#திசா_திசைகளிலிருந்து_வருகிற_ரயிலுக்காகக்_காத்திருக்கிறான் அராபியப்பேழையுடன். குறிப்புகள் நிரம்பி வழியும் அவன் பயணப் பையில் உதிரும் கோடுகள் கைவிடப்பட்ட நகரின் அனாதியுடன். பலமுகங்கள் எட்டிப்பார்த்து அழைக்கின்றன சமிக்ஞையாய். எட்டிய நீர்வெளியில் மூழ்கிய நகரம். நீர்வீதிகளில் சிறுவர்களும் சிறுமிகளும் விடுபட்ட காலத்தின் துடுப்பசைத்து மீனுருவினராய் வயது வரம்பற்ற நீர் ஜன்னலில் எட்டிப்பார்த்து மௌனமாக உரையாடுகிறார்கள் கண்களால். முத்துவெள்ளைக் கண்களே ஆழத்தில் புதைந்து சிப்பிகளால் மூடியிருந்தது. கண்ணைக் குருடாக்கும் கொடிய இருட்டில் விளைந்த கடல்முத்து தானே திறந்த பளிங்குப்பார்வை நகர்ந்து செல்ல அவற்றின் ஊமையான பாஷைகளை ரயில் கதவுகளில் எழுதுகிறார்கள் சிறுமிகள். குகையுள் கிளைபரப்பிச் செல்லும் பழுப்புரயில் தாவரநீர் மட்டத்தின்
வெளிர் தண்டுகளில் தலைகீழாய் நகர்ந்து ஊதும் விசில். இலைகளில் துயிலும் சிறுவர்களும் ஆமைக்குள்ளிருந்து வெளிப்பட்ட பிஞ்சுக் கரங்களும் தழுவிப் பிணைந்த மெந்நீரின் உயிர்ப்பசை பூசிய தனுஷ் கோடி ரயில் கருநீர் சுழிகளுக்குள் வளையும். தொடர் வண்டிக்குள் மீன்முகச் சேவல்கள் கூட்டமாய் அமர்ந்து இமையில்லாத வட்டக் கண்களுக்குள் பாழ்விதி ரேகை ஓடுவதை யாரோ கண்டுகொள்ள வளையும் கழுத்து திரும்புகிறது உள்ளே.
No comments:
Post a Comment