Monday, August 30, 2021

#விடுதலைப்_போரும்_தமிழ்நாடும்:

 #விடுதலைப்_போரும்_தமிழ்நாடும்:

—————————————————-
அன்று வீரபாண்டியக் கட்டபொம்மனின் குரலுக்குள் ஆங்கில ஏகாதிபத்திய எதிர்ப்புணர்வு வெடித்துக்கிளம்பியது. கி.பி.1700 – 1800 காலகட்டம் தமிழ்நாட்டின் எல்லாப்பகுதிகளிலும் இப்படி வெடித்துக் கிளர்ந்தது எதிர்ப்புக்குரல்.
பூலித்தேவன், ஒண்டிப்பகடை, கட்டபொம்மு, மாயூரம் நாகப்பன் படையாச்சி, சர்தார் ஆதிகேசவலு நாயக்கர், தீரர் சத்தியமூர்த்தி, இரட்டைமன்னர்கள் காத்தவராயன், சேந்தவராயன், பகதூர் வெள்ளையதேவன், வீரன் அழகுமுத்துக்கோன், விருப்பாட்சி கோபால நாயக்கர், தியாகி சீனிவாசராவ், தியாகி விஸ்வநாததாஸ், கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத், ரெபல் முத்துராமலிங்க சேதுபதி, வ.வே.சு.அய்யர், ஜெய்ஹிந்த் செண்பகராமன், ஊமைத்துரை, வீரன் சுந்தரலிங்கம், பொட்டிப்பகடை மருது சகோதரர்கள், சேதுபதி மன்னர், ராணி வேலு நாச்சியார், குயிலி,தீரன் சின்னமலை, திப்புசுல்தான், 1806 வேலூர் சிப்பாய்கள், பாளயங்கோட்டைச் சிப்பாய்கள் என்று பலர் அந்தக் காலப்பகுதி முழுவதும் வெள்ளையரை எதிர்த்து உயிர்நீத்த தமிழ்நாட்டு வீரர்களை சுதந்திரப் போர் வீரர்களாகக் கொண்டாடுகிறோம்.
கி.பி 16,17,18 ஆம் நூற்றாண்டு ஆகிய காலப்பகுதி தமிழ் மண்ணில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்த காலம் ஆகும். ஐரோப்பாவிலிருந்து வணிக நோக்குடன் இந்தியாவுக்கு வந்த போர்ச்சுக்கல் கிழக்கிந்திய கம்பெனி, டச்சுக்கிழக்கிந்திய கம்பெனி போன்றவற்றை ஒடுக்கி விரட்டிய பிரிட்டிஷ் கிழக்கிந்தியக் நிறுவனம் தனக்கான ஒரே போட்டியாளனாக பிரெஞ்சு கிழக்கிந்திய கம்பெனியை மட்டும் கொண்டிருந்தது. தமிழ் மண்ணில் குறிப்பாக தென் பகுதியில் நாயக்க மன்னர்களின் ஆட்சி முடிவுக்கு வந்து கொண்டிருந்தது. மதுரை மைய அரசின் கட்டுப்பாட்டை இழந்த 72 பாளையக்காரர்களும் தாமே அவ்வப்பகுதிகளின் சுதந்திர அரசுகளெனத் தம்மை பிரகடனப்படுத்திக் கொண்டு வரிவசூல் செய்து ராஜ்ஜிய பரிபாலனம் செய்யத் துவங்கியிருந்த காலம்.
முரண்பாடு முற்றும்போது துணிவுடன் ஆங்கிலேயரை எதிர்த்து நின்ற பாளையக்காரர்கள் சுதந்திர போராட்ட வீரர்களாகின்றனர்.
நாகலாபுரம், மன்னார் கோட்டை, கோலார்பட்டி, செந்நெல்குடி, சாப்டூர், ஏழாயிரம் பண்ணை, காடல்குடி, குளத்தூர் பாளயங்களைத் தன்னுடன் இணைத்துக்கொண்டு கட்டபொம்மு களம் கண்டார். ஒரு குறிப்பிட்ட பாளையக்காரர் ஆங்கிலேயருக்கு உடந்தை என்றால் தனக்கு எதிரி என்று கட்டபொம்மு கருதி இயங்கியதால் அன்றைய காலகட்டத்தின் முக்கியமான சுதந்திர வீரனாகக் கட்டபொம்மு மதிக்கப்படுகிறான்.இந்த காலக்கட்டங்கள் சுதந்திரப் போராட்டத்தின் வீரியமிக்க பக்கங்களாக அமைவதை வரலாற்றில் பார்க்கிறோம்.
வலுவான கூட்டணி அமைத்த கட்டபொம்முவை (மருது சகோதரர்களையும் சந்தித்தவர்) முறியடிக்கப் போதிய படைபலம் இல்லாததால் அவரை பேச்சுவார்த்தைக்கு வரச்சொல்லி இங்கும் அங்குமாக அலைக்கழித்து 1799 மே மாதத்தில் திப்புசுல்தான் முறியடிக்கப்பட்ட பிறகுதான் அங்கிருந்த படைகள் முழுமையாக பாஞ்சாலங்குறிச்சிக்குத் திருப்பப்படுகின்றன. கடுமையான சண்டைக்குப் பிறகு பாஞ்சாலங்குறிச்சி கோட்டை தகர்க்கப்பட்டது 17.10.1799 அன்று கட்டபொம்மன் கயத்தாற்றில் தூக்கிலிடப்பட்டார்.
அதன் பின்னர், சிவகங்கை - இராமநாதபுரம் பகுதியில் ஆங்கிலேயருக்கு எதிராக வாளேந்தி நின்ற மருது சகோதரர்களின் படைகள் முறியடிக்கப்பட்டு 1801 அக்டோபரில் திருப்பத்தூரில் தூக்கிலிடப்பட்டனர். மேற்கு மண்டலத்தில் தீரன் சின்னமலை 1805 ஜூலையில் சங்ககிரியில் தூக்கிலிடப்பட்டார். ஆரம்ப எழுச்சிகள் ஒரு வழியாக ஒடுக்கப்பட்டுவிட்டன என்று ஆங்கிலேயர் கருதிய நேரத்தில் 1806 ஜூலை 10 ஆம் நாள் வேலூர் கோட்டைக்குள் இருந்த தமிழ்ச் சிப்பாய்கள் ஆங்கிலேயருக்கு எதிராக ஆயுதக் கிளர்ச்சியில் இறங்கினர். எட்டு மணி நேரத்தில் அக்கிளர்ச்சி அடக்கப்பட்டாலும் அதன் வீச்சு இன்னும் நூறு ஆண்டுகளுக்கு இந்திய மண்ணில் இருந்து கொண்டிருந்தது.
ராணுவத்துக்குள் புதிய தொப்பி அறிமுகம் மற்றும் அதன் வழி கிறித்துவமயமாக்கிவிடுவார்கள் என்கிற அச்சம் இக்கிளர்ச்சிக்கு ஒரு உடனடிக் காரணம் என்றாலும் அடிப்படையான வேறு சமூகப் பொருளாதாரக் காரணங்கள் ஆகும். பிரிட்டிஷாரின் கடுமையான வரிவிதிப்புக் கொள்கை காரணமாகத் தமிழ்மண்ணில் எழுந்த பஞ்சங்கள் மக்களைக் கடுமையாகப் பாதித்தன. 1783,1792,1807 ஆகிய ஆண்டுகளில் தமிழ்நாட்டில் கடுமையான பஞ்சங்கள் தாக்கியது "தாது வருடப் பஞ்சம்" ; பஞ்சங்களைத் தொடர்ந்த பட்டினிச்சாவுகளும் வறுமையின் தாண்டவமும் சிப்பாய்களின் மனங்களில் கோபத்தை உண்டாக்க ஒரு முக்கிய காரணம். பாளையங்கள் எல்லாம் அழிக்கப்பட்ட உடனடிக்காலமாக அது இருந்தது. பதவியும் அதிகாரமும் இழந்திருந்த பாளையக்காரர்கள் மற்றும் அவர்களது வாரிசுகள் பழிவாங்கக் காத்திருந்தனர். திப்பு கொல்லப்பட்ட பிறகு அவரது மகன்களும் உறவினர்களும்வேலூர்க்கோட்டைக்குள்ளேயே ஹைதர் மகால், திப்பு மகால் என்று அவர்களுக்காகப் புதிதாக கட்டப்பட்ட மாளிகைகளில் தங்க வைக்கப்பட்டிருந்ததும், கலகத்திட்டம் அவர்களுக்கு முழுமையாகத் தெரிந்திருந்தது என்பது அவர்களின் ஆசி இருந்தது என்பது குறிப்பிடத்தக்க அம்சங்கள். அக் கோட்டைக்குள் வீரர்களாக இருந்தவர்கள் பல நூறுபேர் கட்டபொம்மனின் படை கலைக்கப்பட்ட பின் வீட்டுக்கு அனுப்பப்பட்ட சங்கரன்கோவில் (பழைய நெல்லை மாவட்டம்) வட்டாரத்தைச் சேர்ந்தவர்கள்.
வேலூர் கலகம் அடக்கப்பட்ட பிறகும் அதே ஆண்டில் பாளையங் கோட்டையிலும் ராணுவத்தில் கலகம் ஏற்பட்டு அது சில மணி நேரங்களில் அடக்கப்பட்டது.பாளையக்காரர்களின் எழுச்சியும் வேலூர் சிப்பாய்களின் எழுச்சியும் என்றென்றும் மங்கா ஒளி விளக்காக சுதந்திரத்துக்கான போராட்டத்துக்கு வழிகாட்டிக் கொண்டிருக்கும். ஆனால் இப்போராட்டங்கள் பின்னர் எழுதப்பட்ட இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் சேர்க்கப்படவில்லை.
மீண்டும் ஒரு எழுச்சி ஏற்பட தமிழ்நாடு 100 ஆண்டுகள் காத்திருக்க வேண்டியதாயிற்று. 1905 இல் கர்சன் பிரபு செய்த வங்கப்பிரிவினையை ஒட்டி வீறு கொண்டெழுந்த சுதேசி இயக்கத்தின் குரலை தமிழகத்தில் வ.உ.சி எதிரொலித்தார்‌. பாரதியின் வார்த்தைகளில் சொல்வதானால், திருநெல்வேலி கலெக்டர் விஞ்ச் ஸ்ரீ சிதம்பரம் பிள்ளைக்குச் சொன்னது:
"நாட்டி லெங்கும் சுதந்திர வாஞ்சையை
நாட்டினாய் - கனல்-மூட்டினாய்
வாட்டியுன்னை மடக்கிச் சிறைக்குள்ளே
மாட்டுவேன் - வலி- காட்டுவேன்"
கலெக்டர் வின்சுக்கு ஸ்ரீ சிதம்பரம் பிள்ளை சொல்லிய மறுமொழி:
சதையைத் துண்டு
துண்டாக்கினுமுன்னெண்ணம்
சாயுமோ?- ஜீவன் ஓயுமோ?
இதயத்துள்ளேயிலங்கு மஹாபக்தி
யேகுமோ? - நெஞ்சம்- வேகுமோ?
இந்தியாவின் முதல் தொழிலாளர் அரசியல் வேலைநிறுதத்தை முன்னின்று வழிகாட்டி,தலைமை ஏற்று நடத்தியவர் வ.உ.சி. கூலி உயர்வு,வேலை நேரம் போன்ற தங்கள் கோரிக்கைகளுக்காகப் போராடி வந்த தூத்துக்குடி கோரல் மில் தொழிலாளிகள் 27.02.1908 அன்று வேலை நிறுத்தம் செய்தனர்.தூத்துக்குடி மக்கள் வ.உ.சி. யின் உரைகளைக் கேட்கத் தெருக்களில் திரண்டனர். கடையடைப்புச் செய்யப்பட்டது. ஆங்கிலேயர்களுக்கு சவரம் செய்ய நாவிதர்கள் மறுத்தனர். சலவை செய்ய சலவைத்தொழிலாளிகள் மறுத்தனர். ஊருக்குள் குடியிருக்கப் பயந்து ஆங்கில அதிகாரிகள் இரவு நேரங்களில் கப்பல்களில் குடும்பத்தினருடன் தூங்கினர்.
பேச்சுவார்த்தைக்காக என வ.உ.சியை திருநெல்வேலிக்கு அழைத்த கலெக்டர் விஜ்ச் நயவஞ்சகமாக அவரைக் கைது செய்தான். 1908 மார்ச் 12-ம் தேதி கைது. அன்றே திருநெல்வேலி போர்க்களமானது. மக்கள் தெருக்களில் காவல்துறையோடு சண்டையிட்டனர். உதவி கலெக்டர் ஆஷ் கைத்துப்பாக்கியால் சுட்டார். போலீஸ் துப்பாக்கிச் சூடும் நடந்தது. நான்கு பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் பட்டியல் பிரிவைச் சேர்ந்தவர். ஒருவர் முகம்மதியர். ஒருவர் கோவில் பூசாரி. ஒருவர் ரொட்டிக்கடைத் தொழிலாளி. நான்கு பேரின் ரத்தமும் ஒன்றாகக் கலந்து நெல்லை மண்ணில் ஓடியது.
13-ம் தேதி தூத்துக்குடி கோரல் அலைத் தொழிலாளிகள் வ.உ.சி. கைதைக் கண்டித்துத் தாமாகவே வேலை நிறுத்தத்தில் இறங்கினர். தமது கோரிக்கைகள் ஏதும் இல்லாமல் தொழிலாளிகள் நடத்திய இந்தியாவின் முதல் அரசியல் வேலை நிறுத்தம் இதுதான். ஆனால் வரலாற்றில் இது பதிவாகவில்லை. திலகர் கைதை ஒட்டி பம்பாய் தொழிலாளர்கள் 1908 ஜூலையில் நடத்திய வேலைநிறுத்தமே முதல் அரசியல் வேலை நிறுத்தம் என எழுதப்பட்டுள்ளது.
1911 ஜூன் 17 அன்று திருநெல்வேலி கலெக்டராக இருந்த ஆஷ்துரை எனப்பட்ட ராபர்ட் வில்லியம் டிஎஸ்கார்ட் ஆஷ், மணியாச்சி ரயில் நிலையத்தில் சங்கர அய்யர் எனப்பட்ட வாஞ்சிநாதனால் சுட்டுக்கொல்லப்பட்டான்.
வாஞ்சி பயன்படுத்திய துப்பாக்கி ஜெர்மனியில் தயாரிக்கப்பட்ட பிரவுனிங் துப்பாக்கி ஆகும். இதனை பிரான்சிலிருந்து பொம்மைக்குள் வைத்து ரகசியமாகக் கப்பலில் பாண்டிச்சேரிக்கு அனுப்பியவர் மேடம்காமா. பாண்டிச்சேரிக்குச் சென்று வ.வே.சு அய்யரிடம் துப்பாக்கி சுடப் பயிற்சி எடுத்தார் வாஞ்சி. மேடம் காமா துவங்கி வாஞ்சி வரை அனைவரும் அபிநவபாரத் சபா அமைப்பின் உறுப்பினர்களாக இருந்தனர். ஒரு பெரிய வலைப்பின்னலின் பகுதியே வாஞ்சிநாதன்.
1885-ல் பம்பாயில் நடைபெற்ற இந்திய தேசியக் காங்கிரசின் முதல் மாநாட்டுக்கே தமிநாட்டிலிருந்து பதினேழு பேர் பிரதிநிதிகளாகக் கலந்துகொண்டனர். 1885 முதல் 1947 வரை காங்கிரஸ் இயக்கம் இடையறாது ஆங்கிலேயருக்கு எதிராகப் போராடி வந்ததுபோன்ற ஒரு படத்தை காங்கிரசார் மக்களுக்கு காட்டி வந்தாலும், உண்மையில் காங்கிரஸ் நடத்திய போராட்டங்கள் மூன்றே மூன்றுதாம். 1919-22 முதல் ஒத்துழையாமை இயக்கம். 1930-32 உப்புச் சத்தியாக்கிரகம். 1942 வெள்ளையனே வெளியேறு இயக்கம். முதல் ஒத்துழையாமை இயக்கத்தின் தாக்கம் தமிழ்நாட்டில் பெரிதாக இருக்கவில்லை. எல்லாப் போராட்டங்களும் அடக்கப்பட்டிருந்த காலம் அது. ஆனால் உப்புச் சத்தியாக்கிரகம் திருப்பூர் குமரனையும் கத்தியின்றி ரத்தமின்றி பாடலையும் நமக்குத் தந்துள்ளன. வேதாரண்யத்துக்கு ராஜாஜி தலைமையில் உப்புக் காய்ச்சப்போன நடைபயணம் பிரசித்தம். வெள்ளையனே வெளியேறு இயக்கத்துக்கு காந்திஜி அறைகூவல் விடுத்தாலும் அனைத்துத் தலைவர்களும் கைது செய்யப்பட்டுவிட்டதால் மக்கள் தாங்களே எடுத்து நடத்திய போராட்டமாக அது மாறியது.
1945-ல் நேதாஜி சுபாஷ் சந்திர போஸ் பர்மாவில் திரட்டிய இந்திய தேசிய ராணுவத்தில் எண்ணற்ற தமிழ் மக்கள் வீரர்களாகவும் படைத்தளபதிகளாகவும் பங்கேற்றுப் போரிட்டு மடிந்தனர். அவர்களின் தலைவராக எழுந்தவர்தான் லட்சிமிபாய் பெண்கள் படைப்பிரிவின் தலைவர் கேப்டன் லட்சுமி.
இப்படி பல நிகழ்வுகள்……..
30-8-2021.

No comments:

Post a Comment

#விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமிநாயுடு 40வது நினைவு நாள்.

———————————————————- தமிழக விவசாயிகள் சங்க நிறுவன தலைவர் சி.நாராயணசாமி நாயுடு (டிசம்பர் 6, 1925 - டிசம்பர் 20, 1984) தமிழக விவசாயிகள் சங்க ந...