நாயக்கர் காலத்தில் தமிழுணர்வு
நாயக்கர்கள் காலத்திலும் நிலமானிய முறையே இருந்தது என்றாலும் அது வடிவத்திலும் தன்மையிலும் மாறுபட்டதாக உள்ளது. நாயக்கர்கள் தங்கள் நிர்வாக வசதிக்காகப் பாளையக் கார முறையை ஏற்படுத்தினர். நாட்டின் பகுதிகள் பாளையக்காரர்களிடம் ஒப்படைக்கப்பட்டன. பாளையக்காரன் தனக்கு வேண்டியவர்களுக்கும் தனது ஆதிக்கத்தை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் நிலத்தைக் கொடுத்து, அவர்களிடமிருந்து வரிவசூலித்துக் கொண்டான். அப்படி வசூலிக்கப்பட்ட வரியில் மூன்றில் ஒரு பகுதியை அரசனுக்குக் கொடுத்துவிட்டு, மீதியைத் தனக்காகவும், தனது படைச் செலவுக்காகவும் வைத்துக் கொண்டான். ஏனெனில் அரசன் வேண்டும்பொழுது படையுதவி செய்யவேண்டியதும் பாளையக்காரனது கடமையாக இருந்தது. இத்தகைய ராணுவத்தன்மை, கொண்ட பாளையங்களில் பெரும்பாலானவை தெலுங்கர்களின் கையில் இருந்தது என்பதனை வரலாற்று நூல்கள் குறிக்கின்றன.
‘தெலுங்கு அரசர்கள் தமிழ் அரசர்களைப் பணியவைத்து அம்மண்ணின் மைந்தர்களை அடிமை நிலைக்குத் தாழ்த்தினர். அதைத் தொடர்ந்து நாயுடுகள், ரெட்டிகள், ராஜீக்கள் போன்ற தெலுங்கர்கள் அலை அலையாகத் தமிழகத்தில்குடியேறினர்.(தமிழக வரலாறு.பக். 35 - 36). என ராஜய்யன் தெலுங்கர்களின் ஆதிக்கம் ஏற்பட்ட விதத்தினைக் குறிப்பிடுகின்றார். தொடர்ந்து, ‘ நாடுமற்றும் மாநிலங்களின் நிர்வாகப் பொறுப்பு பலதரப்பட்ட அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்ட போது கிராமங்களின் நிர்வாகம் கிராம அதிகாரிகளின் கீழ் ஒப்படைக்கப்பட்டது. நிர்வாகத்திலும் இராணுவத்திலும் வேலை பெறுவதற்கான முன்னுரிமை தெலுங்கர்களுக்கு அளிக்கப்பட்டது’ (மேற் படி ப.52). எனவும் எழுதிச் செல்கின்றார். இதனால் அதற்கு முன்பு ஆதிக்க சக்தியாக இருந்த வேளாளர்கள் பின்னுக்குத் தள்ளப்படும் நிலை தோன்றியது. இதனால் வேளாளர்கள் அரசாட்சியிலிருந்த தெலுங்கர்களுக்கெதிராகப் போராடும்படி தள்ளப்பட்டனர் என்பது தெளிவாகிறது. இப்போராட்டத்தில் தெலுங்கர்களை மட்டும் அல்லாமல் அவர்கள் ஆதரித்து வந்த தெலுங்கு மொழி, வைணவ சமயம் என்ற இரண்டையும் எதிர்ப்பதும் வேளாளர்களுக்குத் தேவையானதாகத் தோன்றியிருக்க வேண்டும். அதற்குச் சைவசமயம், தமிழ் என்ற இரண்டையும் கருவியாகக் கொள்ள முனைந்தனர். இவ்விரண்டிலும் தமிழ்மொழி இன்னுஞ்சிறந்த கருவியாகப் பட்டிருக்க வேண்டும். ஏனெனில் தத்துவ ரீதியாகவும், நேரிடையாகவும் மக்களை ஒன்று திரட்டுவதை விட மொழியின் பெயரால் ஒன்றிணைப்பது எதிரானது என அவர்கள் கருதியிருக்கலாம்.
‘சாதி , குலம் முதலிய பிறப்புப் பாகுபாடுகளையும், பிரதேச வேறுபாடுகளையும் கடந்து பரந்துபட்ட மக்கள் முன்னணியொன்றினை உருவாக்கும் போது அதற்குப் பொதுவாக மொழியொன்றே இயல்பாக அமையக்கூடும்’ (க.கைலாசபதி, ‘பண்டைத்தமிழர் வாழ்வும் வழிபாடும்’ என்ற நூலில் மேற்காட்டுகிறார். ப. 124) என ஆய்வாளர் கூறுகின்றனர். இந்த அடிப்படையில் தான் ‘தமிழுணர்வு’ அக்காலத்தில் உயர்த்திக் கூறப்பட்டது எனக் கூறலாம். இந்த இடத்தில் தமிழகத்தின் சமுதாய வரலாற்றைக் கொஞ்சம் முன்னேபோய்ப் பார்த்து, தமிழ், சைவம், வேளாளர் என்ற மூன்றும் இணைத்தே பேசப்பட்டுள்ளதை நினைவுக்குக் கொண்டு வரவேண்டியுள்ளது.
No comments:
Post a Comment