சொல்லி நேரு அழைத்தபோது, அவர்கள் மறுத்து மக்கள் பணி ஆற்றப்போகிறோம் என்று சர்வோதயம், பூமிதான இயக்கம் மற்றும் கிராமப்புற வளர்ச்சியிலும் கவனம் செலுத்தினர்.

மூத்த தலைவர் கிருபளானியும் நேருவின் அணுகுமுறையில் மாறுபட்டு விமர்சனங்களையும் வைத்தார். சோசிலிஸ்ட் தலைவரான ராம் மனோகர் லோகியா, “நேரு சொல்லும் சோசிலிசம் உண்மையான சோசிலிசம் அல்ல” என கடுமையான விமர்சனங்களை வைத்தார்.

மாநில ரீதியாக காங்கிரஸ் கமிட்டி பிரதேச காங்கிரஸ் என்று அழைக்கப்பட்டு அதன் தலைமைக்கு உரிய கௌரவமும்  அதிகாரங்களும் வழங்கப்பட்டன. நேருகாலத்தில் மாகாண காங்கிரஸ் தலைவர்களாக இருந்த தமிழகத்தில் காமராஜர், கேரளத்தில் சங்கர், ஆந்திரத்தில் நீலம் சஞ்சிவரெட்டி, கர்நாடகத்தில் நிஜலிங்கப்பா, மராட்டியத்தின் எஸ்.கே.பாட்டில், பிற மாகாண தலைவர்களான மொரார்ஜி தேசாய், அதுல்யா கோஸ், டாக்டர்.பிசி ராய், மோகன்லால் சுகாடியா, குப்தா, பக்சிகுலாம் முகம்மது எனப்பல மாகாணத் தலைவர்கள் காங்கிரஸை வளர்த்தார்கள்.நேரு அவர்களுக்கு உரிய அதிகாரங்களை அளித்து, அவர்களை சுயமாக முடிவுகளை எடுத்தனர்.

நேரு தட்சண பிரதேசம் என்று தமிழகம், ஆந்திரம், கர்நாடகம், கேரளம் இணைந்து ஒரு மாநிலத் தொகுப்பாக அமைக்கத் திட்டமிட்டபோது பெருந்தலைவர் காமராஜர் அதை கடுமையாக எதிர்த்தார். அத்திட்டத்தை நேருவும் கைவிட்டார். அவ்வளவு அதிகாரங்கள் மாகாண காங்கிரஸ் தலைவர்களுக்கு இருந்தது.

கேரளாவில் நம்பூதிரி பாட் தலைமையில் அமைந்த கம்யூனிஸ்டு கட்சி மாநில அரசை 356-பிரிவின் படி, முதன்முதலாக கலைத்தது மிகவும் விமர்சனத்துக்குள்ளானது. 

இந்திராகாந்தி காலத்தில் மாகாணத் தலைவர்கள் தஞ்சாவூர் பொம்மை போல மாற்றப்பட்டதால் தான் காங்கிரஸ் பல இடங்களில் படிப்படியாக தோல்வியைச் சந்திக்கும் நிலைக்கு வந்தது.

நேரு, பாராளுமன்ற ஜனநாயகமும், மக்களின் அடிப்படைத் தேவைகளையும், கனரகத் தொழிற்சாலைகளையும், அணைகளையும், கட்டமைப்புப் பணிகளையும், அறிவியல் தொழில்நுட்ப ஆராய்ச்சி, அணுசக்தி என்ற முக்கிய விடயங்களில் ஆர்வம் செலுத்தி, அதற்கான வளர்ச்சிக்கு வித்திட்டார் என்பதை எவரும் மறுக்க முடியாது.
பிற மாநிலங்களில் இந்தியைத் திணிக்கமாட்டோம் என்ற உத்திரவாதத்தை அளித்த நேருவின் மென்மையான போக்கை இன்றைக்கும் நினைத்துப் பார்க்கவேண்டியுள்ளது.

 இரண்டாம் உலகப்போருக்குப் பிறகு, உலக நாடுகள் இரண்டு பக்கமாக  பகைமை கொண்ட அணிகளாக பிரிந்தன.  அமெரிக்கா தலைமையில் ஒரு அணியும், ரஷ்யா தலைமையில் ஒரு அணியும் உருவாகின.   இதனால் உலகில் பதற்ற நிலை மற்றும் அமைதியின்மை ஏற்பட்டது.   இந்தி்யா இவ்விரண்டு அணிகளிலும் சேராமல் நடுநிலை நாடாக இருந்தது. அணிசேராக் கொள்கையின் மூலம் நேருவால் இந்தியா உலக அமைதியை நிலைநாட்டியது .

அமெரிக்கா, ரஷ்யா என்று உலகின் இரண்டு வல்லரசுகள் கோலோச்சிய காலத்தில் அணி சேரா நாடுகள் ஒன்றிணைந்து அணிசேரா இயக்கம் (Non-Aligned Movement, NAM)  என்ற பெயரில் பெல்கிரேட்டில் உருவானது. ஜவஹர்லால் நேருவோடு, யுகோசுலோவாக்கியாவின் அதிபராக இருந்த யோசிப் பிரோசு டிட்டோ, எகிப்தின் தலைவர் ஜமால் அப்துல் நாசிர், கானாவின் தலைவர் குவாமே நிக்ரூமா மற்றும் இந்தோனேசியாவின் தலைவர் சுகர்ணோ இவர்களின் கருத்தாக்கத்தில் இந்த இயக்கம் துவங்கியது.

இந்த ஐவருமே பனிப்போரில் ஈடுபட்டிருந்த மேற்கத்திய மற்றும் கிழக்கத்திய அதிகார மையங்களுக்கு இடையே நடுநிலையில் வளரும் நாடுகள் முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்ற கருத்துடையவர்களாக இருந்தனர். இந்த சொல்லாடலை ஐக்கிய நாடுகள் அவையில் 1953ஆம் ஆண்டிலேயே இந்தியாவின் பிரதிநிதியாக இருந்த வி. கே. கிருஷ்ண மேனன் வலியுறுத்தினார்.

இது எந்தவொரு அதிகார மையத்தின் சார்பாகவோ, எதிராகவோ அணிசேராத நாடுகளின் குழுமமாகும். 2011ஆம் ஆண்டு நிலவரப்படி, இதில் 120 நாடுகள் உறுப்பினர்களாகவும் 17 நாடுகள் பார்வையாளர்களாகவும் உள்ளனர்.

நேருவின் முன்முயற்சியில் உருவான பஞ்சசீல கொள்கை உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்தது. இந்தோனேசியா பாண்டூங் நகரில் வடித்த அந்த ஐந்து கொள்கைகள்,

*  எந்த நாடும் பிற நாட்டை தாக்கக்கூடாது.

*  ஒரு நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில், பிற நாடுகள் தலையிடக்கூடாது.

*  அனைத்து நாடுகளும் சமத்துவம் மற்றும் பரஸ்பர நல்லுறவு கொண்டிருக்க வேண்டும்.

*  ஒவ்வொரு நாடும் பிற நாடுகளுடன் அமைதியான முறையில் இணங்கியிருத்தல் வேண்டும்.

*  ஒவ்வொரு நாடும் பிற நாடுகளின் ஒற்றுமை மற்றும் இறையாண்மையை மதிக்க வேண்டும்.

 இவ்வாறான உலக அமைதிக்கும் ஒற்றுமைக்கும் குரல்கொடுத்த பண்டிதர் நேருக்கு நோபல் பரிசு கிடைத்திருக்க வேண்டும். மேலை நாடுகள் அவரை ஏனோ புறக்கணித்தன.

நாடு விடுதலை பெற்றவுடன் நாட்டின் தேவைகளையும், வளர்ச்சிகளையும் கவனத்தில்கொண்டு ஒருபுறம் பணிகளை மேற்கொள்ளவேண்டும். மற்றொருபுறம் பாகிஸ்தான் பிரிந்துசென்றபோது அங்கிருந்து வந்த அகதிகளைப் பாதுகாக்கவும், ஏனைய பிரச்சனைகளைக் கவனிக்கவும் அரசியலைமைப்பு ரீதியாக நாட்டை திடப்படுத்தவும் எனப் பல பணிகளில் நேரு ஈடுபட்டதோடு உலக அரங்கிலும் இந்தியாவின் கீர்த்தியை தன்னுடைய அணுகுமுறையினால் நிலைநிறுத்தினார்.

இது ஒருபுறமிருந்தாலும் அவர் மீது இன்றைக்கு வரை வைக்கப்படுகின்ற விமர்சனங்கள் பல உள்ளன. காஷ்மீர் பிரச்சனையை அவர் கையாண்ட விதமும், ஐ.நா.மத்தியஸ்தத்துக்கு ஒத்துக்கொண்டதையும் தவறானது என்று இன்றுவரை பேசப்பட்டு வருகின்றது.

பாகிஸ்தானுக்கு அதிகமான சலுகைகளும், இடமும் நேரு அளித்துவிட்டார் என்றும், சீனாவுடைய எல்லை தாவாக்களிலும் சரியான அணுகுமுறை இல்லாமல் இந்திய சீன எல்லையை வரையறுக்கும் மக்மோகன் எல்லைக்கோடு  பிரச்சனையும் இன்றுவரை தீரவில்லை.

மணிப்பூரில் சில இடங்கள் அப்போது பர்மாவுக்கு விட்டுக்கொடுத்ததும், நாகலாந்து பிரச்சனையை சரியாகக் கையாளவில்லை என்ற விவாதங்களும் இன்றுவரை உள்ளன.

திருச்சி நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த கம்ப்யூனிஸ்டு கட்சியைச் சார்ந்த அனந்த நம்பியார் பிரதமர் நேருவிடம் கச்சத்தீவு பற்றிப் பேசும் போது, அது வெறும் மணல்பாங்கான பகுதிதானே என்றும், அதுபற்றி சொல்வதற்கு ஒன்றுமே இல்லை என்றும் முக்கியத்துவம் இல்லாதது போல நாடாளுமன்றத்தில் பதில் அளித்ததெல்லாம் ஏற்றுக்கொள்ளமுடியாத செய்திகள் ஆகும்.

மொழிவாரியாக மாநிலங்கள் பிரிக்கும்போது எல்லைகளை சரியாக வரையறுக்கவில்லை. உதாரணத்திற்கு தமிழகத்தின் நெய்யாற்றங்கரை, நெடுமாங்காடு, தேவிகுளம் பீர்மேடு, பாலக்காடு அருகே சிலகிராமங்கள் கேரளாவுக்கும், கொள்ளேகால், மாண்டியாவின் சில கிராமங்கள் கர்நாடகத்திற்கும், திருப்பதி சித்தூர் நெல்லூர் பகுதிகள் ஆந்திராவுக்கும், தமிழகத்தின் எதிர்ப்பை மீறி பிரித்துக் கொடுக்கப்பட்டதை நேரு கண்டுகொள்ளவில்லை என்ற குறைபாடுகள் இன்றைக்கும் உண்டு.

நாட்டில் சமஸ்டி அமைப்பு முறையை மாற்றி வலுவான மத்திய அரசு என்ற தாக்கத்தை நேரு உருவாக்கினார் என்றும் விமர்சனங்கள் உண்டு.

இந்தியாவின் முதல் குடியரசுத் தலைவராக இருந்த ராஜேந்திர பிரசாத்துக்கும் நேருவுக்கும் அதிகாரம் படைத்தவர் யார் என்ற பனிப்போர் நடந்தது. உச்சநீதிமன்றம் வரை இதற்காக கருத்தும் கேட்கப்பட்டது. இவர்கள் இருவருடைய உறவுகள் சீராக இல்லை என்றாலும் வீட்டுப் பிரச்சனைகளை வெளியே சொல்லாதவாறு இருவரும் அடக்க ஒடுக்கமாக பனிப்போர் நடத்தினர் என்பது பற்றி செய்திகளை எல்லாம் சொன்னால் பெரிய பதிவு ஆகிவிடும்.

ஏற்கனவே இதுகுறித்து தனிப்பதிவும் செய்துள்ளேன்.

நேரு கலப்புப் பொருளாதாரம், திட்டக்கமிசன், சோசிலிசம் என்ற தத்துவ ரீதியான அணுகுமுறைகளைக் கொண்டிருந்தாலும், நாடு விடுதலை பெற்றபின்பு பல பிரச்சனைகளைச் சந்தித்து தேவைகளைப் பூர்த்தி செய்ய வேண்டிய பெரும் பொறுப்பு அவரிடம் இருந்தது.  அவரிடம் நிறைவும் உண்டு; அவருடைய பணிகள் மீதான விமர்சனங்களும் உண்டு.

புதிய இந்தியாவை வடித்தெடுக்க அவர் செய்த பணிகளை எளிதாகவும் சுருக்கமாகவும் சொல்லிவிட முடியாது.
அவருக்கும் காந்திக்குமே மாறுபட்ட கருத்துகள் இருந்தாலும், உத்தமர் காந்தியை தன்னுடைய வழிகாட்டி என்று கருதினார்.

கிராமியப் பொருளாதாரம் என்ற அடிப்படையில் ராம ராஜ்ஜியம் காணவும், கிராமங்களிளே உண்மையான இந்தியா வாழ்கிறது  என்று காந்தி நினைத்தார். ஆனால் நேருவோ, மேலைநாட்டு தொழில்நுட்பத்தைக் கொண்டு இந்தியாவின் ஆளுமையை உலகளவில் நிலைநிறுத்தவேண்டுமென்ற கொள்கையில் இருந்தார்.

 உலக வரலாற்றையும், இந்திய வரலாற்றையும் சுருக்கமாக படிக்க நமக்கு The Discovery of India, Glimpses of World History மற்றும் நேருவின் சுயசரிதை போன்ற நூல்களை நமக்குச் சீதனமாக விட்டுச் சென்றுள்ளார் நேரு.

இலக்கியத்திலும், ஆங்கிலப்புலமையிலும், நாட்டு நிர்வாகத்திலும், உலக அமைதிக்கும் குரல்கொடுத்த உலகத் தலைவர் தான் நமது முதல் பிரதமர் பண்டிதர் ஜவஹர்லால் நேரு அவர்கள். 

அவர் பிறந்து ஒன்றேகால் நூற்றாண்டுகளும், அவர் மறைந்து அரை நூற்றாண்டு காலமும் கடந்துவிட்டது. அவரைப்பற்றி இன்றைய இளைய தலைமுறைகள் அறிந்துகொள்வதோடு,  ஆய்வும் மேற்கொள்ளவேண்டும்.

-கே.எஸ்.இராதாகிருஷ்ணன்.
14-11-2015.

#KSR_Posts#KsRadhakrishnan



#JawaharlalNehru125
#Panchsheel
#Non_AlignedMovement #Nehru #நேரு


No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...