Thursday, November 1, 2018

ஆண்டாள் பாசுரங்களில் அகக்கூறுகள்.

ஆண்டாள் பாசுரங்களில் அகக்கூறுகள்.
------------------------------------------
அகப்பொருளுக்கு அடிப்படையாக அமைவன தலைவன் தலைவியரது கூடலின்பமும், அதற்கு மறுதலையான பிரிவுத் துன்பமும் ஆகும். கூடலின்பம் குறிஞ்சி ஒழுக்கம் எனப்படும். இவ்வொழுக்கம் கனவு என்னும் கைகோளில் மட்டும் நடைபெறும். செல்வம், கல்வி, குடிப்பிறப்பு முதலாய்ப் பத்துப் பண்புகளால் ஒத்திருக்கும் தலைமக்கள் ஊழால் ஒன்றுகூடி தம்முள் துய்த்த இன்பம் இத்தகையது என்று பிறருக்கு சொல்லமுடியாததாய் உள்ளத்தினுள், அகத்தினுள், அனுபவிக்கும் உணர்ச்சி அகம் எனப்படும். ஆண்டாளும், அகிலமளந்தானும் ஒருவரையொருவர் ஒத்தவர்கள் அல்லர். அவன் அனைத்துக்கும் மேலான பரம்பொருள். அவள் மானுட மங்கை. எல்லாம்வல்ல இறைவன்மீது இச்சை கொள்கிறாள் தலைவி. இது மானுடப்பெண் தெய்வத்தின் மீது கொள்ளுகின்ற மதுரக் காதலாக மணம் வீசுகிறது. தலைமக்கள் இருவருக்கும் இடையே நிகழும் கூட்ட நிகழ்ச்சி மிகுதியாகப் பேசப்படவில்லை. ஓரிடத்தில் மட்டும் மாயக்கண்ணன் தன் இல்லத்திற்கு வந்து தன்னைத் தனிமையில் சந்தித்தாக ஆண்டாள் குறிப்பிடுகின்றாள். 
இதனை, “நாங்களெ மில்லிருந்து ஒட்டிய அச்சங்கம்ம் நானுமவனுமறிதும்” (நாலா. 552) என்ற வரிகள் மெய்ப்பிக்கின்றன. நானும் அவனுமாக இருவரும் சேர்ந்திருந்து எங்களுக்குள் ரகசியமாகச் செய்து கொண்ட சங்கேதத்தை நாங்களிருவருமே அறிவோமேயன்றி வேறோருவரும் அறியார் என்கின்றாள். ஆண்டாள் இவ்வாறு பேசுவது அவளுடைய ஆசையின் எதிரொலியேயன்றி உண்மையானதல்ல. இருவேறுபட்ட நிலையில் இருப்பவர்கள் தங்களுக்குள் சந்தித்துக் கொள்வதற்க வாய்ப்பில்லை. “மாதவன் மீது கொள்ளும் காமம் மங்கையர் மீது கொள்ளும் காமத்தினின்று வேறுபட்டது. உயர்ந்தது” (சுப்பு ரெட்டியார், வைணவ உரைவளம்) என்று சுப்புரெட்டியார் கூறுவதுபோல் இங்கு குறிக்கப்பட்டுள்ள உடல்மொழிச் செய்திகள் பொய்யானவை. பாவனை முறையில் அமைந்தவை. 
ஆண்டாள் மட்டுமே காதல் கொண்டு புலம்புதாகப் பாடல்கள் அமைந்துள்ளன. இவ்வாறு ஒருமருங்கு பற்றிய காதல் கைக்கிளை என்று சுட்டப்பெறும். “அத்தகைய கைக்கிளையும் அடவர்க்கே அமைவதன்றி மகளிர்க்கு கூறுவது மரபன்று. மகளிர்பால் ஒருதலைக்காம வெளிப்பாடு அவர்தம் பெண்ணீர்மைக்குப் பொருந்திய பொற்புடை நெறியாகாமையின், அதனைக் கைக்கிளையின்பாற்படுத்தாமல் பெருந்திணையில் அடக்குவதே புலனெறி வழக்கில் பண்டையோர் கொண்ட தமிழ் மரபாகும்” என்று கைக்கிளை பற்றி டாக்டர். சோம்சுந்தர பாரதியார் கூறுகிறார். மேலும் “இறைவன் திருவடிகளை அடையப்பெறாது அவற்றை நாடி நிற்கும் அடியார்களின் நிலையைப் பெருந்திணையுடன் ஒப்பிடுவர் சமயநூலார்” (டாக்டர். ந. சுப்புரெட்டியார், தொல்காப்பியர் காட்டும் வாழ்க்கை, ப.48) என்ற கூற்றும் இவண் ஒப்பு நோக்கத்தக்கது. இவ்விரு கூற்றுக்களின் வாயிலாக ஆண்டாள் பெண் என்பதாலும், பாடல்களில் பேசப்படும் செய்திகள் இறைவனோடு ஒன்றிக் கலக்க நினைக்கும் அவளுடைய உள்ளத்தின் உணர்ச்சி வெளிப்பாடுகள் என்பதாலும், நாச்சியார் திருமொழியில் பேசப்படும் காதல் பெருந்திணையைச் சார்ந்தது எனலாம்.

அந்த வகையில் ஒரு பாடல்,
உள்ளே உருகி நைவேனை 
உளளோ இலளோ என்னாத 
கொள்ளை கொள்ளிக் குறும்பனைக் 
கோவர்த்தனனைக் கண்டக்கால் 
கொள்ளும் பயன் ஒன்று இல்லாத 
கொங்கைதன்னைக் கிழங்கோடும் 
அள்ளிப் பறித்திட்டு அவன் மார்வில் 
எறிந்து என் அழலைத் தீர்வேனே

நாச்சியார் திருமொழியில், காதல் அதன் வயப்பட்டவர்களை தூண்டில் முள் போல் குத்திக் கொல்கிறது என, ஆண்டாள் வெளிப்படுத்தும் சொற்கள் தீவிரமானவை, ஏகாந்தமானவை. உவமைகளை அள்ளிவீசி தன் ஆற்றாமையை வெளிப்படுத்துகிறாள். புண்ணில் புளிப்பெய்தாற் போல், வேலால் துன்னம் செய்தாற் போல் என்ற மொழிகள் அவள் வேதனையைப் பேசுகின்றன. பயனொன்றும் இல்லாத கொங்கைதன்னைக் கிழங்கோடு அள்ளிப் பறித்திட்டு அவர் மார்பில் எறிவேன் என்னும் போது உச்சம்.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன் 
01-11-2018

No comments:

Post a Comment

#கொடுக்காய்புளி - #அழகர்கோவில்

#கொடுக்காய்புளி காலம்(சீசன்) மதுரை- #அழகர்கோவில் சிலம்பாறுபாயும் தென் திருமாலிருச் சோலையே... -#பெரியாழ்வார் # அழகர்கோவில் #கேஎஸ்ஆர்போஸட் #ks...