Monday, August 23, 2021

#சில_நினைவுகள்…

 #சில_நினைவுகள்

———————————————————-




பலவருடங்களுக்குப் பிறகு பாரிமுனையில் உயர்நீதிமன்றம் எதிரிலுள்ள சுங்குராமச்செட்டித் தெருவில் இருக்கும் என்னுடைய வழக்கறிஞர் அலுவலகத்திற்கு சென்றிருந்தேன். அன்றைக்கு வைத்த பெயர் பலகை அப்படியே இருந்தது. எஸ்.இராதாகிருஷ்ணன் என்று அன்றைக்கு சென்னை உயர் நீதிமன்றத்தில் பல வழக்குகள் இந்த பெயரில்தான் 1989 வரை தாக்கல் செய்தேன்.
உயர் நீதிமன்றத்தில் எஸ்.இராதாகிருஷ்ணன் என்று 5 வழக்கறிஞர்கள் இருந்தனர். எனவே 1990-ல் கே.எஸ்.இராதாகிருஷ்ணன் என்று மாற்றிக் கொள்ள வேண்டிய அவசியம் ஏற்பட்டது. இந்த பெயர் பலகையிலுள்ள வழக்கறிஞர்கள், வழக்கறிஞர்கள் மறைந்த எம்.கந்தசாமி, திரு எல்.சந்திரகுமார் இருவருக்குமே 1990-ல் உயர்நீதிமன்ற நீதிபதி ஆக வாய்ப்புகள் வந்தும் அதை மறுத்தனர்.
இன்றைக்கு அந்த பழைய அறைக்குப், பழைய வழக்கு கோப்புகளை தேட செல்லவேண்டி இருந்தது. அந்த அறையில் 1979-லிருந்து வழக்கு கட்டுகள்அனைத்தும்கட்டிவைக்கப்பட்டிருந்தது.
இரண்டவது படத்திலுள்ள கப்போர்டு போன்ற அலமாரி ஒரு காலத்தில் வேலுப்பிள்ளை பிரபாகரன்கோப்புகளை வரிசையாகஅடுக்கிவைக்கபயன்படுத்தியதாகும். இதை பெரும்பாலும் பேபி
சுப்பிரமணியம் தான் கோப்புகள், பத்திரிக்கை செய்திகளை கத்தரித்து, தனித்தனியாக வகைப்படுத்தி இதில் வைத்திருந்தார். பின் இந்த அலமாரி காலியாக இருந்தபோது என்னுடைய வீட்டில்இடத்தைபிடித்துக்கொண்டிருக்கிறது என்று என்னுடைய வழக்கறிஞர் அலுவலகத்திற்கு 1991-ல் கொண்டுசென்று சேர்த்தேன். அந்த அறை மிகவும் பழமையாக மாறிவிட்டது.
ஒருமுறை இரா.செழியன் மாடிப்படியேறி இந்த அறைக்கு வந்தார். மிகவும் மகிழ்ச்சியாக இருக்கின்றது என்று சொன்னபடியே அறைக்குள் நுழைந்தார். என்ன என்று நான் அவரிடம் கேட்டபொழுது, இந்த கட்டிடத்தின் பின் பக்கம் இருக்கும் பிராட்வே தற்போதுள்ள தமிழ்நாடு கோவாபரேடிவ் பேங்க் கட்டிடத்தின் மாடியில்தான் நான் தங்கியிருப்பேன். பேரறிஞர் அண்ணா அங்கு வருவார், ஓய்வெடுப்பார், எழுதுவார், படிப்பார் என்று அவர் கூறியதெல்லாம் நினைவுக்கு வருகிறது. (அப்போது இந்த கோவாபரேடிவ் பேங்க் கட்டிடத்தின்கீழ்தளத்தில்தனியாரின்வணிகநிறுவனங்கள் இருந்ததாகக் குறிப்பிட்டார்).
இந்த அறை சில நேரங்களில் ஈழ ஆதரவாளர்கள், விவசாய சங்கத் தலைவர் நாராயணசாமி நாயுடுவின் விவசாய சங்கத்தின் நிர்வாகிகள் வந்துச் செல்லும் இடமாகவும், அரசியல் களத்தில் இருப்பவர்கள் வந்துச் சென்ற இடமாகவும் இருந்தது. ராம் விலாஸ் பஸ்வான் மூலம் கிடைத்த, இங்கிருந்த பழைய தொலைபேசி எண் 567800க்கு
கலைஞர் மற்றும் பிரபாகரன் உட்பட
வடபுல தலைவர்கள்,தமிழக தலைவர்கள்
தொடர்பு கொண்டது உண்டு. அப்போது கை பேசி பயன் பாட்டில் இல்லை.
இந்த அறையை என் பயன்பாட்டிற்காக காயல்பட்டணம் சொலுக்கு 1980-ல் பெற்றுத்தந்தார். இந்த அறையில் உயர்நீதிமன்ற, உச்சநீதிமன்ற நீதிபதிகள், முக்கிய அரசியல் தலைவர்கள் போன்றவர்களெல்லாம் வந்து சென்றதுண்டு.
இருப்பினும், இந்த அறை அப்போது தட்டச்சு செய்வதற்கும் வழக்கு கட்டுகளை வைப்பதற்குமே பயன்படுத்தினாலும் என்னுடைய சீனியர் ஆர்.காந்தி அவர்களின் உயர்நீதிமன்ற 22-வது லா சேம்பர்ஸ் தான் அன்றாடம் வழக்குமன்ற பணிகளுக்காக இயங்குவது வாடிக்கை.எத்தனையோ
நினைவுகள்…. எத்தனையோ ஆளுமைகள், நன்பர்கள் வந்து விவாதித்த விஷயங்கள் ……
காலச்சக்கரங்கள் ஓடிவிட்டன…..
நதிநீர் இணைப்பு மற்றும் பிரச்சனைகள், விவசாய உரிமைகள் என்று நான் தொடுத்தப் பல பொது நல வழக்குகளெல்லாம் இங்குதான் அன்றைய டைப்ரைட்டரில் தட்டச்சுச் செய்யப்பட்டது.
•விவசாயிகள் மீது ஜப்தி நடவடிக்கைகள், அவர்களுக்கு கடன் நிவாரண உரிமைகளைப் பெறவும் வழக்குகள் தொடுத்து உரிய ஆணைகளையும் உயர்நீதிமன்றத்தில் பெற்றது.
•தூக்குத் தண்டனை கூடாது என்று இன்றைக்கு எட்டு திக்கிலிருந்தும் குரல்கள் கேட்கின்றன. 1983 ல் உச்சநீதிமன்றம் நிராகரிக்கப்பட்டு, குடியரசுத் தலைவரிடம் வழங்கப்பட்ட கருணை மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டு, இனிமேல் வேறு வழி இல்லை. தூக்கு தண்டனைதான் என்ற நிலையில் 3 நாட்களில் தூக்கில் தொங்க இருந்த வீரபாண்டிய கட்டபொம்மனின் வாரிசு குருசாமி நாயக்கரை, வெறும் மூன்று வரி தந்தியில் சென்னை உயர்நீதிமன்றத்தில் தூக்கு தண்டனையில் இருந்து காப்பாற்றியது
•கம்பம் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கண்ணகி கோவிலுக்கு தமிழ் நாட்டைச் சேர்ந்த பயணிகள் வருவதற்கு கேரள அரசு தடை விதித்தையடுத்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அங்கு காவல்துறை பாதுகாப்புடன் பக்தர்கள் வழிபாட்டை தொடர வழி செய்தது.
•விடுதலைப் புலிகள் இயக்கத் தலைவர் பிரபாகரனின் பாண்டி பஜார் துப்பாக்கிச் சூடு வழக்கு, ஏனைய வழக்குகளிலும் வழக்கறிஞராக வாதிட்டது.
•ஈழத் தலைவர்கள் பாலசிங்கம், சந்திரஹாசன், டாக்டர் சத்யேந்திரா எம்.ஜி.ஆர். ஆட்சிக் காலத்தில் தமிழகத்திலிருந்து நாடு கடத்தியபோது வழக்குத் தொடுத்து 24 மணி நேரத்தில் இந்தியாவிற்கு திரும்ப அழைக்கப்பட்ட வழக்கு
•கடந்த 1983 ஆம் வருடம் விருதுநகர் மாவட்டம் ஆலங்குளத்தில் இயங்கி வந்த தமிழ்நாடு சிமெண்ட் ஆலையில் இருந்து வெளியேறிய நச்சுப் பொருட்களால் சுற்றுச்சூழல் மாசு ஏற்பட்டு வந்ததையடுத்து அந்த ஆலையினை மூட வேண்டி தொடர்ந்த வழக்கில் ஆலையை மூடுமாறு இடைக்கால உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தமிழக அரசு 70 கோடி ரூபாய் செலவில் அந்த ஆலையை புதுப்பித்து சுற்றுச்சுழல் மாசுபடாமல் இருக்க செய்யுமாறு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியது. இந்த உத்தரவால் ராஜபாளையம் மற்றும் சிவகாசி பகுதி விவசாயிகள் மகிழ்ச்சியடைந்து
•1983 இவர் தொடர்ந்த ரிட் மனுவினால் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தை தமிழக அரசு வறட்சி பாதிக்கபட்ட பகுதியாக அறிவித்தது
• காவல் நிலையத்தில் இறந்த பலரது குடும்பங்களுக்கு பொதுநல வழக்கு தொடர்ந்து அதன் மூலம் இழப்பீட்டு தொகையை பெற்றுத் தந்துள்ளார்.
• விவசாய மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பாக இவர் தொடர்ந்த ரிட் மனுக்கள் பல நிலுவையில் உள்ளன.
•காவிரி பிரச்சினையிலும், முல்லைப்பெரியாறிலும் எடுத்துக்கொண்ட வழக்குமன்ற நடவடிக்கைகள்.
• சென்னை உயர்நீதிமன்றத்தில் 1999ல் சட்ட மேலவை அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உத்தரவு…..
• தேசிய மனித உரிமை ஆணையத்திலும், மாநில மனித உரிமை ஆணையத்திலும் பல்வேறு வழக்குகள் தாக்கல் செய்துள்ளார். சந்தனக் கடத்தல் வீரப்பன் வழக்கில் அப்பாவி மக்கள் கர்நாடக அரசால் மைசூர் சிறையில் வாடியவர்களுக்கெல்லாம் குரல் கொடுத்தார்.
•கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு எதிராக முதல் முதல் வழக்கு.
•மேற்கு தொடர்ச்சி மலை, கிழக்கு தொடர்ச்சி மலை போன்றவற்றின் வளங்களை பாதுகாக்க வழக்கு
•தேர்தல் சீர்திருத்தம் குறித்தான வழக்கு.
•தமிழக நீர்நிலைகளான ஏரி, குளங்கள் பாதுகாப்பு குறித்தான வழக்கு என பல உண்டு.
கே.எஸ்.இராதாகிருஷ்ணன்
23.08.2021.

No comments:

Post a Comment