Tuesday, August 17, 2021

#அரசியல், #அரசு - #நாடு, #தேசம் குறித்து விளக்கமான பதிவு.

 #அரசியல், #அரசு - #நாடு, #தேசம் குறித்து விளக்கமான பதிவு.

———————————————————



அரசியல் என்பது மக்களின் நலனுக்காக இயக்கமாக இருப்பது. அந்த இயக்கத்தில் பொருத்தமானது என்று மக்கள் தேர்ந்தெடுத்து ஒரு குழுவை தங்கள் பிரதிநிதிகளாக ஆட்சிக்கட்டிலால் அமைத்தால் ஆட்சி(government)-அரசு(state) என்று பெயர். அந்த ஆட்சி, அதிகாரத்தை முறைப்படுத்துவது நாடு(county). அந்த நாட்டுக்கு நிலம், கலாச்சாரம், மொழி, பண்பாடு சார்ந்த ஒருங்கிணைப்பு தேசம். இந்த தேசம்(nation) என்ற மண் இல்லை என்றால் நாடில்லை, அரசுல்லை, ஆட்சியில்லை, அரசியல் இல்லை. இதுவே ஜனநாயகத்திற்கும் குடியரசிற்கும் அடிப்படை தளமாகும்.
தேசியம் என்பது என்ன ?
தேசம் குறித்த கருத்தியல் தேசியம் ஆகும்.
தேசம் என்றால் என்ன ?
சேர்ந்தாற் போன்ற நிலப்பகுதியில் ஒரு பொது மொழியும், பொதுப் பொருளாதார வாழ்வும், பொதுப்பண்பாடும், அப்பண்பாட்டில் உருவான உளவியல் உருவாக்கமும் கொண்டு வாழ்ந்து வரலாற்றில் நிலைத்துவிட்ட ஒரு சமூகமே ஒரு தேசம் என்றார் ஜே.வி.ஸ்டாலின்.
ஒரு தேசத்திற்கு முதல் தேவை தாயக மண், இரண்டாவது தேவை பொது மொழி, மூன்றாவது தேவை பொதுப் பொருளியல், நான்காவது தேவை பொதுப் பண்பாட்டில் உருவான 'நாம்'என்ற தேசிய இன ஒருமை உணர்வு.
ரசியப் புரட்சிக்குத் தலைமை தாங்கிய தலைவர்களில் ஒருவரான ஜே.வி.ஸ்டாலின் தேசம் குறித்துச் சொன்ன மேற்கண்ட வரையறைகள் பொதுவாக உலகு தழுவிய பொருத்தம் உடையது. இதற்குச் சில விதிவிலக்குகளும் உண்டு.
பொது மொழி உருவாகாத நாகர்கள் தாயகம், பொருளியல், பண்பியல் அடிப்படையில் தேசிய இனமாகவும் நாகாலாந்து அவர்கள் தேசமாகவும் விளங்குகிறது. இது போன்ற சில விதிவிலக்குகளும் உண்டு.
தேசம் என்பதும் நாடு என்பதும் ஒன்றா ?
இல்லை. தேசம்(Nation ) வேறு; நாடு (Country ) வேறு. ஒரு தேசிய இனத்திற்குச் சொந்தமானது தேசம். ஒர் ஆட்சியின் கீழ் உள்ள நிலப்பகுதி நாடு. ஒரு தேசம் ஒரு நாடும் ஆகும். ஏனெனில் ஒரு தேசத்திற்கோர் ஆட்சி இருக்கும் போது, அதற்குட்பட்ட நிலப்பகுதி நாடு ஆகிறது.
ஆனால் ஒரு நாடு ஒரு தேசமாகவும் இருக்கலாம்; பலதேசங்களைக் கொண்டு ஒர் ஆட்சியின் கீழ் உள்ள நிலப்பகுதியாகவும் இருக்கலாம். வரலாற்று நிர்பந்தத்தால் ஒரு தேசமே இருநாடுகளாகப் பிளவுபட்டும் இருக்கலாம். எ-டு: கொரியா.
தேசம் என்பதற்கு ஆக்ஸ்ஃபோர்டு அகராதி (Compact Oxford Dictionary Thesaurus and Wordpower Guide- Indian Edition ) கூறும் விளக்கத்தைப் பார்ப்போம்.
'ஒரே பண்பாடு, மொழி, வரலாறு ஆகியவற்றைப் பகிர்ந்து கொண்டு ஒர் அரசின் கீழ் அல்லது ஒரு நிலப்பகுதியில் வாழும் பெருந் தொகையான ஒரு மக்கள் கூட்டம்".
நாடு என்பதற்கு அந்த அகராதி கூறும் விளக்கம்:
'ஒரு குறிப்பிட்ட ஆட்சிப்பரப்பில் சொந்த அரசைக் கொண்டுள்ள தேசம்"
மேலும் அது கூறுகிறது: பேரரசு, மன்னர் அரசு, நிலம், தேசம், அரசு, ஆட்சி எல்லை போன்றவை நாடு என்று அழைக்கப்படும்.
முன்னரே குறிப்பிட்டது போல், நாடு என்பது முதன்மையாக ஆட்சி நிலப்பரப்பைக் குறிக்கிறது. அந் நிலப்பரப்பில் ஒரு தேசம் இருக்கலாம்; சிதைக்கப்பட்ட ஒரு தேசமோ, பல தேசங்களோ இருக்கலாம்.
எடுத்துக்காட்டாக, பிரான்ஸ் ஒரு தேசம். பிரஞ்சு தேசிய இனத்திற்கு உரியது. அதே சமயம் பிரான்ஸ் ஒரு நாடும் ஆகும். சுவிட்சர்லாந்து ஒரு தேசமல்ல,அது ஒரு நாடு. அதில் ஜெர்மானிய, இத்தாலிய, பிரஞ்சு, ரொமான்ஷ்; ஜெர்மனிதேசிய இனங்கள் இருக்கின்றன. இந்நாட்டின் அதிகாரப் பூர்வ பெயர் சுவிஸ் பெருங்கூட்டரசு ( Swiss confederation )) என்பதாகும்.
இந்தியா ஒரு நாடு,ஆனால் இந்தியா ஒரு தேசமல்ல. இந்தியாவில் பல தேசங்கள், பல தேசிய இனங்கள் இருக்கின்றன. அதனால் இந்திய அரசமைப்புச் சட்ட முதல் விதி இந்தியாவை ஒரு தேசம் என்று குறிப்பிடாமல் ஒர் ஒன்றியம்(union)என்று குறிப்பிடுகிறது. (Article 1(1) India, that is Bharat shall be a Union of States )
தேசிய இனம் என்பது என்ன ? தமிழர், திராவிடர், இந்தியர் என்பவை என்ன ?
ஒர் இனக்குழு மூலத்திலிருந்து தோன்றிய பழங்குடிகள் பொது மொழி அடிப்படையில் இனமாக ( Race) ஒருங்கிணைந்து வளர்ந்து, காலவளர்ச்சியில் ஒரு குறிப்பிட்ட நிலப்பகுதியில் பொது மொழியும் பொது பண்பாடும் கொண்டு நிலைத்துவிட்ட சமூகம் ஒரு தேசிய இனமாகும்
இனம் என்பது இரண்டு நிலை வளர்ச்சி பெறுகிறது. முதல் கட்டம் மரபு இனம் ( Race ) அடுத்த கட்டம் தேசிய இனம்(nationality)ஒரு மரபு இனம் பல தேசிய இனங்களில் கலந்துவிடும் வாய்ப்பு உண்டு. ஒரு தேசிய இனத்தில் குறிப்பான ஒரு மூல மரபினமும், அதனோடு கலந்துவிட்ட வேறு மரபினங்களும் இருக்கலாம். பல மரபினங்கள் கலந்தும் தேசிய இனம் உருவாகியிருக்கலாம்.
சமயப்பணிக்காகத் தமிழகம் வந்த கால்டுவெல், சமஸ்கிருதத் துணையின்றி இயங்கக்கூடிய மொழி தமிழ் என்பதைக் கண்டறிந்தார்.
அதுகுறித்து மேலும் ஆய்வு செய்த போது, தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம், துளு உள்ளிட்ட மொழிகள் தனிமொழிக் குடும்பத்தைச் சேர்ந்தவை என்ற முடிவுக்கு வந்தார். இந்த மொழிக் குடும்பத்தில் தமிழ் மூத்தமொழி என்றும் ஆனால் இவை அனைத்திற்கும் ஒரு மூலமொழி( ( Proto Language ) ) இருந்திருக்க வேண்டும் என்றும் கருதினார். அந்த மூலமொழி எது என்பதிலும் அதன் பெயர் என்ன என்பதிலும் கால்டுவெல் ஒரு முடிவுக்கு வர முடியவில்லை. "த்ராவிட" என்பதை எடுத்துக் கொண்டு இந்த மொழிக் குடும்பத்தின் மூலமொழிக்கு "திராவிடம்" என்று பெயர் சூட்டிக் கொண்டார்.
திராவிடம் என்று பெயர் சூட்டியதற்கு வேறு மொழியியல் சான்றுகள் எதையும் கால்டுவெல் காட்டவில்லை.
'இந்தியர்" என்பது மரபினமும்;அது ஒரு புவி அரசியல் (Geo Poltics )ஐரோப்பாக் கண்டத்தில் வாழ்வோரை 'ஐரோப்பியர்" என்று சொல்வது போல், இந்திய மண்டலத்தில் வாழ்வோரை 'இந்தியர்" என்று அழைக்கும் வழக்கம் ஏற்பட்டது.
இந்திய அரசமைப்புச் சட்டம், 'இந்தியர்" என்று ஒரு தேசிய இனம்( Nationality) இருப்பதாகக் கூறவில்லை. ஒர் அரசின்- நாட்டின்- குடியுரிமை( (Citizenship ) பற்றி மட்டுமே பகுதி2-இல் உள்ள விதிகள் 5 முதல் 10 வரை உள்ளவை கூறுகின்றன. 'இந்தியாவின் குடிமகன்"( Citizen of India) என்பது பற்றி மட்டுமே அரசமைப்புச் சட்டம் பேசுகிறது.
லெனின் தலைமையில் உருவான சோவியத் ஒன்றியத்தில், ரஷ்யர், பைலோ ரஷ்யர், ஜார்ஜியர் போன்ற தேசிய இனங்கள் அரசமைப்புச் சட்டத்தில் ஏற்கப்பட்டன. சோவியத் ஒன்றியத்தைத் தேசங்களின் ஒன்றியம் (Union of nations )) என்றே அழைத்தனர்.
இந்திய அரசமைப்புச் சட்டம் விதி 371A(1) நாகர்களைத் தனிச்சமூகமாக ஏற்று அதற்கான தனிஉரிமைகளை அங்கீகரிக்கிறது.
சமூகம், மக்கள், தேசிய இனம் ஆகியவைவேறா ?
இவை மூன்றிற்கும் ஒற்றுமை உண்டு. ஆனால் மூன்றும் அச்சாக ஒன்றே அல்ல.
சமூகம் என்பது ஒர் இனக் குழுவின் விரிவாக்கமே. குறிப்பான நில எல்லைகளுக்குள் வாழ்ந்து, மொழி, பண்பு மற்றும் குணநலன்களைப் பொதுவாகப் பெற்றிருக்கும் ஒரு மக்கள் குழு சமூகம் ஆகும்.( ( Webster's Pocket dictionary ))
அரசியல் பொருளில், மக்கள் என்பது மனிதக் கூட்டம் அல்ல. ஒரே மொழி, ஒரே பண்பாடு ஆகியவற்றைக் கொண்டு, ஒரு தேசத்தில் அல்லது ஒர் அரசின் கீழ் உள்ள மனிதர்கள் மக்கள் ஆவர். The People என்று ஆங்கிலத்தில் சொல்லும் போது அது ஒரு தேசத்திற்குரிய மக்களைக் குறிக்கிறது. ஐ.நா.உரிமை அட்டவணையில் தேசிய இனம் The People என்றே குறிக்கப்படுகிறது.
நடைமுறையில் சாதாரணப் பொருளில், மக்கள் என்பது மனிதக் கூட்டத்தைக் குறிக்கிறது.
உலகம் ஒன்று, உலக மக்களின் ஒருமைப்பாடு உண்டாக வேண்டும் என்ற உயர்ந்த மனித நேயக் கருத்துகள் வளர்ந்து வரும் காலத்தில் தேசிய இனம் பேசி மனித குலத்தைப் பிரிக்கலாமா ?
உலகம் ஒன்று,மனித குலம் ஒன்று என்ற மனித நேயப் பார்வை மிகச் சரியானது. ஆனால் இன்று உலகமும், உலக மனித குலமும் ஒற்றை நிர்வாகத்தின் கீழ் இல்லை என்ற நடைமுறை உண்மையைப் பார்க்க வேண்டும். ஏன் ஒற்றை நிர்வாகத்தின் கீழ் இல்லை? இதற்கான புவியியல், சமூகவியல், வரலாற்றியல் காரணங்கள் மனித மனநிலைக்குப் புறத்தே இருக்கின்றன.
புவிக்கோளம் வேறுபட்ட புவி அமைப்பு உள்ளிட்ட இயற்கை நிலைகளைக் கொண்டு ஐந்து கண்டங்களாகப் பிரிந்துள்ளது. இதில் வாழும் மக்களுக்கு ஒரே மொழி ஒரே பண்பாடு இல்லை. உணவு வகை வேறுபடுகிறது. உடை வேறுபடுகிறது. செடிகொடிகளும் விலங்குகளும் கூட வேறுபடுகின்றன.
வௌ;வேறு நாடுகளாக இருக்கிறது. கடவுச்சீட்டு அனுமதி இல்லாமல் ஒரு நாட்டினர் இன்னொரு நாட்டிற்குள் நுழைய முடியாது. இந்த நாடுகளில் வௌ;வேறு கொள்கை உடைய அரசுகள் இருக்கின்றன. வலிமையுள்ள நாடுகள் வலிமைக் குறைவான நாடுகளையும், ஏமாந்த மக்களையும் ஆக்கிரமித்துச் சூறையாடுகின்றன. எடுத்துக்காட்டாக, சர்வதேச பயங்கரவாத அரசு அமெரிக்காவில் இருக்கிறது. அந்நாட்டு மக்களில் பெரும்பாலோர் அப்படிப்பட்ட அரசை ஆதரிக்கின்றனர். அதற்கான ஆட்சியாளர்களைத் தேர்ந்தெடுக்கின்றனர்.
உலக நிலையில் மனித சமத்துவத்திற்கான மாற்றம் வர இன்னும் எவ்வளவோ காலம் இருக்கிறது. நாம் விரும்புவதால் மட்டுமோ, நமது கற்பனையினால் மட்டுமோ மனிதகுலச் சமத்துவத்தை உடனே படைத்துவிட முடியாது.
ஒரு தேசிய இனத்திற்கு ஒரு தேசம் அமையவேண்டும் என்ற முதலாளிய ஜனநாயகக் கருத்து ஐரோப்பாவில் மறுமலர்ச்சிக் காலத்தை ஒட்டி எழுந்தது. தேச அரசு உருவாக்கம் ( Nation State formation )என்று இதை அழைத்தார்கள். தேச அரசு உருவாக்கம் இன்னும் உலகில் முழுமை அடையவில்லை. விடுதலையின்றி வேற்றார் ஆதிக்கத்தில் இருந்த தேசிய இனங்கள் ஒவ்வொன்றாக இப்பொழுது விடுதலைபெற்று சொந்த தேச அரசை உருவாக்கி வருகின்றன.
தேச அரசு நிறுவும் பணி நிறைவடைந்த பின், ஒரு தேசத்தின் உள்விவகாரத்தில் இன்னொரு தேசம் தலையிடக்கூடாது என்ற சனநாயகம்
ஆங்கிலேய ஏகாதிபத்தியத்திடம் சிக்குண்ட ஐரிஷ் தேசிய இனம் நடத்திய விடுதலைப் போராட்டத்தை மார்க்ஸ் ஆதரித்தார். ஐரிஷ் தேசிய இன விடுதலையை ஆங்கிலேயப் பாட்டாளி வர்க்கம் ஆதரிக்க வேண்டும் என்றார்.
ஒரு தேசிய இனம் தனக்கான தேசத்தை நிறுவிக் கொள்ளும் உரிமையைப் பிறப்புரிமையாகக் கொண்டுள்ளது என்றார் லெனின். அந்த உரிமையைத் தன்னுரிமை(சுயநிர்ணய உரிமை) என்றார். ஜார் மன்னனால் வலுக்கட்டாயமாக ரசியாவில் இணைக்கப்பட்டிருந்த தேசிய இனங்களுக்கு ரசியப் புரட்சி வெற்றி பெற்ற பின் பிரிந்து போகும் உரிமையுடன் கூடிய தன்னுரிமை( Right to Self determination with the right to secede ) வழங்கினார். விரும்புகின்ற தேசிய இனங்கள் சோவியத் கூட்டாட்சி ஒன்றியத்தில் இணையலாம் விரும்பாதவை தனி நாடாகப் பிரிந்து போய் விடலாம் என்ற உரிமை வழங்கப்பட்டது. பின்லாந்து பிரிந்து போக வேண்டும் என்றது. லெனின் அது பிரிந்து போக அனுமதித்தார்.ஆனால் உலகமாயக்கல் என்ற நிலையில் இவை
யாவும் மறுக்கப்படுவதாகவும் கருத்துக்கள் உள்ளன. அனுகுமறையில்
வேகம் இல்லை என சொல்கின்றனர்.
ஆயிரம்நியாயங்கள்,காரணங்கள்,
உண்மைகள் இருந்தும் இலங்கையில்
இன்னும் ஈழம் பெற முடியவில்லை என்ற கவலையும் ஏற்படுகிறது.

No comments:

Post a Comment

2023-2024