#நமது_அரசியல்_சாசன_வயது_71_ஆண்டுகள், #ஆனால்_திருத்தங்களோ127. அமெரிக்க அரசியல் சாசனத்தின் வயது 232 ஆண்டுகள், ஆனால் திருத்தங்களோ 27.
———————————————————
ஏறத்தாழ 71 வருடங்களில், நமக்கு நாமே அர்ப்பனித்து கொண்ட நமது அரசியல் சாசனம் 127-வது திருத்தத்தை எட்டியுள்ளது. இந்த சாசனத்திருத்த மசோதா நாடளுமன்ற இரு அவைகளிலும் தற்போது பரிசீலனையில் உள்ளது. உலகில் அதிக பக்கங்கள், பிரிவுகள், துணைப்பிரிவுகள் கொண்ட அரசியல் சாசனம் நமது ஆகும்.
அமெரிக்க அரசியல் சாசனத்தை வெறும் 20 பக்கங்களில் அச்சிட்டு விடலாம். அந்த சாசனம் ஏற்று கொண்ட நாள் மார்ச் 04, 1789. ஏறத்தாழ 232 ஆண்டுகள் ஆகின்றன. இதுவரை அமெரிக்காவில் அரசியல் சாசனத்தில் 27 திருத்தங்களை இறுதியாக கடந்த மே 5-ம் தேதி 1992-ல் செய்யப்பட்டது
ஆனால் நமது அரசியல் சாசனத்தில் இவ்வளவு குறைந்த காலத்தில் இவ்வளவு திருத்தங்களா? என்ற வினா எழுகின்றது. நாட்டின் வளர்ச்சி, காலத்திற்கேற்ப சில நிலைபாடுகள் எடுக்கவேண்டிய சூழலில் இவ்வளவு திருத்தங்கள் வருவது சகஜம் என்றால், ஏதோ ஒரு புள்ளியில் சில பிழைகள் இருக்குமோ என்ற ஐயப்பாடு எழுகின்றது. இது குறித்து நாடுதழுவிய விவாதம் தேவை.
அவசரநிலை காலத்தில் பிரதமர் இந்திரா காந்தி அரசியல் சாசனத்தின் 42-வது திருத்தத்தை கொண்டுவந்து அரசியல் சாசன அடிப்படை அமைப்பையே பாழடித்துவிட்டார், என்ற குற்றச்சாட்டை 1975-76ல் கடுமையாக நாடுமுழுவதும் விவாதிக்கப்பட்டது. நீதிமன்றங்களில் அதிகாரங்கள் முடக்கப்பட்டதெல்லாம் அன்றைக்கு பெரும் சர்ச்சையை உருவாக்கியது.
வாஜ்பாய் பிரதமராக இருந்தபோது அரசியல் சாசனத்தை சீர்திருத்த, ஆலோசனைகளை வழங்க அரசியல் அமைப்பின் செயல்பாடுகளை ஆய்வு செய்யும் தேசிய ஆணையம் (National Commission to review the working of the Constitution) என்ற குழுவை நீதிபதி எம்.என்.வெங்கடாசலய்யா தலைமையில் 22 பிப்ரவரி 2000-ல் நியமிக்கப்ப்பட்டது. அந்த குழுவின் அறிக்கை 1979 பக்கங்களைக் கொண்ட இரண்டு தொகுதிகளை மத்திய அரசுக்கு 31.03.2002-ல் வழங்கியது.
இப்படி தொடர்ந்து அரசியல் சாசனம் குறித்தான விவாதங்களும் நடந்துகொண்டே தான் இருகின்றன. இதற்கு முற்றுபுள்ளி வைகின்ற வகையில் தொலைநோக்கு பார்வையோடு, நமது ஜனநாயகத்தை பாதுகாக்கும் வகையில் அரசியல் சாசனம் அமைய வேண்டும் என்பதில் மாற்றுகருத்து கிடையாது. இன்றைக்கு 127 வது சாசனத்திருத்தத்தை நாடு சந்திக்கின்றது என்றால் என்ன சொல்ல!.
No comments:
Post a Comment